செல்போன் போதையா? அடிமையா? (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 3 Second

கொரோனா இருக்கா…. இல்லையா என்று புரியவில்லை. ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கும் என்று தெரியவில்லை. நிறைய பேருக்கு வேலை போய்விட்டது. பலருக்கு சம்பளம் குறைந்து விட்டது. அப்படி ஒரு குடும்பம்தான் எங்களுடையது. என் கணவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

எங்கள் வீட்டில் இருந்து தினமும் 100 கிமீ ரயிலில் பயணம் செய்து வேலைக்கு போய் வருவார். எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும்தான். பாசஞ்சர் ரயில்கள் கிடையாது. சென்னையில் வாடகை கொடுத்து கட்டுப்படியாகாது. சொந்த வீடு என்பதால் நாங்கள் உள்ளூரிலேயே இருக்கிறோம். அவருக்கு மட்டுமல்ல, எங்கள் மாவட்டத்தில் பலருக்கும் தினசரி ரயில் பயணம்தான் வாழ்க்கை.தனியார் நிறுவன வேலை என்றாலும், இருக்கும் 2 பிள்ளைகளையும் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் அளவுக்கு வருமானம். கொரோனா பிரச்னைக்கு பிறகு அவரால் தினமும் வேலைக்கு செல்ல முடியவில்லை.

பஸ், ரயில்கள் இயங்கினாலும், தினமும் பஸ்சில் சென்று வர பொருளாதாரம், உடல் நிலை இடம் கொடுக்காது. ரயிலில் போவதென்றால் முன்பதிவு செய்ய வேண்டும் என்பதால், அங்குள்ள மேன்ஷனில் தங்கி வேலைக்கு போகிறார். அதுவும் கூடுதல் செலவு. போதாதற்கு சம்பளத்தையும் குறைத்து விட்டனர்.

கொரோனாவுக்கு பிறகு விலைவாசி ஏறி விட்டது. பள்ளி கட்டணமும் செலுத்த வேண்டும். கேட்டால், ‘அதான் ஆன்லைன் கிளாஸ் நடத்துறமே’ என்கிறனர். அந்த ஆன்லைன் கிளாஸ்தான் எங்கள் வீட்டில் இப்போது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்த நேரத்தில் என்னுடைய செல்போனை 7வது படிக்கும் மகன் பயன்படுத்த தொடங்கினான். கொரோனா பிரச்னை ஆரம்பித்த காலத்தில் அவரும் வீட்டில் இருந்ததால், 10வது படிக்கும் மகள் அவரது போனை பயன்படுத்தினாள்.

அவர் வேலைக்கு போனதால், மகளுக்கு புதிய செல்போனை வாங்கி கொடுத்தோம். ஆன்லைன் வகுப்புகள் இல்லாத போதும் செல்போனும் கையுமாக இருந்தாள். நாங்கள் கேட்டதற்கு, ‘டீச்சர்ஸ் நோட்ஸ் அனுப்புறாங்க….. ஃபிரண்ட்ஸ்கிட்ட டவுட் கேக்கிறேன்’ என்று ஏதாவது காரணம் சொல்வாள். கொஞ்ச நாட்களில் செல்போனில் விளையாட ஆரம்பித்தாள்.

தொடர்ந்து ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் என எல்லாவற்றிலும் தலை காட்ட ஆரம்பித்தாள். அவளது அப்பா வீட்டு உறவினர்கள் மற்றும் என் வீட்டு உறவினர்கள் என தனித்தனியாக வாட்சப்பில் குழு ஆரம்பித்தாள். அதனால் எப்போதும் செல்போனுடன் இருந்ததால் நான் திட்டுவேன். அவளின் அப்பாவோ, ‘ஸ்கூல் தொடங்கினா எல்லாம் சரியாகி விடும்’ என்றார்.

நாளாக நாளாக சாப்பிடும், தூங்கும் நேரம் தவிர எப்போதும் செல்போனும் கையுமாகவே இருக்க ஆரம்பித்தாள். செல்போனை பிடுங்கி வைத்து விடுவேன். அப்போதெல்லாம் ‘அம்மா செல்போனை தாங்கமா’ என்று கெஞ்சுவாள். அவள் கெஞ்சுவதை பார்த்து நானும் செல்போனை தந்து விடுவேன்.

ஆன்லைன் வகுப்புகள் போக மற்ற நேரங்களில் செல்போனை வைத்துக்கொண்டு ‘விளையாடுகிறேன்…. பாட்டு கேட்கிறேன்….. படம் பார்க்கிறேன்….’ என்று ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டிருப்பாள்.செல்போன் வருவதற்கு முன்பு வீட்டில் தம்பியுடனும், அக்கம், பக்கத்து பசங்களுடனும் விளையாடுவாள். எனக்கு கூட சில நேரங்களில் சமையல் செய்ய துணி துவைக்கும் போது, கோலம் போடும் போது என உதவி செய்வாள்.

அவள் அப்பாவுடன் அவளுடைய தாத்தா, பாட்டி பற்றி உற்சாகமாக கேட்பாள். அவர்கள் இருக்கும் வரை அவர்களுடன் தான் எப்போதும் இருப்பாள், படுப்பாள். எங்களை அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டாள். இப்போது கூட அவர்களின் படங்களைதான் செல்ேபான் முழுவதும் வைத்திருக்கிறாள்.

பொதுவாகவே அவள் பாசமானவள். எல்லோரிடமும் அன்பாகவும், பெரியவர்களிடம் மரியாதையாகவும் நடந்து கொள்வாள். செல்போன் வந்த பிறகு யாரையும் கண்டு கொள்வதில்லை. போனே கதியென்று ஆகிவிட்டாள். போனை வாங்கிவிட்டால், கோபப்படுகிறாள். சத்தம் போடுகிறாள். அவளது நடவடிக்கைகள் ஏதும் எனக்கு சரியாக படவில்லை. அவள் அப்பாவிடம் சொன்னால், ‘ஸ்கூல் தொடங்கினால் சரியாகிவிடும் விடு’ என்பதையே திரும்பச் சொன்னார். இப்போது பள்ளிக்கூடம் தொடங்கிவிட்டது. அவள் சரியாகவில்லை. பள்ளிக்கூடம் போகும் வரை செல்போன், திரும்பி வந்தால் மீண்டும் செல்போன்.

படிப்பில் ஆர்வமில்லை. அதனால் செல்லை பிடுங்கி பீரோவில் வைத்து பூட்டி விட்டேன். அன்று இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை. மறுநாள் காலையில் எழுந்ததும் ‘போனை தா’ என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டாள். மறுத்ததற்கு ‘என்னோட ெசல்போன்… எங்கப்பாதானே வாங்கித் தந்தாரு… உங்கப்பாவா வாங்கித் தந்தாரு’ என்று மரியாதை இல்லாமலும் மிரட்டும் தொனியிலும் பேச ஆரம்பித்தாள். ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள்.

பள்ளி விட்டு வீடு வந்ததும்… செல்போனை கேட்டு தகராறு செய்கிறாள். கொடுக்காததால், கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீச ஆரம்பித்து விட்டாள். நானும் பயந்து விட்டேன். என்ன செய்வது என்று புரியவில்லை. வேறு வழியில்லாமல் பீரோவில் இருந்த செல்போனை எடுத்து தந்து விட்டேன். கொஞ்ச நேரத்தில் இயல்பாகிவிட்டாள். அந்த சம்பவத்திற்கு பிறகு அவளிடம் செல்போனை வாங்குவதில்லை.

உண்மையில் அவள் இயல்பாக இருக்கிறாளா என்பது சந்தேகமாக உள்ளது. அவளின் நிலையை பார்த்து எனக்கு பயமாக இருக்கிறது. செல்போன் மோகத்தில் படிப்பை கோட்டை விட்டு விடுவாளோ ?அவள் செல்போனை தவறாக ஏதும் பயன்படுத்தவில்லை.இருந்தாலும், செல்போனுக்கு அடிமையாகி விட்டாளோ என்று அச்சமாக இருக்கிறது. இந்த செல்போன் மோகத்தால் அவளுக்கு ஏதாவது பிரச்னை வருமா? ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொள்வாளோ என்று பயமாக இருக்கிறது. அதனால் அவளை இரவில் கூட கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம். கடந்த 10 நாட்களாக நான் இரவில் துாங்குவதேயில்லை.

அவள் வயதுக்கு இதெல்லாம் இயல்பான செயல்பாடுகளா? அவள் இந்த செல்போன் மோகத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த என்ன செய்வது? அவள் வகுப்பு ஆசிரியையிடம் சொல்லலாமா? அப்படி சொன்னால் அவள் கோபித்துக் கொள்வாளா? என்ன செய்வது தோழி? தயவு செய்து எனக்கு வழி காட்டுங்கள்.

இப்படிக்கு பெயர் வெளியிட விரும்பாத வாசகி

செல்போன் போதையின் அறிகுறிகள்!

‘இதர போதை பொருட்கள் போல், செல்போன் போதையும் நமக்கு கேட்டை விளைவிக்கும். நேரம் காலமில்லாமல் செல்போனில் மூழ்கிக் கிடந்தால் உடல், மன நலன் கட்டாயம் பாதிக்கும்’ என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஜனனி. நாம் செல்போன் போதைக்கு அடிமையாகி வருகிறோம் என்பதற்கு டாக்டர் சொல்லும் அறிகுறிகள்…..

*அலுவலகத்தில் அல்லது வீட்டில் உள்ள வேலைகளை முடிப்பதில் சிக்கல்
*குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து விலகி இருப்பது
*மற்றவர்களுக்கு தெரியாமல் செல்போனை பயன்படுத்துவது
*செல்போன் காணாமல் போய்விடுமோ என்ற பயம்(Fear of missing out – FOMO)
*செல்போனை வீட்டிலேயே விட்டுவிட்டு வரும் போது பயம், பதட்டம் ஏற்படுவது அல்லது பீதி போன்ற உணர்வு
*ஓய்வில்லாத பதட்டமான மனநிலை
*கோபம் அல்லது எரிச்சல்
*தூக்கப் பிரச்னைகள்
*செல்போனுக்காக ஏங்கி தவிப்பது.

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் படிப்படியாக செல்போன் பயன்பாட்டை குறைக்க பாருங்கள். புத்தகம் படிப்பது, அலுவலக, வீட்டு வேலைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளலாம். நண்பர்களுடன், உறவினர்களுடன் நேரடியாக பேசி மகிழலாம். தோட்டம் அமைக்கலாம். வீட்டை அழகு படுத்தலாம். அப்படி முடியாவிட்டால் நீங்களும் மனநல மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

நட்புடன் தோழிக்கு,

நமது வேலை பளுவை குறைக்க, சூழ்நிலைகளை இலகுவாக்க சரியாக சொல்ல வேண்டும் என்றால் நமக்கு வேலை செய்ய கண்டுபிடிக்கப்பட்டவைதான் மின்னணு கருவிகள், பொருட்கள் எல்லாம். ஆனால் நாம் அவற்றுக்கு அடிமையாகி வருகிறோம். சோகம் என்னவென்றால் நாம் மின்னணு பொருட்களுக்கு அடிமையாகி விட்டோம் என்பதை உணராமல் இருப்பதுதான். அது மது போதையை போன்று அபாயகரமானது.

ஆனால் உங்கள் மகள் எப்படி செல்போனுக்கு படிப்படியாக அடிமையானாள் என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். செல்போன் போதையில் சிக்கியிருக்கிறோம் என்பதை அவள் உணரவில்லை. அவள் சிக்கியிருப்பதை நீங்கள் அறிந்து உள்ளீர்கள்.இந்த கொரோனா ஊரடங்கிற்கு பிறகு செல்போனில், சமூக ஊடகங்களில் பலரும் நேரத்தை செலவிடுவது அதிகரித்து விட்டது. நேரத்தை போக்க என்று செல்போனை பார்க்க ஆரம்பித்தவர். இப்போது அதையே சார்ந்து இருக்கும் நிலைமைக்கு ஆளாகி விட்டனர். பாதிப்பில்லாதது என்று நினைத்த செல்போன்தான் பலரை அடிமையாக்கி உள்ளது.

அந்த நிலைமை உங்கள் மகளுக்கு மட்டுமல்ல, நமது தோழி வாசகிகளில் பலருக்கும் கூட ஏற்பட்டிருக்கலாம். ஊரடங்கிற்கு பிறகு உங்கள் மகளை போல் செல்போனால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் பார்த்து இருக்கிறேன். அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது அவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் நல்லது.

ஒருவர் எந்த விஷயத்திற்காக அதிக நேரம் செலவிட ஆரம்பிக்கிறாரோ, அதில் அவருக்கு ஈடுபாடு அதிகம் என்று தெரிந்துகொள்ளலாம். அந்த விஷயத்தில் மட்டுமே அவர் கவனம் செலுத்த தொடங்குகிறார் என்றால் அந்த விஷயத்திற்கு அவர் அடிமையாக தொடங்குகிறார் என்று அர்த்தம். அந்த விஷயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார், அதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார் என்றால் அதில் போதையாகி அவர் அடிமையாகி விட்டார் என்று அர்த்தம்.

உங்கள் மகள் விஷயத்தை பொறுத்தவரையில் அவள் மாற வேண்டும் என்றால் நீங்களும் மாற வேண்டும். வீட்டில் இருக்கும் எல்லோரும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் செல்போனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். உதாரணமாக சாப்பிடும்போது, எல்லோரும் ஒன்றாக இருக்கும் போது, தொலைக்காட்சி பார்க்கும் போது, உறவினர்கள் வந்திருக்கும் போது செல்போனை தவிர்க்க கட்டுப்பாடுகளை உருவாக்கலாம்.

குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசி இப்படி ஒரு உடன்படிக்கைக்கு வரலாம்.அதனை பெரியவர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு நாம் எப்போதும் உதாரணமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் அந்த பழக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆன்லைன் வகுப்புகள் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் செல்போனை பயன்படுத்தும் பழக்கத்தை படிப்படியாக குறைக்க வைக்க வேண்டும். இதையெல்லாம் அவள் சம்மதத்துடன் தான் செய்ய வேண்டும். கட்டாயப்படுத்தக் கூடாது. அப்படி கட்டாயப்படுத்துவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

குடும்பத்தில் ஒன்றாக எடுக்கும் முடிவுகளை உங்கள் மகள் ஏற்கவில்லை. தொடர்ந்து செல்போனை பயன்படுத்துகிறாள். அதை தடுக்கும் போது கோபப்படுகிறாள், சண்டை போடுகிறாள் என்றால் ஒரு மனநல மருத்துவரின் உதவியை நாடுவது சரியாக இருக்கும். உங்களுக்கு தீர்வும் கிடைக்கும்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

வாசகிகள் கவனத்துக்கு,பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக… ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படிக்கு காலம்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வரலாறு! (வீடியோ)
Next post இது மகரந்தச் சேர்க்கை அல்ல!!! (அவ்வப்போது கிளாமர்)