By 5 May 2021 0 Comments

கிடாக்குழி என் ஊரு! எனக்கு மாரியம்மானு பேரு!! (மகளிர் பக்கம்)

‘எதுக்குமா அலையிறீங்க? கால் வலி வேற… போதும்மா நீங்க உழைச்சது’ன்னு என் பொண்ணு சொன்னதைக் கேட்டு அவ கூடவே இருந்தேன். திடீர்னு இத்தனை வயசுக்கு மேல இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை…தனுஷின் ‘கர்ணன்’ படத்தில் வரும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்னும் ஒற்றைப் பாடலில் உலக தமிழர்கள் அத்தனைப் பேரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ‘கிடாக்குழி’ மாரியம்மாள். பாராட்டுகள், பேட்டிகள் என வெகு பிஸியாக இருந்தவருக்கு ஒரு வணக்கம் வைத்தோம்.

‘‘சிவகங்கை கிடாக்குழிதான் என் ஊரு. சின்ன வயசுலயே நல்லா பாடுவேன். அப்பா, கோவிந்த சாமி, அம்மா சின்னப்பொண்ணு. விவசாயம், வெள்ளாமை, காடு கரைன்னு செழிப்பா இருந்தோம். என்னையப் பாட வைக்கணும்னு அப்பாவுக்கு ஆசை. எங்க கச்சேரி நடந்தாலும் தூக்கிட்டு போயிருவாரு. அவருக்குத் தெரிஞ்சப் பாடல்கள், சினிமா பாட்டுகளைச் சொல்லிக் கொடுத்தார். எனக்கும் சின்ன வயசிலேயே நல்லா பாட வரும். முறைப்படியெல்லாம் பாடத் தெரியாது. அப்படியே கிராமியப் பாடல்கள் பாடணும்னு ஒரு ஆசை. எங்கூர்ல மேடை நாடகம் சொல்லிக் கொடுத்தாக. அங்கே கொண்டு போயி என்னையச் சேர்த்தாரு. முதல் நாடகம் ‘கட்டபொம்மன்’ அதிலே நானே பாடி நடிச்சேன்.

‘பாதம் பணிந்தோமே
சபையோர்களே! பெரியோர்களே!
தாய்மார்களே!
கும்பிட்டு அடி பணிந்தேன்
மாரியம்மாள்!’

இப்படி பாடினேன் அந்தப் பாட்டுதான் எனக்கு முதல் பாட்டு. இப்படிப் பாடிக்கிட்டு இருந்தப்போ நமக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தர் வெளிநாட்டுல இருந்து வந்தார். இங்கே பாட்டு பாடுறது யாருன்னு கேட்டாக. அது வரைக்கும் டேப் ரெக்கார்டுன்னா ஆளுக உள்ள உக்கார்ந்து பாடிட்டு போவாங்களோன்னு நினைச்சுட்டு இருந்தேன். அந்தப் பையன் என் பாட்டைப் பாடச் சொல்லி ரெக்கார்டு ெசய்து உடனே போட்டுக் காண்பிச்சார்.

‘ மஞ்ச வெயிலடிச்சு மரவாயக் காட்டுதில்லோ (2)
கொஞ்ச வெயில நம்பி தஞ்சமின்னு நானும் வந்தேன்(2)
கிடாக்குழி என் ஊரு எனக்கு மாரியம்மா பேரு!’ (2)

இப்படிப் பாடிக் கொஞ்ச நேரத்திலே போட்டுக் காண்பிச்சாக. இந்தப் பாட்டைக் கொண்டு போயி பக்கத்து ஊர் திருவிழாவிலே போட்டிருக்காங்க. அங்க என் வீட்டுக்காரர் பெரிய பாடகர் கோட்டச்சாமி. என் பாட்டைக் கேட்டுட்டு யாருப்பா இது நம்மூர் காரப் புள்ளையான்னு கேட்க பக்கத்து ஊருன்னு தெரிஞ்சு வந்துட்டாப்படி. நான் விளையாடப் போனவ வீட்டுக்கு வரேன், தலைப்பாகை எல்லாம் கட்டிக்கிட்டு ஓங்குத் தாங்கா ஒருத்தர் ஊட்கார்ந்திருந்தார். நால்லா பாடுறியேப்பா என் கூட கச்சேரிக்கு வரியான்னுக் கேட்டாரு.

நான் வரவே மாட்டேன்னு அப்பாவைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு விடவே இல்லை. ‘நான் வரேன்டா உன் கூட’ அப்படின்னு எனக்குத் தைரியம் கொடுத்து எனக்குப் புதுச் சட்டையெல்லாம் தெச்சுக் கொடுத்தாரு என் அப்பா. என் வீட்டுக்காரர் எனக்கு வந்து பாட்டுச் சொல்லிக் கொடுத்தாரு. தொடர்ந்து பாட ஆரம்பிச்சு கூடவே பயணிக்க ஆரம்பிச்சோம். பழக்கம் காதலாகி 1986ல கல்யாணமும் ஆச்சு என்னும் மாரியம்மாளுக்கு
1987ல் மகள் பிறந்திருக்கிறார்.

‘லட்சுமி… நாங்கதான் பாட்டுப் பாடி ஒண்ணுத்துக்கும் ஆகாமக் கிடக்கோம்… நீயும் அதே லைன்ல வரக் கூடாது’ன்னு என் பொண்ணை நான் பாடவே விடலை. எப்போதும் போராட்டமான வாழ்க்கை. வரவு கிடையாது. அதான் அவளையாவது நல்லா படிக்க வெச்சுடணும்னு, கச்சேரிக்குள்ள கொண்டு வராம இருந்தேன். ஆனால் அந்தப் புள்ளைக்கும் பாட்டுதான் உசுரா இருந்திருக்கு.

எனக்கேத் தெரியாம நிறைய பரிசா வாங்கி வெச்சிருக்கு. ‘இது ஏது’ ன்னு கேட்டா ‘நீதானேம்மா அந்த ஊர் திருவிழாவிலே வாங்கிக் கொடுத்தே’ன்னு சமாளிக்கும். ஒரு முறை இப்படி மாநில அளவுல பாட்டுப் பாடி சென்னையிலே பரிசு வாங்க இருந்துச்சு. ஸ்கூல் சிஸ்டர் வந்து கெஞ்சுறாக. நீங்களும் வாங்கன்னு என்னைய எப்படியோ சமாளிச்சு அழைச்சிட்டுப் போனாக. கலைஞர் ஐயா கையால விருது வாங்குச்சு. கண்கலங்கி நின்னேன். இப்படிப்பட்ட புள்ளைய போயி அடக்க நினைச்சோமேன்னு. அவ வேற யாருமில்ல ‘ஃபோக்ஸ்டார்’ லட்சுமிதான் என் மகள் எனப் பெருமிதப்படும் மாரியம்மாள் ‘கர்ணன்’ பட வாய்ப்புக் குறித்துப் பேசத் துவங்கினார்..

‘‘சினிமாக்களே வேண்டாம்னு முடிவு பண்ணியிருந்தேன். கஷ்டப்பட்டு பாடிட்டு வருவோம். பார்த்தா நம்ம டிராக்ல வேற ஒரு பிரபல சிங்கருக பாடி வெச்சிருப்பாக. இதிலேயே வெறுத்துட்டேன். என் தம்பி ‘ஆந்தக்குடி’ இளையராஜா. அந்தத் தம்பிதான் நிறைய கச்சேரி கூட்டிட்டுப் போகும். என் வீட்டுக்காரரும் இல்லை. என் மகளுக்கும் வீட்டுக்காரர் இல்லை. அந்தத் தம்பிதான் சப்போர்ட். அந்தத் தம்பிக் கிட்ட நம்பர் வாங்கிதான் ஒருமுறை மாரிச்செல்வம் சார் கூப்பிட்டார். எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. ‘நீங்க படத்திலே ஒரு பாட்டுப் பாடணும்’னு சொன்னார்.

‘யாராவது கலாய்க்கிறீங்களா’ன்னு கேட்டேன். அப்பறம் அவரே சொன்னார் ‘இல்லம்மா இன்னும் ரெண்டு நாள்ல சந்தோஷ் நாராயணன் சார் கூப்பிடுவார்’ என்றார். அவர் கூப்பிட்ட அடுத்த நாளே சென்னையிலே போய் இறங்கினேன். ஒவ்வொரு டிராக்கா சொல்லிக் கொடுக்க பாடினேன். எல்லாரும் பாராட்டினாங்க’’ என்னும் மாரியம்மாள் பாடல் முடிஞ்சு கொரோனா காலம் துவங்கி அப்படி ஒரு பாடல் பாடியதே மறந்து போன நேரம்தான் அடுத்த அழைப்பு வந்திருக்கிறது.

‘‘மறுபடியும் மாரிச்செல்வம் சார்… ‘நீங்க இந்த பாட்டுக்கு நடிக்கப் போறீங்கம்மா’ன்னு கூப்பிட்டார். எனக்கு தலை, கால் புரியல. ஏழெட்டு மாசம் ஆச்சு பாட்டு முடிஞ்சு. வரும்ங்கற நம்பிக்கைக் கூட போயிடுச்சு. எனக்கு தமிழக விருதே கிடைச்சிருந்தா கூட இந்த அளவுக்கு சந்தோஷம் கிடைச்சிருக்குமான்னு தெரியலை. அப்படி ஒரு சந்தோஷத்தை மாரி சாரும், சந்தோஷ் சாரும் ஏற்படுத்தியிருக்காங்க. எங்க போனாலும் ரெண்டு புள்ளைக வந்து போட்டோ எடுக்குறாக.

வேற என்ன வேணும் இதை விட. வெளிநாட்டிலே இருந்தெல்லாம் கூப்பிட்டு பேசுறாங்க. உண்மையா உழைச்சா எத்தனை வயசானாலும் நமக்கான கைதட்டலும், அங்கீகாரமும் ஒரு நாள் கிடைக்கும். என் மருமகனும் குடிச்சே இறந்தாரு. ரெண்டு பொம்பளைக நாங்கதான் இன்னைக்கு குடும்பத்தைப் பார்த்துட்டு நிற்கிறோம். இந்த நேரத்திலே இந்தப் பாட்டு வெளியானது எங்க குடும்பத்துக்கு பெரிய உதவிக்கரமா அமைஞ்சிருக்கு. வாழ்க்கையிலே ஒரு பிடிமானம் கிடைச்ச மாதிரி இருக்கு. எங்கள மாதிரியே நிறைய கிராமிய பாடகர்கள் ஒரு வாய்ப்புக்கூட கிடைக்காம இருக்காங்க. அவங்களும் மேல வரணும். இந்த சினிமா துறை அவங்களையும் ஆதரிக்கணும்’ என்றார்.Post a Comment

Protected by WP Anti Spam