வாயை மூடிக்கொள்ளதான் மருமகளா? (மருத்துவம்)

Read Time:11 Minute, 49 Second

அன்புத் தோழி,என் வீட்டில் என் விருப்பம்தான் எல்லோரின் முடிவாக இருந்தது. மகிழ்ச்சியான வாழ்க்கை. நான் சொன்னதற்கு எப்போதும் மறுமொழி கேட்டதில்லை. நான் சொன்னது கட்டாயம் நிறைவேறும்.ஆனாலும் நான் அடம் பிடிக்கும் ஆளில்லை. எங்கப்பா சொல்வார், ‘எம்பொண்ணு சொன்னா நியாயமாகத்தான் இருக்கும்’ என்று. எங்கப்பா மட்டுமல்ல, என் கருத்தில் நியாயம் இருப்பதால்
எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள்.

என் அண்ணன்கள் மட்டுமின்றி, என் தங்கையும் எப்போதும் என் பக்கம்தான். அவர்களும் என்னிடம்தான் யோசனை கேட்பார்கள். நான் சொல்லும் யோசனைகள் எப்போதும் சரியாக இருப்பதாக அவர்கள் பாராட்டுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை எங்கம்மாவுடன் போட்டி போட்டுக் கொண்டு செய்வேன். எனது பெரிய அண்ணன் திருமணமாகி வெளியூருக்கு போகும் போது அதிகம் அழுதது நான் அல்ல. அவர்தான்.

எங்கம்மாவுக்கு வேலைகளிலும் உதவியாக இருப்பேன். அலுவலகத்தில் இருந்து அப்பா வீடு வந்ததும், அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டுதான் அடுத்த வேலையை பார்ப்பேன். அவருக்கு வந்ததும் தண்ணீர் கொடுப்பது முதல் அவருக்கு சாப்பாடு எடுத்து வைப்பது வரை எல்லாமே நான்தான். அதனால் படிப்பில் சுமார் என்று நினைத்து விடாதீர்கள்.

நான்தான் வகுப்பில் முதல் மாணவி என்று கதை சொல்லமாட்டேன். நானும் நன்றாக படிப்பேன். கணக்கில் கட்டாயம் நூற்றுக்கு நூறு.
அதனால் கல்லூரி முடித்ததும் வேலை. வேலையிலும் எனக்கு பாராட்டுகள் குவிந்தன. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தாலும் என்னையும வளர்ச்சிக் கூட்டங்களில் அழைத்து ஆலோசனை கேட்பார்கள். அந்த ஆலோசனைகள் பலன் தந்ததாக பாராட்டுகள் குவிந்தன.

வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அதன் பிறகு எல்லாம் மாறிவிட்டது. அங்கு என் மாமியார் சொல்வதுதான் சட்டம். அதை நான் என்றும் தவறாக நினைத்ததில்லை. பெரியவர் சொல்வதை கேட்பது தவறில்லை என்று எங்கள் வீட்டில் சொல்லி தந்து இருக்கிறார்கள். ஆனால் அங்கு நான் ஏதும் பேச முடியாது. புதிதாக புகுந்த வீடு என்பதால் போகப்போக சரியாகி விடும் என்று நினைத்தேன். ஆனால் எந்த விஷயத்திலும் என் யோசனை கள் எடுபடுவதே இல்லை. எது சொன்னாலும் ஆரம்பத்திலேயே நிராகரித்து விடுவார்கள்.

மறுபடியும் வாயை திறந்தால் உடனே மாமியார் ‘வாயை மூடு… கிச்சனில் வேலை இருக்கு போய் பாரு’ என்று சொல்லி விடுவார். ஏதும் பேச முடியாதபடி என் கணவரும் முறைப்பார். அவர் தொழிலில் ஏதாவது யோசனைகள் சொன்னாலும் கேட்கமாட்டார். ‘உனெக்கென்ன தெரியும் வாயை மூடு’ என்பார். என் பேச்சை கேட்காமல் அவர் எடுத்த பல முடிவுகள் தோல்வியில் முடிந்துள்ளன. நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளன. ஆனாலும் என் பேச்சை கேட்பதில்லை. அவருக்கு ஏதாவது யோசனைகள் சொல்வது தெரிந்து விட்டால் உடனே என் மாமியாருக்கு மூக்கு வியர்த்து விடும். அன்று முழுக்க எனக்கு அர்ச்சனைதான்.

இன்றும் என் வீட்டில் ஏதாவது பிரச்னை என்றால் என்னிடம்தான் ஆலோசனை கேட்கிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் அண்ணனும் ஏதாவது தீர்வு வேண்டுமென்றால் என்னிடம்தான் பேசுகிறார். இவ்வளவு ஏன்? என் திறமையால் இப்போது அலுவலகத்தில் முடிவுகளை எடுக்கும் பொறுப்புக்கு உயர்ந்து இருக்கிறேன். ஆனால் வீட்டில் மட்டும் ஏன் என்னை இவ்வளவு அலட்சியப்படுத்துகிறார்கள். அவர்கள் செய்வது தவறு, அவர்களது முடிவு தப்பு என்று தெரிந்தாலும் என்னால் ஏதும் செய்ய முடியாமல் வாய் மூடி கிடக்கிறேன். வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்து மறுநாள் காலை வேலைக்கு போகும் வரை சிறையில் இருப்பதை போன்று உணர்கிறேன்.

மருமகள் என்றால் வாய் மூடிதான் இருக்க வேண்டுமா? மனைவி என்றால் கணவருக்கு ஆலோசனைகள் சொல்லக் கூடாதா? இவர்கள் காட்டும் அலட்சியம் எனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். இப்போது குழந்தை பிறந்துள்ளதால் அம்மா வீட்டில் இருக்கிறேன். மீண்டும் மாமியார் வீட்டு சிறைக்கு போக வேண்டுமே என்று நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.

நாம் சொல்வதை கேட்காத, நம்மை மதிக்காத வீட்டுக்கு போக வேண்டுமா என்று தோன்றுகிறது? என்ன செய்வது… குழம்பி தவிக்கிறேன். எனக்கு
வழிகாட்டுங்கள் தோழி…இப்படிக்குபெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

பெண்கள் பேச்சு அம்மா வீட்டில் எடுபடுவது எப்போதும் வாடிக்கையான ஒன்றுதான். அதிலும் அப்பாக்களுக்கு தங்கள் பெண்கள் எப்போதும் தேவதைகள். மகள்கள் சொல்வதை எப்போதும் அப்பாக்கள் மறுப்பதில்லை அதிலும் உங்களைப் போன்ற அறிவாளிகளின் ஆலோசனைகளை கேட்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் புகுந்த வீட்டிலும் அது போன்ற சூழ்நிலையை எதிர்பார்க்கும் அளவுக்கு சமூகம் இன்னும் மாறவில்லை. மகள்களின் பேச்சுகளை கேட்கும் பெற்றோர், மருமகள்களின் பேச்சுகளை கேட்பதில்லை.

உங்கள் அண்ணன் திருமணமாகி வெளிநாட்டில் இருக்கிறார். அதனால் உங்கள் அண்ணி பேச்சு உங்கள் வீட்டில் எடுபட்டதா என்பதை கவனிக்க உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதிலும் வெளிநாட்டில் இருந்துகொண்டு அங்கிருந்து உங்களிடம் ஆலோசனை கேட்பதை, உங்கள் அண்ணி எப்படி எடுத்துக் கொள்கிறார் என்பதையும் இங்கிருந்து பார்க்க முடியாது. உங்கள் திருமணம் பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம். இதுவே நீங்கள் காதல் திருமணம் செய்து இருந்தால், உங்களை என்ன செய்திருப்பார்? தன் பிள்ளைகள் தங்கள் கட்டுக்குள் இருக்கும் வரைதான் அவர்களை பெற்றோருக்கு பிடிக்கும். அதை மீறினால் பாசமுள்ள பெற்றோருக்கும் கட்டாயம் வருத்தம், சிலருக்கு கோபம் கூட வரலாம்.

அம்மா வீட்டை போல் அலுவலகத்திலும் எனது ஆலோசனைகளை சொல்வதைக் கேட்கிறார்கள் என்கிறீர்கள். அலுவலகத்தில் லாபம் மட்டுமே குறிக்கோள். வருவாய்க்கு உத்தரவாதம் என்றால் யார் என்ன ஆலோசனை சொன்னாலும் அதை அவர்கள் கேட்கத்தான் செய்வார்கள். குடும்பத்திலும் அதே சூழலை எதிர்பார்க்கக் கூடாது.

குடும்பம் வேறு, அலுவலகம் வேறு. திருமணம் ஆனதும் ஆண்கள் மாறிவிடுகிறார்கள் என்று ஒரு பேச்சு இருக்கிறது. அப்படி யாரும் தங்களை சொல்லி விடக் கூடாது என்பதற்காகவே பல ஆண்கள் நியாயம் இருந்தாலும் மனைவியின் பேச்சை அலட்சியம் செய்வது வழக்கம்.

அம்மாவுக்கு பயந்து கொண்டு கூட உங்கள் ஆலோசனைகளை அவர் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். உங்கள் மாமியாரும் புதிதாக வந்தவள் பேச்சை ஏன் கேட்க வேண்டும் என்று நினைக்கலாம். அந்த எண்ணம் சட்டென்று மாறிவிடாது.

அதுமட்டுமல்ல ஆலோசனைகள் சொல்லும் போது நான் நான் என்று சொல்லாமல், ‘நாம்’ இப்படி செய்யலாமா, ‘நாம்’ இப்படி செய்தால் நன்றாக இருக்குமா என்று சொல்லுங்கள். பலன் கிடைக்கலாம். நீங்களாக போய் ஆலோசனைகள் சொல்வதை தவிருங்கள். அதேபோல் எல்லாவற்றுக்கும் நான் ஆலோசனை சொல்வேன் என்றும் அவசரப்படாதீர்கள். கேட்காமல் நீங்களாகவே போய் ஆலோசனைகள் சொல்லாதீர்கள்.

அது உங்கள் மதிப்பை குறைத்துவிடும். அப்படியும் உங்கள் ஆலோசனையை கேட்காவிட்டால் அது உங்கள் மனதை காயப்படுத்தும்.அப்படித்தான் இப்போது தேவையில்லாமல் மனம் காயப்பட்டு இருக்கிறீர்கள். எனவே கேட்டால் ஆலோசனை சொல்லுங்கள். அதுமட்டுமல்ல உங்களின் அறிவும், திறனும் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

அது அவர்களுக்கு புரியும் வரை காத்திருங்கள். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், உங்கள் கணவர் அன்பு செலுத்துவது உட்பட மற்ற விஷயங்களில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை பாருங்கள். அதுதான் முக்கியம். இப்போது நீங்கள் ஒரு குழந்தைக்கு தாய். அந்த குழந்தை விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.

பேறுகாலம் முடிந்து உங்கள் மாமியார் வீட்டுக்கு போகும் போது புது உணர்வுடன் செல்லுங்கள். இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களை கண்டு கொள்ளாமல், அதற்காக மனம் வருந்தாமல் புதுப் பெண்ணாக வலம் வாருங்கள். பிறகு எல்லாம் மாறும். வாழ்த்துகள்.தொகுப்பு: ஜெயா பிள்ளை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா ? (அவ்வப்போது கிளாமர்)
Next post மாற்றமடையும் குழந்தையின் உணவுப்பழக்கம்…!! (மருத்துவம்)