By 5 January 2021 0 Comments

கூந்தல்!! (மகளிர் பக்கம்)

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி மீண்டும் வளரச் செய்கிற மருந்துகள் இன்று நிறைய வந்துவிட்டன. அவற்றின் விலை மிக அதிகமாக இருப்பதால் பணக்காரர்களுக்கும், சினிமாத் துறை பிரபலங்களுக்கும் மட்டுமே சாத்தியப்படுகிறது. இழந்த கூந்தலைத் திரும்ப வளரச் செய்கிற மருந்துகளில் முக்கியமானது Minoxidil. ஆண், பெண் இருவருடைய முடி உதிர்வுப் பிரச்னைக்கும் இது தீர்வளிக்கும். முடி கொட்டுவதைக் கட்டுப்படுத்தும். ஆனால், இதை ட்ரைகாலஜிஸ்ட் அல்லது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட அளவு, குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். முறை தவறினால் பிரச்னைகள் வரலாம்.

முடி உதிர்வை நிறுத்த உதவும் இன்னொரு அங்கீகரிக்கப்பட்ட மருந்து Finasteride. இது ஆண்களுக்கு மட்டும்தான் முடி வளர உதவும். ஏன் என்கிறீர்களா? இது ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்ட்டோஸ்டீரானுடன் தொடர்புடையது. இதை எடுத்துக் கொள்கிற ஆண்களுக்கு அந்தரங்க உறவில் நாட்டம் குறையக்கூடும் என்பதால் இதையும் மருத்துவரின் பரிந்துரை மற்றும் தீவிர ஆலோசனைக்குப் பிறகே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஊட்டங்கள்…

பயோட்டின் என்கிற பி வைட்டமினுக்கும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. சிலருக்கு உணவின் மூலம் போதுமான அளவு பயோட்டின் சத்து கிடைக்காமல் பயோட்டின் குறைபாடு ஏற்படலாம். அது முடி உதிர்வுக்குக் காரணமாகும். உணவில் முட்டை, மீன், நட்ஸ், சீட்ஸ் மற்றும் பீன்ஸ் போன்றவற்றின் அளவை அதிகரிக்க வேண்டும். ட்ரைகாலஜிஸ்ட் அல்லது மருத்துவரிடம் கலந்தாலோசித்து பயோட்டின் சப்ளிமென்ட்டுகள் தேவையென்றால் எடுத்துக் கொள்ளலாம்.

அறுவை சிகிச்சை இல்லாத தீர்வுகள்…

மீசோதெரபி

சருமத்தின் மேலடுக்கான எபிடெர்மிஸின் அடிப்பகுதியில் ஊசிகள் போட்டு அளிக்கப்படுகிற சிகிச்சை. அதன் மூலம் மீசோடெர்ம் எனப்படுகிற நடு அடுக்கைத் தூண்டச் செய்யலாம். ஊசியில் பயன்படுத்தப்படுகிற மருந்தில் ஏராளமான தாதுக்கள், வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், நியூக்ளிக் அமிலங்கள், என்சைம்கள் எல்லாம் கலக்கப்பட்டிருக்கும். அந்தக் கலவை ஒவ்வொரு நபருக்கும் ஏற்ற வகையில் மாற்றப்படும். வலியில்லாத இந்த சிகிச்சை நிபுணர்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும். மயக்க மருந்தோ, பேண்டேஜ் கட்டுகளோ தேவையில்லை. சிகிச்சை முடிந்ததுமே வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம்.

லேசர் சிகிச்சை

கூந்தல் உதிர்வைக் கணிசமாகக் குறைப்பதில் லேசர் சிகிச்சையின் பங்கு பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த சிகிச்சையைப் பற்றி பலருக்கும் சின்னதாக ஒரு தயக்கம் இருக்கிறது. ஆனால், நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதை வெற்றிகரமாகவே செய்து வருகிறார்கள் மருத்துவர்கள். PRPபிளேட்லெட் ரிச் பிளாஸ்மா தெரபி என்பதன் சுருக்கமே பி.ஆர்.பி.(PRP). கூந்தல் உதிர்வுப் பிரச்னைக்கான அற்புதமான சிகிச்சைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. பல் மருத்துவம், எலும்பு மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றில் இதன் பயன்பாடு இருக்கிறது.

ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஏற்றது. Alopecia Areata எனப்படுகிற வழுக்கைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு அடிக்கடி ஸ்டீராய்டு ஊசிகள் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு இது சரியான மாற்று. 4 முதல் 6 முறை சிகிச்சைகளிலேயே இதில் நல்ல மாற்றங்களைக் காண முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இந்த சிகிச்சையில் மருத்துவர் சிறிதளவே ரத்தத்தை எடுத்து, அதை மையநீக்கி முறையில் ட்ரீட் செய்து, வளப்படுத்தப்பட்ட செல்கள் அல்லது பிளேட்லெட்டுகளை மட்டுமே தேக்கி வைத்து முடி வளர்ச்சிக்கு உதவச் செய்கிற சிகிச்சை இது.

இந்த சிகிச்சையில் பிரத்யேகமான மைக்ரோ ஊசிகளைப் பயன்படுத்தி, வளப்படுத்தப்பட்ட பிளேட்லெட், வளர்ச்சிக்கு உதவக்கூடிய அத்தியாவசிய புரதங்கள் போன்றவற்றை முடி வளர்ச்சி தேவைப்படுகிற இடங்களில் செலுத்துவார்கள். ஒருவரது தேவை மற்றும் முடி உதிர்வின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து, வெறும் PRP சிகிச்சையை மட்டுமே செய்து கொள்ளலாம் அல்லது இதை கூந்தல் உதிர்வுக்கான மற்ற சிகிச்சைகளுடன் சேர்த்தும் எடுத்துக் கொள்ளலாம். அதை மருத்துவர் முடிவு செய்வார். அறுவை சிகிச்சை இல்லாத இந்த சிகிச்சைக்கு 60 முதல் 90 நிமிடங்கள் தேவைப்படும். எளிமையானது, விரைவான பலன்களைத் தரக்கூடியது என்பதால் இந்த சிகிச்சைக்கு வரவேற்பு அதிகம்.

ஸ்டெம்செல் தெரபி

ஸ்டெம்செல்களை பயன்படுத்தி பல்வேறு நோய்களையும் பிரச்னைகளையும் குணப்படுத்த முடியும் எனக் கேள்விப்படுகிறோம். இப்போது அது கூந்தல் சிகிச்சைக்கும் வந்திருக்கிறது. கூந்தல் வளர்ச்சியில் இந்த சிகிச்சையை பல மருத்துவர்களும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும் இது உத்தரவாதமானதாக அறியப்படவில்லை. ஒரே சிகிச்சை நபருக்கு நபர் வேறு வேறான பலன்களைத் தருவதாகவும் சொல்லப்படுகிறது. Follicular Unit Extraction (FUE)இந்த முறையில் ஒன்று முதல் நான்கு முடிகள் வரை மிக நெருக்கமாக டிரான்ஸ்பிளான்ட் செய்யப்படும்.

இது எந்தளவு வெற்றிகரமானது என்பது சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்தது. அவரது தலையில் டிரான்ஸ்பிளான்ட் செய்யும் அளவுக்கு ஆரோக்கியமான முடிகள் எவ்வளவு இருக்கின்றன என்பதைப் பொறுத்தது. ஜீன் தெரபி (Gene Therapy) ஜீன் தெரபி, ஹேர் குளோனிங் உள்பட இன்னும் ஏராளமான சிகிச்சைகள் உலக அளவில் பரிசோதிக்கப்பட்டு, வெற்றிகரமானவை என நிரூபிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், அவை எல்லாமே மிக மிக விலை உயர்ந்த சிகிச்சைகள் என்பதாலேயே பரவலாக அறியப்படாமலும், பலருக்கும் பயன்பட ஏதுவானதாக இல்லாமலும் இருக்கின்றன.

முடி உதிர்வைத் தடுக்கும் ஊட்டங்களும் சிகிச்சைகளும்

மானமும் மரியாதையும் மட்டுமல்ல… பல நேரங்களில் கூந்தலும் கூட போனால் திரும்ப வராது. கூந்தலை இழப்பது என்பது ஒருவரின் தன்மானத்தையே ஆட்டம் காணச் செய்கிற விஷயம். ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி… வாழ்க்கையில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் முடி உதிர்வு என்பது நிச்சயம் இருக்கும். அது 20 பிளஸ்சில் தொடங்கி, எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். நவீன மருத்துவமும் விஞ்ஞானமும் வளர்ந்து விட்ட நிலையில், முடி உதிர்வுக்கான சிகிச்சைகளின் விளைவால் இன்று பெரும்பாலான மனிதர்கள் வழுக்கையை மறைத்து தலைநிமிர்ந்து நடமாட முடிகிறது. அப்படி சில லேட்டஸ்ட் சிகிச்சைகளைப் பற்றிப் பார்ப்போம்.Post a Comment

Protected by WP Anti Spam