By 30 January 2021 0 Comments

விளையாடுங்க…உடல் நலமாகுங்க!! (மருத்துவம்)

‘‘விளையாட்டு என்பது குழந்தைகளுக்கான விஷயம் என்றே பலர் நினைக்கிறோம். இன்னும் சிலர் குழந்தைகளுக்கும் கூட அது தேவையில்லாத விஷயம் என்று நினைக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ குழந்தைகளையும் விளையாட விடாமல் படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். விளையாட்டால் கல்வி பாதிக்கக் கூடாது என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை விளையாட்டு பாதிக்கக் கூடாது என்பதும். விளையாட்டால் உடல்ரீதியான என்னென்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம். மனித உடல் என்பது இயக்கத்துக்குரியதாகப் படைக்கப்பட்டிருப்பது. எனவே, பாரதியார் சொன்னதுபோல் உடலுக்கு ஓய்ந்திருக்கலாகாது. அதனால்தான் உடற்பயிற்சி அவசியம் என்று எல்லோருமே வலியுறுத்துகிறார்கள்.

உடற்பயிற்சியில் கூட முழுமையான ஆர்வத்தோடும், காதலோடும் செய்வோமா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், விளையாட்டு என்பது ஆசையோடு செய்வது. எந்த நிர்ப்பந்தங்களும், இலக்குகளும் இல்லாமல் செய்வது. அதனால்தான் விளையாட்டில் கூடுதலான பலன்கள் கிடைக்கின்றன. பொதுவாகவே எந்த ஒரு விளையாட்டைத் தொடங்கும்போது சில வாரங்களிலேயே உடலில் ஒரு பெரிய மாற்றத்தை உணர முடியும். உடலில் சோர்வு நீங்கி, உற்சாகம் தெரியும். உற்சாகம் பெருகும் பட்சத்தில் வாரம் ஒருமுறை என பழகிய விளையாட்டு இருமுறையோ அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட முறையோ தானாகவே பழக்கத்திற்குள்ளாகிறது. அப்படி காலப்போக்கில் வெறும் பொழுதுபோக்குக்காக விளையாடியவர்கள் அதை ஒரு பழக்கமாகவே எடுத்துக் கொள்வார்கள்.

ஷட்டில், டென்னிஸ், கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி என எந்த விளையாட்டாக இருந்தாலும் இது நாளடைவில் நடைமுறைக்கு வரும். மேலும் இம்மாதிரியான பழக்கங்கள் பல நன்மைகள் தரும் விதமாக அமையும். மூச்சுத்திணறல், அதீத உடல் எடை, கொழுப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற நோய்கள்கூட குறைவதைக் கூட பார்க்கலாம். விளையாட்டு காரணமாக இதயம், நுரையீரல், தசைகள், எலும்பு என உள்ளுறுப்புகள் பலப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நன்றாகவே கட்டுக்குள் அடங்கும். உடலில் ஹார்மோன்கள் கோளாறுகள் கட்டுப்பட்டு சீராகும். பல்வேறு ஹார்மோன்கள் குறைபாட்டுக்கு விளையாட்டு மிகச்சிறந்த மருந்து. விளையாட்டு காரணமாக ரத்தத்தின் கெட்டித்தன்மை குறைந்து உயர் ரத்த அழுத்தமும் குறைகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓடி ஆடி என விளையாடும்போது வயிறு, கால், கை, இடுப்பு என நம் உடலில் உள்ள அனைத்து தசைகளும் வலுவடைகிறது.

தசைகள் வலுவடையும்போது, எலும்புகளும் வலுவடைந்து BMD(Bone mineral Density) எனப்படும் எலும்பின் சத்து கூடுகிறது. இதனால் எலும்பு பலவீனம், எலும்பு உடைவது(Osteoporosis) போன்ற பிரச்னைகள் கட்டுக்குள் கொண்டு வர முடியும். முக்கியமாக பெண்கள் ஏதேனும் ஒரு விளையாட்டை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மாதவிடாய் தொந்தரவுகள், மற்ற ஹார்மோன் கோளாறுகள் சீராகும். பெண்கள் மாதவிடாய் நிறைவுறும் காலங்களில் எலும்பு பலவீன பிரச்னையால் அவதியுறுவர். அவர்கள் சிறுவயதில் இருந்தே விளையாட்டு பழக்கத்தை மேற்கொண்டால் பெரிய பெரிய வியாதிகளின் பிடியில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழலாம்’’ என்பவர், மனரீதியான நன்மைகளையும் பட்டியலிடுகிறார்.

‘‘விளையாடும்போது உடல் மட்டும் பலம் பெறுவதில்லை. உடற்பலத்தினூடே மனமும், ஆரோக்கியம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. விளையாடும்போது மனம் மகிழ்ச்சி அடைகிறது. உடல் களைத்து ஓய்வு நிலைக்குச் செல்ல விரும்பும். மனதிலும் அமைதி தவழும். இதனால் இரவில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். மனதில் ஏற்படும் பயம் (Anxiety), மனஅழுத்தம் (Depression Stress) ஆகியவையும் குறையும். பொதுவாகவே இம்மாதிரி விளையாட்டுகளில் ஈடுபடும்போது ஒவ்வொருவருக்கும் தன்னால் இதைச் செய்ய முடியும் என்ற எண்ணம் தோன்றி நாளடைவில் அதுவே தன்னம்பிக்கையை அதிகரிக்க வைக்கும். இரவில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கப் பெறுவதினால் சிறுவர், மத்திம வயதினர் முதல் முதியவர்கள் வரை சிறப்பான மூளை செயல்பாட்டினையும் கிடைக்கப் பெறுவர்.

இதனால்தான் விளையாட்டுகளை Brain Boost என்கிறார்கள். மனதில் உற்சாகம் ஏற்படுவதினால் நாள் முழுக்க சோர்வின்றி செயல்பட முடியும். மகிழ்ச்சி நிறைந்த ஒருவர், தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார். விளையாட்டினால் கிடைக்கும் மன ஒருமுகப்பாடு(Concentration) மிகவும் முக்கியமானது. கவனச்சிதறல் அதிகமாகி வரும் இக்காலக்கட்டங்களில், விளையாட்டில் ஈடுபடும்போது மனம் ஒருங்கிணைந்து ஒரு மணி நேரம் தனக்கான விருப்ப செயல்களைச் செய்யும்போது, கவனம் கூடுகிறது. இவ்வாறாக கவனம் அதிகரிப்பதினால் படிப்பிலும், வேலையிலும் சிறந்து விளங்க முடியும். விளையாடுவதினால் மேலும் பல சிறந்த பயன்களும் உண்டு. இறுகிப்போன மனதை அமைதி ஆக்குவதுடன் எதிர்மறையான(Negative Thoughts) எண்ணங்களைக் குறைத்து, சுயமரியாதையை(Self-esteem) அதிகரிக்கச் செய்கிறது.

முக்கியமாக தோல்வியிலிருந்து மீண்டு வரும் மனவலிமையை விளையாட்டு கொடுக்கும். எப்பொழுதுமே மனம் முழுவதும் ஊக்குவிக்கும் பாசிட்டிவான எண்ணங்கள் நிறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியமாக இருக்க ஹார்மோன்கள் சுரப்பதுபோல, மனம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவும் ஹார்மோன் சுரக்கிறது. இவற்றை ஹேப்பி ஹார்மோன் (Happy Hormone) எனக் கூறலாம். இதுவும் விளையாட்டினால் கிடைக்கும் முக்கியமான நன்மை. ஹார்மோன்கள் குறைபாடு மன ஆரோக்கியத்தை கெடுக்கும். இனவிருத்தி ஹார்மோன்களான (Reproductive Hormones) Progesterone, estrogen, Testosterone மூளையின் நரம்பு செல்களை தூண்டுவதினால் ஞாபகமறதி மற்றும் அறிவாற்றல் குறைபாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இவ்வாறான குறைபாடு ஏற்படாமல் இருக்க தினமும் 30 முதல் 45 மணித்துளிகளாவது ஏதோ ஒரு விளையாட்டில் ஈடுபட்டே ஆகவேண்டும். முக்கியமாக பெண்கள் கர்ப்ப காலங்களில் பற்பல மாறுதல்களை அடைவதினால் ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். குழந்தை பிறந்த பின்பு Progesterone எனப்படும் முக்கியமான ஹார்மோன் குறைவதினால் மகப்பேறு பிறகு ஏற்படும் மன அழுத்தம் (Postpartum depression), பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும். இம்மாதிரியான கேடுகள் ஏதும் வராமல் இருப்பதையும் விளையாட்டு தடுக்கும். மேலும் மனம் ஆரோக்கியம் இல்லாமல் வாழும் ஆண்களும், பெண்களும் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பிறகு மூளை, நரம்பு (Neuro system) பாதிப்பிற்குள்ளாவார்கள்.

நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு Multiple Sclerosis, parkinson’s மற்றும் ஞாபக மறதி வியாதிகளான Dementia, Alzheimer’s போன்ற பிரச்னைகளும் உருவாகலாம். இதற்கான ஒரே விடை மன அமைதியுடன் வாழ்வை அமைத்துக்கொள்வது மட்டுமே. அதற்கு விளையாட்டு உதவும். எல்லோராலும் தியானப்பயிற்சியை கைவசப்படுத்த முடியாது. ஆனால், எந்த ஒரு விருப்ப விளையாட்டை விளையாடினாலும் மனமும், உடலும் ஒருங்கிணையும்போது அங்கே ஒருவித தியானம் போன்ற உணர்வு ஏற்பட்டு, மனதில் வேறு எந்தவித எண்ணங்களும் வராமல், தியானத்தில் ஈடுபடுவது போன்ற ஒரு பழக்கம் ஏற்படும். அதனால், எத்தனை நேர நெருக்கடியான வாழ்க்கை முறையானாலும், ஒவ்வொருவரும் குறைந்தது 30 நிமிடங்களாவது விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டும். அது மன மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தருவதுடன் சமூக உறவுகளைக் கையாள்வதற்கும் உதவி செய்யும்!’’Post a Comment

Protected by WP Anti Spam