By 9 January 2021 0 Comments

ஏ4 சேலஞ்ச்!! (மகளிர் பக்கம்)

2 வருடங்களுக்கு முன்பு ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ பிரபலமானது நினைவிருக்கிறதா? ஜில்லென்ற ஒரு பக்கெட் ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டு, அதே சேலஞ்சை மற்ற 3 பேரிடம் முன்வைக்க வேண்டும். ALS என்ற நரம்பு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்காக நிதி திரட்டவும் சமூக வலைத்தளங்களில் வி.ஐ.பிக்களே இந்த விளையாட்டைப் பிரபலமாக்கினார்கள். அமெரிக்காவில் பில்கேட்ஸ் முதல் நம் ஊரில் ஹன்சிகா வரை பல பிரபலங்களும் இந்த சவாலில் கலந்துகொண்டார்கள்.

அதேபோல, இப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது ‘ஏ4 சேலஞ்ச்’. அதுவும் சமூகவலைத்தளங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் கொண்ட சீனாவில் என்பது இதில் இன்னும் சுவாரஸ்யம்!

அது என்ன ஏ4 சேலஞ்ச் என்று கேட்பவர்களுக்காக ஒரு சின்ன அறிமுகம். ஏ4 அளவுள்ள ஒரு பேப்பரை எடுத்து வயிற்றில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏ4 காகிதம் உங்கள் வயிற்றை மறைத்தால் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இல்லாவிட்டால், நீங்கள் எடையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் இந்த விளையாட்டு. ஏ4 அளவுக்குள் அடங்கும் சிற்றிடை கொண்டவர்கள், I am size smaller than A4 என்று செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் தட்டுவதும், மற்றவர்கள் அதற்காக மெனக்கெடுவதும்தான் இப்போது டிரெண்ட். ‘பெண் இடையும் இறைவனும் ஒன்றுதான்…ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை…’ என்று இடையழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா உட்பட பல நாடுகளிலும் ஏ4 சேலஞ்ச் கவனம் ஈர்த்திருக்கிறது.

‘பருமன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சேலஞ்ச்’ என்று இதற்கு ஆதரவும், ‘சுத்த பைத்தியக்காரத்தனம்’ என்று இன்னொரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. ஃபிட்னஸ் டிரெயினரான சுசீலாவிடம், ‘ஏ4 சேலஞ்ச் பற்றி கேள்விப்பட்டீங்களா?’ என்று கேட்டோம். ‘‘கரீனா கபூர், கேத்ரினா கைஃப் போன்ற பாலிவுட் நடிகைகளிடம் சைஸ் ஜீரோ பேஷனாக இருந்ததுபோல, ஏ4 சேலஞ்ச் இப்போது ஃபேஷனாகி வருவது பற்றி நானும் சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். சைஸ் ஜீரோவில் உடலின் கொழுப்பை குறைக்க வேண்டும் என்பதுபோல, இதில் இடுப்பின் அளவைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

அதாவது, ஒரு ஏ4 காகிதத்தின் அகலமான 21 செ.மீ. அளவுக்குள் இடுப்பின் பகுதி அடங்க வேண்டும். காகிதத்துக்கு வெளியில் இடுப்பு தெரியக் கூடாது. ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசையை உருவாக்குகிறது என்ற அளவில் இது நல்லதுதான்’’ என்று ஏ4 சேலஞ்சை வரவேற்பவர், அதே நேரத்தில் முறையான வழிகளிலேயே ஏ4 வடிவமைப்பைக் கொண்டு வர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

‘‘சரியான டயட், முறையான ஒர்க் அவுட் என்று ஆரோக்கியமான வழியில் முயற்சித்தால் தவறில்லை. ஆனால், சாப்பிடுவதைக் குறைத்தால் எடை குறைந்துவிடலாம் என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். அதுதான் ஆபத்தானது. முதலில் நம் வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம் எப்படி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். பெரும்பாலான நேரம் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறையிலேயே இருப்பதால் Hip mobility என்கிற இடுப்புத் தசைக்கான பயிற்சிகளே இன்று நம்மிடம் இல்லை.

இந்த இயக்கமற்ற வாழ்க்கை முறையை உணர்ந்து நம் தசைகளை முதலில் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும். Core strengthening, Back strengthening, Abs workout என இதற்கென சில பயிற்சிகள் இருக்கின்றன. தேவையற்ற கொழுப்பைக் குறைப்பதற்கு கார்டியோ ஒர்க் அவுட் செய்ய வேண்டும். இந்த பயிற்சிகளுடன், சரியான உணவுப்பழக்கத்தையும் பின்பற்றினால் நாம் எதிர்பார்க்கிற உடல் வடிவமைப்பைப் பெற முடியும்.

டயட் கன்ட்ரோல் என்ற பெயரில் பட்டினி கிடப்பதாலோ, வாக்கிங் போனால் மட்டுமே போதும் என்றோ நம்பினால் அது கை கொடுக்காது. சிலர் ஜிம்முக்கு போய் கண்மூடித்தனமாக எடை பயிற்சிகளைச் செய்து கொண்டிருப்பார்கள். அதுவும் தவறானது. இன்டர்நெட்டில் யாரோ ஒருவர் சொல்வதைப் பார்த்து நாம் முயற்சிப்பதும் தவறு. அதை செய்யும் விதத்திலும் மேலும் தவறு நடக்கும்.

ஒருவருக்கு சரியாக இருக்கும் டயட், ஒர்க் அவுட் இன்னொருவருக்கு சரிவராது என்பதையும் மறக்கக் கூடாது. இந்தத் தவறுகளால் ரத்த அழுத்தம் குறைவது, நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு, உடலின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது என பல பிரச்னைகளை நாமே உருவாக்கிக் கொண்டுவிடும் அபாயம் ஏற்படலாம். ஒரு மாதத்திலேயே உடல்மாற்றம் வந்துவிட வேண்டும் என்றும் அவசரப்படக் கூடாது. டீன் ஏஜிலோ, 20 ப்ளஸ்சிலோ உடல் மாற்றத்தை எளிதாகக் கொண்டு வர முடியும். அதிக எடை, அதிக வயது என்றால் அதற்கேற்றவாறு இன்னும் கூடுதலாக முயற்சிக்க வேண்டியிருக்கும். அதற்கு நிறைய பொறுமை வேண்டும்’’ என்பவர், ஏ4 சேலஞ்ச் ஆபத்தான முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்பதையும் கூறுகிறார்.

‘‘இதுபோன்ற ஃபிட்னஸ் விஷயங்களை நினைத்துத் தேவையற்ற தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கிக் கொள்ளக் கூடாது. உங்கள் வயது, உயரத்துக்கேற்ற ஓர் எடை இருக்கிறது. அந்த எடையை சரியாகப் பராமரித்தாலே நீங்கள் அழகாகத்தான் இருப்பீர்கள். சீனாவில் இருக்கும் பெண்களின் உடலமைப்பு, அவர்களின் உணவுமுறை நம் நாட்டிலிருந்து முழுக்க வேறானது.

உலகிலேயே இந்தியப் பெண்கள்தான் அழகு என்று வெளிநாடுகளில் கொண்டாடுகிறார்கள். அப்படி இருக்கும் போது சீனர்கள் செய்கிற ஒரு சேலஞ்சை நாம் செய்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் ஃபிட்னஸ் என்பது முதலில் ஆரோக்கியம்… அதற்குப்பிறகுதான் அழகு!’’Post a Comment

Protected by WP Anti Spam