By 11 May 2021 0 Comments

ஒரு வருடம் எங்க வாழ்க்கை இருளால் மூழ்கியது!! (மகளிர் பக்கம்)

பிரியாணி மேல தம் போடுங்க… சப்பாத்திக்கு மாவு பிசைந்தாச்சா… தக்காளி தொக்கு தயாரா..?’ என்று எல்லோரையும் இயக்கிக் கொண்டு இருந்தார் சரண்யா. இவர் தன் கணவருடன் இணைந்து சென்னை அம்பத்தூரில் ‘ஓம் ஸ்ரீநிவாசா’ என்ற கேட்டரிங்கை நடத்தி வருகிறார்.

‘‘என்னோட சொந்த ஊர் காஞ்சிபுரம். ஆனால் சென்னையில் செட்டிலாயிட்டோம். என் கணவர் கோபாலகிருஷ்ணன். அவர் முதலில் சொந்தமா பிரின்டிங் தொழில் செய்து வந்தார். அதில் பெரிய அளவில் வருமானம் கிடைக்கல. அதனால் தொழிலை மூடிவிட்டு தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். எங்களுக்கு இரண்டு பசங்க.

ஆரம்பத்தில் அவரின் சம்பாத்தியம் குடும்பம் நடத்த போதுமானதாக இருந்தது. ஆனால் குழந்தைகள் வளர வளர அவர்களின் படிப்பு செலவு மற்றும் இதர தேவைகளை சமாளிக்க கஷ்டமாக இருந்தது. அந்த சமயத்தில்தான் நானும் என் கணவரும் அவரின் சம்பாத்தியம் மட்டுமில்லாமல் வேறு தொழிலில் ஈடுபடலாம்னு திட்டமிட்டோம். ஆனால் எப்படி செய்வதுன்னு தெரியல.

என் கணவரின் நண்பரின் அக்கா ஈவன்ட் மேனேஜ்மென்ட் மாதிரி செய்து வந்தார். அதாவது அவரிடம் ஒரு நிகழ்ச்சிக்கான தேதி குறித்துவிட்டால் போதும், சமையல் முதல் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து விஷயங்களும் செய்திடுவார். நன்றாகவே செய்து வந்தார். எங்க குடும்பத்தில் நடைபெற்ற விழாக்களுக்கு கூட அவர் கேட்டரிங் செய்தார். ஆனால் அவர் குடும்பத்தில் ஏதோ பிரச்னை ஏற்பட… அட்வான்சாக வாங்கிய காசை எல்லாம் எடுத்துக் கொண்டு ஊரை விட்டு போய்விட்டார்.

பணம் கொடுத்தவர்கள் கேட்ட போது தான் எங்களுக்கு தெரிந்தது, அவர் பணம் வாங்கிய விஷயமே. முதலில் என்ன செய்வதுன்னு தெரியல. கல்யாணம் என்பதால், அதை செய்து கொடுத்திடலாம்னு என் கணவரும் அவர் நண்பரும் பேசி, அவர்கள் கொஞ்சம் பணம் போட்டு அந்த கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடித்தனர். அந்த அக்கா அட்வான்ஸ் வாங்கி இருக்கும் மற்ற விசேஷங்கள் பற்றியும் டைரியில் குறிப்பிட்டு இருந்தார். அவர்களை எல்லாம் சந்தித்து அவர்களுக்கும் கேட்டரிங் சர்வீஸ் செய்தோம். நல்ல வருமானமும் கிடைச்சது’’ என்றவர் இதனை தொடர்ந்து ஒரு ஓட்டலையும் துவங்கியுள்ளார்.

‘‘நண்பர்களுடன் இணைந்து செயல்பட்டாலும், கணிசமான லாபம் பார்க்க முடிந்தது. ஆனால் வரும் லாபம் மூன்றாக பிரியும் போது, எங்களுக்கு போதியதாக இல்லை. அதனால் தனியாக செயல்படலாம்னு என் கணவர் சொல்ல, அதற்கான வேலையில் இறங்கினோம். இதையே செய்யலாமா அல்லது ஓட்டல் துவங்கலாமான்னு யோசித்த போது, ஓட்டல் ஆரம்பிக்கலாம்னு எல்லோரும் சொன்னாங்க.

ஓட்டல் ஒரு பக்கம் இயங்கினாலும், ஆர்டரின் பேரில் விழாக்களுக்கும் கேட்டரிங் செய்ய முடிவு செய்தோம். இதற்காக ஆறு மாதம் முன்பே சிறுக சிறு ஒரு தொகையினை சேகரிக்க ஆரம்பிச்சோம். கேட்டரிங் பெயரிலேயே ஓட்டலையும் துவங்கினோம். ஏற்கனவே சமையல் துறையில் இருந்ததால், கோவையில் இருந்து மாஸ்டர் ஒருவரை வரவழைச்சேன். காலை, பகல், மாலை என மூன்று வேளைக்கான உணவினை அவர் தான் தயார் செய்தார்.

சில காலம் இருந்தவர், பிறகு ஏதோ காரணத்தால் சொந்த ஊருக்கே போயிட்டார். அவருக்கு பிறகு இதன் பொறுப்பை முழுமையாக நானே எடுத்துக் கொண்டேன். காலை டிபன் மற்றும் மதியம் கலவை சாதம் என இரண்டு வேளை உணவு சமைப்பது எல்லாம் நானே பார்த்துக் கொண்டேன். மாலையில் மட்டும் ஒரு மாஸ்டரை வச்சோம். அவர் பரோட்டா, ஃபிரைட் ரைஸ் எல்லாமே ெசய்தார். இதுவரை 130 கல்யாண ஆர்டர்களை எடுத்து செய்திருக்கேன்.

சுவையும் தரமும் கொடுத்ததால், மக்களும் விரும்பி சாப்பிட வந்தாங்க. ஓட்டல் பெரிய அளவில் இல்லை என்றாலும் 20 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு இருந்த வேலையில்தான் கொரோனா என்ற பேய் எங்க வாழ்க்கையை புரட்டி போட்டது’’ என்றவர் அதில் இருந்து எவ்வாறு மீண்டார் என்பதையும் விளக்கினார்.

‘‘மறுநாள் ஊரடங்குன்னு டி.வியில நியூஸ் அறிவிச்சுட்டாங்க. விடிஞ்சா ஓட்டலை திறக்க முடியாது. இந்த நிலை எப்போது மாறும்னு புரியல. ஒரு வினாடியில் அனைத்தும் இருளில் மூழ்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது. எதுவுமே புரியல. ஓட்டலில் வேலை பார்த்த எல்லாரும் சொந்த ஊருக்கு போறதா சொல்லிட்டாங்க. ஓட்டல் இயங்காததால் என்னால் அதற்கான வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் எல்லாவற்றையும் காலி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.

கிட்டத்தட்ட ஒரு வருட காலம் எந்த வருமானமும் இல்லை. இவருக்கும் பாதி சம்பளம் தான் கொடுத்தாங்க. இந்த ஒரு வருடம் ரொம்பவே திண்டாட்டமாயிடுச்சு. ஓட்டலுக்காக வாங்கி இருந்த மளிகைப் பொருட்களை வீட்டுக்கு பயன்படுத்திக் கொண்டோம். அது மட்டும்தான் ஆறுதலாக இருந்தது’’ என்ற சரண்யா மறுபடியும் தன்னுடைய கேட்டரிங் தொழிலில் கால்பதிக்க ஆரம்பித்துள்ளார்.

‘‘இப்ப நிலைமை கொஞ்சம் கொஞ்சமா மாறி வருகிறது. எல்லாரும் பழைய நிலைக்கு வந்துட்டாங்க. அதனால் மறுபடியும் கேட்டரிங் தொழிலை துவங்கலாம்னு முடிவு செய்தோம். இப்ப இருக்கிற சூழலில் மறுபடியும் ஓட்டல் வைக்க முடியாது. அதற்கான முதலீடு செய்யும் நிலையில் நாங்க இல்லை. ஆனால் கேட்டரிங் செய்ய முதலீடு அவசியமில்லை. நம்முடைய லாபம் போக சமையல் மற்றும் மளிகைப் பொருட்களுக்கு என ஒரு குறிப்பிட்ட தொகையினை நிர்ணயித்தால் போதும். அதைக் கொண்டு தான் அனைத்தும் இயங்கும்.

நாம எந்த முதலீடும் செய்ய வேண்டாம். முதலில் சிறிய அளவில் 30 பேருக்கான உணவுகள் மட்டும் வீட்டிலேயே தயார் செய்து கொடுத்தோம். பெரும்பாலும் சப்பாத்தி மற்றும் கலவை சாதம் தான் கேட்பாங்க. அம்பத்தூரில் சின்னச் சின்ன நிறுவனங்கள் உள்ளன. அவர்களும் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. 100 பேர்னா மட்டும் தான் திருத்தணியில் இருந்து சமையல் ஆட்களை வரவழைச்சு செய்றேன். கல்யாணம் என்றால் மண்டபத்தில் சமைப்பாங்க. இல்லை என்றால், சமையல் செய்ய மட்டும் ஒரு இடம் இருக்கு.

அங்க சமைச்சு, விழா நடக்கும் இடத்தில் பரிமாறுவோம். சமைப்பது முதல் பரிமாறுவது வரை அவங்க பார்த்துப்பாங்க. மேலும் அவங்க சொல்லும் மளிகைப் பொருட்களையும் வாங்கி கொடுத்திடுவோம். 30 பேருக்கு சமையல் செய்யும் போது, அதற்கான பொருட்கள் மற்றும் டெலிவரி எல்லாம் என் கணவர் பார்த்துக் கொள்கிறார். ‘இப்பதான் நிலை பழையபடி ஆயிடுச்சே… எப்ப ஓட்டல் ஆரம்பிக்க போறீங்க’ன்னு கேட்கிறாங்க. ஒரு சிறிய அளவு முதலீடு சேர்ந்த பிறகு கண்டிப்பா ஓட்டல் ஆரம்பிப்பேன்’’ என்றார் திடமாக சரண்யா.Post a Comment

Protected by WP Anti Spam