By 22 April 2021 0 Comments

விட்டுக் கொடுத்தலை வினை ஆக்கலாமா? (மகளிர் பக்கம்)

கல்யாணத்துக்குப் பிறகு கணவரை திருப்திப்படுத்துவதையும் அவர் மனம் கோணாமல் மகிழ்ச்சியாக வைத்திருப்பதையுமே தலையாய கடமையாகச் செய்கிற மனைவிகள் இருக்கிறார்கள். திருமணம் என்கிற உறவில் இணைகிற இருவரும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே… பெரும்பாலான திருமணங்களோ பெண்களின் தியாகங்களை மையப்படுத்தியே நகர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. சில திருமணங்களில் அந்தத் தியாகமானது வரம்பு மீறிப் போவதும் உண்டு.

உதாரணத்துக்கு மனைவியின் தோற்றத்தை விமர்சனம் செய்கிற கணவர்கள், சதா சர்வ காலமும் ஏதோ ஒரு குறையைக் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மார்பகங்கள் எடுப்பாக இல்லை என்பார் கணவர். அதை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, உடனே மார்பகங்களை எடுப்பாக்கும் அறுவை சிகிச்சையை செய்து கொள்கிற மனைவிகளும் உண்டு.

அத்துடன் கணவரின் அதிருப்தி அடங்கி விடாது. அடுத்து மூக்கு சரியில்லை… தொப்பை இருக்கிறது… நடை சரியில்லை… உடை சரியில்லை என ஒவ்வொன்றாக அடுக்குவார்கள். கணவரின் சந்தோஷமே தன் சந்தோஷமாக நினைக்கிற மனைவியும் ஒவ்வொன்றையும் அவர் விருப்பப்படி மாற்றிக் கொள்வதில் முனைப்பாக இருப்பார். நீங்கள் எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்தான் இருக்கிறது திருமண பந்தத்தின் அழகு. இருவரில் ஒருவர் தன் துணையை தன் விருப்பப்படி மாற்றுவதிலும் தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து போகக்கூடியவராகவும் மாற்ற நினைக்கும்போது அங்கே அடிப்படையான அன்பும் காதலும் காணாமல் போகிறது.

குறை சொல்லிப் பழகுகிறவர்களுக்கு அதுவே ஒரு பழக்கமாகவும் மாறி விடுகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதிக்க மனப்பான்மை அதிகரிக்கிறது. இன்னும் பல திருமணங்களில் தன் துணை எப்படி உடை அணிய வேண்டும், எப்படி ஹேர் ஸ்டைல் செய்து கொள்ள வேண்டும், என்ன சமைக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், ஓய்வு நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும், உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும், உடலமைப்பை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், வேலைக்குப் போகலாமா, கூடாதா? அப்படிப் போனால் எப்படிப்பட்ட வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாருடன் நட்பு பாராட்ட வேண்டும் என்கிற வரை ஒவ்வொன்றுக்கும் வரையறைகள் விதிக்கிற கொடுமையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இடைவெளி விடாமல் துணையைப் பற்றி ஏதேனும் ஒரு குறையும் புகாரும் விமர்சனமும் சொல்லிக் கொண்டிருப்பதன் மூலம், துணை தன் தலையின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆட்டுவிப்பதைத் தவிர்க்கலாம் என்கிற நினைப்பு.ஒரு பெண் தனது காதலர் அல்லது கணவருக்காக சகல விதங்களிலும் விஷயங்களிலும் தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறாள் என்றால் அவளுக்கு தன்னம்பிக்கையோ, ஆழமான ஆளுமையோ இல்லை என அர்த்தம். தன்னைப் பற்றிய சுயமதிப்பீடே இல்லாமல், தனது இந்தச் செய்கையின் மூலம் சிறுக சிறுகத் தன்னைத் தொலைக்கவும் துணிகிறாள் என்றே அர்த்தம்.

விட்டுக் கொடுப்பது என்பது மகத்தான மனித குணம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அந்த குணத்தை வாழ்க்கைத்துணை தனக்கான ஆயுதமாகக் கையில் எடுப்பதை அனுமதிப்பதும் கூடாது. எப்போதும் ஒருவரே விட்டுக் கொடுக்கிற வாழ்க்கையில் துளிக்கூட காதல் இருக்காது. ஒருவரது சுய விருப்பு வெறுப்புகளுக்காக இன்னொருவரை மாற்ற நினைப்பது மிகப்பெரிய துரோகம். திருமண உறவில் இருவரில் ஒருவர் கை ஓங்கியிருந்தாலே பிரச்னைதான். இருவரும் சம அந்தஸ்தில் இருப்பதுதான் சிறந்தது. பெண்களைப் பொறுத்தவரை தன்னை விட அழகான, அதிகம் படித்த, அதிகம் சம்பாதிக்கிற, வயதான நபரையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைப்பார்கள்.

அதிக அனுபவசாலிகளாகவும் அதிக புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களாகவும் இருக்கிற ஒருவரால் துணையை தனக்கு இணையாக நடத்த முடிவதில்லை. எல்லா விஷயங்களிலும் தனக்கு இணையாக இருக்கும் துணையை மணக்கும் போது இத்தகைய பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. இது நமக்கு மட்டுமல்ல… உலகம் முழுவதிலும் காணப்படுகிற உண்மை. சமம் அற்ற இணையானது, திருமண பந்தத்தை சுமுகமாக கொண்டு செல்வதில்லை. சக்திவாய்ந்த கணவன் அல்லது மனைவி, தன் துணையிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பார்.

அதுவே இருவரும் சமம் என நம்புகிற பட்சத்தில் துணையின் கருத்துகளும் முக்கியமாகப் படும். துணைக்கு மரியாதை கொடுக்க வேண்டியதன் அவசியம் தெரிந்திருக்கும். இருவரிடமும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போது, அந்த உறவானது உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வன்முறை செயல்களில் ஈடுபடவைக்க அடிகோலும். மேலோட்டமாகப் பார்க்கும் போது கணவனுக்கு மனைவியோ, மனைவிக்கு கணவனோ சொல்கிற கட்டுப்பாடுகளும், விமர்சனங்களும் ஏதோ அவர்களுக்குப் பாடம் எடுக்கிற மாதிரித் தெரியலாம். தொடர்ச்சியாக அதை சந்திக்கிறவர்களுக்குத்தான் அது எத்தனை பெரிய உணர்வுப் போராட்டம் என்பதும், அதன் வலியும் தெரியும்.

தொடர்ந்து இப்படி துணையின் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகும் போது தான் நல்ல மனிதர் இல்லையோ என்கிற உணர்வைக் கொடுக்கும். மனைவிக்கு அல்லது கணவருக்கு கற்றுக் கொடுக்கிற தொனியில் சொல்லப்படுகிற சில விஷயங்கள், அவர்கள் எதற்கும் உபயோகமற்றவர்கள் என்ற எண்ணத்துக்கு ஆளாக்கும். இதை சகித்துக் கொள்ளப் பழகும் பட்சத்தில் சுயம் இழப்பது என்பது சீக்கிரமே நடப்பதுடன், வாழ்க்கையின் மீது ஒரு குழப்பத்தையும், பயத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் உருவாக்கி விடும்.

கணவன், மனைவியில் இருவரில் யார் கை ஓங்கியிருக்கிறதோ, அவர் எடுக்கும் முடிவுகளே குடும்பத்தில் இறுதியாக இருக்கும். அதை ஏற்றுக் கொள்வது துணையின் தலையெழுத்து என்றும் எதிர்த்தால் அந்த உறவுக்கே பங்கம் வரலாம் என்கிற பயமுறுத்தலும் எதிரே நிற்கும். கணவனோ, மனைவியோ தன் துணையைப் பற்றி காரணங்களே இல்லாமல் அதிகபட்ச எதிர்பார்ப்புகளை முன்வைப்பார்கள். அவர்களது தேவைகளில் நியாயம் இருக்காது. நேர்மை இருக்காது.

எப்போதும் எதையாவது பற்றி குறை சொல்லிக் கொண்டிருப்பது அவர்களது சுபாவமாகவே மாறியிருக்கும். பெரும்பாலும் மனைவியானவள், ஆரம்ப கட்டத்தில் இவற்றை எல்லாம் தன் மீது சுமத்தப்படுகிற பழிகள், தவறான எதிர்பார்ப்புகள் என்று உணராமல், உண்மைதான் போல என்றே நினைத்துக் கொள்வாள். எல்லாம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு தன் மீது வேண்டுமென்றே சுமத்தப்பட்ட பழிகள் என்பதை உணர்வதற்குள் அவள் தன்னைத் தொலைத்து விட்டு வெகுதூரம் வந்திருப்பாள். துணையைப் பற்றி தவறான விமர்சனங்களை முன் வைப்பது, கெட்ட வார்த்தைகளில் அநாகரிகமாக திட்டுவது, துணையின் உணர்வுகளைக் காயப்படுத்துகிற மாதிரிப் பேசுவது போன்றவை கூட இந்த அடக்குமுறையில் அடக்கம்தான்.

அது போக, துணையின் குடும்பத்தாரைப் பற்றி குறை சொல்வதும், அநாகரிகமாக விமர்சனம் செய்வதும், நீதான் என் வாழ்க்கையையே நாசமாக்கினே… உன்னாலதான் எனக்கு எல்லாமே தப்புத் தப்பா நடக்குது…’ என்று பழி போடுவதும்கூட இத்தகைய ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடுகளே. கடைசியாக உணர்வுரீதியான மிரட்டலை ஆயுதமாக எடுப்பது.

உதாரணத்துக்கு அம்மா சென்டிமென்ட்டை காரணம் காட்டி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவது, துணையின் மீது சுமத்திய விமர்சனங்களுடனும், குற்றச்சாட்டுக்களுடனும் அவரை அப்படியே வாழக் கட்டாயப்படுத்துவது, விவாகரத்து செய்வதாக மிரட்டுவது, என் மீது காதல் இருந்தால்… அன்பிருந்தால் நான் சொல்வதைக் கேள்’ எனச் சொல்லிச் சொல்லியே, துணைக்குத் துளியும் விருப்பமில்லாத செயல்களைச் செய்ய வைப்பது எல்லாம் இந்த ரகம்தான்.

இருவரும் சமம் எனக் கருதப்படாத உறவுகள் ஆரோக்கியமானவை அல்ல. அது ஒருவகையான கட்டுப்பாடு. அதை ஆரம்பத்திலேயே அனுமதிக்கக்கூடாது. முதலிலேயே அதை எதிர்ப்பதுதான் நீண்ட கால காதலுடன் கூடிய வாழ்க்கைக்கு வழிகாட்டும். அந்த இடத்தில் கொஞ்சம் இடறி, நம் மனைவிதானே… நம் கணவர்தானே… அவருக்குச் செய்யாமல் வேறு யாருக்கு செய்யப் போகிறோம்… அவர் சந்தோஷத்தைவிட வேறென்ன பெரிதாக இருந்துவிடப் போகிறது என நினைக்க ஆரம்பித்தால்… பிறகு உங்கள் வாழ்க்கையை யாராலும் காப்பாற்ற முடியாது.Post a Comment

Protected by WP Anti Spam