பித்தப்பை கற்கள்: நிரந்தர தீர்வு என்ன? (மருத்துவம்)

Read Time:7 Minute, 40 Second

கிட்னி ஸ்டோன் என்றால், இப்போது எல்லோருக்கும் தெரியும். ‘சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா? பலரும் கேள்விப்படாத ஒன்று இது. நூறில் பத்து பேருக்கு பித்தப்பையில் கற்கள் இருக்கின்றன. அதில், பலருக்கும் ‘சைலன்ட் ஸ்டோன்’ பாதிப்பு இருப்பதாகச் சொல்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.

”பித்தப்பைக் கற்கள் உருவாகும்போது, அதன் ஆரம்ப அறிகுறிகள் 80% பேருக்குத் தெரியாது. அதனால்தான் இதனை ‘சைலன்ட் ஸ்டோன்ஸ்’ என்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் நாளடைவில் இது பெரிதாகி பல பிரச்னைகளை உருவாக்கும். ஆகையால், குறிப்பிட்ட கால இடைவெளியில், முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதே பித்தப்பைக் கற்களைக் கண்டுபிடிக்கும் வழி” என எச்சரிக்கை மணி அடிக்கிறார் இரைப்பை, கல்லீரல் மற்றும் குடல் அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் கண்ணன்.

”பித்தப்பைக் கற்கள் என்றால் என்ன?”

”நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து செரிமானம் அடைய பித்தநீர் மிகவும் அவசியம். பித்தநீர் சுரக்கும் இடம் கல்லீரல். இந்தப் பித்தநீர் நாள் ஒன்றுக்கு சுமார் 600 முதல் 750 மி.லி. வரை சுரந்து பித்த நாளங்கள் வழியாக சிறுகுடலைச் சென்றடையும். இதில் சுமார் 40 முதல் 50 மி.லி. அளவு

பித்தநீர் அடர் நிலையில் பித்தப்பையில் சேமிக்கப்படும். இந்தப் பித்தப்பை சரியாக வேலை செய்யாதபோது, கொழுப்பு அதிகமாகி, அதுவே படிவங்களாக உருமாறி பித்தப்பையில் கற்களை உருவாக்கிவிடுகிறது.

ஆண்களைவிட பெண்களுக்குப் பித்தப்பைக் கற்கள் அதிகமாக உருவாகக் காரணம்?

”அடிக்கடி கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது இதற்கு ஒரு காரணம். குழந்தைப்பேறுக்காக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும். கர்ப்பக் காலங்களில், இயற்கையாகவே ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பது, பித்தப்பையில் அதிக அளவு கொழுப்பு இருப்பது, பித்தப்பை சரிவர சுருங்கி விரியாத தன்மைகொண்டதாக இருப்பது என இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

அதிகப்படியான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை உண்டுவிட்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு பித்தப்பையில் கொழுப்பின் அளவு அதிகமாகி கற்கள் உண்டாகின்றன. நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பவர்கள், உபவாசம் என்ற பெயரில் உடம்பை வருத்திக்கொள்பவர்கள், மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு எடையைக் குறைப்பவர்கள் மற்றும் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்கும் பித்தப்பைக் கற்கள் எளிதில் உருவாகும்.”

பித்தப்பையில் கல் இருந்தால் மஞ்சள் காமாலை வரும் என்கிறார்களே?

”உண்மைதான். பித்தப் பையில் உள்ள கற்கள் பொதுப் பித்த நாளத்தை அடைத்துக்கொண்டால், பித்த நீரானது குடலுக்குள் போக முடியாத நிலை உருவாகும். அதனால், மஞ்சள் காமாலை நோய் வரும் அபாயம் அதிகமாகும்.”

பித்தப்பைக் கற்களைக் கண்டுபிடிக்க எளிதான மருத்துவப் பரிசோதனை ஏதேனும் உள்ளதா?”

”சாதாரணமாக, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultra sound scan) மூலம் 95 சதவிகிதப் பித்தப்பைக் கற்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். பித்தப்பை சரிவர வேலை செய்கிறதா, இல்லையா என்பதை, ஹெச்.ஐ.டி.ஏ. ஸ்கேன் (HIDA scan) மூலமாகக் கண்டுபிடிக்கலாம். பித்தப்பைக் கல், பித்த நாளத்தின் எந்த இடத்தில் அடைத்துக்கொண்டுள்ளது என்பதை எம்.ஆர்.சி.பி. (MRCP) பரிசோதனை மூலம் கண்டறியலாம்.”

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?

அறுவைச் சிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வு கொடுக்கும். லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முறையில், பித்தப்பையைக் கற்களுடன் எளிதாக அகற்றிவிட முடியும். இந்த முறையில், ரத்த இழப்பு மற்றும் வலி குறைவாக இருக்கும். தழும்பும் சிறிய அளவிலேயே இருக்கும். நோயின் தன்மையைப் பொறுத்து நோயாளி அறுவைச் சிகிச்சை முடிந்த தினமேகூட வீட்டுக்குத் திரும்பிவிடலாம். ஒரு வாரத்துக்குள்ளாகவே நமது அன்றாட வேலைகளைச் செய்ய முடியும்.”

அறுவைச் சிகிச்சை செய்தே ஆக வேண்டுமா? மருந்து மாத்திரைகளால் இதனைக் குணப்படுத்த முடியாதா?

‘இதயம், நுரையீரல் நோயால் அவதிப்படுபவர்கள், நீண்ட நாட்களாக படுத்தப் படுக்கையாக இருப்பவர்களுக்கு, அறுவைச் சிகிச்சை சாத்தியப்படாது. எனவே, இவர்களது பித்தப்பைக் கற்களைக் கரைக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால், பல மாதங்களுக்குப் பிறகு பித்தப்பையில் உள்ள கற்கள் ஒரு சிலருக்கு கரையலாம். ஆனால், மருந்தை நிறுத்திய ஒரு சில மாதங்களில், மீண்டும் பித்தப்பையில் கற்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு. அதனால், அறுவைச் சிகிச்சை செய்வதுதான் முழுமையான தீர்வாக இருக்கும்.”

பித்தப்பையை அகற்றிவிட்டால், உணவு செரிமானத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

ஏற்படாது. கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது நேரடியாகக் குடலில் கலந்து செரிமானத்துக்கு உதவுகிறது. அதனால், எல்லா வகை உணவுகளையும் உண்ண முடியும். பித்தப்பை அழற்சியினால், ஏற்பட்ட வலியும் உடனடியாகப் போய்விடும். ஆனால், பித்தப்பைக் கற்களால் ஏற்பட்ட செரிமானக் குறைவு, குமட்டல், உப்புசம் போன்ற பாதிப்புகள் குணமாக சில மாதங்கள் பிடிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அளவு ஒரு பிரச்னை இல்லை!!! (அவ்வப்போது கிளாமர்)
Next post சைபர் கிரைம் ஒரு அலர்ட் ரிப்போர்ட்!: கிரிப்டோகரன்சி!! (மகளிர் பக்கம்)