ஆரோக்கியரீதியான சில சவால்கள்!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 41 Second

லாக்டவுன் சூழ்நிலை காரணமாக Work from home தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. ஊரடங்கு முடிந்தாலும் கூட, இன்னும் சில காலம் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதை ஊக்குவிக்கும் முடிவில் இருக்கின்றன பல நிறுவனங்கள். இதேபோல கல்வித்துறையிலும் எல்.கே.ஜி முதல் உயர்நிலைக் கல்வி வரையில் ஆன்லைன் வகுப்புகளும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நிர்வாகக் கூட்டங்களும், மருத்துவ ஆலோசனைகளும் வீடியோ கான்ஃபரன்சிங், வெபினார்(Webinar) என்றுதான் இனி அதிகம் நடக்கப் போகிறது. இந்த வீடியோ கான்ஃப்ரன்ஸிங் முறை, Work from home விஷயத்தில் ஒரு பக்கம் நன்மைகள் கிடைத்தாலும், ஆரோக்கியரீதியாக பல சவால்களும் இல்லாமல் இல்லை என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

எதனால் இப்படி சொல்கிறார்கள்… காரணம் இல்லாமல் இல்லை… அலுவலகம் என்றால் வேலை செய்வதற்கேற்ற சூழலுடன் மேஜை, நாற்காலி, வெளிச்சம், தொழில்நுட்ப உபகரணங்கள் என அனைத்து வசதிகளுடனும் இருக்கும். ஆனால், வீட்டின் சூழல் வேறு மாதிரிதான் இருக்கும். இதில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமெல்லாம் பெரிதாக இல்லை. போதிய வெளிச்சம், காற்றோட்டம், மேஜை, நாற்காலி போன்ற அலுவலக வசதிகளை எந்த வீட்டிலும் அப்படியே எதிர்பார்க்க முடியாது. வளரும் நாடு என்று குறிப்பிடப்படும் இந்தியாவில், பல வீடுகளில் வேலை செய்வதற்கென்று தனி அறையே கிடையாது. குழந்தைகள் உள்ள வீடுகளில் கேட்கவே வேண்டாம். கூச்சல், குழப்பம் என்று அமைதியாக வேலை செய்யவே முடியாது.

இதன் காரணமாக கவனச்சிதறல்களால் டென்ஷன் ஏற்படுவதுதான் மிச்சமாக இருக்கும். அதேபோல் குறைவான வெளிச்சத்தில் பல மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்வதாலும், நீல நிறக் கதிர்களின் வெளிப்பாட்டாலும் கண்களில் அழுத்தம், கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் போன்ற கண் சார்ந்த பிரச்னைகள் உண்டாக வாய்ப்புகள் அதிகம். இளவயதினர் சிறுவயதிலேயே கண் கண்ணாடி அணியும் நிலையும் வரக்கூடும். சிலர் மேஜை, நாற்காலிகள் இல்லாமல் படுக்கையிலும், தரையிலும் அமர்ந்துகொண்டு வேலை செய்வார்கள். கம்ப்யூட்டருடன் சரியான இடைவெளியும் இருக்காது. தவறான பொசிஷனில்(Wrong posture) அமர்ந்து வேலை செய்வதால் கீழ் முதுகு, கழுத்து, முதுகுத் தண்டுவடங்களில் வலியும் ஏற்படலாம். காற்றோட்டமில்லாத அறைகள் தலைவலி, மன உளைச்சலை உண்டாக்கவும் காரணியாகலாம்.

லாக்டவுனில் ஸ்மார்ட்போன்களின் அதீத பயன்பாட்டால் பலருக்கும் கட்டைவிரல், மணிக்கட்டு, கழுத்து, மற்றும் தோள்பட்டை கைகளில் வலி ஏற்படுவதாகவும் எலும்பியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இப்படியெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை. சகல வசதிகளும் அலுவலகத்தைப் போலவே இருக்கிறது என்று சொன்னாலும் சில நேரங்களில் வீடியோ கால்களின்போது, தொழில்நுட்ப கோளாறுகளினால் சரியாக கேட்கவோ, பார்க்கவோ முடியாது. சில நேரங்களில் அப்படியே ஸ்தம்பித்துவிடுவதும் உண்டு. இதன் காரணமாகவும் பலர் பதற்றம் ஆகிறார்கள். பெரியவர்களின் நிலையே இப்படி இருக்கும்போது, பள்ளிச் சிறுவர்களின் நிலை பற்றி சொல்லத் தேவையில்லை. பொதுவாக குழந்தைகளுக்கு ஆசிரியரின் நேரடி கண்காணிப்பு அவசியம். ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகளை முழு கவனத்துடன் ஈடுபடச் செய்வது கடினம்.

இதையெல்லாம் தாண்டி நாள் முழுவதும் Work or home செய்கிறவர்கள் அலுவலக கால்கள், வீடியோ கான்ஃபரன்ஸிங், மீட்டிங் என எந்நேரமும் அறைக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். வெயிலோ, காற்றோ எதுவும் இல்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பாடு, தூக்கம்… என்று மாறுபட்ட வாழ்க்கைமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள். எப்போது எழுகிறார்கள்? எப்போது தூங்குகிறார்கள் என்று வீட்டில் இருப்பவர்களுக்குக்கூட தெரிவதில்லை. இவர்களின் உலகமே தனியாக இயங்குகிறது. அதேபோல் ஆன்லைன் வகுப்புகளை தவறவிடும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

பெரியவர்களுக்கும் சரி, மாணவர்களுக்கும் சரி… தன் சக நண்பர்களைப் பார்க்காமல் சமூகத்தோடு இணையாமல் தனிமையில் இருப்பது பல மனநலப் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும் என்பது மனநல நிபுணர்களின் கருத்து. இதற்காக மனநல மருத்துவர்கள் ஆன்லைன் மூலமாக மனநல ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். சமூகத்தோடு இணையாமல் தனிமையை விரும்புபவர்களுக்கும், சமூக பதற்றக் கோளாறு (Social Anxiety) உள்ளவர்களுக்கும் வேண்டுமானால் ஒர்க் ஃப்ரம் ஹோம் கான்செப்ட் சரியானதாக இருக்கும். மற்றவர்களுக்கு இயல்பு வாழ்க்கையே சிறந்த வழி. விரைவில் மாற்றம் வரட்டும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியமாக இருப்பதே வெற்றிதான்!! (மருத்துவம்)
Next post திமுகவிடம் வம்பு வளர்க்கிறார் கார்த்தி சிதம்பரம்! (வீடியோ)