உட்கார்ந்தே இருந்தால் உருப்பட முடியாது!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 34 Second

‘ஒரு கப்பல் கட்டப்படுவதின் நோக்கம் கடலுக்குள் பயணிக்க வேண்டும் என்பதற்காகத்தான்… கரையிலேயே நிற்பதற்காக அல்ல’ என்ற பொன்மொழியைப் போல செயல்படுவதற்காக படைக்கப்பட்டதுதான் உடல். யதார்த்தம் அதுபோல இல்லை. கால மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, பெருகிவரும் போக்குவரத்து வசதிகளால் உடல்ரீதியான செயல்பாடுகள் வெகுவேகமாகக் குறைந்து வருகிறது.

முக்கியமாக, நம்முடைய தொழில்முறையே 8 மணி நேரத்துக்கும் மேல் அமர்ந்திருப்பதுபோல மாறிவிட்டது. 1950ம் ஆண்டுக்குப் பிறகு, சர்வதேச அளவிலேயே இந்த செடண்டரி வாழ்க்கை முறை வேலைகள் 83 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகக்
கூறியிருக்கிறது ஒரு புள்ளிவிவரம். இதில் இன்னும் ஒரு சிக்கலாக, உட்கார்ந்து வேலை பார்க்கும் நேரமும் முன்பைவிட அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது சமீபத்தில் எடுக்கப்பட்ட இன்னோர் ஆய்வு.

வேலை நேரங்கள் தவிர்த்தும் தொலைக்காட்சி, வீடியோ கேம்கள், மொபைல் பயன்பாடு, வாகனம் ஓட்டுவது போன்ற நம்முடைய அன்றாட செயல்களும் உடலின் செயல்பாட்டைக் குறைப்பதாகவே இருக்கிறது. ‘மனித இன வரலாற்றில், முன் எப்போதும் இல்லாத அளவு அதிகமாக அமர்ந்தே இருக்கிறோம்’ என கவலை தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள். அல்பா பட்டேல் என்ற அமெரிக்க நோய்த்தொற்றியலாளர், 1992ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அமெரிக்கர்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டார்.

1 லட்சத்து 23 ஆயிரம் நபர்களிடம் மேற்கொண்ட ஆய்வின்மூலம் அதிர்ச்சிகரமான ஓர் உண்மை தெரியவந்தது. நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் என்ற விகிதத்தில் 15 ஆண்டுகள் உட்கார்ந்திருக்கும் ஆண்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு 20 சதவிகிதம் அதிகம் என்று தெரிய வந்தது. இதில் பெண்களுக்கான அபாயமோ 40 சதவிகிதம். நாள் ஒன்றுக்கு 9 மணி நேரத்துக்கு மேல் அமர்வது மேலும் ஆபத்தானது என்று எச்சரித்திருக்கிறது.அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்த அபாயத்தை உணர்ந்து ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற உடல்ரீதியான செயல்பாடுகள் பற்றிய வழிகாட்டுதலை அரசின் சார்பாகவே வெளியிட்டு வருகிறது.

அமர்ந்தே இருப்பதால் ஏற்படும் முக்கிய பிரச்னைகள் மற்றும் அவற்றைத் தவிர்க்கும் வழிகளை நிபுணர்களிடம் கேட்டோம். நீரிழிவு சிறப்பு மருத்துவர்சாதனா தவப்பழனி…

‘‘அதிக நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படுகிற முதல் பிரச்னை பருமன். இதன் தொடர்ச்சியாகவே மற்ற பிரச்னைகள் வருகின்றன. முக்கியமாக நீரிழிவு.எங்களிடம் பரிசோதனைக்கு வருகிற பெரும்பாலான பேரிடம் இன்று அதிக எடையையும் பருமனையும் பார்க்கிறோம். பருமன் ஏற்படும்போது இன்சுலின் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் உடலுக்குக் குறையும். இதற்கு Insulin Resistance என்று பெயர்.

அதாவது, இன்சுலின் ஹார்மோனுக்கு பதில்வினை செய்யத் தெரியாமல் செல்கள் செயலிழந்து போகும் நிலை. நீரிழிவு வராமல் தடுக்க உடல்ரீதியான செயல்பாடுகளை அதிகரித்தால், தசைகள் இன்சுலினை பயன்படுத்த ஆரம்பித்துவிடும். தங்கள் வேலை நேரத்துக்கு இடையிலேயே உடல்ரீதியான செயல்பாடுகளை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். வேலை நேரத்துக்கு இடையில் அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். அலுவலகத்துக்கு உள்ளேயே குட்டி வாக்கிங் செல்வது, லிஃப்ட் தவிர்த்து படிகளைப் பயன்படுத்துவது, முடிந்தவரை உடலுக்கு செயல்பாடு அளிக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நீரிழிவைத் தடுக்கலாம்…’’

நரம்பியல் மருத்துவர் ஸ்ரீனிவாசன்… ‘‘காற்றும் ரத்தமும் மூளைக்கு உணவைப் போல முக்கியமானவை. அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இந்த இரண்டும் கிடைக்காமல் மூளை செயல்திறனை இழக்கும். நாம் சுவாசிக்கும்போது ஆக்சிஜனை சுவாசித்து கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறோம். காற்றோட்டம் இல்லாத குளிர்சாதன அறையில் மணிக்கணக்காக உட்கார்ந்திருக்கும்போது புதிய ஆக்சிஜன் கிடைப்பதில்லை. ஆக்சிஜன் போதுமான அளவு கிடைக்காததால்தான் மனம் சோர்வடைவது போன்று உணர்கிறோம்.

நம்முடைய கணுக்கால் தசைகள்தான் மேல்நோக்கி ரத்தத்தை அனுப்பும் வேலையைச் செய்கின்றன. நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்குக் கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும் ரத்த ஓட்டமும் குறையும். இதனாலேயே சிலர், ‘கால் வலிக்கிறது, வீங்கி விட்டது’ என்கிறார்கள். அதனால்தான் 45 நிமிடத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காதீர்கள் என்கிறோம். ‘20 – 20 ஃபார்முலாவை பின்பற்றுங்கள்’ என்றும் அடிக்கடி சொல்வோம். அதாவது, ‘கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிராமல் அவ்வப்போது 20 அடி தூரத்தில், தொலைவில் உள்ள பொருட்களைப் பாருங்கள்… 20 முறை ஆழமாக சுவாசியுங்கள்’ என்பதே இதன் அர்த்தம்.

5 நிமிடமாவது நடந்துவிட்டு வரும்போது நல்ல ஆக்சிஜனும் கிடைக்கும், நடப்பதன் மூலம் தசைகள் வலுவாகி ரத்த ஓட்டமும் மேம்படும். அப்போது மூளையின் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்…’’உணவியல் நிபுணர் அக்‌ஷா… ‘‘இரண்டு மணி நேரத்துக்கு மேல் அமர்ந்திருப்பவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு 20 சதவிகிதத்துக்கும் கீழே குறைகிறது.

உடல்ரீதியான செயல்பாடுகள் போதுமான அளவு இருக்கும்போதுதான் சாப்பிடும் உணவு எரிக்கப்பட்டு செலவாகும். உணவுக்கு ஏற்ற செயல்பாடு இல்லாவிட்டால், அந்த கலோரிகள் செலவாகாமல் அப்படியே கொழுப்பாக மாறி உடலில் தங்கிவிடும். அதுவும், உடல் உழைப்பு குறைந்தவர்கள் அசைவ உணவுகள், துரித உணவுகள், பேக்கரி உணவுகள் என்று சாப்பிட்டால் அது அப்படியே
கொழுப்பாகத்தான் மாறும். உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு மன அழுத்தமும் அதிகமாகி, ‘நிறைய சாப்பிட வேண்டும்’ என்று தோன்றும். ரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ரால் இருந்தால்தான், அதில் இருக்கிற கொழுப்பு குறையும். இல்லாவிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகி, நல்ல கொலஸ்ட்ரால் குறையும்.

அதனால், உடல் உழைப்புக்கேற்ற உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவுக்கேற்ற உடல் உழைப்பும் இருக்க வேண்டும். அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…’’

இதய சிகிச்சை மருத்துவர் அருண் தனசேகரன்…

‘‘சமீபத்தில் 25 வயதுள்ள இளைஞர் ஒருவர் மாரடைப்பு என்று சிகிச்சைக்கு வந்திருந்தார். அந்த இளைஞரைப் போல இளம் வயதிலேயே பலருக்கு இதய நோய்கள் வருவதை பார்க்கிறோம். அதிக நேரம் அமர்ந்திருக்கும்போது உணவு எரிக்கப்பட்டு செலவாகாமல் கொழுப்பாக மாறி ரத்த நாளங்களில் படிகிறது. இதனால் மாரடைப்பு எளிதாக வருகிறது. செடண்டரி வாழ்க்கை முறை கொண்டவர்களுக்கு மன அழுத்தமும் அதிகமாக இருப்பதால் மாரடைப்பு அபாயம் அதிகமாகவே இருக்கிறது.

மன அழுத்தம் ஏற்படும்போது இதயத்துடிப்பு அதீதமாகி இதயத்துக்குப் போகும் ரத்த ஓட்டத்துக்கு அழுத்தமும் அதிகமாகும். ஏற்கெனவே கொழுப்பின் மூலம் அடைக்கப்பட்டு, ரத்தத்தின் வால்வுகள் பலவீனமாக இருந்தால் போதுமான அளவு சுருங்கி விரிய முடியாமல் போகலாம். இதனால்தான் ரத்தம் உடனடியாக உறைந்து மாரடைப்பு வந்துவிடுகிறது. இதை Stress cardiomyopathy என்றே சொல்கிறார்கள்.

உடல் உழைப்பு உள்ளவர்களின் ரத்த நாளங்களுக்கு மன அழுத்தத்தை கையாளும் திறன் இருக்கும். இதயத் துடிப்பும் இயல்பாகவே இருக்கும். செடண்டரி வாழ்க்கை முறையில் உள்ளவர்களுக்கோ இதயத்துடிப்பு சாதாரணமாகவே 100 என்கிற அளவில் இருக்கும். ரத்த நாளங்களுக்கும் அந்த அழுத்தத்தைக் கையாளும் திறனும் இருக்காது. அதனால், உணவு கொழுப்பாக மாறிவிடாமலும், மன அழுத்தம் ஏற்படாமலும் பார்த்துக் கொண்டால் இதயத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடைப்பயிற்சி, விளையாட்டுகள், வீட்டு வேலைகள், உடற்பயிற்சி, ஜாக்கிங் என்று உடல்சார்ந்த செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டாய உடலுறவு! (அவ்வப்போது கிளாமர்)
Next post இந்தியாவின் முதல் போர் 1947! (வீடியோ)