கருத்தரிப்பு முதல் குழந்தை பிறப்பு வரை… வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்!!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 36 Second

‘வீட்டை கட்டிப் பார்… கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள் நம் முன்னோர்கள். வீடு கட்டுவது, கல்யாணம் செய்வது மட்டுமல்ல… இவ்வரிசையில் கருவுற்று, பத்து மாதம் நல்ல படியாய் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பதும் பெரும் சிரமமே. அதிலும் கருவுற்றது முதல், குழந்தை பெற்றெடுத்த பின்பு வரையிலும் உடலில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு அதிலிருந்து முன்பு இருந்த நிலைக்கு உடல் அளவிலும் மனதளவிலும் மீண்டு வருவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல.

என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? அதனை எப்படி கையாள்வது? மகப்பேறு காலத்தில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன? போன்றவற்றை பற்றிய தெளிவானப் புரிதலை உருவாக்கவே இந்த கட்டுரை.இங்கே பலருக்கும் ஒரு சந்தேகம் எழலாம். ‘மகப்பேறு காலத்தில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு வேறு உள்ளதா? அப்படியென்றால் பயிற்சிகள் (exercises) கூட வழங்குவார்களா?’ என்றால், ‘ஆம்’ என்பதே பதில்.

எனவே பயிற்சிகள் மூலம் ஒருவரது உடலை பிரசவத்திற்கு தயார் செய்வதும், பிரசவத்திற்கு பின் முன்பு இருந்தது போல இயல்பாய் இயங்குவதற்கு உடலினை தயார் செய்வதும் அவசியமாகிறது. இயன்முறை மருத்துவத்தில் இதற்கான தீர்வுகள் ஒளிந்திருக்கிறது.

இதனை அனைத்து பெண்களும் நிச்சயமாக தெரிந்துகொள்ள வேண்டும்.‘வேலைக்கு போகணும், வீட்டுல இருக்கற வேலையப் பாக்கணும், அத்தோட பிரசவ காலத்துல வரும் சோர்வு, மூட் ஸ்விங்ஸ் (mood swings), உடல் வலி, தூக்கமின்மை இதுல எங்க உடற்பயிற்சி செய்யறது? அப்படியே செய்ய நினைச்சாலும் அது குழந்தைக்கு பாதுகாப்பா இருக்குமா?’ போன்ற பயம் மற்றும் குழப்பம் நிறைந்த கேள்விகள் பலருக்கும் இங்கே இருக்கலாம். அதை எப்படி தெளிவுபடுத்திக் கொள்வது? என்றும் நினைக்கலாம். அதனை இங்கே மூன்று வகையாக பிரித்துக்கொள்ளலாம்.

1. கர்ப்பம் தரிப்பதற்கு முன்

*இந்தக் காலத்தில் உடலில் ஆபத்து காரணிகளான உடற்பருமன், தைராய்டு பிரச்சனை, பி.சி.ஓ.டி, குழந்தை பிறப்புக்கு முன் இருந்தே இருக்கும் முதுகு வலி (back pain) போன்றவற்றால் எளிதில் பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. அதனால் இப்பிரச்சனைகள் இருந்தால் முதலில் அதனை சரி செய்ய வேண்டும்.

*உடற்பயிற்சி மூலம் முழு உடலையும் பலப்படுத்திக் கொள்வதோடு உடல் எடையையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

2. கர்ப்ப காலம்

*Prenatal என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இக்காலம் கர்ப்பமாய் இருக்கும் 10 மாதங்களைக் குறிக்கும். அதில் முதல் ஆறு வாரம் வரை கவனமாய் இருத்தல் அவசியம் என்பதால் உடற்பயிற்சி செய்யாமல் இருக்க வேண்டும் என்று பொருள் அல்ல, ஒவ்வொரு பெண்ணிற்கும் அவரவர் உடல் வலிமையைப் பொருத்து பயிற்சிகள் வேறுபடும் என்பதால் பயம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

*கருவுற்ற பின் அதிகரிக்கும் தாயின் உடல் எடை, மார்பகங்களின் எடை, பனிக்குடத்தின் எடை, குழந்தையின் எடை என அனைத்தையும் தாங்க வேண்டும். இந்த புதிய உடல் எடையையும் தாங்குவதற்கு தசைகள் தயாராக இருக்க வேண்டும்.

*குழந்தை பிறக்க பிறப்புறுப்பை சுற்றியுள்ள தசைகள், எலும்புகள், மெந்திசுக்கள் என அனைத்தும் ஹார்மோன்களின் உதவியால் தளர்வாய் மாறிக்கொண்டே வரும் என்பதால் அந்த தசைகளை மேலும் கவனமாய் பயிற்சிகள் மூலம் பலப்படுத்துதல் அவசியமாகும்.

*ஒவ்வொரு மாதமும் வயிற்றின் எடை அதிகமாக உயரும் என்பதால் உடல் தோரணை (posture) மாறும். அதிக உடல் எடையை முதுகு தண்டுவடமும், கால் மூட்டுகளும் தாங்கிக் கொள்ளும்.

*வயிறு அதிக எடையினால் முன் செல்லச் செல்ல பின் பக்கம் சாய்ந்து நடப்பது, முதுகுப்பகுதியும் வளைந்து முன்னே செல்வது போன்ற மாற்றங்கள் ஏற்படும். மேலும் வயிற்றின் எடை அதிகமாவதால் வயிற்றுக்கு மேல் உள்ள தசைகள், பக்கங்களில் உள்ள தசைகள், வயிற்றுக்கு உள் இருக்கும் தசைகள் ஆகியவற்றில் தளர்வாகவும், முதுகுப் பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமாகவும் மாறும். இதனால் முதுகு வலியும், எந்நேரமும் ஒருவித உடல் அசௌகரியமும் இருக்கும். எனவே எப்படி அமர்ந்தால் சுலபமாக இருக்கும், எவ்வளவு நேரம் அமரலாம், என்னென்ன வேலைகள் செய்யலாம் என அனைத்தையும் இயன்முறை மருத்துவர் பரிந்துரைப்பார்.

*வயிற்று தசைகளை வலிமைப்படுத்தவும், முதுகு, கால், இடுப்பு தசைகள் இலகுவாய் தளர்வதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

*உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, நடனப்பயிற்சி என அனைத்திலும் பெண்கள் பங்கு கொள்ளலாம். ஆனால் ஒருமுறை தங்கள் குடும்ப இயன்முறை மருத்துவரையும், மகப்பேறு மருத்துவரையும் கேட்டு ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

*இப்படி தொடர்ந்து பயிற்சிகள் செய்து வந்தால் பிரசவத்தின் போது ஏற்படும் வலியின் அளவு குறைய வாய்ப்புண்டு. மேலும் கர்ப்பவலியின் போது குறுகிய நேரத்தில் குழந்தை வெளியே வருவதற்கும் உறுதுணையாக நிற்கும்.

3. குழந்தை பிறந்த பின்

*Post natal என்று சொல்லப்படும் இக்காலம் குழந்தை பிறந்த பின் உள்ள காலமாகும்.

*இயற்கையான பிரசவமாக இருந்தாலும் சரி, அறுவை சிகிச்சை பிரசவமாக இருந்தாலும் சரி முதுகு வலி மற்றும் வயிற்று தசைகள் தளர்ந்துபோவது இவை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதே. எனவே குழந்தை பெற்ற அனைத்துப் பெண்களும், குழந்தை பிறந்த பின்னும் உடற்பயிற்சி
தொடர்வது அவசியமான ஒன்று.

*உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் வயிற்று தசைகள் மிகவும் தளர்ந்து விடும். இதனால் நாள்பட்ட முதுகு வலி, உடற்பருமன், குடல் இறக்கம் ஆவதற்கும் கூட சாத்தியக்கூறுகள் அதிகம்.

*பிரசவத்துக்குப் பின் சிறு வேலைகள் செய்தாலும் முதுகு வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படும் என்பதால் குழந்தை பிறந்த பின்னும் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதன்மூலம் வலியை குறைக்கலாம்.

இவ்வாறு இயன்முறை மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி பயம் இல்லாமல் பயிற்சிகள் செய்து உடலைத் தேற்றினால் தாயும் சேயும் நலமோடும் வளமோடும் இருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய தமிழகத்தின் நிலைக்குக் காரணம் தலைவர்களா? (வீடியோ)
Next post கர்ப்பகால காலணிகள்! (மருத்துவம்)