By 1 May 2021 0 Comments

தானம் வேண்டாம்! திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)

சென்னை, இந்திரா நகர் வாட்டர் டேங்க் சிக்னல் அருகே டைடல் பார்க் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது வானவில் உணவகம். சுமார் பன்னிரெண்டு மணிக்கு மேல் இங்கு ஆட்டோ ஓட்டுனர்கள், ஐடி ஊழியர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கூடி விடுகின்றனர்.

இந்த தள்ளுவண்டி உணவகத்தின் உரிமையாளர், அருணா ராணி அனைவரையும் சிரித்த முகத்துடன் உபசரிக்கிறார். வந்திருக்கும் வாடிக்கையாளர்களும் அவரை ‘‘அம்மா குழம்பு வைங்க, அக்கா மீன் வறுவல் சூப்பர்” என உரிமையுடன் பழகுகின்றனர். இதில் என்ன சிறப்பு என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அருணா ராணி திருநங்கை சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரை மக்கள் அரவணைத்து ஆதரிப்பதுதான் இங்கு ஹைலைட். எந்த பாகுபாடும் தயக்கமும் இல்லாமல் மரியாதையுடன் ஒருவருக்கொருவர் அவர்கள் பழகுவது, சமத்துவத்தின் மீதான நம்பிக்கையை கூட்டுகிறது.

61 வயதாகும் அருணா ராணி பிறந்து வளர்ந்தது தில்லியில். சமையலில் கைத்தேர்ந்தவர். 1980களில் வெளிநாடுகளில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சைனீஸ், காண்டினெண்டல், தாய் போன்ற பல சமையல்களை கற்றுள்ளார். அதில் கைத்தேர்ந்தவரும் கூட. அங்கு இவரது பிரதான வேலை குக் + கேர் டேகர். இந்தியாவிற்கு திரும்பியவர் பல பன்னாட்டு நிறுவனங்களில் கேன்டீன் நடத்தியது மட்டுமில்லாமல் மாணவர்களின் விடுதிகளில் சமையலும் செய்துள்ளார்.

2010ல் மிட்சுபிஷி, கார் கம்பெனியில் சமையல் சார்ந்த வேலையில் ஈடுபட்டு வந்தவர், சில வருடங்கள் முன் அங்கு வேலையை விடும் போது, வேறு இடத்தில் வேலைக்கு தேட முயற்சித்துள்ளார். அது குறித்து மற்றவரிடம் ஆலோசனைக் கேட்ட போது, அவர்கள், ‘உங்களிடம் இருக்கும் திறமைக்கும் அனுபவத்திற்கும், தனியாக ஒரு உணவகம் ஆரம்பிக்கலாமே. எதற்கு மற்றவர்களின் தயவை எதிர்பார்க்க வேண்டும்’ எனக் கூறி, அருணாவை உணவகம் வைக்க ஊக்கப்படுத்தியுள்ளனர்.

சிலர், சியர்ஸ் ஃபவுண்டேஷனை அணுகி வாய்ப்பு கோருமாறு அறிவுறுத்தியுள்ளனர். “முதலில் வேலை கேட்டுத்தான் நான் சியர்ஸ் ஃபவுண்டேஷனிடம் சென்றேன். அவர்கள் என்னை சமைக்கச் சொல்லி, என் உணவை சுவைத்துப் பார்த்தார்கள். பல ஆலோசனைகள், சோதனைகள் செய்தார்கள். எனக்கு இதில் உண்மையிலேயே ஆர்வமும், அதற்கான பொறுமையும் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னரே எனக்கு இந்த உணவு வாகனத்தையும், சமையல் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுத்தனர். ‘வீல்ஸ் ஆஃப் சேஞ்ச்’ என்ற இயக்கத்தின் கீழ் இந்த தள்ளு வண்டி உணவகத்தை அமைத்துக் கொடுத்தனர்’’ என்றவர் தன் வளர்ப்பு மகனுடன் இந்தக் கடையை இப்போது நடத்தி வருகிறார்.

‘‘2018ல் ஆரம்பித்து சுமார் மூன்று வருடங்களாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். லாக்டவுன் போது, ஐ.டி ஊழியர்கள் வீட்டிலேயே வேலை செய்வதால், வாடிக்கையாளர்களின் கூட்டம் குறைந்துவிட்டது. இங்கு வெறும் மதியம் சாப்பாடுதான். ஆனால் காலை 10.30 மணிக்கே கடையை திறந்துவிடுவோம்.

11 மணி அளவில் கூட்டம் கூட ஆரம்பித்து மாலை மூன்று மணி வரை உட்காரக் கூட நேரமில்லாமல் மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள். சுவையுடன் ஆரோக்கியமான உணவை குறைந்த விலையில் வயிறார சாப்பிட முடியும் என்பதால், பலரும் டீம் பார்ட்டிகளை நண்பர்களுடன் வந்து
இங்கு கொண்டாடுகிறார்கள்.

ஆனால் கொரோனா காலத்தில் நிலைமை மோசமாகிவிட்டது. சில மாதங்கள் கடையை திறக்கவேயில்லை. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், சரியான வருமானம் இல்லை. கடந்த ஆண்டு இதே மாதம் ஆரம்பித்த பிரச்சனை, ஒரு வருடமாகிவிட்டது இன்னும் நிலைமை சீராகவில்லை.

2020ல், இந்த தள்ளுவண்டி கடையை உணவகமாக மாற்ற எண்ணி பல முயற்சிகள் செய்து, அதற்கான உதவிகளும் கிடைக்கயிருந்த நிலையில் கொரோனா தொற்று நோயினால், அந்த முயற்சி வீணாகியது. சில ஐ.டி நிறுவனங்களும் எங்களிடம் ஆர்டர் எடுப்பதற்கான முடிவை செய்திருந்தனர். அந்த வாய்ப்பும் பறிபோனது. இப்போது கேஸ் விலை ஏறியதிலிருந்து கட்டை அடுப்பில்தான் சமைக்கிறோம்’’ என்றார்.

இந்த மூன்று ஆண்டுகளில் அவர் சந்தித்த சவால்கள் குறித்து கேட்ட போது, “பொதுவாகவே தள்ளுவண்டி உணவகத்தில் பல பிரச்சனைகள் இருக்கும். அதிலும் நான் தனியாளாக இதை நடத்தி வந்ததில் சில தொல்லைகள் இருக்கத்தான் செய்தது. பலரும் எங்கள் கடையை காலி செய்ய வேண்டும் என்றனர். அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி அவர்கள், சாஸ்திரி நகர் சமூக நல கூடத்திற்கு கார்ப்பரேஷன், காவல்துறை மற்றும் சில முக்கிய அதிகாரிகளை வரவழைத்து சந்தித்து, திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த பலரும், சென்னையில் சில இடங்களில் தள்ளு வண்டியில் உணவகங்கள் அமைத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாய் இருந்து தைரியம் கொடுங்கள் என்று கூறினார். இதையடுத்து எங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கவில்லை. வாடிக்கையாளர்களும் என்னிடம் இதுவரை தகராறிலும் ஈடுபட்டதில்லை. அனைவருமே என்னை அக்கா, அம்மா என மரியாதையுடன் அழைப்பார்கள்.

சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, சிகாகோ, ஸ்வீடன், ஸ்பெயின் என இன்னும் பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன்’’ என்றவருக்கு தாய், மலாய், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி போன்ற பல மொழிகள் தெரியுமாம். ‘‘இத்தனை மொழிகள் தெரிந்திருந்ததால்தான், பல பன்னாட்டு விருந்தினர் விடுதிகளில் என்னால் வேலை செய்ய முடிந்தது’’ என்று கூறும் அருணா பன்னாட்டு சமையல்களிலும் கைத்தேர்ந்தவராம். ‘‘நான் சமைப்பதில் எங்க குடும்பத்தினர் விருப்பப்பட்டு சாப்பிடுவது சிக்கன் வித் பைனாப்பிள், சிக்கன் ரோஸ்ட், சூப், சாலட், சில்லி சிக்கன், கேக் வெரைட்டிகள்’’ என்றவர் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த கொஞ்சம் சிரமப்பட்டுள்ளார்.

‘‘நான் திருநங்கையாக முழுமையாக என்னை உணர்ந்த ேபாது எனக்கு 16 வயசு. அதற்கடுத்த 20 வருடங்கள் வரை என் அடையாளத்தை ஒளித்துதான் வாழ்ந்தேன். தற்செயலாக ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதுதான் பலருக்கும் தெரிந்தது. என்னுடைய பெரிய மகனுக்கு திருமணமாகி பேரனும் இருக்கிறார். இவர்களைத் தவிர என்னை அம்மா என்று அழைக்க பலரும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இப்போது வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு உயர்ந்துள்ளனர். எங்க ஜமாத்தில் இருக்கும் பல இளம் திருநங்கைகள், இப்போது படித்தவர்களாக இருக்கின்றனர். நல்ல வேலையில் ஆபீஸ் உத்யோகத்தில் உள்ளனர். ஒருவர் உயர்ந்தால், அடுத்து பல குழந்தைகளின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட்டு
உயர்வடையும்.

என்னுடைய ஒரே வேண்டுகோள், எங்களுக்கு நீங்கள் எந்த தானமும் கொடுக்க தேவையில்லை. எங்களது திறமையை வளர்த்துக்கொள்ளவும், அதை வைத்து சுயமாக எங்கள் வாழ்க்கையை வழிநடத்த ஒரு வாய்ப்பும் கொடுத்தாலே போதும். மேலும், அதே போல, எங்கள் திறமையை நம்பி வேலைக்கு எடுக்கும் போது, சிலர் எங்களை ஆண்களைப் போல உடை அணிந்து வரும்படி கூறுகிறார்கள். தயவுசெய்து எங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறும் அருணா உணவகத்தில் வாழை இலையில் சுடச்சுடச் சாப்பாடு, சாம்பார், மீன் குழம்பு, கறிக் குழம்பு, ரசம், பொரியல், அப்பளம், மோர் என அனைத்து வெரைட்டியும் வெறும் ஐம்பது ரூபாய்க்கு பரிமாறப்படுகிறது.

இது தவிர மட்டன் போட்டி, மட்டன் தலைக்கறி, இறால் வறுவல், மீன் வறுவல் போன்ற பெரும்பாலான அசைவ உணவும் ஃபேமஸ். என் ஒரே ஆசை ஹோட்டல் அமைப்பதுதான். தற்போது பொதுவான கிச்சன் அமைக்கும் நோக்கத் தில் ஒரு பெரிய சமையலறையுடன் கூடிய வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளேன். சரியான ஆர்டர் கிடைக்க காத்திருக்கிறேன்’’ என்றார் அருணா.Post a Comment

Protected by WP Anti Spam