குழந்தைகள் ஜாக்கிரதை! வீடியோ கேம் விபரீதம்!! (மருத்துவம்)

Read Time:18 Minute, 13 Second

உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறது ப்ளூவேல் எனும் மரண விளையாட்டு. பள்ளிக்குச் செல்லும் குழந்தை முதல் வேலைக்குச் செல்லும் இளையோர் வரை ஒரு பெரிய கூட்டமே இந்தக் கொலைகார விளையாட்டின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க; மறுபுறம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தவிக்கிறார்கள் பெற்றோர்கள். அரசுகளோ இந்த நாசகார விளையாட்டை தடை செய்யும் வழி அறியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் அலறிக்கொண்டிருக்கின்றன. மொத்த சமூகமும் பீதியில் உறைந்து கைபிசைந்து நிற்கிறது. ‘மனிதர்கள் விளையாட்டைக் கண்டு பயப்படும் காலம் ஒன்று வரும்’ என்று நம் தாத்தாக்களிடம் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் விளையாட்டு என்பது வேலை செய்த களைப்பை போக்கவும்; உடலையும் மனதையும் புத்துணர்வாக்கவுமே பயன்பட்டன. அதனால்தான் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் (Indoor Games) முதல் ஓடியாடி விளையாடும் விளையாட்டுகள் (Outdoor games) வரை பலவிதமான விளையாட்டுகளையும் கண்டுபிடித்துக் களிந்திருந்தார்கள் நம் முன்னோர்.
வீடியோ கேம்: அன்றும் இன்றும்

இந்த டெக்னாலஜி யுகம் நமக்குக் கொடுத்த சாபங்களில் ஒன்று வீடியோ கேம். எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளில் சிறிய, எளிய டாஸ்குகளை முடிக்கச் சொல்லி அடுத்தடுத்த லெவல்களுக்குக் கொண்டு செல்லும் வீடியோ கேம்கள் எல்லாம் ஹைதர் காலத்துப் பழசு. இன்டர்நெட்டில் பலர் சேர்ந்து ரோல் ப்ளே செய்து விளையாடும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆன்லைன் கேம்கள்தான் இந்த தலைமுறையின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அதிலும் சில விளையாட்டுக்கள் அதை விளையாடுபவர்களின் முழு வாழ்வையும் வளைத்துப்போடும்படி சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும், சில விளையாட்டுகளோ உங்கள் உயிரையே விலையாகக் கேட்கக்கூடிய அளவுக்கு சைக்கோதனமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். (அப்படியான சைக்கோதனமான விளையாட்டுதான் ப்ளூவேல்)

வீடியோ கேம்கள் பலவிதம்

வீடியோ கேம் என்று பொதுவாக சொன்னாலும் இதில் பலவகை உள்ளன. அடிப்படையாக வீடியோ கேம்களை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும். முதல்வகை கேம்கள் தனி நபராக விளையாடக்கூடியவை. இவற்றில் எதிரில் விளையாடுபவர் என்று யாரும் இருக்க மாட்டார். பெரும்பாலும் இந்த விளையாட்டுகள் முன்பே முற்றிலுமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்பட்டுள்ள சவால்களை ஒவ்வொன்றாய் முடிக்கும்போது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அடுத்த லெவல் விளையாட அனுமதிக்கப்படுவீர்கள்.

இன்னொருவகை விளையாட்டுகள் விர்ச்சுவல் ரியாலிட்டி பண்பு கொண்டவை. பலர் சேர்ந்து விளையாடும்படியாக இருக்கும். இதை ஆன்லைனில்தான் விளையாட முடியும். இதை Massively Multiplayer Online Role-playing Games (MMORG) என்பார்கள். இதில் உங்களுக்கு என ரோல், கேரக்டர், செய்ய வேண்டிய வேலை, செய்ய வேண்டிய முறை ஆகியவை சொல்லப்படும். நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். சிறப்பாக செய்தால் அடுத்த லெவல். ஒவ்வொரு லெவலிலும் முன்பைவிட கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கும்.

போரை அடிப்படையாகக் கொண்ட வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகள், கராத்தே, குங்ஃபூ போன்ற மார்ஷியல் ஆர்ட் விளையாட்டுகள், விண்வெளிப் பயணம் செய்யும் ஸ்பேல் ட்ராவல் விளையாட்டுகள், டேரட் கார்டுகளைக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டுகள், சினிமா நாயகர்கள், கார்ட்டுகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகளின் பிங் பாங், பம்பர் விளையாட்டுகள், நகையைத் தேடுதல், இளவரசியை மீட்டுக்கொண்டு வருதல், கொடூர மிருகங்களுடன் போரிடுதல் போன்ற சாகச விளையாட்டுகள், கார் ரேஸ், பைக் ரேஸ், சைக்கிள் ரேஸ், சுடோகு போன்ற எண் விளையாட்டுகள் என ஆயிரக்கணக்கான விளையாட்டுகள் இன்று இணையத்தில் கிடைக்கின்றன. இதில், சில விளையாட்டுகல் ஆபத்தற்றவை. இன்னும் சொல்லப்போனால் எப்போதாவது மனம் சோர்ந்திருக்கும் நேரத்தில் விளையாடினால் நம்மை உற்சாகப்படுத்துபவை. நமது மூளையின் செயல்திறனை மேம்படுத்துவை. சுடோகு, செஸ் போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால், பெரும்பாலான விளையாட்டுகள் வெறும் நேரங்கடத்திகள் மட்டுமே. மேலும், இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நாம் அந்த விளையாட்டுக்கு அடிமையாகிறோம்.

யார் விளையாடுகிறார்கள்?

வீடியோ கேம்களுக்கு பால் பேதமோ, வயது வித்தியாசமோ இல்லை. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பால் பேதமின்றி அனைவருமே விளையாடும்படியாய்தான் பல விளையாட்டுகள் உள்ளன. ஆனால், சில குறிப்பிட்ட விளையாட்டுகள் அந்தந்த பருவத்தினரை குறி வைத்து உருவாக்கப்படுகின்றன. பொதுவாக, 8 வயது முதல் 24 வயது வரை உள்ள பருவத்தினர் வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

வீடியோ கேம் அடிக்‌ஷன்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். மனித மனம் ஒரு குறிப்பிட்ட சூழலில் தொடர்ந்து இருக்கும்போது எளிதாக அதற்குப் பழக்கப்படும் குணம் உடையது. அதனால்தான் மனிதனால் அதிகப் பனி பொழியும் ஆர்ட்டிக் பகுதியிலும் வசிக்க முடிகிறது. வெயில் கொடூரமாய் கொல்லும் பாலைவனங்களிலும் வசிக்க முடிகிறது. MMORG போன்ற விர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடும்போது ஒருகட்டத்தில் நம் மூளை அதற்கு அடிமையாகிவிடுகிறது. அந்த விளையாட்டின் நிபந்தனைகள் எதுவாக இருந்தாலும் செய்ய தயாராகிறோம். கொலை முதல் தற்கொலை வரை சகல பாதகங்களுக்கும் வழிவகுக்கும் மிக மோசமான மனநிலை இது. வீடியோ கேம் விளையடாமல் இருக்க முடியாது என்கிற நிலைக்குச் செல்லும்போது அதை வீடியோ கேம் அடிக்‌ஷன் என்கிறோம். இது ஒரு தீவிரமான உளவியல் சிக்கல். முறையான சிகிச்சை மூலமே இந்தப் பழக்கத்திலிருந்து ஒருவரால் விடுபட முடியும். போதை அடிமைகள், மது அடிமைகள் போல சப்ஸ்டென்ஸ் அடிக்‌ஷன் இது இல்லை என்றாலும் மூளையில் சுரக்கும் ரசாயன மாற்றங்கள் பிற அடிக்‌ஷன்கள் போலவே இருக்கும்.

வீடியோகேம் விளையாடும் போது
நமக்குள் என்ன நிகழ்கிறது?

நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சில ஹார்மோன் சுரப்புகளே காரணம். அதாவது நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது டோபமைன் போன்ற ஹார்மோன்கள் நம் உடலில் சுரக்கின்றன. நமது மூளையையும் உடலையும் சோர்வு நீங்கி உற்சாகமாக வைத்திருக்க டோபமைன் ஹார்மோன் மிகவும் அவசியம். வீடியோ கேம் விளையாடும்போது ஒவ்வொரு லெவலின் வெற்றியின்போதும் நாம் உற்சாகமாகிறோம். உடலில் தன்னியல்பாக டோபமைன் சுரக்கிறது. இந்த டோபமைன் சுரக்க சுரக்க மூளை அந்த சுரப்புக்காக அதை மீண்டும் மீண்டும் விளையாடச்செய்யும். இப்படி தொடர்ந்து விளையாண்டுகொண்டே இருக்கும்போது ஒருகட்டத்தில் அது விளையாண்டால்தான் டோபமைன் சுரப்பே சிறப்பாக நிகழும் என்கிற நிலைக்குச் சென்றுவிடுவோம்.

இது வீடியோகேம் அடிக்‌ஷனின் உச்சகட்ட நிலை. பொதுவாக, இளம் வயதினர் உடலில் முதிராத டெஸ்டோஸ்டீரன் உற்பத்தி அதிகமாக இருக்கும். வீடியோ கேம் விளையாட்டுகள் இந்த டெஸ்டோஸ்டீரன் உற்பத்தியை வெகுவாகத் தூண்டிவிடுவதாக சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. ஆணின் உடலில் இனப்பெருக்க உற்பத்தியைப் பெருகச்செய்வது மட்டும் அல்ல; மனித உடலுக்கான மூர்க்கத்தைத் தூண்டுவதும் டெஸ்டோஸ்‌டீரானின் வேலையே. எனவே, தொடர்ந்து வீடியோ கேம் விளையாடும்போது மூர்கம் அதிகரிப்பதும் தடுக்க முடியாததாகிறது.

வீடியோ கேம் அடிக்‌ஷன் அறிகுறிகள்

அதே சிந்தனையாய் இருப்பது: வீடியோ கேம் விளையாடும்போது மட்டும் அல்லாமல் விளையாடாத நேரத்திலும் விளையாட்டைப் பற்றிய சிந்தனையாகவே இருப்பது நாம் அதற்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறோம் என்பதன் முக்கியமான அறிகுறி.தவிப்பு: தொடர்ந்து குறிப்பிட்ட நேரம் விளையாடவில்லை எனில் பதற்றம், எரிச்சல், கோபம், வெறுப்பு, சோகம் ஆகிய உணர்வுகளுக்கு ஆளாவது. தாங்கவியலாமை: ஒவ்வொரு முறை விளையாடும்போதும் விளையாடுவதற்கான நேரத்தை அதிகரித்துக்கொண்டே போவது. இன்னும் இன்னும் என அதில் சலிக்காமல் ஈடுபட்டுக்கொண்டேயிருப்பது.

தவிர்க்கவியலாமை: விளையாடும் நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று மனதளவில் தோன்றினாலும் அதை செயல்படுத்த இயலாமல் தடுமாறுவது. தொடர்ந்து விளையாண்டுகொண்டே இருப்பது.மற்ற செயல்பாடுகள் இல்லாமல் போவது: தினசரி செய்ய வேண்டிய வழக்கமான பணிகளைக் குறைத்துக்கொள்வது, செய்யாமல் இருப்பது, தள்ளிப்போடுவது அந்த நேரத்தில் வீடியோ கேம் விளையாண்டு கொண்டிருப்பது.விளைவுகள் பற்றி கவலையற்று இருப்பது: தூக்கம் பாதித்தாலும், வேலை பாதித்தாலும், வருமானம் பாதித்தாலும், உறவுகள் பாதித்தாலும் இன்னமும் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது. சிலர் அதை உணர்வார்கள். ஆனால், விடுபட முடியாமல் தவிர்ப்பார்கள்.

ஒளிப்பது, மறைப்பது: வீடியோ கேம் விளையாடுகிறீர்கள் என்பதை குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து மறைப்பது. அவர்கள் பார்க்காதபடி நடந்துகொள்வது. வீடியோகேம் பற்றி யாராவது உங்களிடம் பேசினால் அந்தப் பேச்சை தவிர்ப்பது; சண்டையிடுவது; கோபப்படுவது. ஒளிவதற்கான இடமாக வீடியோ கேமைப் பயன்படுத்துவது: நடைமுறை வாழ்வில் எவ்வளவோ பிரச்னைகள் வரும். வீடியோ கேம் அடிக்‌ஷன் இருப்பவர்கள் தங்கள் பிரச்சனையை வீடியோகேம் விளையாடுவதன் மூலம் போலியாய் மறக்க முயல்வார்கள். அந்தப் பிரச்சனையை கண்ணெடுத்தும் பாராமல் விளையாட்டில் மூழ்கிப்போக விரும்புவார்கள்.

வாய்ப்புகளைத் தவிர்ப்பது: புதிய நண்பர்கள், புதிய மனிதர்களைச் சந்திப்பது, உரையாடுவது, புதிய வேலைகள், புதிய பொறுப்புகளை ஏற்க மறுப்பது என எல்லா வாய்ப்புகளையும் தவிர்ப்பது.தனிமை: யாரிடமும் பேசாமல் தனித்து ஒதுங்குவது, தனியாக இருப்பதை விரும்புவது, சிரிக்க மறந்துபோவது, எப்போதும் வருத்தமாக முகத்தை வைத்துக்கொண்டிருப்பது.வீடியோகேமும் குழந்தைகளும்குழந்தைகளும் வளரிளம் பருவத்தினரும் வீடியோகேமால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு என உடற்பயிற்சிகளை எந்த மருத்துவரும் பரிந்துரைக்க மாட்டார். ஏனெனில், ஓடியாடி விளையாடும் விளையாட்டுதான் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி. அவர்களின் உடல் விளையாடுவதன் மூலமே வளர்கிறது. அந்த வயதில் தனக்குத் தேவையான வளர்சிதை மாற்றத்தைப் பெறுகிறது. குழந்தைகளிடமும் சிறுவர்களிடமும் வீடியோகேம் பழக்கம் ஏற்படும்போது அவர்கள் ஓடியாடி விளையாடுவதற்கான நேரம் இல்லாமலாகிறது. இதனால், அவர்களின் உடலின் இயல்பான வளர்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், தொடர்ந்து வீடியோகேம் விளையாடுவதால் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களும் அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

மேலும், ஓடியாடி விளையாடாததால் உடல் உழைப்பு இல்லாமல் ஒபிஸிட்டி எனும் உடற்பருமன் பிரச்னை ஏற்படுகிறது. நமது நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குழந்தைகளுக்கான ஒபிஸிட்டி விகிதம் கடந்த இரு தசமங்களில் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு வரை பல்வேறு உயிர் பறிக்கும் பிரச்னைகளுக்கு உடல் பருமன்தான் தலைவாசல் என்பதை மறந்துவிட வேண்டாம். குழந்தைகளிடம் வீடியோகேம் விளையாடும் பழக்கம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதுதான் நல்லது. ஏற்கெனவே விளையாடும் பழக்கம் உள்ள குழந்தைகளின் விளையாடும் நேரத்தைக் கட்டுப்படுத்தலாம். தினசரி ஒரு மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள் அதற்கு அடிமையாவதற்கான

வாய்ப்பு அதிகம்.
சிகிச்சை என்ன?

பிற அடிக்‌ஷன்களுக்குத் தருவதைப் போன்ற Cognitive Behaviral Therapy தான் இதற்கும் தீர்வு. மனநல மருத்துவரிடம் சென்று கவுன்சலிங் செய்வது நல்ல பலனைத் தரும். அவசியம் எனில் தேவை கருதி சிலருக்கு மூட் ஸ்டெப்லைஸர்கள் போன்ற மாத்திரைகள் தரப்படும். இதைத் தவிர வீடியோகேம் அடிக்‌ஷனுக்கு என 12 ஸ்டெப் புரோகிராம் ஒன்று உள்ளது. தொடர்ந்து மருத்துவரிடம் சிகிச்சை பெறும்போது இதில் இருந்து மெல்ல விடுபடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை பாதிக்கும் பெற்றோரின் சண்டைகள்!! (மருத்துவம்)
Next post “பைத்தியமா உனக்கு..” Rajini-க்கு Kamal கொடுத்த Advice- K.S.Ravikumar Reveals!! (வீடியோ)