By 1 January 2021 0 Comments

ஆரோக்கியத்துக்கு 5 நிமிடங்கள்!! (மருத்துவம்)

இந்த வார்த்தையை ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி உச்சரிக்க கேட்டிருப்போம். அது என்ன ஆப்ஸ்? அப்ளிகேஷன் என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமே ஆப்ஸ். ஆன்ட்ராய்டு, ஆப்பிள்மேக் ஐபோன் ஆகிய நவீனவகை போன்களில் ஏராளமான ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். படம் பார்க்க ஒரு ஆப்ஸ், பாட்டு மட்டும் கேட்க ஒரு ஆப்ஸ், ஏன் ரயில் டிக்கெட்டின் எண்ணை எழுதினால் உங்கள் இருக்கை உறுதியாகி உள்ளதா? என்பதை காட்டும் ஆப்ஸ் கூட உள்ளது.

இதன் அடுத்த கட்டமாக உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோய்கள் வராமல் தடுப்பதற்கும், மருந்துகள் குறித்த தகவல்களை பெறவும், பலவிதமான ஆப்ஸ்கள் தற்போது கிடைக்கின்றன. இந்த ஆப்ஸ்களை ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்துகொண்டால் உடல்நலம் பற்றிய டிப்ஸ்களை அள்ளித்தருகிறதாம். அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சியை அதிகரிக்கவும், ஆரோக்கிய உணவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிம்ளிஃபிட்டி (Simplifity) நிறுவனம் 5 min to health என்ற ஆப்பை உருவாக்கியுள்ளது. சிம்ளிபிட்டி நிறுவனத்தின் இயக்குநர் நரசிம்மன் சந்தானம் மெடிகல் ஆப்ஸின் அவசியம் குறித்து நம்மிடம் பேசினார்…

“ஸ்மார்ட்போன் ஆப்ஸ்கள் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஒரு வருடம் முன்பு எங்கள் நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியபோது 80 சதவிகிதம் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் எந்த உடற்பயிற்சிகளையும் செய்வதில்லை. இக்காரணத்தால்தான் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள் எனக் கண்டறிய முடிந்தது. இதனை தடுக்க ஒரு ஆப்ஸ் உருவாக்கி அதில் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்சிகளை தினமும் செய்யவைக்க
முடியும் என நினைத்தோம்.

அதன் விளைவாக எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் மதுமிதா மற்றும் குழுவினர் பல மருத்துவ நிபுணர்கள்,பிஸியோதெரபிஸ்டுகள் என்று பலரிடமும் கலந்தாலோசனை செய்து இந்த ஆப்பை உருவாக்கினார்கள். 3 நிமிடங்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள், 5 நிமிடங்கள் செய்யக்கூடிய நடைப்பயிற்சிகள், 3 நிமிடங்கள் செய்யக்கூடிய மூச்சுப்பயிற்சிகள் என மூன்று பேக்குகளை இந்த ஆப்பில் உள்ளீடு செய்திருக்கிறோம்.

மிக எளிதாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் ஆப்பை வடிவமைத்துள்ளோம். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி மூன்றையும் எவ்விதம் செய்யவேண்டும் என்று செயல்முறை விளக்கங்களும் இதில் கொடுத்துள்ளோம். ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்யவேண்டும் என்றும் இந்த ஆப் சொல்லிவிடும். அலுவலகத்தில் ஒரே மாதிரி உட்கார்ந்து வேலை செய்யாமல் நடுநடுவே ரிலாக்ஸ் செய்துகொள்ள இந்த ஆப் நினைவுபடுத்தும். 4 மணி ஆகிவிட்டது தயவு செய்து உங்கள் உடற்
பயிற்சியை செய்யவும்’ என சொல்லும்.

உடனே உடற்பயிற்சிகளை செய்ய ஏதுவாக இருக்கும். இப்படி ஒரு நாளைக்குக் குறைந்தது ஒருமணி நேரம் உங்களை உடற்பயிற்சிகள் செய்யவைக்கும். இந்த ஆப் உருவாக்கியவுடன் சிலர் எங்களிடம் `வெறும் ஐந்து, ஐந்து நிமிடங்களாக உடற்பயிற்சிகளை செய்தால் போதுமா? பயன்கள் கிடைக்குமா?’ எனக் கேட்டார்கள். இது போதுமானது இல்லை என்று கூட சிலர் கருத்து தெரிவித்தனர். ஒன்றுமே பயிற்சிகள் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்பவர்களுக்கு இவ்வாறு ஒருநாளில் அவ்வப்போது பயிற்சிகள் செய்தால் நோய்கள் வரும்

அபாயம் பெருமளவு குறையும். இப்படி சில மணி நேரங்களுக்கு ஒருமுறை உடற்பயிற்சிகள் செய்வதால் இதயநோய்கள், நீரிழிவுப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் வருவது எல்லாம் பெருமளவு குறைகிறது. இதனை புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைகழகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. பவர் வாக், பஞ்சிங் வாக், சைட் வாக் என்று பலவகையான நடைபயிற்சிகளை இதில் கொடுத்
துள்ளோம். அலுவலகத்தில் நெடுநேரம் அமராமல் நேரம் கிடைக்கும்போது இத்தகைய நடைபயிற்சிகளை செய்து பயன்பெறலாம். அதிக உடலுழைப்பு இல்லாதவர்களுக்கு இந்த ஆப் ஒரு வரப்பிரசாதம்…’’ என்கிறார் நரசிம்மன் சந்தானம்.

5 min to health ஆப்பின் தயாரிப்பு மேலாளர் மதுமிதா ஆப்பின் பயன்பாடுகளை பற்றியும், ஆப்பின் வகைகள் குறித்தும் நம்மிடம் பேசினார்… எங்கள் நிறுவனத்தின் சார்பாக சர்வே நடத்தியபோது தான், உடற்பயிற்சி குறித்த எந்த ஆர்வமும் இல்லாமல் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. உடற்பயிற்சிகளை ஊக்குவிக்கும் வண்ணம் ஒரு ஆப் உருவாக்கலாம் என முடிவு செய்தோம். அதன்படி எங்கள் குழுவினர் முனைந்து இந்த ஆப்பை உருவாக்கினோம்.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாகவே ஆப்ஸில் உள்ள பயிற்சிகளை செய்யமுடியும். இதற்காக பலவிதமான உடற்பயிற்சிகள், ஆரோகியமான உணவுகள் பற்றிய தகவல்கள், உணவு சாப்பிட்ட பிறகு, தேவையற்ற கலோரிகளை எரிப்பதற்கு தேவையான நடை பயிற்சிகளை விளக்கும் படங்கள் என அனைத்தும் இந்த ஆப்பில் உள்ளீடு செய்தோம். எந்த உணவுகளில் எவ்வளவு கலோரிகள் உள்ளது என்பதை பயன்படுத்துபவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

மூன்று வகையான ஆப்ஸ்கள் மருத்துவ உலகில் செயல்படுகிறது. ஹெல்த் மானிட்டரிங் ஆப் என்பது உடலில் உள்ள பிரச்னைகளை மட்டும் தெரியப்படுத்தும். உதாரணமாக ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என பார்க்கலாம். இதயத்துடிப்பு சீராக இருக்கிறதா எனப் பார்க்கலாம். இரண்டாவது ஹெல்த் ஆக்டிவிட்டி ஆப். இதில் தான் உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகள், ஸும்பா நடனம், ஏரோபிக்ஸ், மூச்சுப்பயிற்சிகள் போன்றவைகளை தெரியப்படுத்தும் ஆப்ஸ்கள். எங்களது ஆப் இந்த வகையை சேர்ந்தது. மூன்றாவது வகை மெடிகல் ஆப்ஸ்.

இதை பெரும்பாலும் டாக்டர்கள் தான் பயன்படுத்துகிறார்கள். எந்த நோய்க்கு எந்த மருந்து, சிகிச்சைமுறைகள், குறிப்பிட்ட மருந்து, மாத்திரையின் பக்க விளைவுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த வகை ஆப்களை சாதாரண மக்கள் பார்த்து சுய மருத்துவம் செய்துகொண்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. 5 min to health ஆப்பில் இந்தந்த நேரத்தில் இந்த பயிற்சி செய்யவேண்டும் என பதிவு செய்து வைத்துவிட்டால் அந்த நேரத்தில் நினைவூட்டிவிடும். ஒரே இடத்தில் உட்காராமல் பயிற்சிகளை செய்யவும் வழிவகுக்கும்.

இந்தியாவில் மட்டும் 4000 மக்கள் இந்த ஆப்பை தங்களது ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோடு செய்துள்ளார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைபார்க்கும் பலர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். எங்கள் ஆப்பை ப்ளேஸ்டோரில் இருந்து இலவசமாக ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருக்கும் போது செய்யும் பயிற்சிகளை மட்டும் எங்களது ஆப்பில் கொடுத்திருந்தோம். இப்போது நீண்டநேர பயணங்களின் போது செய்யவேண்டிய பயிற்சிகளை எங்களது ஆப்பில் சேர்த்துள்ளோம்.

விமானத்துக்காகவோ, ரயிலுக்காகவோ காத்திருக்கும் இடைவேளையில் செய்யவேண்டிய மூச்சுப்பயிற்சிகள், நடைபயிற்சி ஆகியவற்றை நினைவுப்படுத்தி செய்யவைக்கும் படியாக ஆப்ஸை மாற்றியிருக்கிறோம். பொது இடங்களில் மற்றவர்கள் முன்னால் எப்படி இந்த பயிற்சிகளை செய்யமுடியும் என தயங்கமுடியாதவாறு பயிற்சிகளை எளிமையாக அமைத்துள்ளோம். இயல்பாக நடப்பது போல இந்த பயிற்சிகளை செய்யமுடியும். சிலர் தினமும் காலையில் ஜிம்முக்கு போய் உடற்பயிற்சிகள் செய்கிறோம். அதன் பிறகும் ஏன்? அலுவலகம் போய் பயிற்சிகளை செய்யவேண்டும் என கேட்பார்கள்.

வீட்டிலோ அல்லது ஜிம்மிலோ எத்தனை மணி நேரம் பயிற்சிகள் செய்தாலும் மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தால் செய்த பயிற்சிகளின் முழுப்பலன்கள் கிடைக்காமல் போய்விடும். இந்த கூற்றை அமெரிக்காவின் நலவாழ்வியல் அமைப்பான மேயோ கிளினிக் உறுதி செய்துள்ளது. எதிர்காலத்தில் தினமும் எத்தனை மணி நேரங்கள் நடக்கிறோம்,உட்காருகிறோம் என்பதையும் கணக்கிட்டுக்கொள்வது மாதிரி இதில் வடிவமைக்க உள்ளோம். சாப்பிட்டவுடன் எவ்வளவு கலோரிகள் கூடுகிறது. நடைப்பயிற்சி செய்த பின் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகிறது என அனைத்து விஷயங்களையும் ஒரே ஆப்பில் தெரிந்துகொள்ளுமாறு வைப்பதுதான் எங்களது அடுத்த திட்டம்…’’ என்கிறார் மதுமிதா.Post a Comment

Protected by WP Anti Spam