முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுப்பது யார்? (கட்டுரை)

Read Time:13 Minute, 8 Second

சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய
ஆர். சாணக்கியன் எம்.பி, குறிப்பிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெயர் குறிப்பிட்டு, “அவர் போன்றவர்கள், முஸ்லிம் சமூகம் தற்காலத்தில் சந்தித்துள்ள இன, மத ரீதியான நெருக்கடிகள், கைதுகள் தொடர்பில், பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதில்லை” என்று கூறியிருந்தார்;.

இதன்போது, கல்முனையில் இரு பிரதேச செயலகங்கள் அமையலாம் என்பதை நியாயப்படுத்துவதற்காக, சாணக்கியன் எம்.பி முன்வைத்த உதாரணங்கள், முஸ்லிம்கள் மத்தியில் ஒருவித மனக்கிலேசத்தைத் தோற்றுவித்து இருக்கின்றன.

மறுபுறத்தில், பிரதேச செயலக விவகாரம், தனியாக ஆராயப்பட வேண்டிய விடயம் என்று வைத்துக் கொண்டாலும், சாணக்கியன் ஓர் உண்மையைச் சொல்லியிருக்கின்றார்.

அதாவது, முஸ்லிம் சமூகம் முக்கியமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வேளைகளில், அவர்களது பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகள், அந்த மக்களின் பொதுப்படையான விவகாரங்களுக்காக, பொதுவெளியில் துணிந்தும் நேர்மையுடனும் குரல் எழுப்புவதில்லை என்பதே அந்த உண்மையாகும்.

இப்போதிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பணயம் வைத்து, பாராளுமன்றத்துக்கு வந்தவர்களும், தேசிய பட்டியலுக்காக ‘அப்பச் சண்டை’ போட்டு, எம்.பிக்களாக நியமிக்கப்பட்டோரும், இந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றனர்.

அத்திபூத்தாற்போல் பேசுகின்ற, ஒன்று அல்லது இரண்டு முஸ்லிம் எம்.பிக்கள் இருக்கின்றனர்தான். ஆயினும், ஒவ்வொரு தடவையும் பாராளுமன்றத்துக்கும் கிட்டத்தட்ட 20 எம்.பிக்களை அனுப்புகின்ற ஒரு சமூகத்தில் இருந்து, ‘ஆடிக்கொரு தடவை கோடைக்கொரு தடவை’ என்ற அடிப்படையில், ஓரிருவர் மட்டும் குரல் எழுப்புவது போதுமானதல்ல; ஏற்றுக் கொள்ளக் கூடியதுமல்ல.

தமிழர் அரசியலும் முஸ்லிம் அரசியலும், வித்தியாசப்படுகின்ற முக்கிய புள்ளி இதுவாகும்.

முஸ்லிம் கட்சித் தலைவர்கள் உள்ளடங்கலாக, அக்கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற எம்.பிக்கள், பொதுவாக ஆட்சியாளர்களிடம் ‘நக்குண்டு நாவிழக்கின்ற’ காரணத்தாலும் பெரும்பான்மை இனக் கட்சிகளின் ஊடாக, மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுகின்றவர்கள், தமது அதீத விசுவாசத்தை வெளிப்படுத்த நினைக்கின்ற காரணத்தாலும், பாராளுமன்றத்தில் குரலை அடக்கியே வாசிக்கின்றனர். பொதுவாக, முஸ்லிம் சமூகம், நீண்டகாலமாக முன்வைத்து வருகின்ற குற்றச்சாட்டும் இதுவாகும்.

தமிழ் அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு, இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதும், முஸ்லிம் அரசியல் வித்தகர்களுக்கு, ஆத்திரம் பொத்துக்கொண்டு வருவதும் வழக்கமாகும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், தமிழ் எம்.பிக்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்து, இதுவரை தமிழர்களுக்காக எதைப் பெற்றுக் கொடுத்து இருக்கின்றார்கள் என்றொரு பதில் கேள்வியை, சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைப்பதுண்டு.

நியாயமான கேள்விதான்!

தமிழர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றார்கள். 30 வருட ஆயுதப் போராட்டத்திலும், அதற்கு முன்னரும் பின்னரும் நிறைய இழந்து விட்டார்கள். ஆனால், மக்கள் எதிர்பார்த்த அபிலாஷைகள், முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அத்துடன், தமிழ் மக்களுக்காகப் போதுமான அபிவிருத்தி அரசியலும் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் என்னவோ நிதர்சனம்தான்.

ஆயினும், தமிழ் மக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி தமது தளராத கொள்கையின் காரணமாக, இலக்கை அடைவதற்கான பாதையில், கணிசமாக முன்னேறி இருக்கின்றார்கள் என்பதை, யாராலும் மறுக்க முடியுமா?

இத்தனைக்கும் தமிழ் மக்கள் கேட்பது, யதார்த்த பூர்வமாகச் சிந்தித்தால் இவற்றில் சில நடைமுறைச் சாத்தியம் அற்றைவையும் ஆகும். ஆனால், முஸ்லிம்களின் அபிலாஷைகள் அவ்விதமானவை அல்ல!

முஸ்லிம்கள் தனி மாநிலமோ, அதிகாரங்களோ கேட்கவில்லை. மாறாக, அடிப்படை மனித, மத, இன உரிமைகளை உறுதிப்படுத்தச் சொல்லியே வேண்டி நிற்கின்றனர்.

எனவே, தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்ற நெஞ்சுரமும் சமூக சிந்தனையும் அரைவாசிக்காவது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருந்திருந்தால், அல்லது, அப்படியான ஆட்களை முஸ்லிம்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருந்தால், கதை வேறு மாதிரி இருந்திருக்கும்.

வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் தமது சமூகத்துக்காகவும் பிற சமூகங்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தற்கால பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, முன்னாள் எம்.பிக்கள் கூட, எல்லாத் தளங்களிலும் தமிழர் பிரச்சினையைத் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றனர்.

அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால், அமைச்சுப் பதவி கிடைக்கும்; வாகனம் கிடைக்கும்; பணம் சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தெரியாத விடமல்லவே! ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை.

முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போல, ஒரு தேர்தலில் பெருந்தேசியக் கட்சி ஒன்றை எதிர்த்து, வசைபாடி விட்டு, பிறகு திரைமறைவு பேரம்பேசலை மேற்கொண்டு, மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, அதேகட்சிக்கு விலைபோகின்ற அரசியலைச் செய்யவில்லை. அதுபோல, அரசாங்கத்துடன் அளவுக்கதிகமாகப் பின்னிப் பிணைவதுமில்லை; முட்டாள்தனமாக எதிர்ப்பதும் இல்லை. மிகக் கவனமாக, நிலைமைகளைக் கையாள்கின்றனர்.

நாட்டில் இனவாதம் தளைத்தோங்கியிருந்த பின்னணியில், 2019 ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லிம்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு இருக்கின்றனர். கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதின், இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாகக் கைதான அசாத் சாலி தடுப்புக்காவலில் உள்ளார். சந்தேகத்தின் பேரில், மேலும் பலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைக் காரணம்காட்டி, மத்ராஸாக்களை ஒழுங்குபடுத்தல், புர்கா போன்ற ஆடைகளைத் தடைசெய்வதற்கான முயற்சிகள் என்பன எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியல், இத்தோடு முடிந்து விடுமா என்று இதுவரை தெரியாது.

ஆனால், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் இதுபற்றியெல்லாம் வாயைத் திறக்காமல், ‘மௌனராகம்’ இசைக்கின்றனர். ரோம் நகரம் பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போல இது அமைந்துள்ளது.

பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எம்.பிக்களே, அவ்வப்போதாவது முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைத்து, பாராளுமன்றத்தில் பேசுவதைக் காண முடிகின்றது. ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதின், முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் என நான்கைந்து பேர், இப்பட்டியலில் உள்ளடக்கலாம். எச்.எம்.எம். ஹரீஸ் போன்றவர்கள், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பிரச்சினையையே இப்போதெல்லாம் அதிகம் பேசுகின்றனர்.

இம்முறை பாராளுமன்றத்துக்குத் தெரிவான முசாரப் எம்.பி, ஆரம்பத்தில் சிறப்பான உரைகளை நிகழ்த்தினாலும்; அண்மைக் காலமாக, ‘பாம்புக்கும் நோகாமல் கம்புக்கும் நோகாமல்’ பேசுவதாகவே தெரிகின்றது. கடந்தவார அமர்வில், தமது தலைவருக்காகக் குரல்கொடுக்கவும் இல்லை; கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவும் இல்லை. இது பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, நீதி அமைச்சரான அலி சப்ரி, நீதிநிலைநாட்டல் பொறிமுறையில், முஸ்லிம்களை நெருக்குவாரப்படுத்தப்படுவது தொடர்பில், பொதுவெளியில் கருத்துக் கூறுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, பைசல் காசீம், தௌபீக், நஷீர் அஹமட், மஸ்தான், இஷாக் ரஹ்மான், ரஹீம் உட்பட இதர முஸ்லிம் எம்.பிக்களில் அநேகமானோர், தாம் சார்ந்த சமூகத்துக்காகப் பாராளுமன்றத்தில் அண்மைய காலத்தில் காத்திரமாகப் பேசியதாக நினைவில்லை.

அப்படியென்றால், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசுவது யார்? நியாயங்களை எடுத்துச் சொல்வது யார்? சிங்கள மக்களையும் தமிழர்களையும் தெளிவுபடுத்துவது யாருடைய பொறுப்பு? அந்தப் பொறுப்பு, வேறு யாருக்கும் உரியது என்றால், இவர்களை எம்.பியாகத் தெரிவு செய்தது எதற்காக?

ஆகவே, முஸ்லிம் எம்.பிக்கள் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும். எம்.பி. பதவி என்பது விளையாட்டுக்கழகத் தலைவரின் பதவியைப் போன்றதல்ல. அது, பரந்துபட்ட பொறுப்பையும் கடமையையும் கொண்டது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தின் சிற்றுண்டிச் சாலையில் சாப்பிடுவதற்காக மட்டுமன்றி, அவையில் சமூகத்துக்காகப் பேசுவதற்காகவும் கொஞ்சம் வாயைத் திறக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திமுக அமைச்சரவையில் மூத்த தலைவர்களுக்கு டம்மி துறையா? (வீடியோ)
Next post பேபி ஃபேக்டரி!! (மருத்துவம்)