By 25 April 2021 0 Comments

உல்லாச உஷார்!! (மகளிர் பக்கம்)

கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்
உறைமீறி நோய்சேர்வ துண்டே -உறை
நம்பிக் கம்மாக் கரையோ கடற்கரையோ
தேடாமல் சும்மா இருத்தல் சுகம்! – வைரமுத்து

ராகேஷ் கிருஷ்ணன் திருமணமானவன். அலுவலக வேலை தொடர்பாக மாதத்தில் பாதி நாட்கள் வெளிநாடுகளுக்குச் செல்வான். இளம் மனைவி சவிதாவுடன் இனிமையான இல்லறம்… எக்கச்சக்க சம்பளம்… இப்படி அற்புதமாக நகர்ந்து கொண்டிருந்தது வாழ்க்கை. சவிதா கர்ப்பமானாள். மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. ரத்தப் பரிசோதனையில் சவிதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது… ‘ஹெச்.ஐ.வி. பாசிடிவ்’ என்றது ரிப்போர்ட். டாக்டர், ராகேஷை அழைத்தார். அவனையும் ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார்… அவனுக்கும் ஹெச்.ஐ.வி. பாசிடிவ். விசாரித்ததில் ராகேஷ் பேங்காங் போகிறபோதெல்லாம் பாலியல் தொழிலாளிகளுடன் உடலுறவு வைத்துக் கொண்டதை ஒப்புக்கொண்டான்.

‘யாரோ தவறு செய்ய, வேறொருவர் பலிகடா’ என்பதைப் போல, அவன் மூலமாக சவிதாவுக்குத் தொற்றியிருந்தது ஹெச்.ஐ.வி. ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ்… எய்ட்ஸ் நோயின் முதல் அறிகுறி. Acquired Immuno Deficiency Syndrome என்பதன் சுருக்கமே எய்ட்ஸ் (AIDS). Human Immuno Deficiency Virus (HIV) என்ற வைரஸால்தான் எய்ட்ஸ் நோய் ஏற்படுகிறது. இந்த வைரஸ், செல்களில் உள்ள நியூக்கிளியசில் போய் உட்கார்ந்து ஆர்.என்.ஏ.வை தனக்கு ஏற்றாற்போல வேலை செய்ய வைக்கிறது. உடலின் எதிர்ப்புச்சக்தி பாதிப்படைகிறது. ஹெச்.ஐ.வி.யின் அமைப்பும் நிலையானதாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கிறது.

இதனால் அதை அழிப்பதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதும் தாமதமாகிறது. ஹெச்.ஐ.வி.யை அழிக்க மருந்துகள் இல்லை என்பதே மக்களின் நிரந்தர பயம். இந்த வைரஸ் எச்சில், தாய்ப்பால், ஜனன உறுப்புகளின் திரவங்கள், சுத்தமில்லாத ஊசிகள், ரத்தம் ஏற்றுவதன் மூலம், சுத்தமில்லாத சவரக் கத்திகள் பயன்படுத்துவதால் பரவக்கூடியது. சுத்திகரிக்கப்படாத அறுவை சிகிச்சை உபகரணங்கள், பல் மருத்துவ உபகரணங்கள் வழியாகவும் ஹெச்.ஐ.வி. வைரஸ் பரவும்… ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழிக்க ஆரம்பிக்கும். வெளியில் எந்தமாற்றமும் தெரியாது. அதனால் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ‘எலிசா’ பரிசோதனையை செய்து ஹெச்.ஐ.வி.உள்ளதா என்று பார்ப்பார்கள். இதுவும் துல்லியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

3 மாதங்கள் கழித்து மறுபடியும் ‘எலிசா’ டெஸ்ட் செய்து உறுதி செய்ய வேண்டும். ‘வெஸ்டர்ன் பிளாட்’ (Western blot) என்னும் சோதனையிலும் ஹெச்.ஐ.வி.யை கண்டறியலாம். ‘பாலிமரைஸ் செயின் ரியாக்ஷன்’ சோதனையில் 72 மணி நேரத்துக்குள் கண்டறிந்து விடலாம். ஹெச்.ஐ.வி. தாக்கினால் உடனடியாக ஒரு நபர் இறந்துவிட மாட்டார். இதில் 3 நிலைகள் உள்ளன. Persistent Generalized Lymphadenopathy PGL என்பது முதல் நிலை. இதில் உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள்விரிவடைய ஆரம்பிக்கும். இந்த நிலையில் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பெரிய பாதிப்புகள் இருக்காது.

‘எய்ட்ஸ் ரிலேடட் காம்ப்ளக்ஸ்’ என்பது இரண்டாவது நிலை. இதில் விடாத காய்ச்சல், தலைவலி, குளிர் ஜுரம், வயிற்றுப்போக்கு, சரும நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உடலின் எதிர்ப்புச்சக்தி மிகவும் குறைந்திருக்கும். இறுதி நிலையே எய்ட்ஸ்! ஹெச்.ஐ.வி. இருப்பதாக தெரிந்ததுமே முறையான மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். டிஸ்போசபிள் ஊசிகளை பயன்படுத்த வேண்டும். உடலுறவுக்கு ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும். பெண்களுக்கென்று பெண்ணுறை இப்போது கிடைக்கிறது. பாதுகாப்பான உடலுறவு கொள்வது அவசியம். ஹெச்.ஐ.வி. கணவனுக்கோ, மனைவிக்கோ இருந்தால் வாய்வழிப் புணர்ச்சி கூடாது. அப்படிச் செய்வதானால் டென்டல் கம்களை பயன்படுத்த வேண்டும்.

சலூனிலும் வீட்டிலும் புதிய பிளேடுகளை மட்டுமே சவரத்துக்குப் பயன்படுத்த வேண்டும். ரத்தம் கொடுக்கும் போதும் பெறும் போதும் ஹெச்.ஐ.வி. இல்லை என்பதைப் பரிசோதிப்பது அவசியம். ஹெச்.ஐ.வி. உள்ள தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேல், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று வாழ்பவர்களுக்கு எய்ட்ஸ் பயம் தேவையில்லை.Post a Comment

Protected by WP Anti Spam