விளையாட்டல்ல… விபரீதம்!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 39 Second

குழந்தைகளை கண் போலப் பார்த்துக் கொள்கிற பெற்றோரா நீங்கள்? குழந்தைகளின் கண்களை எப்படிப் பார்த்துக் கொள்வது என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா? விளையாட்டின் போதும் வகுப்பறை சண்டைகளிலும் அடிபட்டுக் கொண்டு வருகிறபோது உங்கள் குழந்தையின் கண்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா எனக் கவனிக்கிறீர்களா? இல்லை என்றால் இனி கவனியுங்கள்! விளையாட்டின் போதும் வேறு சந்தர்ப்பங்களிலும் குழந்தைகளுக்கு வித்தியாசமான காயங்கள் ஏற்படுவது சகஜம். பிறந்த உடனே குழந்தைகளுக்கு கருவிழியில் காயம் வரலாம். குறிப்பாக ஆயுதம் போட்டுப் பிரசவிக்கப்படும் குழந்தைகளுக்கும், பிரசவத்தின் போது மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கும், அம்மா நீண்ட நேரம் பிரசவ வலியில் துடித்துப் பிறக்கும் குழந்தைகளுக்கும் கருவிழியில் வெள்ளை நிற தழும்புகளோ, கருவிழியில் கிழிசல்களோ இருக்கலாம்.

நீண்ட நேரம் பிரசவ வலியில் அவதிப்படுகிற அம்மாவுக்குப் பிறக்கும் குழந்தைக்கு விழித்திரையில் ரத்தக் கசிவு இருக்கலாம். அந்த ரத்தக் கசிவானது சீக்கிரமே சரியாக வேண்டும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட அந்தக் கண் சோம்பேறிக் கண்ணாக வாய்ப்புண்டு. பாப்பா என்று சொல்லக்கூடிய கண்மணி பகுதியில் இருந்து வரக்கூடிய ஒளி மறிவினை (Light Reflex) சிவப்பாக இருக்கிறதா அல்லது வேறு மாதிரி இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கண்டுபிடிக்க முடியும். சந்தேகம் இருந்தால் நரம்புப் பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.Shaken Baby Syndrome அல்லது Battered Baby Syndrome என ஒன்று உண்டு. இந்த விஷயத்தில் பெற்றோர்தான் குற்றவாளிகள். குழந்தை அழுது கொண்டிருக்கும்போது அதை உலுக்குவார்கள். அதன் விளைவாக நெஞ்சில் அழுத்தம் அதிகமாகி, கண்களிலும் அழுத்தம் கூடும். இந்த நிலை அமெரிக்காவில் ரொம்பவே சகஜம்.

குழந்தைகள் உடம்பில் தழும்புகளுடன் அடிக்கடி மருத்துவர்களிடம் வந்தால் கண் பரிசோதனை மிக முக்கியம். விழித்திரையில் ரத்தத் திட்டுகள் இருந்தால் Shaken Baby Syndrome இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். குழந்தையை உலுக்குவதால் கண்களில் அழுத்தம் அதிகமாகி, ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தக் கசிவு இருக்கும். சூட்டுப் புண் என்றோ, குழந்தை தானாகவே சுட்டுக் கொண்டதால் ஏற்பட்ட காயம் என்றோ சொல்லிக் கொண்டு பெற்றோர் கூட்டி
வருவார்கள் அல்லது உடம்பில் ஆங்காங்கே நிறைய ரத்தக் கட்டுகளுடன் குழந்தைகளைக் கூட்டி வருவார்கள். விழித்திரையில் ரத்தக் கசிவு இருந்தால், அது குழந்தையை உலுக்குவதால் ஏற்பட்டதுதான் எனக் கண்டுபிடித்து அமெரிக்காவில் நிறைய பெற்றோருக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரொம்பவே அபூர்வமான இந்தக் காயம் குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது.

இதை அடுத்து குழந்தைகளுக்கு விளையாட்டின் போது அதிகளவில் காயங்கள் படும். குறிப்பாக கிரிக்கெட் பந்து, டென்னிஸ் பந்து, ஷட்டில் காக் இறகு போன்றவை கண்களில் பட்டு, கண்களைச் சுற்றிக் கருப்பாகி, வீங்கும். பிறகு அது இரண்டு, மூன்று வாரங்களில் நிறம் மாறிவிடும். சரியாகிவிட்டதாக பெற்றோர் அலட்சியமாக விட்டு விடுவார்கள். அது மிகப் பெரிய தவறு. அடிபட்டால் உடனடியாக ஐஸ் ஒத்தடம் கொடுத்து அந்த வீக்கத்தைக் குறைக்க வேண்டும். விழித்திரை மருத்துவரிடம் குழந்தையைக் காட்ட வேண்டும். கண் ஓரத்தில் விழித்திரை கிழிந்தால் அதற்குப் பெயர் Retinal Dialysis. அதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

க்ரையோதெரபி அல்லது லேசர் மூலம் சரி செய்யாவிட்டால், விழித்திரை கிழிந்து, விலகி பார்வை முற்றிலும் போய் விடக் கூடும். குழந்தைகளுக்கு ஒரு கண்ணில் சரியான பார்வை இல்லை என்று சொல்லத் தெரியாது. தாமதமான மருத்துவ ஆலோசனை ஆபத்தானது. எனவே, கண்களில் அடிபட்டு, நிறம் மாறும் போது கண்டிப்பாக உடனடியாக விழித்திரை நிபுணரைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் கண்களை லேசாக அழுத்தி, Scleral depression என்கிற முறையில் ரெட்டினல் டயாலிசிஸ் பிரச்னையைக் கண்டுபிடிக்க முடியும். இது போன்று காயங்கள் ஏற்படும் போது பிற்காலத்தில் Angle Recession Glaucoma (ARG) என்கிற பிரச்னை வரும் வாய்ப்புண்டு. உடலில் பிரஷர் ஏற்படுவதைப் போல இது கண்களில் ஏற்படுகிற பிரஷர்.

Angle என்கிற வழியேதான் கண்களுக்குள் உள்ள விழித்திரவம் வெளியே போகிறது. அந்த ஆங்கிள் பாதிக்கப்படுவதால் கண்ணில் உள்ள திரவம் வெளியே போவதில் சிக்கல் ஏற்பட்டு, கண்களில் அழுத்தம் அதாவது, பிரஷர் அதிகரிக்கிறது. அது அதிகரித்துக் கொண்டே போனால், கண்களை மூளையுடன் சேர்க்கிற ஆப்டிக் நரம்புப் பகுதி பாதிக்கப்பட்டு, பார்வை பறிபோகலாம். எனவே, பிள்ளைகள் விளையாடும் போது கண்களில் படுகிற காயங்களை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளவே கூடாது. Black Eye என சொல்லப்படுகிற கண்களைச் சுற்றிய கருமை மற்றும் வீக்கத்தை உடனடியாக கண் மருத்துவரிடம் காட்டி, விழித்திரையை பரிசோதித்து, கண் அழுத்தத்தையும் சரி பார்க்க வேண்டும்.

பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு இன்னொரு பிரச்னையும் உண்டு. சக குழந்தைகளால் கண்களில் காம்பஸ், பென்சில் மாதிரியான கூரிய பொருட்களால் குத்தப்பட்டு நிறைய பேர் வருகிறார்கள். நிறைய குழந்தைகளுக்கு பென்சில் முனையை கண்களின் வெள்ளைப் பகுதியிலிருந்து எடுத்திருக்கிறோம். பார்ப்பதற்கு மச்சம் மாதிரி இருப்பதாக பெற்றோர் நினைத்துக் கொள்வார்கள். அடிக்கடி கண் சிவந்து போகும். பிறகு பரிசோதித்தால், எப்போதோ கண்ணில் பென்சில் குத்திய விஷயம் தெரிய வரும். இது கவனிக்கப்படாவிட்டால், பிற்காலத்தில் கண்களில் தொற்று வரலாம். எனவே, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே கூர்மையான
பொருட்களைக் கையாள்வதில் உள்ள ஆபத்துகளை சொல்லி வளர்க்க வேண்டும்.

தெரியாமல் கண்களில் அப்படி ஏதேனும் குத்திவிட்டாலும் உடனே பெற்றோரிடம் சொல்லவும் கற்றுத் தர வேண்டும். பல நேரங்களில் கண்ணின் மேல் இமைக்குள் ஏதேனும் குத்திக் கொண்டு இருக்கலாம். அது பரிசோதனையில்தான் தெரியும். உபயோகித்த பிறகு முறையாக அப்புறப்படுத்தப்படாத ஊசி மற்றும் சிரிஞ்சுகளை வைத்து விளையாடுவதும் குழந்தைகளிடம் சகஜம். குறிப்பாக வட இந்தியாவில் ஹோலி பண்டிகையின் போது இதை அதிகம் பார்க்கலாம். குப்பையில் கிடக்கும் சிரிஞ்சுகளை எடுத்து உள்ளே கலர் தண்ணீர் நிரப்பி மற்றவர் மேல் அடித்து விளையாடுவார்கள். அதில் ஊசியும் இருந்தால் சட்டெனப் பறந்து கண்ணைக் குத்தி விடலாம். அது முதலில் பெரிதாகத் தெரியாது.

கண் சிவந்து போகிற மாதிரி இருக்கும். மருந்து போட்டால் குறையும். ஆனால், அழுக்குத் தண்ணீர் உள்ளே போய், தொற்று ஏற்பட்டு, பார்வையை இழந்த குழந்தைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இதற்கு Endophthalmitis என்று பெயர். இது விழித்திரையின் உள்ளே ஏற்படுகிற தொற்று. இதற்கு விட்ரெக்டமி என்கிற பெரிய அறுவை சிகிச்சைதான் தீர்வு. கண்களில் செய்யப்படுவதிலேயே மிகப் பெரிய அறுவை சிகிச்சை இதுதான். விழித்திரைக்குள் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தி, மயக்க மருந்தெல்லாம் கொடுத்து செய்யப்படுகிற சிகிச்சை இது. சரியான நேரத்தில் மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் பார்வை பறிபோகாமல் காப்பாற்றலாம்.

தீபாவளி நேரத்தில் குழந்தைகளுக்கு பட்டாசு வெடிப்பதன் மூலம் கண்களில் ஏற்படுகிற காயங்கள் மிக அதிகம். வெடிப்பவர்களைவிடவும், பக்கத்தில் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதையும் பார்க்கலாம். பட்டாசு கண்களுக்குள் பட்டுவிட்டால் உடனே கண்களைத் தேய்க்கக்கூடாது. கண்ணுக்குள் ஏதேனும் பிளவு இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த தண்ணீரால் 15 நிமிடங்களுக்கு கண்களை சுத்தமாக, மென்மையாகக் கழுவ வேண்டும். அப்போதுதான் மத்தாப்புத் துகள்கள், வெடித் துண்டுகள் இருந்தால் வெளியேறி விடும். பிறகு உடனடியாக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கருவிழியில் கெமிக்கல் ரியாக்‌ஷன் ஏற்பட்டு பாதிப்பு அதிகமாக இருக்கும். ஒருவேளை கண்களில் பிளவு இருந்தால் கண்களை கழுவக்கூடாது.

கழுவினால் அந்தத் தண்ணீர் கண்ணுக்குள் போய், Endophthalmitis வந்து விடும். கண்களில் பேண்டேஜ் எல்லாம் போடக்கூடாது. அது கண்ணின் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். எனவே, ஷீல்டு என சொல்லக்கூடிய நிறைய ஓட்டைகள் உள்ள மாதிரியான பிளாஸ்டிக் கப் கொண்டு கண்களை மூடிய
படியோ அல்லது கையையே குவித்து கண்ணை மூடியபடியோ வைத்துக் கொண்டு மருத்துவரிடம் செல்லலாம். எக்காரணம் கொண்டும் நீங்களாக ஆயின்மென்ட் போடக்கூடாது. அது பிசுபிசுப்பாக இருக்கும். காலாவதி ஆனதாக இருக்கலாம். கண்ணில் பிளவு இருந்தால் அதன் வழியே உள்ளே போய் பாதிப்பை அதிகரிக்கலாம். மருத்துவருக்கும் பரிசோதனை செய்வதே சிரமமாகி விடும். தேவை என்றால் ஆன்ட்டிபயாடிக் ஐ டிராப்ஸ் போட்டு உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். இவற்றுக்கு Chemical Injuries என்று பெயர். எனவே, பெற்றோரே… உங்கள் குழந்தைகளை கண்ணின் மணி போலப் பார்ப்பது போலவே, அவர்களது கண்களையும் பாருங்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலரென்ற முகமென்று சிரிக்கட்டும்! (மகளிர் பக்கம்)
Next post இது என்ன கட்சி அலுவலகமா ? கடுப்பான Stalin!! (வீடியோ)