By 15 April 2021 0 Comments

என்ன செய்வது தோழி!! (மகளிர் பக்கம்)

அன்புத் தோழி, நான் பட்டதாரி. இரண்டு பிள்ளைகள். என்னை இல்லத்தரசி, ஹோம் மேக்கர் என்றும் சமூகம் சொல்லும். ஆனால் ‘சும்மா தானே இருக்கே’ என்று என் வீட்டுக்காரர் சொல்வார். ஆனால் அந்த வார்த்தைகள் என்னை ஒன்றும் வாட்டியதில்லை. காரணம் நான் அவர் மீது வைத்திருந்த அன்பு. அவருக்கும் என் மீது காதல், அன்பு…. முன்பு இருந்தது. இப்போது….. முன்பு நான்தான் அவரின் உலகம். எங்கள் பிள்ளைகள் தான் அவரின் மகிழ்ச்சி. ஆனால் இப்போது… இப்படி இப்போது, இப்போது என்று சொல்கிறேன் என்று கோபம் வேண்டாம். இப்போது என் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

வீட்டுக்கு நேரத்துக்கு வருவதில்லை. கேட்டால்… கூடுதல் பணி என்றார். நம்பினேன். சில நாட்கள் வரமாட்டார். திடீரென ‘வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கிறேன்’ என்பார். சரி என்பேன். ‘நமக்காக அப்பா எப்படி உழைக்கிறார் பாருங்கள்’ என்று பிள்ளைகளிடம் பெருமையாக சொல்லுவேன். தெரிந்தவர்கள் ‘யார் அது’ என்று கேட்க ஆரம்பித்தனர். எனக்கும் தெரியவில்லை. தெரிந்த போது அந்த வேதனையையும், வலியையும் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். கூட வேலை செய்யும் திருமணமான பெண்ணுடன் ஊர் சுற்றுகிறார். வெளியூர் போய் தங்குகிறார் என்பது உறுதியானது.

கேட்டால் ‘உன் வேலையை பாரு… உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் ஏதாவது குறை வச்சா கேளு’ என்கிறார். சோறு, துணி இல்லாவிட்டால்தான் குறை, வீட்டுக்காரரை விட்டுக்கொடுத்தால் நிறை என்று நினைக்கிறார். அடிக்கடி சண்டை போட்டால் குழந்தைகள் மனநிலை பாதிக்கும் என்று புரிகிறது. ஆனால் அந்த ஏமாற்றத்தையும், துரோகத்தையும் தாங்க முடியவில்லை. அவர் செய்யும் தவறை நான் செய்திருந்தால் அவரோ, இந்த சமூகமோ இப்படி கண்டு கொள்ளாமல் இருப்பார்களா?

என்னால் முடியவில்லை. படித்திருக்கிறேன். பிள்ளைகளை வளர்க்க வசதியாக, கட்டாயம் ஒரு வேலை கிடைக்கும். அந்த நம்பிக்கையில் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறேன். அந்த பெண்ணுடன் அவர் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்தவைகளை ஸ்கிரீன் ஷாட்டாக எடுத்து வைத்திருக்கிறேன். இரண்டு பேரும் வெளியூர் செல்ல ஒரே நாளில் விடுமுறை எடுத்த விவரங்களும் சேகரித்து வைத்திருக்கிறேன். இவையெல்லாம் விவாகரத்து பெற போதுமானதா? வேறு ஆதாரங்கள் ஏதாவது திரட்ட வேண்டுமா? தன்மானத்தை விட்டு ஜீவனாம்சம் பெற எனக்கு விருப்பமில்லை. ஜீவனாம்சம் பெறுவது கட்டாயமா? வழி சொல்வாயா தோழி?
– பெயர் வெளியிட விரும்பாத தோழி.

நட்புடன் தோழிக்கு, எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னதாக, நிதானமாக யோசியுங்கள். எந்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு மட்டும் இருக்காது. பல தீர்வுகள் இருக்கும். அதில் எது உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் நல்லது என்று யோசியுங்கள். அதற்கு முன் பிரச்னையை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் கடிதத்தை படிக்கும் போது ஒன்று புரிந்தது. உங்கள் மீது அவர் அதிக அன்பு வைத்திருந்தார் என்பதும், இப்போது அது இல்லாமல் போனதையும் உங்களால் ஜீரணிக்க முடியவில்லை. காரணம் அவர் மீது இன்னும் உங்களுக்கு பாசம் இருக்கிறது. அவர் செய்வதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. தவறுதான்.

ஆனால் அவரை திருத்த முயற்சி எடுப்பதில் தவறில்லை. உங்கள் வீட்டில் பெரியவர்களிடம் சொல்லி அவரிடம் பேச சொல்லுங்கள். அவரின் நல்ல நண்பர்கள் மூலமாகவும் முயற்சி செய்யலாம். அதற்கு முன் அவரிடம் விவாதம் செய்வதை நிறுத்துங்கள். அல்லது குறையுங்கள். அது பிரச்னையை குறைக்க வழி செய்யும். அதை விட்டுவிட்டு சண்டை போட்டால் ஆண்கள் விட்டால் போதும் என்று கிளம்பி விடுவார்கள். நீங்கள் விவாகரத்து என்றால், அவரும் உற்சாகமாக தலையாட்டி விடுவார்.

குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம். திருமணத்திற்கு பிறகு தனக்காக வாழும் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் குறைவுதான். பிள்ளைகளுக்காகதான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறார்கள். எனவே விவாகரத்துதான் முடிவு என்றால் மீண்டும் ஒருமுறை யோசியுங்கள். அப்புறம் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லி விடுகிறேன். உங்கள் கணவரும், அவருடன் வேலை செய்பவரும் விருப்பத்தின் அடிப்படையில் காதலித்தாலும், சேர்ந்தாலும் நீங்கள் விவாகரத்து கேட்கலாம்.

அடித்து உதைத்தால்தான் என்றில்லை மனரீதியாக தொல்லை தந்தாலும் விவாகரத்து கேட்க முடியும். அதற்கு வாட்ஸ்ஆப் உள்ளிட்ட ஆதாரங்கள் தேவையில்லை. இருந்தால் கூடுதல் ஆவணம். அப்புறம் ஜீவனாம்சம் கேட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. உங்கள் பிள்ளைகள் மேஜரா, மைனரா என்று குறிப்பிடவில்லை. மைனராக இருந்தால் உங்கள் பிள்ளைகளின் படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக ஜீவனாம்சம் கேட்டுதான் ஆக வேண்டும். அது அவர்களின் உரிமை. அப்பாவின் கடமை. அதை நீங்கள் மறுப்பது நியாயமில்லை. மீண்டும் சொல்கிறேன் யோசித்து முடிவு செய்யுங்கள்.Post a Comment

Protected by WP Anti Spam