By 4 March 2021 0 Comments

காதணிகளாக ஜொலிக்கும் செஸ் காயின்கள்! (மகளிர் பக்கம்)

செஸ் காய்களில் ஜிமிக்கி, லேப்டாப் பட்டன்களில் நெக்லெஸ், உடைந்த வாட்டர் பாட்டிலில் சில்வர் பூதொட்டி எனப் பழைய குப்பை பொருட்களில் கலைவண்ணம் காண்கிறார் ராஜேஸ்வரி. இவர் வீடு முழுவதும் கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு அருங்காட்சி போலவே தோற்றமளிக்கிறது. சென்னையில் பிறந்து வளர்ந்த ராஜேஸ்வரி, சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்று நிஃப்டில் ஃபேஷன் டிசைனிங்கும் படித்துள்ளார்.

‘‘படிப்பு முடித்ததும் டெக்ஸ்டைல் துறையில் டிசைனரா வேலைப் பார்த்து வந்தேன். அதன் பிறகு திருமணம், குழந்தை, குடும்பம் என இருந்துவிட்டதால், என்னால் வேலையை தொடர முடியாமல் போனது. ஆனால் சிறுவயதிலிருந்தே கலைப் பொருட்கள் உருவாக்குவதில் ஆர்வம் இருந்ததால், வீட்டிலிருக்கும் போதும் ஏதாவது அலங்காரப் பொருட்களை செய்ய ஆரம்பித்தேன். அப்படி, நாம் குப்பை எனத் தூக்கி எறியும் பொருட்களிலும் கண்கவர் அலங்காரப் பொருட்களையும், அணிகலன்களையும் செய்தால் என்ன என்று என் மனதில் ஒரு எண்ணம்
ஏற்பட்டது.

தெருக்களில், கடலில் சேரும் ப்ளாஸ்டிக் குப்பைகளை, மாடுகள், பறவைகள், ஆமைகள், மீன்கள் எனப் பல உயிரினங்கள் அதை உணவென எண்ணித் தவறாக சாப்பிடுகின்றன. அதனால் விரைவிலேயே உயிரிழந்தும் போகின்றன. அவர்கள் வயிற்றில் பல ப்ளாஸ்டிக் குப்பைகள் கண்டெடுக்கப்பட்டு தினமும் நியூஸ்பேப்பரில் செய்தியாகின்றன. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் மனிதர்களை பாதிப்பதாகத் தெரியவில்லை. அந்த உயிரிழப்பிற்குக் காரணம் நாம்தான் என்பதை மறந்துவிடுகின்றனர். இதைத் தடுக்க என்னால் முடிந்ததுக் குப்பைகளை குறைப்பதே. அதனால் உதவாதப் பொருட்களில் குறிப்பாக மட்காத ப்ளாஸ்டிக் பொருட்களில் பல கலைப்பொருட்கள் செய்து வருகிறேன்.

வீட்டிலிருக்கும் மதிப்பற்ற பொருளையே அழகாக மாற்றும் போது, பரிசுகள் வாங்கத் தனியாகச் செலவுசெய்ய வேண்டியதில்லை. குழந்தைகளுடன் சேர்ந்து செய்தால் அவர்களின் க்ரியேடிவிட்டியும் வளரும், நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கும். மேலும் நம் கையில் ஒரு பொருளை உருவாக்கிப் பரிசளிக்கும் போது, அதை பரிசாகப் பெறுபவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும். இதெல்லாம் தவிர. வெறுமென குப்பையில் போய்ச் சேரும் பொருளுக்கு மறுவாழ்வு கிடைக்கிறது’’ என்றவர் பயன்படுத்தாத செஸ் காய்களுடன் நெல் விதைகள் இணைத்து அழகிய காதணிகளாக எவ்வாறு உருவாக்கலாம் என்று பகிர்ந்தார்.

‘‘பழைய ப்ளாஸ்டிக் செஸ் காயைச் சுத்தப்படுத்தி அதில் நூலைக் கொண்டு சுற்ற வேண்டும். இது நம் காதணிக்கு நல்ல டெக்ஸ்டரைக் கொடுக்கும். அடுத்து, செஸ் காயின் கீழ்ப் பகுதியில் air dry clayவைக் கொண்டு சுற்ற வேண்டும். இந்த வகையான க்ளே மிக விரைவிலேயே காய்ந்துவிடும். இதனால் அணிகலன்கள் செய்ய இது பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் நிலைக்கும். அந்த க்ளே மீது ஃபெவிகால் வைத்து நெல் விதைகளை ஒவ்வொன்றாகச் சுற்றி இணைக்க வேண்டும். இது இரண்டு நிமிடங்களில் காய்ந்துவிடும்.

பின், நூல் சுற்றிய இடங்களில், அதே air dry clay வை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒட்ட வேண்டும். இது காதணிக்கு அழகிய டிசைனைக் கொடுக்கும். அடுத்ததாக, செஸ் காயின் தலைப்பகுதியில் அதே air dry clayவை உருண்டையாக வைக்கவேண்டும். அதில், ஜம்ப் ரிங்கை இணைக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக, வட்டமான சிம்கியை எடுத்து, அதன் நடுவில் ஒரு சிறிய துளை உருவாக்கி படத்திலிருப்பதுபோன்ற ஜிமிக்கி ஹூக்கை இணைத்து அதன் மீது க்ளே வைத்து ஒட்ட வேண்டும். பின் அதன் மீது இலை போன்ற வடிவில் க்ளேவை உருட்டி, சுற்றி ஒட்ட வேண்டும். இது நன்கு காய்ந்ததும் கறுப்பு நிற அக்ரிலிக் பெயிண்டை பூசி, அதன் மீது ஸ்ல்வர் டஸ்டை காதணி முழுவதும் தடவ வேண்டும். கடைசியாக நகைகளின் நிறம் மாறாமல் இருக்க க்ராஃப்ட் வார்னிஷ் பயன்படுத்தலாம். இந்த காதணி செய்து முடிக்க அரை மணி நேரம் போதும்.

பழைய பொருட்களைக் கலைப்பொருட்களாக உருவாக்க எனக்கு வெறும் முப்பது ரூபாய் போதும். கடையில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஆண்டிக் மெட்டல் நகைகளை ஐம்பது ரூபாய்க்குள் நாமே உருவாக்கிவிடலாம். என்னுடையபொருட்களைப் பார்த்துப் பல நண்பர்கள் பாராட்டினர், இதனால் தைரியமாகக் கலையில் என் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினேன். அதன் முதல் படியாக இப்போது ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளேன்.

அதில் மதிப்பற்ற பொருட்களைக் கொண்டு அணிகலன்களையும் பரிசுப்பொருட்களையும் உருவாக்கும் செயல்முறையை மக்கள் இலவசமாக கண்டு பயன்பட பதிவேற்றியுள்ளேன். இதுதவிர விரைவிலேயே நேரிலேயே பயிற்சி வகுப்புகளும் நடத்த திட்டமிட்டுள்ளேன். ஏற்கனவே குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக்கொடுக்கிறேன், ஆனால் இந்த பயிற்சி வகுப்புகள் குறிப்பாகப் பெண்கள் பயின்றால் அதை தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பொழுதுபோக்காகச் சொல்லித்தரலாம்” என்கிறார்.

‘‘இப்போது மக்கள் மிகச் சுலபமாகப் பொருட்களை வீசி எறிந்துவிடுகின்றனர். பழைய காலண்டர், நியூஸ்பேப்பர், அட்டைப் பெட்டிகள் என எதையுமே மறுபயன்பாட்டிற்காக உபயோகிப்பதில்லை. பதிலாக, ஒவ்வொரு முறையும் கடையில் காசு கொடுத்து தாம் தூக்கி எறிந்த அதே பொருளை விலைக்கு வாங்குகின்றனர். அதற்கு மாறாக வீட்டிலேயே உதவாத பொருட்களை மறுபயன்பாட்டிற்கு உபயோகித்தால் செலவும் குறைந்து சுற்றுச்சூழலையும், பல்லுயிர்களையும் காக்கலாம்’’ என்றார் ராஜேஸ்வரி.Post a Comment

Protected by WP Anti Spam