இதயநோயின் அறிகுறிகள் என்ன? (மருத்துவம்)
ரத்தக்குழாய் அடைப்பு, இதயம் செயலிழப்பு, மாரடைப்பு என இவற்றுக்கான சிகிச்சை முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றன. எனவே, ஒருவருக்கு இதயத்தில் என்ன பிரச்னை என்பதை டாக்டரால் மட்டுமே பரிசோதித்துக் கண்டறிய முடியும். பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள இதயநோய் சிகிச்சை மையத்தை அணுக வேண்டியது அவசியம்.
இதய ரத்தக்குழாய்ப் பிரச்னைகளின்போது, பொதுவாக நெஞ்சுவலி இருக்கும். நெஞ்சில் அழுத்தம், வலி, எரிச்சல், கனமான தன்மை போன்றவை தோன்றும். மேலும் தோள்பட்டை, கை, கழுத்து, தொண்டை, தாடை, முதுகில் வலி இருக்கும். இதுதவிர, மூச்சுவிடுவதில் சிரமம், சீரற்ற இதயத்துடிப்பு, இதயம் வேகமாகத் துடித்தல், சோர்வு, மயக்கம், அதிகம் வியர்வை வருவது போன்றவையும் இதயநோயின் அறிகுறிகள்.
மாரடைப்பு ஏற்படும்போதும் நெஞ்சு வலி, நெஞ்சில் அழுத்தம், கடினமானத் தன்மை இருக்கும். கை, கழுத்து, தாடை, முதுகுப் பகுதியில் வலி இருக்கும். வியர்வை, மயக்கம், வாந்தி அல்லது குமட்டல் இருக்கும். அதிகப்படியான சோர்வு, மனப்பதற்றம், மூச்சுத் திணறல் இருக்கும். சீரற்ற அல்லது அதிவேக இதயத்துடிப்பு இருக்கும்.
மாரடைப்பின்போது, இந்த ஆரம்பக்கட்ட அறிகுறிகள் அரை மணி நேரம் அல்லது அதற்கு மேல் இருக்கும். உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் தெரியாமல்கூட இருக்கலாம். இதனால்தான் சர்க்கரை நோயை ‘சைலன்ட் கில்லர்’ என்கின்றனர்.
தவிர்க்கும் வழிகள்
ரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து அடைப்பு ஏற்படுவதை, முன்கூட்டியே பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். இதய ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பானது 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால், மருந்து மாத்திரைகளாலேயே சரிசெய்துவிட முடியும். ஒன்று – இரண்டு ரத்தக் குழாய்களில் மட்டும் அடைப்பு இருந்தால் ‘ஸ்டெண்டிங்’ என்ற சிகிச்சை முறையால் குணப்படுத்தலாம். மூன்றுக்கும் மேற்பட்ட ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், அறுவைச் சிகிச்சை செய்வதுதான் நல்லது.
Average Rating