By 3 May 2021 0 Comments

எல்லா வயதினரும் திருப்தியா சாப்பிடணும்! (மகளிர் பக்கம்)

கடந்த ஆண்டு லாக்டவுன் காரணமாக பல சிறு குறு தொழில்கள் பாதிப்பினை சந்தித்து வந்தது. இப்போதுதான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள். ஒரு பக்கம் இந்த பேண்டெமிக் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தினாலும், சிலருக்கு ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. குறிப்பாக இல்லத்தரசிகள். வாழ்நாள் முழுக்க குடும்பம் என்ற ஒரு பெரிய பொறுப்பினை சுமந்து வந்தாலும், கடந்த ஓராண்டாக இவர்கள் தங்களுக்குள் மறைந்து இருக்கும் திறமையினை வெளிக்கொண்டு வந்துள்ளனர். அதில் சுமையாவும் ஒருவர். இவரின் கணவர் ஓட்டல் துறையில் ஒரு சாம்ராஜ்ஜியம் செய்து வந்தாலும், தனக்கான ஒரு அடையாளமாக ‘மர்ஹாபாஸ் ராயல் கிச்சன்’ என்ற பெயரில் வீட்டில் இருந்தபடியே கிரேவி, பிரியாணி மற்றும் ஃப்ளேவர்ட் ரைஸ்களை ஆர்டரின் பெயரில் அளித்து வருகிறார்.

‘‘நான் பிறந்தது ஆந்திரால. வளர்ந்தது சென்னையில். பன்னிரெண்டாம் வகுப்பு வரை தான் படிச்சேன். 15 வயசிலேயே கல்யாணமாயிடுச்சு. என் மாமியார் வீட்டில்தான் நான் வளர்ந்தேன்னு சொல்லணும். குறிப்பா என் மாமியார், மாமனார், என் கணவர் தான் என்னை வளர்த்தாங்க. நான் கல்யாணமாகி வந்த போது எனக்கு சுத்தமா சமைக்கவே தெரியாது. ஒரு டீ கூட வைக்கத் தெரியாது. என் மாமியார்தான் எல்லாமே சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க ரொம்ப நல்லா சமைப்பாங்க. என்னுடைய அப்பா ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வந்தார். அவர் பத்தாவது வகுப்பு முடிச்சிட்டு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ஏதாவது ஒரு தொழில் செய்யலாம்னு வந்தார். இங்க வந்த பிறகுதான் படிப்படியா முன்னேறினார். எனக்கு ஒரு தம்பி, தங்கை. எல்லாருமே கல்யாணமாகி செட்டிலாயிட்டோம். வீட்டில் செல்லமா வளர்ந்ததால், நான் சமையலை பெரிய அளவில் கத்துக்கல.

என் மாமனார் மற்றும் கணவர் இருவரும் சுவையான உணவினை விரும்பி சாப்பிடுவாங்க. அதில் சின்ன குறை இருந்தாலும், உடனே சொல்லிடுவாங்க. அவங்க குறை சொல்லக்கூடாது என்பதற்காகவே நான் சமையல் கத்துக்கிட்டேன். பிரியாணி முதல் சிக்கன் குருமா எல்லாமே என் மாமியார்தான் செய்ய ெசால்லித் தந்தாங்க. நாங்க மிளகாய் தூள் மற்றும் மசாலா பவுடர் எதுவுமே கடையில் வாங்க மாட்டோம். வீட்டில் தான் தயாரிப்போம். அதுவும் என் மாமியார் தான் தயாரிப்பாங்க. அவங்களுக்கு தான் அளவும் தெரியும். அவங்க எப்ப அரைச்சு வைப்பாங்கன்னு எங்களுக்கு தெரியாது. மிளகாய் தூள் தீர்ந்து போச்சுன்னு சொன்னதும், உடனே அதை நிரப்பி வச்சிடுவாங்க’’ என்றவர் முதலில் செய்த பிரியாணி பயங்கர பிளாப்பாம்.

‘‘நான் கல்யாணமாகி வந்த போது கூட்டுக்குடும்பமாதான் வாழ்ந்து வந்தோம். அப்ப ஒரு நாளைக்கு மூன்று வேளையும் 22 பேருக்கு சமைக்கணும். வீட்டில்
உள்ளவர்கள் மட்டுமில்லாமல், வேலையாட்கள் எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான். அதுவும் சமையல் நாங்க தான் செய்வோம். என் மாமியார் ஒரு நாள் என்னை பிரியாணி செய்ய சொல்லி வழிமுறையும் சொன்னாங்க. சிக்கன் குருமாவுக்கு மசாலா தயாரிப்பது போல் இதற்கு முதலில் மசாலா ரெடி பண்ண சொன்னாங்க. குருமாவிற்கு நாம மஞ்சள் தூள் சேர்ப்போம். பிரியாணிக்கும் அப்படித்தான் நினைச்சு நான் நிறைய மஞ்சள் தூள் சேர்த்து மசாலா எல்லாம் தயார் செய்திட்டேன். அரிசியையும் தனியா வேகவச்சு பிரியாணி மசாலில் சேர்த்து தம் போட்டு வச்சுட்டேன். எல்லாம் ரெடியாகி மூடிய திறந்து பார்த்தா, பிரியாணி எல்லாம் மஞ்சள் நிறத்தில் இருந்தது. சாதமும் குழைந்து கொஞ்சம் கூழ் போல ஆயிடுச்சு. ஆனா டேஸ்ட் மட்டும் பிரியாணி போல இருந்தது.

ஒரு சின்ன குறை இருந்தாலும் என் மாமனார் கண்டுபிடிச்சிடுவார். ஆனா அவர் அன்னிக்கு எதுமே சொல்லல. என் கணவர்தான் என்னை பிரியாணி செய்ய சொன்னா கூழ் செய்து இருக்கேன்னு கிண்டல் செய்தார். அப்ப நான் முடிவு செய்தேன், குறை சொல்லாதபடி சமைக்க கத்துக்கணும்ன்னு’’ என்று சொன்னவர் பத்து கிலோ பிரியாணி சமைச்சாலும், உப்பு அளவு சரியா போட தெரியாதாம். ‘‘நான் திருமணமாகி வந்த காலம் முதல் எந்த உணவாக இருந்தாலும் என் மாமியார் தான் உப்பு சரியா இருக்கான்னு பார்ப் பாங்க. பிரியாணி 10 கிலோ கூட செய்திடுவேன். ஆனா, உப்பு பார்க்க தெரியாது. நான் தனியா வந்த பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டேன். உப்பே இருக்காது… இல்லைன்னா உப்பு அதிகமா இருக்கும். எனக்கு சரியான அளவு உப்பு பழகவே ஆறு மாசமாச்சு. நான் தனியா வந்த பிறகு தான் முழுமையாகவே சமைக்கவே ஆரம்பிச்சேன்.

அது வரை என் மாமியார் தான் எனக்கு பக்கபலமா இருந்தாங்க. இப்பவும் அவங்க இல்லாமல என்னால இவ்வளவு சுவையா சமைக்க முடிந்திருக்காது. காரணம் அவங்களோட சீக்ரெட் மசாலா ரெசிபியை சொல்லிக்கொடுத்து இருக்காங்க. காரணம் எந்த மசாலாவாக இருந்தாலும், அளவு கரெக்டா இருக்கணும். அப்பதான் சரியான சுவை மற்றும் நிறத்தை கொடுக்க முடியும். பலர் காஷ்மீர் மிளகாய் பயன்படுத்துவாங்க. அது நிறம் மட்டுமே கொடுக்கும். அதனால் நான் இந்த மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் இரண்டையும் கலந்து தான் அரைப்பேன். அப்பதான் நிறம் மற்றும் காரம் இரண்டுமே கிடைக்கும். அதே போல் கரம் மசாலா. இது வாசனைக்கு மட்டும் தான் பயன்படுத்தணும். அதிகமா பயன்படுத்தினா உணவு கசந்திடும். இப்படி சின்னச் சின்ன விஷயங்கள் என் மாமியார் எனக்கு சொல்லிக் கொடுத்து இருக்காங்க. அதன் பிறகு அதில் என்னுடைய சமையல் திறனையும் புகுத்தி இருக்கேன்’’ என்றவர் மர்ஹாபாஸ் ராயல் கிச்சன் ஆரம்பித்த காரணத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘அதற்கு என் மகன் அஜீஸ் தான் முழுக்காரணம். இது ஆரம்பிச்சு ஆறு மாசம் தான் ஆகுது. நான் வீட்டில் சமைப்பதை பார்த்த என் மகன், ‘அம்மி நீ நல்லா சமைக்கிற… அதையே ஏன் செய்து டெலிவரி செய்யக்கூடாது’ன்னு கேட்டான். முதலில் நான் தயங்கினேன். காரணம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தை பார்க்கணும். மேலும் என் கணவரும் ஓட்டல் துறையில் இருப்பதால், அந்த துறை எப்படி செயல்படும்ன்னு எனக்கு தெரியும். சுவை மற்றும் தரம் மாறாம தரணும். எல்லாவற்றையும் விட என்னால் செய்ய முடியுமான்னு தான் நான் முதலில் யோசித்தேன். ஆனால் என் மகன் தான் எனக்கு ஊக்கமளித்தான். என் கணவரிடம் கேட்ட போது அவரும் சம்மதிக்க கிங் ஆப் கிரேவிஸ் உருவாச்சு. நான் வெறும் கிரேவி மட்டும் தான் செய்து தருகிறேன். ஆர்டர் செய்தால், பிரியாணி, சாப்ரான் ரைஸ், நெய் சோறு, ஜீரா ரைஸ்னு செய்து தருவேன். கிரேவி பொறுத்தவரை அதில் பல வகை செய்யலாம். நாம ஓட்டலில் சாப்பிடுவது சுமார் ஐந்து வெரைட்டி தான். ஆனால் அதையும் தாண்டி பல வெரைட்டிக்களை கிரேவியில் கொண்டு வரலாம்.

முதலில் நான் செய்த கிரேவியை என் அப்பார்ட்மென்டில் இருப்பவரிடம் சுவைக்க கொடுத்தேன். அவங்க நல்லா இருக்குன்னு ஆர்டர் கொடுத்தாங்க. அவங்க மூலமா நண்பர்கள் மற்றும் அவங்க உறவினர்கள்ன்னு என்னுடைய வட்டம் விரிவடைந்தது. லாக்டவுன் போது ஒரு நல்ல வருமானம் பார்க்க முடிந்தது. இப்போது மற்ற கடைகள் எல்லாம் திறந்தாலும், எனக்கான வாடிக்கையாளர்கள் இருக்க தான் செய்கிறார்கள். கிரேவி மட்டுமில்லாமல் ஃப்ரெஷ் மட்டன் மற்றும் சிக்கன் இறைச்சியும் கொடுக்கிறோம். என் மாமனார் கோழிப்பண்ணை வைத்திருப்பதால், என் கணவரின் உணவகம், என்னுடைய பிசினஸ் மற்றும் வீட்டுக்கு எல்லாம் அங்க இருந்து ஃப்ரெஷ்ஷா வந்திடும். அதை நான் பேக் செய்து கொடுத்திடுவேன். சிலர் வீட்டு விசேஷங்களுக்கு பிரியாணி செய்ய சொல்லி கேட்பாங்க. அதுவும் செய்து தரேன். இப்போது யூடியூப் சேனலும் ஆரம்பிச்சு இருக்கேன். அதில் 30 நாட்கள் 30 கிரேவி என்ற தலைப்பில் ஒவ்வொரு நாளும் ஒரு கிரேவியின் செய்முறையினை வெளியிட இருக்கிறேன். உணவு சான்றிதழும் பெற்றிருக்கேன்.

மேலும் என்னுடைய அனைத்து வாடிக்கையாளர்களையும் வாட்ஸ்சப் குரூப்பில் இணைச்சிருக்கேன். அதன் மூலமாகவும் அவர்கள் விரும்பியதை ஆர்டர் செய்யலாம். என்னுடைய உணவுகள் எல்லாமே வீட்டில் நம் அம்மாக்கள் சமைத்து தருவது போல் தான் இருக்கும். அதிக காரம் இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் சாப்பிடலாம். உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது. சிலர் அதிகமா எண்ணெய், காரம் சேருங்கன்னு சொல்வாங்க. அப்படி செய்தால், நம்மால் இந்த தொழிலில் நிலைத்து இருக்க முடியாது. மேலும் நான் விலையும் நியாயமாக கொடுக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எல்லாரும் சாப்பிடணும்… திருப்தியா சாப்பிடணும். வெள்ளிக்கிழமை மட்டும் ஆர்டர் பொறுத்து மட்டன் பிரியாணி செய்வேன். பத்து பேருக்கான ஆர்டர்ன்னா முதல் நாளே சொல்லிடணும். இரண்டு பேர் என்றால் காலை பத்து மணிக்குள் சொன்னால் போதும்’’ என்றார் சுமையா.Post a Comment

Protected by WP Anti Spam