கிட்னி சிகிச்சைகளுக்கு உதவ காத்திருக்கிறார்கள்!! (மருத்துவம்)

Read Time:16 Minute, 12 Second

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்போடு வாழ்பவர்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர்களின் துன்பத்தில் ஒரு சதவிகித மாற்றத்தையாவது என்னால் ஏற்படுத்திவிட முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். – நடிகர் சூர்யா ‘டேங்கர்’ ஃபவுண்டேஷன் தூதர்

‘சிறுநீரக நோய்களின் சிகிச்சைக்கு வழியில்லாமல் உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 20 லட்சம் பேர் இறந்து போகிறார்கள்’ என்கிறது ‘ஹெல்த்டே’ பத்திரிகை செய்தி. சிறுநீரகக் கோளாறுகளால் ஏற்படும் உடல் உபாதைகள் சகிக்க முடியாதது. அதற்கு ஆகும் செலவுகளோ சாமானியர்களுக்குக் கட்டுப்படியாகாதது. சென்னையில் இயங்கும் ‘டேங்கர் ஃபவுண்டேஷன்’ (Tamilnadu Kidney Research Foundation) அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்.

1993ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இதுவரை ஒரு கோடியே 3 லட்சம் ரூபாயை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவச் செலவுகள் போன்றவற்றுக்காக நன்கொடையாக 2 ஆயிரத்து 94 நோயாளிகளுக்கு வழங்கியிருக்கிறது. சிறுநீரகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை பள்ளிகள், கல்லூரிகளிலும் நடத்தி வருகிறது. சென்னை, மதுரை, சூலூர், கோவை என நான்கு மையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்கான கிளைகளையும் நடத்தி வருகிறது.

விரைவில் மணிப்பூரிலும் கிளை தொடங்க இருக்கிறது.‘டேங்கர் ஃபவுண்டேஷன்’ அமைப்பின் மேனேஜிங் ட்ரஸ்டி லதா குமாரஸ்வாமியை சந்தித்தோம். அவர் இந்த ட்ரஸ்ட் உருவான வரலாறு, அதற்கான விதை எங்கே விழுந்தது என அனைத்தையும் விரிவாகப் பேசினார்… ‘‘நான் வளர்ந்ததெல்லாம் சென்னைதான். வித்யோதயா ஸ்கூல்லயும் ஸ்டெல்லா மேரீஸ்லயும் படிச்சேன். 1979ல ‘பப்ளிக் ரிலேஷன்ஸ்’ படிப்பு முடிச்சேன். அம்மாவும் அப்பாவும் ‘லயன்ஸ் கிளப்’ மூலமா பொதுநல சேவைகள் செய்வாங்க. அவங்ககிட்ட இருந்து எனக்கும் அந்த ஈடுபாடு வந்தது.

சின்ன வயசுலயே முதியோர் இல்லங்களுக்குப் போவேன். முதியோருக்கு புத்தகம் படிச்சுக் காட்டுறது, இசை கேட்கச் செய்யறதுன்னு சின்னச் சின்ன உதவிகள் செய்வேன். கல்யாணம் ஆச்சு. கணவர் இங்கிலாந்துல பேங்க்ல ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தார். மூணு குழந்தைகள்… 8 வருஷம் இங்கிலாந்துல இருந்தோம். குழந்தைகள் இந்திய பாரம்பரியத்துல வளரணும்னு என் கணவர் ஆசைப்பட்டார்… இந்தியாவுக்கு வந்துட்டோம். என் மாமியாரும் மாமனாரும் எனக்கு இரண்டாவது அம்மா, அப்பா, ஏன்… கடவுள் மாதிரி.

கல்யாணம் ஆன நேரம்… அதிகம் பரிச்சயமில்லாத கணவர், புது மனிதர்கள், புதிய சூழல்… ஆனாலும், அந்தக் குறை தெரியாம என்னை ஒரு ராணி மாதிரி கவனிச்சுக்கிட்டாங்க என் மாமியார். ஆனா, பாவம்… அவங்களுக்கு 65 வயசுல ரொம்ப அட்வான்ஸ்டு ஸ்டேஜ்ல டயாபடீஸ் இருந்தது. முதல்ல கண் பாதிச்சது. அப்புறம் காலை வெட்டி எடுக்கற நிலைமை வந்தது. அதுக்கப்புறம் கிட்னி பாதிச்சது. அவங்க இங்கிலாந்துல இருந்தா என்னால பாத்துக்க முடியாதுன்னு இந்தியாவுக்கு அழைச்சுகிட்டு வந்தோம்.

கிட்னில பிரச்னைன்னா ஒண்ணு கிட்னியை மாற்றணும். இல்லைன்னா டயாலிசிஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும். என் மாமியார் டயாலிசிஸ் சிகிச்சை பண்ணிக்கிட்டு இருந்தாங்க. உடம்புல இருக்குற ரத்தத்தை முழுக்க எடுத்து சுத்தம் பண்ணும் சி.ஏ.பி.டி.ங்கிற (Continuous ambulatory peritoneal dialysis) சிகிச்சை. 1990களின் ஆரம்பத்துல இந்தியாவிலேயே இதுக்கு ஒரே ஒரு டாக்டர்தான் இருந்தார். கனடாவுல இருந்து வந்திருந்த டாக்டர் ஜார்ஜி ஆப்ரஹாம்… சென்னைல தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ல இருந்தார்.

அவர்கிட்ட என் மாமியாரை அழைச்சுக்கிட்டு போனோம். இந்த சி.ஏ.பி.டி.யை (டயாலிசிஸ்) நாமே பண்ணிக்கலாம். மாமியாருக்கு கண்ணு தெரியாதுங்கறதால எனக்கு டயாலிசிஸ் பண்ணவும் ஊசி போடவும் சொல்லிக் கொடுத்தாங்க. அப்போதான் கிட்னின்னா என்ன, எங்கே இருக்கு, எப்படி வேலை செய்யுதுங்கறதெல்லாம் தெரிஞ்சுது. மாமியாரின் உடலில் ஏற்பட்ட பிரச்னைகளும் புரிய ஆரம்பிச்சது. அப்போ அரசு மருத்துவமனைகள்ல சிறுநீரக பிரச்னைகளுக்கு அவ்வளவா முக்கியத்துவம் இல்லை. கிட்னி ஃபெயிலியர்னு போனா ஒரு டயாலிசிஸ் பண்ணி அனுப்பிச்சுடுவாங்க.

பாதிக்கப்பட்டவங்க பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு போகணும். டயாலிசிஸுக்கு ஆயிரத்திலிருந்து 2,500 ரூபாய் வரை செலவாகும். சிலர் வாரத்துக்கு ரெண்டு மூணு தடவை டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும். வாழ்நாள் முழுக்க பண்ணணும். உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருந்தா 20 வருஷத்துக்கு மேல கூட டயாலிசிஸ் பண்ணிக்கிட்டே உயிர் வாழ முடியும். டாக்டர் ஜார்ஜி ஆபிரஹாம் ஏழைகளுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சார். ஒருநாள் என்கிட்ட வந்து பேசினார்… வழி காண்பிச்சார்.

அவரோட ஃப்ரெண்ட்ஸ், என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஒண்ணா சேந்து ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்க முடிவு செஞ்சோம். எனக்கு 34 வயசு… மூணு குழந்தைங்க… குடும்பம், மாமியாரைப் பாத்துக்கறதுன்னு ஓடிக்கிட்டு இருந்தேன். கிட்னி பிராப்ளம்கிறது ஜலதோஷம், இருமல் மாதிரி சாதாரண விஷயம் இல்லை… மிகப்பெரிய பிரச்னை. அந்த சேவையில ஈடுபட முடியுமான்னு நம்பிக்கை இல்லாமதான் இருந்தேன். ‘மனசு வச்சா சின்ன அளவுலயாவது ஏதாவது பண்ணலாம்’னு அப்பா தைரியம் கொடுத்தார். அதுக்கப்புறம் ‘டேங்கர் ட்ரஸ்ட்’ ஆரம்பிச்சு, பதிவு பண்ணினோம்.

ஜார்ஜி ஆபிரஹாம், நான், சுரேஷ் பாலாஜி, மாலதி வெங்கடேசன் இன்னும் சில நண்பர்கள்தான் ஃபவுண்டர் ட்ரஸ்டீஸ். ஆரம்பத்துல மருந்து வாங்கிக் குடுக்கறது, டயாலிசிஸ் சிகிச்சைக்கு பணம் குடுக்கறது இந்த மாதிரி சின்னச் சின்ன உதவிகள் செஞ்சோம். அதுக்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்கிட்ட இருந்து உதவி பெற்றோம். டயாலிசிஸ் யூனிட் ஒண்ணை நாமளே ஆரம்பிக்கலாமேன்னு யோசிச்சோம். ரெண்டு பெரிய நிறுவனங்கள் ரெண்டு டயாலிசிஸ் மெஷின் கொடுத்து உதவினாங்க. தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்ல முதல்ல வச்சிருந்தோம். அப்புறம் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாத்தினோம். ஜார்ஜி ஆபிரஹாமோட மாமனார் எங்க யூனிட்டுக்கு இலவசமா ஒரு இடம் கொடுத்தார்.

யூனிட் ஆரம்பிக்க ஃபண்டுக்காக ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்குக்கு ஒரு புராஜெக்ட் ரிப்போர்ட் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனா, எப்படி எழுதறதுன்னு தெரியலை. ஐ.சி.ஐ.சி.ஐ.லருந்து போன் பண்ணி ‘சாதாரண ஆங்கிலத்துல மனசுக்கு என்ன தோணுதோ அதை எழுதுங்க’ன்னாங்க. எழுதினோம். 20 லட்ச ரூபாய் நிதி கிடைச்சது. யூனிட்டை ஆரம்பிச்சிட்டோம். அதுக்கப்புறம் தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லாரும் டொனேஷன் கொடுக்க ஆரம்பிச்சாங்க. நடிகை ரேவதி எங்களுக்கு உதவி செய்ய முன் வந்தாங்க. எங்களோட ட்ரஸ்டியாகவும் ஆனாங்க.

ஃபவுண்டேஷன் மெல்ல வளர்ந்தது. தொடர்ந்து பண்ணலாம்கிற நம்பிக்கை வர ஆரம்பிச்சது. இப்போ 230 பேஷண்ட்ஸ் எங்க பராமரிப்புல இருக்காங்க. இதுக்கு எங்க ஊழியர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். அன்போடவும் அக்கறையாகவும் நோயாளி களைப் பாத்துக்கறது அவங்கதான். எங்க நாலு யூனிட்லயும் தேர்ச்சியுள்ள, பயிற்சி பெற்ற 30 ஊழியர்கள் இருக்காங்க. குழந்தைகள் நம்ம நல்ல பழக்கங்கள், கெட்ட பழக்கங்களை பாத்துக்கிட்டேதான் வளர்றாங்க. நம்ம கஷ்டங் களை, பெரியவங்களை அக்கறையாக கவனிச்சுக்கறதை குழந்தைங்க பார்த்து வளர்றது நல்லது.

அப்போதான் மனிதர்களோட, உயிரோட மதிப்பு அவங்களுக்குத் தெரியும். இதை நாங்க நல்லா புரிஞ்சு வச்சிருக்கோம். அதனாலதான் எங்க ட்ரஸ்டை ‘டேங்கர் ஃபேமிலி’ன்னு கூப்பிடுறோம். இது ஒரு கூட்டு முயற்சி, கூட்டு உழைப்பு. யாரோட தனிப்பட்ட செயல்பாடும் இல்லை. எல்லாருக்குமே வேலைகள் இருக்கு. நான் ஒரு பிரின்டிங் பிரஸ்ல மேனேஜிங் டைரக்டரா இருக்கேன். எப்போ ட்ரஸ்டுக்கு வேலை பார்க்கணுமோ, அப்போ ஓடி வந்துடுறோம். நான் மேனேஜிங் ட்ரஸ்டிங்கறதால தினமுமே கவனம் செலுத்த வேண்டியிருக்கு. ‘டேங்கர்’ என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகிடுச்சு.

என்னால மறக்க முடியாத நபர் ஒருத்தர் உண்டு. அப்போ வீட்லயே ஆபீஸ் இருந்தது. ஒரு 14 வயசு பையனும் அவன் அம்மாவும் வந்தாங்க. தோல் பிரச்னைக்கு மருந்து எடுத்துக்கிட்டதுல அவனுக்கு கிட்னி பிராப்ளம் ஆகியிருந்தது. அவன் பேரு ஃபெரோஸ்கான். அப்பா ஆட்டோ டிரைவர். சின்ன வயசுலயே சிறுநீரக பிரச்னை… உடம்புல வளர்ச்சி இல்லை. பலவீனமாக இருந்தான். அந்தம்மா, ‘இவன் நல்லா மேத்ஸ் போடுவான். ஃபீஸ் கொடுத்து படிக்க வைக்க முடியலை. டயாலிசிஸ் பண்றதுக்காகவே ஓடிக்கிட்டு இருக்கோம்’னு சொன்னாங்க. அப்போதான், ‘இவன் படிப்புக்கும் உதவலாமே’ன்னு தோணிச்சு.

ட்ரஸ்ட் மூலமா முடியலைன்னாலும் மத்தவங்ககிட்ட உதவி வாங்கி அவனை படிக்க வச்சோம். நல்லா படிச்சான். அவனுக்கு நியூ காலேஜ்ல இடம் கிடைச்சுது. தேர்ட் இயர் படிச்சுக்கிட்டு இருந்தான். நாலு மாசத்துக்கு முன்னால மழைல நனைஞ்சதுல ஜலதோஷம் பிடிச்சு, ஜுரம் வந்து காலமாகிட்டான். அவன் இறக்கறதுக்கு முன்னால வரை ‘உனக்கு ஒண்ணும் ஆகாது, சரியாயிடுவே’ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்.

இது மாதிரி நிறைய சம்பவங்கள்… எங்க பேஷன்ட் ஒருத்தர் தனியார் கம்பெனியில வேலை பார்த்தார். தன் காலத்துக்குப் பிறகு தன்னோட பி.எஃப். பணம் முழுசையும் ‘டேங்கர் ஃபவுண்டேஷ’னுக்குக் கொடுக்கணும்னு எழுதி வச்சிட்டார். ரொம்ப ஏழ்மைக் குடும்பம். ஒரே செக்கா எழுதி கொண்டு வந்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க கொடுத்தப்போ, அந்த மனசைப் பார்த்து கலங்கிப் போயிட்டேன். இந்தச் சேவையில ஈடுபட்டிருந்தப்போ யாரோ கேட்டாங்க… ‘கிட்னி பிரச்னைக்கு நீ என்ன உதவறது? எல்லாரும் ஒருநாள் போய் சேரத்தானே போறாங்க?’ நான் சொன்னேன்… ‘எல்லாரும் போகத்தான் போறாங்க.

லாரி ஏறியும் சாவு வரலாம்… கல் தடுக்கியும் சாகலாம். நம்ம முயற்சியால ஒரு உயிர் மேலும் ஒரு நாள் வாழ்ந்தாக்கூட போதுமே… உயிரோட மதிப்பு குடும்பத்துக்குத்தானே தெரியும்?’ என் மாமியார் இறந்தப்போ இன்னும் ஒரு நாள் அவங்க இருந்திருக்கலாமேன்னு எனக்குத் தோணியிருக்கு. ஒருத்தரோட மரணத்தை, நம்ம முயற்சியால ஒரு நாளோ, ரெண்டு வாரமோ, பத்து வருஷமோ தள்ளிப் போட முடிஞ்சா அது எவ்வளவு நல்ல விஷயம்!

பள்ளி, கல்லூரிகள்ல சிறுநீரக விழிப்புணர்வு வகுப்பு நடத்தறோம். அது எவ்வளவு முக்கியம், எப்படி பாதுகாக்குறது, ஏன் அது பலவீனமாகுதுன்னு எல்லாத்தையும் சொல்லிக் கொடுப்போம். கிட்னி தானம் கொடுக்கறதாலயும் ஒரு பிரச்னையும் இல்லை. ஆரோக்கியமா இருக்கறவங்க ஒரு கிட்னியோட ஆயுள் முழுக்க மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இப்போ யார் யாரோ எங்களைப் பத்தி கேள்விப்பட்டு தானா உதவி செய்யறாங்க. நாம அன்பைக் கொடுத்தோம்னா, அன்பு தானாகவே நம்மைத் தேடி வரும். பெருசா வேண்டாம்… நம்மளால முடிஞ்ச அளவு மத்தவங்களுக்கு உதவி செய்யலாம். இந்த எண்ணம் எங்களுக்கு நிறைய இருக்கு. அதைத்தான் ‘டேங்கர்’ல கூட்டு முயற்சியா, ஒரு குடும்பமா பண்றோம்…’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரகம் காப்போம்!! (மருத்துவம்)
Next post ஆண் என்ன? பெண் என்ன? (அவ்வப்போது கிளாமர்)