By 30 January 2021 0 Comments

46 வது அமெரிக்க ஜனாதிபதியும் 46 வது ஐநா கூட்டத்தொடரும்!! (கட்டுரை)

உலகம் இனவாதம் மற்றும் அது தொடர்பான தீவிரவாதங்களுக்கு எதிரான ஒரு அணியையும் மதவாதம் உள்ளிட்ட தீவிரவாதங்களை மூலதனமாகக் கொண்டு பயணிக்கும் மாற்று அணிக்கும் இடையிலான சவால்கள் நிறைந்த போக்குகளையே எதிர்காலத்தில் காணப்போகிறது.

ஜோ பைடனின் வருகை மற்றும் அவரது பிரகடனம் குறிப்பாக இனவாதத்துக்கு எதிரான உள்நாட்டு தீவிரவாதத்துக்கு எதிரான முழக்கங்கள் எதிர்காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் அரசியல் நிகழ்ச்சி நிரலை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் பெனிஸண்டோய்ஸ் உள்ளிட்ட முற்போக்கு எண்ணங்களை கொண்ட பலர் அணிவகுத்து நின்றனர்.

மறுபக்கத்தில் உலகின் பிற்போக்கு தன்மைகளைக் கொண்ட ஜனநாயக விரோத இனவாத தளங்களைக் கொண்ட நாடுகளின் பின்னணியை சீன தேசம் தலைமை தாங்கி வருகிறது. இங்கே தேசிய இனங்களுக்கான விடுதலையோ மனித உரிமை மீறல்களோ செவிசாய்க்க படாத இறுகிய பாரம்பரியம் அடித்தளமாக உள்ளது. இன்றைய இலங்கை ஆட்சியாளர்கள் இந்த கூட்டமைப்பின் பின்னால் செய்வதிலேயே ஆர்வமாக உள்ளனர். எனவே இந்த பூகோளத்தில் இரண்டு அணிகளுக்கு இடையிலான மோதல்களை நாம் நேரடியாகப் பார்க்க போகின்றோம்.

46வது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளர். உப ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தெரிவாகியுள்ளர். 232 வருடகால அமெரிக்க உப ஜனாதிபதி வரலாற்றில் முதல்முறையாக பெண்ணொருவர் அதுவும் வெள்ளை இனத்தவர் அல்லாத தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்ணொருவர் உப ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

மேற்படி ஜனாதிபதி பதவியேற்பில் வெள்ளையர் அல்லாதவரின் ஆதிக்கம் குறிப்பாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நெறிப்படுத்தல் அதிக செல்வாக்கை செலுத்தியிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. பேதங்கள் இன்றி முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளின்டன்,ஜோர்ஜ் புஷ் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து இருந்தனர். வெள்ளையின மேலாதிக்கம், உள்நாட்டு பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் அமெரிக்காவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் திடசங்கற்பம் பூணுவோம் என்பதே புதிய ஜனாதிபதியின் பிரதான கொள்கைப் பிரகடனமாக அமைந்திருந்தது. ஐக்கிய அமெரிக்காவை உலக நாடுகளின் நட்புறவை பலப்படுத்துவோம் என்பதும் அங்கே உரக்க ஒலிக்கப்பட்டது.

பதவியிலிருந்து வெளியேறிய முன்னைநாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க சம்பிரதாயங்களை மதிக்காமல் மேற்படி பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளாமல் பின்கதவால் வெளியேறியிருந்தார். போகும்போது கூட கடைசி நிமிடத்தில் பல குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துவிட்டே சென்றிருந்தார். அமெரிக்க வரலாற்றில் ஜனநாயக பாரம்பரியங்களை ஒரு கரையில் போட்டுவிட்டு தான் விரும்பியவாறு அமெரிக்க தேசத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக வழிநடத்திய டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை மற்றும் உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றிலிருந்து அமெரிக்காவை வெளியேற வைத்தார். மேலும் பரிஸ் சுற்றுப்புறச்சூழல் உடன்படிக்கை, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவற்றிலிருந்தும் அமெரிக்கவை வெளியேறவைத்தார். கடுமையான குடிவரவு கொள்கையை அமுல்படுத்தியதுடன் அமெரிக்க தேசத்தை சமூக முரண்பாட்டு களமாகவும் மாற்றியிருந்தார்.

பொய்களை மூலதனமாக்கி தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்த டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா ராஜதந்திரத்தை மிகக் கீழ் நிலைக்கு கொண்டு சென்ற அமெரிக்க ஜனாதிபதியாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இறுதியாக வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தனது ஆதரவாளர்களை அனுப்பி கட்டடத்தை வன்முறை மூலம் தகர்த்த தலைவராகவும் இரண்டு முறை குற்றவியல் பிரேரணையை சந்தித்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாகவும் வரலாற்றில் இடம்பெற்று வெளியேறியுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் நிச்சயம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க செல்வாக்கை மேல்நிலைக்கு கொண்டு வரவே முயல்வார். அதற்கான ஒழுங்குபடுத்தல்கள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன.குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தான் எழுதிய நூலில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் மேற்படி யுத்தம் நடைபெற்ற இறுதி காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் செயலின்மையை அதில் கண்டித்திருந்ததும் யாவரும் அறிந்த உண்மையாகும்.

இந்த சூழ்நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டபாய ராஜபக்ச தனிச் சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலுடன் ஆட்சியை நடத்தி வருகின்றார். அமெரிக்காவுடன் நேர் விரோதமாகவும் சீனாவுடன் அதிக நட்பாகவும் இருந்து வருவதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளாமல் இலங்கையை வழிநடத்தி வருகின்றார். கூடுதலான அழுத்தங்கள் தமக்கு விடுக்கப்பட்டால் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களிலிருந்து வெளியேறவும் தயங்க மாட்டேன் என எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயகத்தை விரும்பும் நாடுகள், அமைப்புகள் வலியுறுத்தும் கொள்கைகளுக்கு நேர் விரோதமாக ராணுவ ரீதியான முனைப்பை அதிகப்படுத்தி இலங்கை நிர்வாகத்தை ராணுவ மயமாக்கும் செயற்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஜனாதிபதியாகவும் கோத்தபாய ராஜபக்ச காணப்படுகின்றார். இலங்கை தேசத்தில் எங்கும் ராணுவம் எதிலும் ராணுவம் என்ற நிலையே மேலிட்டு வருகின்றது. பிரபல மூத்த எழுத்தாளரும் ராவய பத்திரிகையின் முன்னைநாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் உலகில் ராணுவ நிர்வாகம் முன்னெடுப்பு இல்லாது போயுள்ளது என்றும் லத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இது முன்பு இருந்தது என்றும் இலங்கையில் ராணுவ முன்னெடுப்பை அதிகம் விமர்சித்து அண்மையில் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். எனவே தமிழ் மக்கள் தொடர்பான அரசியல் தீர்வு மற்றும் யுத்தத்தின் பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மக்கள் சர்வதேசத்தையே தமது மீட்பர்களாக நம்பி இருக்கின்றனர்.

மறுபக்கத்தில் இஸ்லாமிய மக்கள் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு தாம் ஒடுக்குமுறை நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக உணர்ந்து வருவதுடன் தமிழ் மக்களுடன் கைகோர்க்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக இஸ்லாமிய மக்களின் கொரோனாவால் மரணிப்போரின் ஜனாஸாக்களை தகனம் செய்யும் செயற்பாடு அதிக கவலையை இ தாக்கத்தை அம்மக்களுக்கு வழங்கியுள்ளது. ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய கோரி போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்தியா தமிழ் மக்களின் கௌரவம், எதிர்பார்ப்பு, நிறைவேற்றப்படவேண்டும். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வலுவாக்கபடவேண்டும். குறிப்பாக மாகாண சபை முறைமை பலப்படுத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மீண்டும் வெளிப்படையாக இலங்கை அரசாங்கத்துடன் இது தொடர்பாக இந்திய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அரசாங்கமோ இவை தொடர்பாக எந்தவித கரிசனையும் இன்றியே பயணிக்க முயல்கிறது. மாறாக தமிழ் பகுதிகளில் தமிழ் மக்களை ஏதோ விதத்தில் சீண்டும் செயற்பாடுகளை நேர்த்தியாக செயற்படுத்தி வருகின்றது. மயிலத்தமடுஇ மாதவனை பண்ணையாளர்களை தாக்கியவர்களை கைது செய்யாமல் தாக்கப்பட்ட பண்ணையாளர்களை கைது செய்திருப்பதும் அங்கே பண்ணையாளர்களின் கால்நடைகள் கொல்லப்படும் நிலைக்கு காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலை தொடர்கிறது.

முல்லைத்தீவில் இந்து கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையை அமைச்சரே பிரதிஷ்டை செய்துவிட்டு சென்றுள்ளார்.

மண்டைதீவு பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியை எழுந்தமானமாக அளவிட முயன்று பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டுள்ளது. தற்போது வட பகுதியில் நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியையும் இவர்கள் முற்றுகையிட்டு உள்ளதாக செய்திகள் வருகின்றன.தமிழ் முஸ்லிம் மக்களை சீண்டும் செயற்பாடுகள் இலங்கை நிர்வாக கட்டமைப்பில் நிரந்தரமாகி உள்ள நிலையில் அமெரிக்க தேசத்தில் நிறவேறுபாட்டுக்கு குறிப்பாக இனவாதத்துக்கு எதிராக அமெரிக்க மக்கள் திடசங்கற்பம் பூண்டுள்ள நிலையில் 46வது அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்றுள்ளார். எனவே இந்தச் சின்னஞ்சிறிய இலங்கை தேசம் இந்திய நட்புறவை மிறி அமெரிக்க ஐரோப்பிய எதிர்பார்ப்புகளுக்கு எதிராக சீன தேசத்துடன் கைகோர்த்து சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பும் முயற்சிகள் கைகூடுமா கை கூடாதா என்பதை புதிய அமெரிக்க ஜனாதிபதியின் காய்நகர்த்தல்களை 46 வது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் பிரதிபலிப்புகள் மூலம் கண்டு கொள்ள முடியும்.Post a Comment

Protected by WP Anti Spam