இங்கு மனிதன்தான் விற்பனைப் பொருள்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 37 Second

சோசியல் டைலெம்மா… லைக் பட்டனை கண்டுபிடித்தவர், கூகுள் இன்பாக்ஸ் வடிவமைத்தவர், ஃபேஸ்புக் சேவைகள் மூலம் பணம் சம்பாதிக்க திட்டம் ஸ்தாபித்தவர், எனப் பலரும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபையர்ஃபாக்ஸ், பின்ட்ரஸ்ட் நிறுவனங்களில் பணியாற்றி, சமூக ஊடகம் உருவாகக்
காரணமாயிருந்து தற்போது அதைவிட்டு முற்றிலும் விலகிப் பகிரும் ரகசியங்களே இந்த சோசியல் டைலெம்மா. தொழில்நுட்ப நிபுணர்களின் உரையாடல்களுக்கு நடுவே, வேறொரு தடத்தில், செயற்கை அறிவுத்திறன் மூலம் ஒரு குடும்பம் எப்படி சமூகத் தளத்திற்கு அடிமையாகி பிரச்னைகளைச் சந்திக்கிறது என்ற நாடகமும் இடம்பெறுகிறது. தொழில்நுட்ப வழிமுறைகளை விளக்கி பார்வையாளர்களைக் குழப்பாமல், எளிய நடைமுறையில் தொழில்நுட்பம் மனிதத்தை எப்படி மாற்றியமைத்துள்ளது என இந்த ஒன்றரை மணி நேர நீள ஆவணப்படம் விளக்குகிறது.

முதன்முதலில் சமூக வலைத்தளங்கள் கட்டமைக்கும் போது, மக்களை இணைக்க வேண்டும் அவர்களுக்கு பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது கடந்த ஐந்தாண்டுகளாக சமூக வலைத்தளங்கள் நம்மை அடிமைப்படுத்தி, மன உளைச்சல் உண்டாக்கி, மக்களிடையே பிரிவினையையும் வெறுப்பையும் விதைக்கும் கருவியாக உருமாறி உள்ளது. ஒரு தொழில்நுட்ப சேவை இலவசமாக வழங்கப்பட்டால், அதில் விற்பனையாகும் பொருள் நீங்கள்தான். அதாவது உங்களுடைய தகவல்களும், நேரமும் அந்த சேவைக்காக நீங்கள் செலுத்தும் கட்டணம். எந்த வியாபாரமாக இருந்தாலும், அதிக கட்டணம் வசூலித்து லாபம் பார்க்கவே உழைப்பார்கள். அதே போல, இந்த தொழில்நுட்ப சேவைகளும் மனிதர்களின் நேரத்தை வாங்கவே உழைக்கின்றனர். எவ்வாறு, மக்களைப் போதைக்கு அடிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போதைப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதோ, அதே போலத்தான் சமூகத் தளங்களும், மக்களின் முழு கவனத்தையும் ஈர்த்து, அவர்களைத் தொழில்நுட்ப சேவைக்கு அதிகப்படியாக அடிமையாக்கும் நோக்கத்தில், உருவாக்கப்
படுகிறது.

கூகுள் நிறுவனத்தின், முன்னாள் வடிவமைப்பு நெறிமுறையாளர்மற்றும் Center for Humane Society என்ற அமைப்பின் இணை நிறுவனருமான, டிரிஸ்டன் ஹாரிஸ் இந்நிறுவனங்கள், உலகில் தலைசிறந்த ஐம்பது டிசைனர்களை ஒன்றிணைத்து 200 மில்லியன் மக்களை எப்படி சோசியல் நெட்வர்க்கிங் தளத்திற்கு அடிமைப்படுத்துவது என்ற திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தியுள்ளன. மனிதன் தோன்றிய காலம் முதல், ஒரு பொருளை விற்பனை செய்ய இவ்வளவு பெரிய முயற்சி நடந்தது கிடையாது. ஆனால், இப்போது விற்பனை செய்யப்படுவது மக்களின் நேரம். அவர்களை சுயமாக யோசிக்கவிடாமல், உண்மையில்லாத ஓர் உலகில் வாழ வைக்க வேண்டும். அதற்காக அவர்கள் மனநிலையை தயார்படுத்தவே இந்த நிறுவனத்தின் ஒரு பெரும் பகுதியினர் உழைத்து வருவதாக கூறுகிறார் டிரிஸ்டன்.

ஃபையர்ஃபாக்ஸ் மற்றும் மொஸில்லாவில் பணிபுரிந்து, Infinite Scroll சேவையைக் கண்டுபிடித்தவர், ஆசா ரஸ்கின். இவரும் இந்த படத்தில் தொழில்நுட்பம் குறித்து பல தகவல்களைப் பகிர்கிறார். இப்போதெல்லாம் மணிக்கணக்காக எந்த சிந்தனையுமின்றி வெற்றுத்தனமாக முடிவே இல்லாமல் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் என Scroll செய்துகொண்டே இருக்கிறோம். இதை Persuasive technology என்கிறார்கள். இந்த தொழில்நுட்பத்தின் நோக்கம், மனிதர்களை உளவியல் ரீதியாக கட்டுப்படுத்தி, தங்களுக்குச் சாதகமான செயலை செய்ய வைப்பதுதான். இந்த ஸ்க்ரால் தொழில்நுட்பம் கேசினோவில் விளையாடும் ஸ்லாட் மெஷின் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை ரிஃப்ரெஷ் செய்து ஸ்க்ரால் செய்யும் போதும் புதிய பதிவுகள் வரும். இதை உளவியல் நிபுணர்கள், positive intermittent reinforcement என்கிறார்கள். ஒவ்வொரு முறையும், ஒரு புதிய பதிவு நமக்காக, நம்மை வியக்க வைக்கக் காத்திருக்கிறது.

அது தரும் உற்சாகத்தை உக்தியாகப் பயன்படுத்தி, புகைப்படத்தில் tag செய்வதில் தொடங்கி, மெசேஜ் அனுப்பியதும் ‘டைப்பிங்’ என்று வருவது வரை, முடிவற்ற பதிவுகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்கி நம்மை சமூக வலைத்தளத்தோடு பிணைத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஆன்லைனில் நம் ஒவ்வொரு செயலும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. கவனமேயில்லாமல் ஸ்க்ரால் செய்யும் போது கூட, எந்த படத்தை எவ்வளவு நேரம் பார்த்தோம் என்பது பதிவு செய்யப்படும். நீங்கள் ஒரு விளம்பரத்தைச் சொடுக்கினால்தான் அதற்குப் பணம் என்பதில்லை. அதை சில விநாடிகள் பார்த்தாலே போதும். இவர்களால், மட்டுமே மனிதனின் மனநிலையைக் கச்சிதமாகக் கணிக்க முடியும். தனிமையில், மன அழுத்தத்தில், சோகத்தில் இருப்பது, நமக்குத் தெரிவதற்கு முன்பே அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. இந்த தகவல்களை கொண்டு, தற்கொலை செய்யும் மனநிலையில் உள்ளவர்களைக் காப்பாற்ற முடியும். மன அழுத்தத்தில் இருப்பவருக்குச் சிகிச்சை தர முடியும். வன்முறையைத் தூண்டி கலவரம் செய்ய இருக்கும் ஒருவரை தடுத்து, பல உயிர்களைக் காக்க முடியும். ஆனால் இந்த இணையச் சேவைகள் இதையெல்லாம் செய்வதில்லை. அவர்களுடைய நோக்கம் லாபம் ஈட்டுவது மட்டுமே.

ஆன்லைனில் நமக்கு நண்பர்களாக இருப்பவர்கள் அனைவருமே நம்மைப் போன்று சிந்திப்பவர்களாகவும் செயல்படுபவர்களாகவும் இருப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. நம்மை ஒத்த எண்ணங்களைக் கொண்டவர்களின் பதிவுகளே தொடர்ந்து காண்பிக்கப்படுகிறது. இதனால்தான், மாறுபட்ட மனிதர்களையும், நமக்கு ஒத்திராத கருத்துக்களையும் ஏற்க மறுக்கிறோம். காரணம், எதிர்க் கருத்துக்கள் கொண்ட மனிதர்களை நாம் வலைத்தளங்களில் சந்திப்பதே இல்லை. நம் கருத்தை ஆதரிக்கும் போலிச் செய்திகளை நம்பிவிடுகிறோம். விளைவு, மக்களிடையே வெறுப்பும் பேதமும் தலைதூக்குகிறது. மக்கள் மன உளைச்சலில், கவலையில் இருக்கும் போதுதான் அவர்களால் அதிகம் சம்பாதிக்க முடியும். எனவே, தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதர்களை அந்த மனநிலையிலேயே வைத்திருக்கப் போராடுகின்றனர். இப்படி அனைத்தையும் தங்கள் கட்டுக்குள் வைத்து கண்காணிக்கும் தொழில் நிறுவனங்களால், போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், மக்களின் தனியுரிமையைக் காக்க முடியவில்லை என்பதும் அபத்தமானது.

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில், போலிச் செய்திகள் மூலம் பல விளைவுகள் உண்டாகின. வெளிநாடுகளில் சீன மக்களைத் தாக்குவதில் தொடங்கி, விளக்கேற்றி அதிர்வுகள் உண்டுசெய்தால் கொரோனா ஒழிந்துவிடும் எனக் கிளம்பியவர்கள் வரை அரசின் வழிமுறைகளைத் தவறாகப் போலிச் செய்திகள் மூலம் பரப்பி பல பிரச்னைகள் உருவாக்கப்பட்டது. இப்படி சமூக வலைத்தளம், போலி தகவல்களால் மக்களுக்கிடையே பிரிவினை உண்டாக்குவது முதல் கலவரம் வரை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் சக்தியாக மாறியுள்ளது. இது போன்று இணைய ஊடகத்தின் விபரீதங்களை இந்த ஆவணப்படம் அடுக்கிக்கொண்டே போனாலும். சமூக வலைத்தளங்களை உருவாக்கியவர்கள் மக்களுக்குப் பலன் தர வேண்டும் என்ற குறிக்கோளுடன், தொலைந்துபோன குடும்பங்களை இணைப்பது முதல் அவசரக் கால மருத்துவ உதவிகளை பெறுவது வரை பல விலைமதிப்பற்ற நன்மைகளை செய்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், இப்போது அவர்களே தாங்கள் உருவாக்கிய சமூகத் தளங்களை தங்கள் குழந்தைகள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். இவர்கள் உருவாக்கிய இந்த செயற்கை நுண்ணறிவு தன்னைத் தானே மேம்படுத்திக்கொண்டு ஆபத்தான வளர்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது. இப்படிப் பல உண்மைகள் மூலம் இந்த ஆவணப்படம் நம்மைப் பயமுறுத்தினாலும், அதற்கான தீர்வுகளையும் கூறுகிறது. நாம் உடனே சமூக வலைத்தளங்களை நீக்குவது கடினமே. ஆனால், குறைந்தது அதன் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளலாம். இரவு தூங்கும் போது அரை மணி நேரம் முன், அலைபேசிகளை வெளியே வைத்துவிட்டு படுக்கையறைக்கு செல்லுங்கள். சாப்பிடும் போது, அலைபேசிகளை தள்ளி வையுங்கள். இணையதளம் குறித்த அறிவிப்புகளை அணைத்து வையுங்கள்.

முன்னாள் கூகுள் தொழில்நுட்ப வல்லுநரான ஜோ டோஸ்கானோ, இத்தளங்களுக்குத் தரவு பயன்பாட்டின் மீது வரி விதிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். கடைசியாக, நம் நேரம் விலைமதிப்பற்றது. பிறர் லாபத்திற்காக அதை விற்காமல், நமக்கு பயனளிக்கும் வகையில் குடும்பத்தினருடன் செலவிடுவோம். ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படத்தில், பல அதிர்ச்சியூட்டும் ரகசியங்களும் தகவல்களும் விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் அலைபேசிகளை, கூகுள், ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களைப் பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ? (அவ்வப்போது கிளாமர்)
Next post தும்மினால் நிற்குமா இதயம்? (மருத்துவம்)