40 வயது தாண்டிய பெண்களை அதிகம் தாக்கும் மாரடைப்பு!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 24 Second

நடிகை ஊர்வசியின் சகோதரியாகவும் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகவும் அறியப்பட்ட கல்பனா, கடந்த மாதம் திடீர் மரணம் அடைந்துள்ளார். பெண்களுக்கு மாரடைப்பு வருவது அரிது என்ற நம்பிக்கை பலரிடமும் இருக்கும் சூழலில், எல்லோரையும் யோசிக்க வைத்திருக்கிறது கல்பனாவின் முடிவு. இதய சிகிச்சை மருத்துவரான மனோஜிடம் கல்பனாவின் மரணம், பெண்களின் மாரடைப்பு, தடுக்க வேண்டிய முறைகள் என பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினோம்.

‘‘நோய்களுக்கு ஆண், பெண் என்ற பாரபட்சம் எதுவும் இல்லை. மாரடைப்பும் (Heart attack) அதற்கு விதிவிலக்கு அல்ல. இதில் ஒரு சின்ன வித்தியாசம் மட்டுமே உண்டு. 40 வயது வரையில் ஆண்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு அபாயம் குறைவுதான். 40 வயதுக்குப் பிறகு அல்லது மெனோபாஸ் காலத்துக்குப் பிறகே பெண்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் அதிகம்.

பெண்களின் செக்ஸ் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் தேவையான அளவு சுரக்கும்போது ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதில்லை. 40 வயதுக்குப் பிறகு அல்லது மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் குறையும்போது மாரடைப்புப் பாதுகாப்பும் குறைந்துவிடுகிறது. அதன்பிறகு ஆண்களின் உடலமைப்பும், பெண்களின் உடலமைப்பும் ஒன்றுதான்…’’ என்பவர், இப்போது ஆண்களைவிட பெண்கள் மாரடைப்பால் பாதிக்கப்படுவது அதிகமாகி இருக்கிறது என்கிறார்.

‘‘பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. நீரிழிவு வந்தவுடன் ஈஸ்ட்ரோஜன் சுரப்பது குறைவதும் பெண்களின் மாரடைப்பு, ரத்தக்கொதிப்புக்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு வருகிறவர்களுக்கு ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை கொழுப்பாக எளிதில் மாறிவிடும். இதனால்தான் நீரிழிவாளர்கள் மற்றவர்களைவிட 8 மடங்கு அதிகம் மாரடைப்பு அபாயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வும் பெண்களிடம் ஏற்பட வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்… ஆண்களுக்கு நெஞ்சுவலி வந்தாலே மாரடைப்பு பயம் வந்து பெரும்பாலும் டாக்டரை பார்த்துவிடுவார்கள். பெண்களோ நெஞ்சுவலியை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். மார்பு வலியாக இருக்கும் என்றோ வாயுத் தொல்லை என்றோ சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். வீட்டில் இருப்பவர்களிடம் தங்கள் பிரச்னையைச் சொல்கிற பெண்களும் குறைவுதான். அப்போதைக்கு வலி இல்லாமல் இருந்தால் போதும் என்று மருந்துக்கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகிற பழக்கமும் பலரிடம் உண்டு. நெஞ்சுவலி எந்தவிதமாக இருந்தாலும் கவனிக்க வேண்டியது அவசியம்.

மார்பு வலி என்றால் மார்பின் ஒருபக்கத்தில் மட்டுமே வலி நிலையாக இருக்கும். மாரடைப்பை உருவாக்கும் வலி என்றால் நடு மார்பில் வலிக்கும். அந்த வலி, கழுத்து, தாடை, இடது தோள்பட்டை என வெவ்வேறு இடங்களுக்குப் பரவும். வாயுத் தொல்லையால் ஏற்படும் வலி மேல் வயிற்றில் மட்டும்தான் இருக்கும். ஏப்பம் வரும். வியர்வை வராது. அதிகமான வியர்வையுடன் நெஞ்சு வலி ஏற்படுவது மாரடைப்பின் அறிகுறிதான். மூச்சு அடைப்பது போன்ற உணர்வும் கவனிக்க வேண்டியதே. இந்த நுட்பமான விஷயங்களை பெண்கள் தெரிந்துகொள்வது நல்லது’’ என்கிறார் டாக்டர் மனோஜ்.

நடிகை கல்பனாவின் மரணம் பற்றி…

‘‘அவரது மருத்துவ அறிக்கைகளைப் பார்த்தால்தான் என்ன பிரச்னை என்பதை உறுதியாகக் கூற முடியும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. திடீர் மரணம் என்று செய்திகளில் கேள்விப்படுவதால் இதயம் தொடர்பான Sudden cardiac death ஆகவும் இருக்கலாம். இது வரும் முன் வலி பெரிதாக இருக்காது. அதனால் வலியைப் பெரிதுபடுத்தாமலும் விட்டிருக்க வாய்ப்பு உண்டு. நீரிழிவு உள்ளவர்களுக்கு கை, கால் மரத்துப்போவது போன்ற உணர்வு வருவதாலும் வலியை உணராமல் இருப்பார்கள்.

Sudden cardiac death பிரச்னையில் ஒரு நிமிடத்துக்குள் மரணம் ஏற்பட்டுவிடும். திடீரென்று இதயத்துடிப்பு நின்றுபோகும். அல்லது இதயத்துடிப்பு 300, 400 என்ற அளவு அதிகமாகும். இந்த அதீத இதயத்துடிப்பால் இதயத்தில் இருந்து ரத்தம் ‘பம்ப்’ ஆகாது. இதனாலும் ரத்த அழுத்தம் குறைந்து உயிரிழப்பு ஏற்படலாம்’’ என்ற டாக்டரிடம், கல்பனா கல்லீரல் மாற்று சிகிச்சை செய்துகொண்டதை நினைவுபடுத்திக் கேட்டோம்.

‘‘உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொண்டபின் எடுத்துக் கொள்ளும் Immunosuppressant மருந்துகள் பக்கவிளைவுகளை உண்டாக்கும் அபாயம் கொண்டவை. இதனால் ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் வரலாம். இதனாலும் கல்பனாவுக்கு மாரடைப்பு வந்திருக்க வாய்ப்பு உண்டு’’ என்பவர், பெண்கள் மாரடைப்பில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறார்.

‘‘நெஞ்சு வலி இருந்தால் ரத்தப்பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனையில் நார்மல் என்று தெரிந்தும் நெஞ்சு வலி வந்து கொண்டிருந்தால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துப் பார்த்துக் கொள்வது நல்லது. சில நேரங்களில் பித்தப்பைக் கற்களாலும் மாரடைப்பு வருவதுபோல தோன்றலாம்.நெஞ்சு வலி ஏற்பட்டால் உடனே பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று ஈ.சிஜி. ஒன்று எடுத்துப் பார்க்க வேண்டும். ஈ.சி.ஜி. நார்மலாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஆரம்ப கட்ட மாரடைப்பாக இருந்தால் ஈ.சி.ஜியில் நார்மலாகத்தான் தெரியும், கண்டுபிடிக்க முடியாது.

15 நிமிடங்களில் இரண்டாவது ஈ.சி.ஜி. எடுத்துப் பார்த்தால்தான் உண்மை தெரியும்.சமீபகாலமாக பெண்களிடமும் மதுப்பழக்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது. மதுப்பழக்கத்தால் பருமன் அதிகமாகி மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். நீரிழிவு நோயாளிகள் மதுப்பழக்கத்தைத் தொடர்ந்தால் நீரிழிவு மருந்துகள் செயலிழந்து போகும். ஏனெனில், மாத்திரைகள் கல்லீரலில் சேர்ந்துதான் பலன் தரும். கல்லீரல் பாதிக்கப்படும்போது மாத்திரை வேலை செய்யாது.

புகை பிடிப்பதில் உலக அளவில் இந்தியப் பெண்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வந்தது. புகை பிடிப்பதால் ரத்தக்கொதிப்பு அதிகமாகும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களால் கிடைக்கும் பாதுகாப்பும் பெண்களுக்குக் கிடைக்காமல் போகும். மாரடைப்பை உருவாக்கும் இந்த இரண்டு தீய பழக்கங்களையும் தவிர்ப்பது நல்லது. திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற காரணங்களாலும் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மாரடைப்பு என்ற இந்த செய்தியை அச்சுறுத்தலாக நினைக்காமல் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டால் போதும்’’ என்கிறார் டாக்டர் மனோஜ்.

ஆய்வு என்ன சொல்கிறது?

பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்புக்கான அறிகுறிகள் பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றே பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. சமீபத்தில் வாஷிங்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘அறிகுறிகள் தெரியாததாலேயே பலர் உயிரிழக்கிறார்கள். முதுகின் மேற்புறம் வலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறது. மாரடைப்புக்கான அறிகுறிகள் ஏற்பட்டால் ஆம்புலன்சில் அழைத்துச் செல்வதே பாதுகாப்பானது என்றும், அப்போதுதான் முதல் உதவி செய்ய தெரிந்தவர்கள் இருப்பார்கள் என்று விளக்கமும் கொடுத்திருக்கிறது.

கல்பனா சொல்லும் பாடம்

51 வயதான கல்பனா, ஏற்கெனவே பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இருப்பினும், தன்னுடைய உடல்நலப் பிரச்னைகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல், கலகலப்பாகவே எல்லோரிடமும் பழகி வந்துள்ளார். தன்னுடைய பிரச்னையைச் சொல்லி மற்றவருக்கு மனக்கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது என்பதெல்லாம் சரிதான். ஆனால், தனக்கிருந்த நோய்களையும் சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததுதான் பிரச்னையாகிவிட்டது.

இதய நோயாளிகளின் துணைக்கு யாராவது ஒருவர் இருப்பது நல்லது. கல்பனாவோ உதவியாளர்கள் கூட யாரும் இல்லாமலேயே ஓட்டலில் தங்கியிருந்திருக்கிறார். ஒருவேளை உதவியாளர்களோ, உறவினர்களோ யாராவது உடன் இருந்திருந்தால் மாரடைப்பு ஏற்பட்ட உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றியிருக்க வாய்ப்பு உண்டு. இதுவும் கல்பனா நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கும் ஒரு கசப்பான பாடம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறைப் பள்ளிகள் கற்றுத் தந்த பாடங்கள்! (மகளிர் பக்கம்)
Next post யார் இந்த சுப்பிரமணியன் சுவாமி? (வீடியோ)