உங்கள் பணியிடத்தில் விசாகா கமிட்டி உள்ளதா? (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 1 Second

முதல்வர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், சென்னை திரும்புகையில், மாவட்ட எல்லையில் வரவேற்ற பெண் எஸ்பி ஒருவரை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து பெண் எஸ்பி, டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்த நிலையில், ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதே சமயம் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இதற்கு முன் 2002 ஆம் ஆண்டு சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றிய ரவீந்திரநாத் மீது, பெண் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இதனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நான்கு மாதங்களே டிஜிபியாக இருந்த ரவீந்திரநாத்தை சஸ்பெண்ட் செய்தார். சட்டம் ஒழுங்கு பணியிலிருந்த ஒரு டிஜிபி சஸ்பெண்ட் ஆவது அதுதான் முதல்முறை. ஆனால், பெண் எஸ்பிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஷ் தாஸ் ஏன் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது.

ரவீந்திரநாத் மீதான புகாரின் மீது விசாரணை நடத்தி, அந்த புகாரின் மீது அடிப்படை முகாந்திரம் இருப்பதாக அறிக்கை வந்த பிறகுதான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது ராஜேஷ் தாஸ் மீதான புகாரை விசாகா கமிட்டியில் உள்ள ஏடிஜிபி சீமா அகர்வால் விசாரணை நடத்துவதை, டிஜிபியாக இருக்கும் ராஜேஷ் தாஸ் கேள்வி எழுப்பலாம். இது ஒரு சட்ட சிக்கலையும் உருவாக்கும்.

எனவே, ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைத்து அறிவித்தார்கள். அதனால்தான் அவர், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற இரு நாள் தாமதமாகிவிட்டது. தற்போது சிபிசிஐடியும், விசாகா கமிட்டியும், விசாரணை நடத்தி பாலியல் புகார் மீது அடிப்படை முகாந்திரம் இருப்பதாக அறிக்கை கொடுத்தால் ராஜேஸ் தாஷை முதல்வர் சஸ்பெண்ட் செய்யலாம்.

அவ்வாறு ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா? நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு என்னவாக இருக்கிறது? போன்ற கேள்விகளை வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான தமயந்தியிடம் முன் வைத்தோம்…“இது போன்ற சம்பவங்களில் ராஜேஷ் தாஸை மட்டும் பார்க்க முடியாது. அரசியல்வாதிகள், நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் முதல் சாதாரண ஒரு நபர் உட்பட நிறைய வழக்குகள் இதற்கு முன் பதிவாகியிருக்கிறது. இதற்கு பாராளுமன்றமும், சட்டமன்றமும் கூட விதிவிலக்கல்ல. அதிகாரத்தில் இருக்கக் கூடிய ஒரு ஆண், தனக்குக் கீழ் வேலை செய்யக்கூடிய பெண்களை இப்படித்தான் மதிக்கிறார்கள் என்பதுக் கண்கூடு.

முக்கிய பொறுப்பில் அல்லது பிரபலமாக இருக்கக்கூடிய நபர்களாக இருப்பதினால் இந்த விஷயங்கள் வெளியே வருகிறது. மற்றபடி, பெண்கள் பாதுகாப்பில் கேள்விக்குறியாக இருக்கும் இந்த நாட்டில் நிறைய சம்பவங்கள் வெளியே வராமல் பார்த்துக்கொள்ளும் படிதான் இருக்கிறது இங்குள்ள சூழல். ஒரு சாதாரண நபரே அவ்வாறு தப்பித்துக்கொள்கையில், உயர் பொறுப்பில், அதுவும் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருப்பவருக்கு சொல்லவா வேண்டும்? எனவே ராஜேஷ் தாஸ் மீது அமைத்திருக்கும் விசாரனை வெளிப்படையாகவும், அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை மிகக் கடுமையாகவும் இருக்கும் போதுதான், இது போல் செய்ய துணிபவர்களும் அஞ்சுவார்கள். அவ்வாறு கொடுக்கப்படும் தண்டனை ஒரு முன்னுதாரணமாகவும் அமைய வேண்டும்.

சிபிசிஐடி, சிபிஐ போன்ற அமைப்புகள் மீது, ‘குற்றவாளியை தப்பிக்க வைக்கத்தானே இந்த விசாரணை’ என்று சாதாரண நபருக்கும் இருக்கும் விமர்சனங்களை, இந்த வழக்கிலாவது மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போதே ‘தேர்தல் நேரத்தில் ஊர் வாயை மூட வேண்டும் என்பதற்காக தான்’ இந்த விசாரணை என்கிற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. காரணம் முதல்வருக்கு பாதுகாப்பு கொடுக்கக் கூடிய நபரே இப்படி செய்திருப்பது தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பெரும் அவமானம்.

சாதாரணமாக காவல்துறையில் கடைநிலை ஊழியராக இருக்கக் கூடிய பெண்கள் எந்த அளவு ‘டார்ச்சர்’களை அனுபவிக்கிறார்கள் என பல முறை சொல்லி குமுறி அழுவார்கள். இவர்களால் வெளியேவும் சொல்ல முடியாது. அப்படி சொன்னாலும் ஏதும் நடக்கப் போவதில்லை என்பதுதான் எதார்த்தம். ஆனால், இன்று உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் காவலருக்கு நிகழ்கையில் வெளியே வருகிறது. இப்படி வந்திருந்தாலும் எந்த அளவில் தண்டனை கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று கூறும் தமயந்தி, பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் பற்றி கூறினார்.

“இந்திய தண்டனை சட்டத்திலும், சிறப்பு சட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்புக்கென்று நிறைய சட்டங்கள் இருக்கிறது. அவ்வப்போது இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறும் போது, அந்த சம்பவங்களின் முன் மாதிரியாகக் கொண்டு புதிது புதிதாக சட்டத்திருத்தங்கள் கொண்டு வருகிறார்கள். நிர்பயா உட்பட அப்படித்தான். ஆனால், அத்தனையும் நடைமுறைக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில். மற்றொன்று பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பிற்கென ‘விசாகா கமிட்டி’ என்று ஒன்றிருக்கிறது. அது எத்தனை நிறுவனங்களில் முதலில் இருக்கிறது.

அப்படி இருந்தாலும் அந்த கமிட்டி மூலம் இதுவரை எத்தனை வழக்குகளில் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் எடுத்தால் விரல்விட்டு எண்ணிவிடலாம். நானும் சில நிறுவனங்களின் விசாகா கமிட்டியில் இருக்கிறேன். ஆனால், போதிய அளவில் விசாகா கமிட்டி பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் எதார்த்தம். இது குறித்து அனைவரும் அறியும் வகையில் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களிலும், நிறுவனங்களிலும், காவல் நிலையங்களிலும் விசாகா கமிட்டி குறித்தான விழிப்புணர்வு வாசகங்களை வைக்க வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் தமயந்தி.

விசாகா வழிகாட்டுதல்கள்

(Vishakha Guidelines) என்பது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விசாகா எனும் பெண்ணின் வழக்கில், இந்திய உச்சநீதிமன்றம், 1997ல் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், வன்முறைகள், சீண்டல்களை தடுத்திட வேண்டி, பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களில் விசாகா குழு எனும் பெயரில் குழுக்கள் அமைத்திட வேண்டும் என ஆணையிட்டது. விசாகா மற்றும் பலர் Vs ராஜஸ்தான் மாநிலம் வழக்கில் 13, ஆகஸ்ட்,1997 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சில வழிமுறைகளை வகுத்தது (AIR 1997 SUPREME COURT 3011).

உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகள்…

1. இந்த விசாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.
2. கமிட்டியில் மொத்த உறுப்பினர்களில், 50 % பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
3. ஒரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வு தொண்டு அமைப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
4. கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாக தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும்.

எவை எவை பாலியல் தொல்லைகள்?

* பெண் ஊழியரை தொட்டுப் பேசுவது,
* அவரை பாலியலுக்கு அழைப்பது,
* அதிகாரத்தை வைத்து மிரட்டுவது,
* பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசுவது,
* ஆபாசமான படங்களை

காட்டுவது உள்ளிட்டவை பாலியல் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், என்ன வகையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் வகுத்து, அதை சுற்றறிக்கை மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கொண்டு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013 (the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013) இயற்றப்பட்டு அதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் பற்றி புகார் தெரிவிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சைபர் கிரைம்! ஒரு அலெர்ட் ரிப்போர்… !! (மகளிர் பக்கம்)
Next post பறக்கும்போது பத்திரமா பார்த்துக்கோங்க!! (மருத்துவம்)