By 9 January 2021 0 Comments

மாரடைப்பு !! (மருத்துவம்)

இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாயில் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். கரோனரி ரத்தக்குழாயின் முழு அடைப்புதான் மாரடைப்புக்குக் காரணம். மார்புக்கூடு முன் கடுமையான வலி ஏற்படும். இந்த வலி இடது தோல்பட்டைக்கு பரவுதல், முதுகின் பின்பகுதியில் வலி வருதல், சில சமயங்களில் பல் வலி, பகட்டு வலி, கழுத்து வலி, உணவு விழுங்க கஷ்டம், கேஸ் அடைப்பு போன்று பல அறிகுறிகள் தென்படலாம்.

மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும்போது முதலில் வலி அதிகரிக்கலாம். நெஞ்சு வலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாகவும் சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும்போதுதான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்: பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம்.

நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இத்தகைய அறிகுறிகள் மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு “ஆஞ்சைனா’ என்று பெயர்.

அறிகுறிகள்

* நெஞ்சு வலியுடன் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.
* வியர்த்தல், குமட்டல் மற்றும் மயக்கம் வருவது போல் உணர்தல்.
* வாந்தி , இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து வலி ஏற்படுதல்.
* தீவிர நிலையில், ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளித்து இறப்பும் நேரலாம்.

காரணங்கள்:

* புகைப்பிடித்தல்
* சர்க்கரை நோய்
* உயர் ரத்த அழுத்தம்
* அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) குறைவாக இருத்தல்.
* அதிக கொலஸ்ட்ரால்
* உடல் உழைப்பு இல்லாமை
* குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு
* மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு
* மரபியல் காரணிகள்.

மாரடைப்பின் வகைகள்:

முதல் வகை மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்ட கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவது. இதனால், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர். இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானது; இதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் ஏற்படும் வேறுபாட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும்.

ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும். இதனால் இளம் வயதினருக்கும் மாரடைப்பு மரணம் வரும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும். மூன்றாவது, நீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாகும். நான்காவது, மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும். இது இன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும்.

நோயைக் கண்டறிவது எப்படி?

* மருத்துவர் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தினை பதிவு செய்வதோடு முந்தைய சிகிச்சை விவரங்களை விரிவாக பெற்றுக் கொள்வார்.

* இதயத்தின் செயல்பாடுகளை மின்னணு வடிவில் பெற்றுத் தரும் இசிஜி ECG) எடுக்கப்படுகிறது..

* இசிஜி இதயத்துடிப்பின் வேகம் பற்றிய தகவலைத் தருகிறது. வழக்கத்திற்கு மாறான துடிப்புகள் உள்ளனவா என்றும் மாரடைப்பால் இதயத்தசைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் இசிஜி மூலம் அறியலாம்.

* இதயத்தசைகளில் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய ரத்த பரிசோதனைகள் உதவும்.

* மார்பு பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்படலாம்.

* எக்கோ-கார்டியோகிராம் என்பது இதயத்தின் செயல்பாடுகளை அறிய உதவும் புதிய ஸ்கேன் முறை.

* கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற பரிசோதனை மூலம் கரோனரி ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.சிகிச்சை விவரம்

* மாரடைப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும், நேரங்களும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

* இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகளை நோயளிக்குக் கொடுத்து ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறார். ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதனைக்குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

* நோயாளியின் வயது, மாரடைப்பின் தாக்கம், இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றை பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும்.

* பல நேரங்களில் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக்கொண்டு ரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னர் சிகிச்சை அளித்தல்மாரடைப்பு ஏற்பட்டதும் ரத்த கட்டியைக் கரைப்பதற்கான Thrombolysis மருந்து உட்செலுத்தப்படுகின்றது. இம்மருந்து ரத்தக் கட்டியைக் கரைத்தால் தடைப்பட்டிருந்த முடியுருநாடியின் குருதியோட்டம் சீர்செய்யப்படுகின்றது.

இதனால் இதயத் தசையில் பாதிக்கப்பட்ட பரப்பளவு மட்டுப்படுத்தப்படுவதுடன் அதன் அயற்பகுதிகளோ அல்லது அந்த முடியுரு நாடியால் குருதி வழங்கப்படும் இதயத்தின் மற்றைய பகுதிகளோ பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் அடுத்தடுத்த மாரடைப்பு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.இந்தச் சிகிச்சை முறை மாரடைப்பு ஏற்பட்டு முதல் 12 மணிநேரத்திற்குள் அளித்தால் மிகவும் நற்பயன் அளிக்கக்கூடியதாகும். அதிலும் மாரடைப்பு ஏற்பட்டு ஓரிரு மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டால் ரத்தக்கட்டி முழுவதுமாக கரைவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம்.

இதனால் உயிர் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவடைகிறது. எனவே நெஞ்சு வலி ஏற்பட்ட உடனே மருத்துவரை அணுகுவது மிக முக்கியமாகும். Exercise ECG செய்யப்படுவதன் நோக்கம்மாரடைப்பு ஏற்பட்டு 6 வாரங்களினுள் Exercise ECG மேற்கொள்ளப்படு கிறது. இந்நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட நேரத்தையும் அப்போது ECG இல் ஏற்பட்ட மாற்றத்தையும் கொண்டு இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பின் அளவை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு நோயின் தன்மை கண்டுபிடிக்கப்பட்டு நோயாளிகளுக்கு Coronary Angiogram பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.Post a Comment

Protected by WP Anti Spam