By 5 March 2021 0 Comments

கலைக்காகவே வாழ்கிறேன்! (மகளிர் பக்கம்)

‘‘என்னுடையது விவசாயக் குடும்பம். பெண் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்வதை எங்கள் பகுதியில் அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். பெண்கள் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும். வெளியில் செல்வதென்றால் பாவாடை தாவணியில்தான் போக வேண்டும். சுடிதாருக்கெல்லாம் அனுமதியில்லை. இதையெல்லாம் உடைத்து வெளியில் வர முடிவெடுத்தேன். அப்போது கலை மட்டுமே எனக்குக் கை கொடுத்தது. இன்று நாட்டுப்புறக் கலைகளுக்காக எனது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘கோடாங்கி கலைக்குழு’ என்ற ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறேன் என நம்மிடம் பேசத் தொடங்கினார் ‘கலை வளர்மணி’ உமாராணி.

கலை சார்ந்து இயங்குவதுதான் என் முழு நேர வேலை. அதற்காகவே என் வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். சைக்கிள்கூட ஓட்டவிடாமல் என்னை வீட்டுக்குள் முடக்கினார்கள். ஆனால் நான், நண்பர்களின் உதவியில், மதுரை அரசு கலைக் கல்லூரியில் 3 வருடப் பட்டயப் படிப்பில், ‘டிப்ளமோ இன் போக்’ படிப்பை முடித்தேன்.

கரகாட்டம், பறையாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், குச்சியாட்டம், சிலம்பாட்டம், கொக்கிலிக் கட்டை நடனம், பொய்கால் குதிரை ஆட்டம், மாடாட்டம், மயிலாட்டம், வேஷம் போட்டு ஆடும் ஆட்டம், வீதி நாடகப் பயிற்சி என 25 விதமான ஆட்டக் கலைகளை இந்த பயிற்சி மையத்தில் சொல்லித் தருகிறோம். இசைக் கருவியில் தவில், தபேலா, பறை, உருமியுடன் அழிந்து வரும் பழங்கால இசைக் கருவிகளான உடுக்கை, கோடாங்கி இசைக் கருவிகளையும் பயிற்சியாக வழங்குகிறோம்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவே இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக வந்து கலைகளைக் கற்றுச் செல்கிறார்கள். கலைஞர்களும் எங்களிடத்தில் பயிற்சிக்காக வருகிறார்கள். மேலும் 25 கலைஞர்களுக்கு மேல் இங்கேயே தங்கி பயிற்சி எடுக்கிறார்கள். இவர்களில் பலரும் மாணவர்களாகவும் கலைஞர்களாகவும் இருப்பவர்கள். கலைக்காக மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வது, அவர்களையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பது. அதில் வரும் வருமானத்தில் அவர்களைப் படிக்க வைப்பது எனவும் செயல்படுகிறோம்.

நமது பாரம்பரியக் கலைகளில் பல அழியும் நிலையில் இருப்பதால், அவற்றை மீட்டெடுக்கும் நோக்கத்தில், கரகத்தில் அடுக்குக் கரகம், அக்னிக் கரகம், பூங்கரகம், தோண்டி கரகம், மண்பானைக்கு கீழ் செப்புக் கட்டை வைத்து ஆடும் பிள்ளைக் கரகம் எனவும் பயிற்சிகளை வழங்கி வருகிறோம். கிராமங்களில் இந்தவகை கரகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. எங்களுடைய விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சமூகத்தினர் ஆடிய அறுவடை ஒயிலாட்டம் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கலையும் அழிந்துவிடாமல் பரவலாக்கி வருகிறோம்.

அருகாமை கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே 25 பேர் என்னிடத்தில் பயிற்சிக்கு வருகிறார்கள். கல்லூரி மாணவர்களும் வந்து பயிற்சி எடுத்துச் செல்கிறார்கள். தொண்டு நிறுவனங்கள் சார்ந்து பணியாற்றுபவர்களும் அவர்களுக்குத் தேவையான கலைகளை வந்து கற்றுச் செல்கிறார்கள். எங்கள் கோடாங்கி பயிற்சி மையத்தில் சிலம்பம், ஒயிலாட்டம், பறை போன்றவற்றை ஆர்வத்தோடு கற்க வருபவர்களே அதிகம். தவில் பயிற்சியில் 2 பேர் மட்டுமே இங்கு இருக்கிறார்கள். கரகப் பயிற்சி எடுப்பவர்களும் உண்டு.

அருகாமையில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிக்குத் தேவையான பொருட்களை, எமது பயிற்சி மையத்திற்கு வந்து வாடகைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.ஆரம்பத்தில் கலைஞர்கள் பயிற்சி எடுக்க சரியான இடமின்றி கஷ்டப்பட்டு வந்தேன். கோயில்களிலும், குளக்கரைகளில்கூட தவில் அடிக்கவும், பறை அடிக்கவும் பயிற்சிக்கு அனுமதிக்கவில்லை. காட்டுப் பகுதிகளுக்குள் நீண்ட தூரம் சென்றே பயிற்சிகளை எடுத்து வந்தோம். இந்நிலையில் பயிற்சி மையம் ஒன்றை கட்ட வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.

நடிகை ஜோதிகா நடித்து வெளியான 36 வயதினிலே படத்தில் இருந்து முதல்வாரத்தில் வந்த வருமானத்தை, பெண் கலைஞர்களுக்கு கொடுக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. நான் அதைக் கேள்விப்பட்டு என் சுய விபரங்களை அவருக்கு எழுதி அனுப்பினேன். கணவனால் கைவிடப்பட்டவர்கள், தனித்து வாழும் பெண்களுக்கு அதில் முன்னுரிமை வழங்கி நிதி உதவி செய்தார்கள். அதில் அகரம் ஃபவுண்டேசன் வழியாக எனக்கு 3 லட்சம் நிதி உதவி கிடைத்தது.

அத்தோடு மேலும் வங்கியில் கடன் பெற்று, எனது ‘கோடாங்கி கலைக்குழு’ பயிற்சி மையத்தை சொந்தமாகக் கட்டிடம் கட்டி அதில் தொடங்கி இருக்கிறேன். வில்லிப்புத்தூரை ஒட்டியுள்ள மலை அடிவாரத்தில், இயற்கை சார்ந்து எங்கள் கலைக் குழு இயங்கி வருகிறது. நான் இங்கேயே தங்கி மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதோடு, பயிற்சியாளர்களும் இங்கேயே வந்து மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குகிறார்கள். மாணவர்களுக்கான உணவும் இங்கு வழங்கப்படுகிறது.

ஆரம்பத்தில் நான் கலை சார்ந்து இயங்கியது என் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. அப்போது எங்கள் ஊரில் அறிவொளி இயக்கம் முழுவீச்சில் செயல்பட்டு வந்தது. நாடகங்கள் வழியாக மக்கள் மனதை மாற்றும் யுக்திகளை அறிவொளி இயக்கத்தினர் செய்தனர். அறிவொளி வளர் கல்வியாகவும் மாறிய நேரம் அது. நான் அப்போது 10ம் வகுப்பை முடித்து என் கிராமத்திலே முடங்கி இருந்தேன். புத்தகங்களை எடுத்துக் கொடுக்கும் சாதாரண உதவியாளராக அறிவொளி இயக்கத்தில் வேலை செய்ய ஆரம்பித்தேன். பெண் கலைஞர்கள் அறிவொளி இயக்கத்தில் மிகவும் குறைவாக இருந்தார்கள். பள்ளிக் கல்வியை இறுதிவரை முடித்த, என்னைப் போன்ற சிலரைத் தேர்வுசெய்து நாடகம் போடவும் அறிவொளி இயக்கத்தில் சொல்லிக் கொடுத்தார்கள்.

‘வீட்டுக்கு ஒரு மரம் போல் வீட்டுக்கொரு கழிவறை’ எத்தனை முக்கியம் என்பதை, நாடகமாக இயற்றி நடித்தோம். அதில் என் நடிப்பு சிறப்பாக இருந்ததாகப் பலரும் பாராட்டினார்கள். எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினோம். மக்களிடம் கிடைத்த பாராட்டும், கைதட்டலும் என்னை கலையைய் நோக்கி நகர்த்தியது. வன்முறைக்கு எதிராகப் போராட வேண்டுமெனில், பெண்களுக்குத் தைரியத்தை வழங்கும் பறை இசையினை அவர்களும் கற்றுத்தர வேண்டும் என முடிவெடுத்து, அறிவொளி இயக்கத்தினர் எங்களுக்கு, வீரியம் மிக்க ஆட்டங்களை பறையில் கற்றுத் தந்தார்கள்.

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, சாதிய வன்முறை, காவல்துறை வன்முறை என நிகழும் சித்ரவதைக்கு எதிரான பயணத்தில். எங்களுக்கு நாடகங்களைத் தயாரிக்கவும் கற்றுத் தரப்பட்டது. அரசாங்கத்தை எதிர்க்க நடனம், நாடகம் என கலை சார்ந்த விசயங்களையே நாங்கள் கையிலெடுத்தோம். மதுரையில் காவல்துறை வன்முறையில், கணவன் கண் முன்பு பலாத்காரத்திற்கு ஆளான அங்கம்மாவாக நான் நடித்தேன்.

வேறொரு நாடகத்தில் சித்ரவதைக்கு உள்ளான சிதம்பரம் பத்மினியாகவும், வகுப்பறையில் வாத்தியரால் பலாத்காரத்திற்கு உள்ளான சேலம் சிறுமி பிரியாவாகவும் நடித்தேன். காவல்துறை என்னிடத்தில் அத்துமீறல் செய்வதைப்போன்ற என் நடிப்பைப் பார்த்த பெரியவர் ஒருவர், என் முன் கம்போடு கூடிய தொரட்டி அருவாளை தூக்கிப்போட்டு, ‘வெட்டுமா அந்த போலீஸ்காரனை வெட்டுமா’ என்றார். இப்படித்தான் எனக்குள் கலை ஆர்வம் தூண்டப்பட்டது.என் கனவு மெய்ப்பட்டு இருக்கிறது. கோடாங்கி கலைக்குழு மையம், முழுமையாக கலைஞர்களுக்கான மையமாக மாறவேண்டும் என்பதே என் விருப்பம் என உமாராணி நம்மிடம் பேசி முடித்தார்.Post a Comment

Protected by WP Anti Spam