By 4 February 2021 0 Comments

கூந்தல்: நரையும் குறையும்!! (மகளிர் பக்கம்)

சமூக அந்தஸ்து என்பது இன்று ரொம்பவே முக்கியம். தோற்றத்துக்கு அதில் மிக முக்கிய இடமுண்டு. குறிப்பாக கூந்தலுக்கு! அழகான, அடர்த்தியான, சரியாகப் பராமரிக்கப்பட்ட கூந்தல் என்பது ஒருவரது தோற்றத்தைப் பல மடங்கு உயர்த்திக் காட்டக்கூடியது. நரை என்பது இதற்குத் தடையாக அமைவதால், எத்தனை வயதானாலும் கருகரு கூந்தலுடன் வலம் வருவதையே பலரும் விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக பிரபலங்களுக்கும், புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கும் கூந்தலின் நிறம் என்பது பெருங்கவலையை அளிக்கிற விஷயம். சாயம் பூசப்படாத தலையுடன் வெளியே நடமாடுவதை அவர்கள் விரும்புவதும் இல்லை.

முதல் வெள்ளை முடியைப் பார்க்கிற போது ஏற்படுகிற அதிர்ச்சி அகல யாருக்குமே சில நாட்கள் ஆகும். அவசரத்தில் அதைப் பிடுங்கி எறிந்து விடுவதன் மூலம் அந்தக் கணம் தப்பிக்கலாம். ஆனால், அது நிரந்தரத் தீர்வாகாது. கூந்தலின் நுண்ணறைகள் அதன் கருமைக்குக் காரணமான நிறமி உற்பத்தியை நிறுத்திவிட்டால், அடுத்து வளர்கிற கூந்தலின் நிறம் வெள்ளையாகவே இருக்கும் என ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

அதனால், நரைக்குத் திரை போட சாயங்களை நாடுவதுதான் ஒரே தீர்வாக இருக்கிறது.நரையை மறைக்க மட்டுமின்றி, கூந்தலை கலரிங் செய்வதில் வேறு சில நன்மைகளும் உள்ளன.இப்போதெல்லாம் டீன் ஏஜிலேயே கூந்தல் நரைப்பதைப் பார்க்கிறோம். முதுமைக்கு முன்பே கூந்தல் நரைத்தால் அது ஒருவரது தன்னம்பிக்கையைப் பதம் பார்க்கிறது. வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதன் மூலம் அந்த தன்னம்பிக்கை திரும்புவதை உணர்கிறார்கள். கருப்பைத் தவிர்த்து வேறு கலர்களை முயற்சி செய்கிறவர்களுக்கு அது ஃபேஷனின் அடையாளமாகவும் இருக்கிறது.

தலைக்குக் குளிக்க உபயோகிக்கிற தண்ணீரில் கலந்திருக்கும் குளோரின் மற்றும் தாதுச்சத்து களின் மிச்சம் கூந்தலில் படிந்து பிரபலிப்பதை இதன் மூலம் மறைக்கலாம். ஏற்கனவே முயற்சி செய்து பார்த்துப் பிடிக்காமல் போன ஹேர் கலரிங்கின் நிறத்தை மாற்றவும் இது உதவும். என்னதான் டை உபயோகித்தே ஆக வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், அது எப்படிப்பட்ட பாதிப்பைத் தருமோ என்கிற பயமும் ஒவ்வொருவருக்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

காரணம், அவற்றில் பயன்படுத்தப்படுகிற பயங்கர ரசாயனங்கள். ஒவ்வொரு நிறுவனமும் 5 ஆயிரத்துக்கும் மேலான ரசாயனங்களைப் பயன்படுத்தி, தாம் விரும்புகிற நிறத்தையும், ஷேடையும் கொண்டு வருகின்றன என்றால் நம்ப முடிகிறதா? ஹேர் டை என்பவை அமோனியா, ஆல்கலைஸர், சோப், ஆன்ட்டி ஆக்சிடன்ட், மாடிஃபையர், நறுமணம் உள்பட ஏராளமான ரசாயனங்களின் கலவையே. எத்தனை நாட்களுக்கு அந்த டையின் நிறம் தாக்குப்பிடிக்கும் என்பதற்கேற்ப இந்தக் கலவை நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும்.

டை வகைகள்

தற்காலிகமானவை, ஓரளவுக்கு நிரந்தரமானவை மற்றும் நிரந்தரமானவை என டையில் 3 வகைகள் உள்ளன. தற்காலிக டை…பெயரே இதன் அர்த்தம் சொல்லும். இந்த வகை டையின் நிறம் மிகவும் தற்காலிகமானது. இந்த வகை சாயங்கள் ஜவுளிகளுக்கு சாயம் ஏற்றவே முதலில் உருவாக்கப்பட்டவை. இந்தச் சாயமானது கூந்தலின் வெளிப்புறத்தில்தான் படியும். கூந்தலின் வேரினுள்ளே ஊடுருவாது. உபயோகிக்க சுலபமாக ரின்ஸ், ஜெல், ஸ்பிரே என பல வகைகளில் கிடைக்கிறது. அரிப்பு, எரிச்சல் போன்ற ஒவ்வாமைகளும் இதில் மிகக் குறைவு. இளநரை உள்ளவர்களுக்கும், அடிக்கடி கூந்தல் கலரை மாற்ற நினைப்பவர்களுக்கும் இது சிறந்த சாய்ஸ்.

ஓரளவு நிரந்தரமானவை…

6 முதல் 12 வாரங்கள் வரை நீடிக்கக் கூடியவை இவை. இவற்றில் பிளீச் இருப்பதில்லை என்பதால் பாதுகாப்பானவையும்கூட. இளவயதில் நரைப் பிரச்னையை சந்திப்பவர்களுக்கும், மிகக் குறைவான நரையை மறைக்க நினைப்பவர்களுக்கும் ஏற்றது இது. நிரந்தரமானவை… உலகம் முழுக்க பெரும்பாலான மக்களால் உபயோகிக்கப்படுவது இது. கூந்தலின் தோற்றத்தை அப்படியே தலைகீழாக மாற்றக்கூடியது இது.

கூந்தலுக்கு இயற்கையான நிறத்தைக் கொடுக்கக் கூடிய மெலனினை அப்படியே உரித்தெடுத்து, அதன் பிறகு ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்த கரைசலின் மூலம் கூந்தலுக்கு வேறொரு நிறத்தைக் கொடுக்கும் முறை இது. இதில் உபயோகிக்கப்படுகிற ஹைட்ரஜன் பெராக்சைடு மிகவும் ஸ்ட்ராங்கான கெமிக்கல். எனவே நிரந்தர டை உபயோகிப்பதென முடிவு செய்கிறவர்கள், அதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் எனப்படுகிற சோதனையை மேற்கொண்டு, அலர்ஜி ஏதும் ஏற்படுகிறதா எனத் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

கூந்தலை பாதிக்குமா ஹேர் டை?

எந்த வகையான டை என்றாலும், அதன் கெமிக்கல் கட்டாயம் தன் விளைவைக் காட்டும். அதிலும் நிரந்தர டை வகைகள் காலப் போக்கில் கூந்தலில் அப்படியே படிந்து, கூந்தலின் தண்டுப் பகுதிகளை பலமிழக்கச் செய்பவை. அது மட்டுமின்றி, கூந்தலை வறண்டு போக வைத்து, உடையவும் வைப்பவை. சில நேரங்களில் நிரந்தர ஹேர் டை ஏற்படுத் துகிற பாதிப்புகள், மறுபடி சரி செய்யவே முடியாத அளவுக்குத் தீவிரமாக இருப்பதும் உண்டு. மருத்துவர் அல்லது விஷயம் அறிந்த அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையின் பேரில், டை உபயோகித்த பிறகு கூந்தலுக்கு கண்டிஷனர் உபயோகிப்பதும், சிலிக்கான் அடங்கிய லீவ் ஆன் கண்டிஷனர் உபயோகிப்பதும் கூந்தல் பாதிப்பை ஓரளவுக்குத் தடுக்கும்.

உபயோகிப்பவர் கள்கவனத்துக்கு…

ஒவ்வொரு முறையும் பேட்ச் டெஸ்ட் செய்த பிறகே டை உபயோகிக்கவும். நீங்கள் உபயோகிக்கப் போகிற டையில் சிறிதளவை எடுத்து காதுக்குப் பின் அல்லது மணிக்கட்டில் தடவி, சில மணி நேரம் காத்திருந்து அலர்ஜி எதுவும் ஏற்படுகிறதா எனப் பார்க்க வேண்டும்.

டை உபயோகிப்பதற்கு முன் கூந்தலை பிரஷ் செய்ய வேண்டாம். கைகளுக்கு கிளவுஸ் அணிந்து கொண்டு டையை கையாளவும். கண்களுக்குள் டை பட்டுவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும்.

டை உபயோகித்து தலையை அலசும் போது அதிக சூடான தண்ணீரைத் தவிர்த்து வெதுவெதுப்பான தண்ணீரையே பயன்படுத்தவும்.

மிக மைல்டான ஷாம்புவை உபயோகிக்கவும். அதிக ஸ்ட்ராங்கான ஷாம்பு, கூந்தலுக்குப் பூசிய நிறத்தை நீக்கி விடும்.

புருவங்களில் உண்டாகிற நரைக்கு என்ன தீர்வு?

தலையில் எட்டிப் பார்க்கிற வெள்ளை முடிகளை டை அடித்து மறைக்கலாம். ஆனால், சிலருக்கு புருவங்களில் உள்ள ரோமங்கள் திடீரென நரைக்கும். அதைப் பிடுங்கலாமா? டை தடவலாமா என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகளுடன் வருவார்கள். புருவங்களிலும், இமைகளிலும் உள்ள ரோமங்களில் டை உபயோகிக்கவே கூடாது. அவற்றில் உள்ள ரசாயன நஞ்சானது, கண்களைப் பெரிதும் பாதிக்கும்.

US FDA அமைப்பானது புருவங்கள் மற்றும் இமைகளுக்கு டை உபயோகிப்பதற்கு, அழகு நிலையங்கள் உள்பட சட்டப்படி தடையே விதித்திருக்கிறது. புருவங்களில் உள்ள ரோமங்கள் நரைக்க, பரம்பரை வாகு, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி குறைபாடு, வேறு ஏதேனும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவையே காரணங்கள்.

இதற்கு என்ன தீர்வு?

* வைட்டமின் பி 12 அதிகமுள்ள அவகடோ போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* வைட்டமின் டி குறைபாடு எலும்பு களைப் பதம் பார்ப்பதுடன், புருவங்களின் ரோமங்களையும் வெளுத்துப் போகச் செய்யும். எனவே தினமும் காலை மற்றும் மாலை வெயிலில் 30 நிமிடங்களாவது இருப்பதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்யலாம்.

* வைட்டமின் ஹெச் உள்ள முட்டை,சீஸ், வெங்காயம், வெள்ளரி, பாதாம் போன்றவையும் இந்தப் பிரச்னைக்கு உதவும்.

* நெல்லிக்காயைத் துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு, கருப்பாகும் வரை காய்ச்சி, ஆற வைத்து, அதை புருவங்களில் தடவி வந்தால், நரை மாறும்.

* இஞ்சியைத் துருவி தேன் சேர்த்து தினமும் சாப்பிடுவதும் நல்ல தீர்வு.

* வாரம் 2 முறைகள் பசும்பாலை புருவங்களில் தடவி மசாஜ் செய்து வரலாம்.

* கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டுக் கருப்பாகும் வரை காய்ச்சி, ஆற வைத்து தினமும் புருவங்களில் தடவி வரலாம். இது புருவ ரோமங்களுக்கு கருமை நிறத்தைக் கொடுக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam