By 20 April 2021 0 Comments

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!! (மகளிர் பக்கம்)

நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். என் துணை அதைக் கவனிப்பதில்லை…’கணவன்-மனைவி பந்தத்தை வளர்ப்பதில் தகவல் தொடர்புக்கு மிக முக்கிய பங்குண்டு. உண்மையைச் சொல்கிறேன் என்கிற எண்ணத்தில் மனதில் உள்ள உணர்வுகளை எல்லாம் அப்படியே வெளிப்படுத்துவது, உறவை பலப்படுத்துவதற்குப் பதில் எதிர்மறையாகவே செயல்படும். ஆங்கிலத்தில் இதை Brutally honest என்கிறோம்.

முதலில் மனைவி பேசுவதைக் கணவர் கேட்பார்.பிறகு கணவர் பேசுவதை மனைவி கேட்பார். பிறகு இருவரும் பேசுவதை ஊரே கேட்கும்’ என நகைச்சுவையாக சொல்லிக் கேட்டிருப்போம். பெரும்பாலான திருமண உறவுகளில் பிரச்னை எழக் காரணம் என்ன தெரியுமா? சத்தமாகவும் தெளிவாகவும் பேசுவது!பேச்சு இரண்டு வகைப்படும். உபயோகமான பேச்சு மற்றும் ஆபத்தான பேச்சு.
மனதில் உள்ளதை அப்படியே பேசுவதாக நினைத்துக் கொண்டு நேர்மையாகப் பேசுகிற Brutally honest பேச்சு தேவையில்லை. அத்தகைய பேச்சில் நேர்மையைவிட எரிச்சல், கோபம், வெறுப்பு போன்றவையே அதிகம் வெளிப்படும். `நீ உருப்படவே மாட்டே’ என குழந்தைகளிடம் கடிந்து கொள்வதுகூட இந்த வகைதான். `நான் நல்லதுக்குத்தானே சொல்றேன்’ என நியாயம் கற்பித்தாலும், அது சரியானதல்ல.

கணவன்-மனைவி இருவரும் தங்கள் மனதில் உள்ளவற்றை சொல்வதில் பிரச்னை இல்லை. சொல்லும் முறையில்தான் பிரச்னை. நெகட்டிவாக பேசும் போது, துணையின் ரியாக்‌ஷனும் நெகட்டி வாகவே இருக்கும். அது அவர்களுக்கு இடையில் எப்போதும் ஒரு நெகட்டிவ் சூழலை நிலவச் செய்யும். நாளுக்கு நாள் இது அதிகரிக்கும். இருவரும் மனதளவில் ரொம்பவே காயப்படுவார்கள். இது திடீரென ஒருவருக்கொருவர் பேச்சு வார்த்தையையே நிறுத்திக் கொள்கிற அளவுக்குக் கொண்டு போகும். திடீரென இதை மாற்றி, பாசிட்டிவ் சூழலை உருவாக்குவது என்பது சிரமம்.

வெளியில் இருந்து யாராவது இவர்கள் இருவரையும் சரிபார்த்து, சூழலை சரிப்படுத்த முடியும். மனநல ஆலோசகர் போன்றோரின் வழிகாட்டுதல் உதவலாம். இதைத் தவிர்த்து ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழ்வதைவிட, பிரிவதே மேல் என யோசிக்க வைக்கும். நெகட்டிவ் சூழலை உருவாக்கியதில் நமது பங்கு என்ன என்று பார்த்து, அதை மாற்ற இருவரும் முயற்சிக்க வேண்டும். இருவருக்குமான உரையாடல், அன்பாக, மரியாதையாக, அர்த்தமுள்ளதாக, காயப்படுத்தாததாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், பல தம்பதியருக்கும் இது சாத்தியப்
படுவதில்லை. ஏன்?

பிறந்தது முதல் அதீத கோபத்துடன் வளர்கிறோம். அடுத்தவரைக் கிண்டல், கேலி செய்து ரசிப்பதை தவறென அறியாமல் இயல்பாகச் செய்கிறோம். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் கட்டுப்படுத்தாவிட்டால், இது போன்ற நடத்தைகள் ஏற்படுத்தும் காயங்கள் ஆழமான வடுக்களாக மாறும்.பேசும் போது துணையின் மீது பழியைப் போடும் வகையில், அதாவது,

நீ இப்படிப் பண்ணினதுதான் பிரச்னைக்குக் காரணம்’ என்று பேசாமல், `நான் இப்படி ஃபீல் பண்றேன்…’ என உங்களை
பிரதானப்படுத்தி உரையாடலைத் தொடங்குங்கள். உரையாடல் சரியாக அமையவும் நெகட்டிவ் சூழல் நிலவாமல் தடுக்கவும் இருவருக்கும் சில திறமைகள் தேவைப்படுகின்றன.

இருவரில் ஒருவர் நெகட்டிவாக பேசும் போது இன்னொருவருக்கு கோபம் வருவது சகஜம்தான். பாய்ந்து கொண்டு எதிர்த்துப் பேசத் துடிப்பார்கள்தான். ஆனால், அதைத் தவிர்த்து துணை பேசுவதை முழுமையாகக் கேளுங்கள். எதிர்த்துப் பேச வேண்டாம். அப்படிக் கேட்டாலே பிரச்னையின் தீவிரம் பாதியாகக் குறையும். துணையின் மன பாரம் இறங்கும்.

உரையாடலின் போது உங்கள் துணை என்ன பேசினார் என்பதை அவரது வரிகளிலேயே திரும்பச் சொல்லி, சரிபாருங்கள். உண்மையிலேயே அவர் சொன்னதற்கு அதுதான் அர்த்தமா அல்லது நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்களா எனப் பாருங்கள்.

துணையின் பேச்சு சரியா, தவறா என்கிற விவாதத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அதற்கு முன் அவரது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். புள்ளிவிவரங்களைவிட, உணர்வுகளே முக்கியம். உங்கள் துணை காயப்பட்டிருந்தால் அதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் சொல்வதை அக்கறையோடு கவனித்து, அதை அவருக்குத் திரும்பச் சொல்லிக் காட்டி,

இதைத்தானே சொல்ல வரே…’ எனச் சொன்னாலே 90 சதவிகித பிரச்னை தீர்ந்த மாதிரிதான். உரையாடலின் போது, எப்போதோ முடிந்து போன பழைய விஷயங்களை இழுக்க வேண்டாம். திருமணமான புதிதில் நடந்த சம்பவங்களில் தொடங்கி, லேட்டஸ்ட் விஷயங்கள் வரை எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்க ஏதோ ஒன்றை நினைவில் வைத்திருந்து தேடித் தொகுத்து சண்டை போட வேண்டாம்.அதே போன்று பொத்தாம் பொதுவாக ஒரு முடிவுக்கு வருவதும் தவறு. உதாரணத்துக்கு ஒருநாள் வேலையில் இருந்து தாமதமாக வந்தால், உனக்கு லேட்டா வர்றதே பொழப்பு’ என முடிவுக்கு வர வேண்டாம்.

கணவன்-மனைவி சண்டைகளுக்கு முக்கிய காரணமே எதையும் வேண்டுகோளாகக் கேட்காமல் கட்டளையாகச் சொல்வதுதான். அதைத் தவிர்த்து, பணிவான அணுகுமுறையைக் கையாள வேண்டியது முக்கியம். துணையைப் பற்றி நீங்களாக ஒரு முன்முடிவுக்கு வராதீர்கள். நீ இப்படித்தான்னு எனக்குத் தெரியும்…’ என்பதும் துணை செய்கிற வேலைகளுக்கு ஒரு நோக்கம் கற்பிப்பதும் மிகத் தவறு. துணையின் மனதைப் படிக்கிறவராக நடந்து கொள்வது ஆபத்தானதும்கூட. எனவே, பேசும் போது உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் மதிப்பளித்து பேசுவது இருவருக்கும் இடையிலான நெருக்கம் கூட்டும்.

எல்லா பிரச்னைகளையுமே தீர்த்து விட முடியும் என நம்ப வேண்டாம். எந்த விஷயங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பார்த்து, அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். திருமணத்துக்கு முன்பேகூட இவற்றை எல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பல திருமணங்களில் இருவருக்கும் இடையில் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் இருக்கும்.

ஆனாலும், அவர்களது திருமண வாழ்க்கை நன்றாகவே நகரும். இன்னும் சிலரோ மிகச்சிறிய விஷயங்களைக் கூடப் பேசித் தீர்க்காமல் ஊதிப் பெரிதாக்கி, ஒவ்வொன்றுக்கும் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். கணவன்-மனைவி இருவரின் நம்பிக்கைகள், நடத்தைகள், அணுகுமுறைகள் இவற்றில் யாருடையது சரி, யாருடையது தவறு என ஒரு முடிவெடுப்பது தேவையற்றது. வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வதுதான் சரியானது.Post a Comment

Protected by WP Anti Spam