By 12 May 2021 0 Comments

அந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு! (மகளிர் பக்கம்)

“ஏரி நன்னாங்கு ஏரி தாண்டா மாமா…” என்ற நாட்டுப்புற பாடல் மூலம் அறிமுகமான அபிராமி, இன்று தேவகோட்டை அபிராமியாக நாட்டுப்புற பாடல்களுக்கு பல இடங்களில் அறிமுகம் கொடுத்து வருகிறார். நாட்டுப்புற பாடலுக்கே உரித்தான குரல்… பாடும் போது சிரித்த முகத்துடன் ரசிகர்களை கவரும் முகம்… பாடல் வரிகளுக்கேற்றவாறு உடல்மொழி… நாட்டுப்புற பாடல்களோடு புதிய முயற்சியாக ‘கானா’ பாடலையும் இணைத்து பாடும் அபிராமியின் பல பாடல்கள் ‘டிக் டாக்’ வீடியோக்களில் பிரபலம்.

“சொந்த ஊர் பரமக்குடி. அப்பா BSNL-ல் வேலை பார்ப்பதால் தேவகோட்டைக்கு குடிபெயர்ந்தோம். பிறந்து வளர்ந்ததெல்லாம் இங்குதான். நான் கோவையில் கார்டியாக் டெக்னாலஜி படிச்சுட்டு இருக்கேன்” என்று தன்னை சுருக்கமாக அறிமுகம் செய்துகொண்ட அபிராமி, சிறுவயதிலிருந்தே திரைப் பள்ளி ஆண்டு விழாக்களில் பாடல்கள் பாடி பரிசுகளும் பெற்றிருக்கிறார். “எனக்கு முதல் குரு என்றால் அம்மாதான். அவங்க நல்லா பாடுவாங்க. தைராய்டு பிரச்சினை காரணமாக அறுவைசிகிச்சை செய்த பின் பாடுவதை நிறுத்திட்டாங்க. அவங்க கச்சேரி எல்லாம் செய்ததில்லை. ஆனால் எனக்கு கச்சேரி மேடைகளில் பாட வேண்டும்ன்னு ஆசை. வீட்டில், பள்ளிகளில் மட்டுமின்றி வெளியே வந்து பாட வேண்டுமென்ற ஆசை.

பள்ளியில் போட்டியில் பங்கு பெற்று அதிலும் சினிமா பாடல்கள் தான் பாடி வந்தேன். என் விருப்பத்தை தெரிந்துகொண்டு… அப்புச்சி சபாபதி அவங்க ஒரு பட்டிமன்றத்துக்கு பாட கூட்டிட்டு போயிருந்தாங்க. அதன் பின் ‘உங்க குரல் நல்லா இருக்கே! எங்க குழுக்கு வரீங்களா..?’னு காரைக்குடி முத்துராமன் சார் அழைத்தாங்க. அவங்கதான் எனக்கு பயிற்சி கொடுத்து முழுமையா பாடகியா உருவாக்கினாங்க. அடுத்தடுத்த மேடைகளிலும் வாய்ப்புகள் கொடுத்து என்னை இவ்வளவு தூரம் வளர்த்துவிட்டாங்க” என்று கூறும் அபிராமி, ஒன்பதாவது படிக்கும் போது முதலில் மேடை அனுபவம் பெற்றுள்ளார்.

‘‘நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஈடுபாடு வர காரணம் என்னுடைய குரல். பாடும் போது நமக்கே தெரியும்… நம்முடைய குரல் எந்த மாதிரியான பாடல்களுக்கு செட்டாகும்ன்னு. அப்படித்தான் நான் நாட்டுப்புற பாடல்களை பாட ஆரம்பிச்சேன். நாட்டுப்புற பாடல்கள் பாடும் போதோ அல்லது கேட்கும் போதோ நம்மை அறியாமைலேயே ஓர் உணர்வும், மகிழ்ச்சியும் ஏற்படும். அதனால் புதுக்கோட்டை செல்ல தங்கையா, அவர்களிடம் வாய்ப்பு தேடி போனேன்.

ஒரு வருட உழைப்பிற்கு பிறகு தான் அவருடன் இணைந்து பாட வாய்ப்பு கிடைச்சது. அதில் பாடிய முதல் பாடல் தான், “ஏரி நன்னாங்கு ஏரி தாண்டா மாமா…” பாடல். இது எனக்கான முகவரியைக் கொடுத்தது. தேவகோட்டை அபிராமி என்ற பெயரும் மக்கள் மனதில் பதிந்தது’’ என்றவர் கானா பாடல்களை நாட்டுப்புறப் பாடல்களோடு இணைத்து பாடி புது முயற்சியினை மேற்கொண்டு அதில் வெற்றி வாகை சூடி வருகிறார். “எனக்கு கானா பாடல்களை கற்று கொடுத்தது கானா சுதாகர் அண்ணா. அவங்கதான் நல்லா உற்சாகப்படுத்தி சொல்லி கொடுத்தாங்க.

தேவகோட்டை அபிராமி-னு யூ டியூப் சேனலும் ஆரம்பித்து இருக்கேன். இந்த இடம் வருவதற்கு பல அவமானங்கள் மற்றும் கஷ்டங்களை தாண்டிதான் வந்திருக்கிறேன். மேடையில் பாடும் போது கிண்டல் செய்தவர்களுக்கு என் பாட்டால் பதில் சொல்லி இருக்கிறேன். ‘இதெல்லாம் என்ன பாடுது’ன்னு மட்டம் தட்டுவாங்க. சிலர் நிறம் வச்சு கேலி பண்ணுவாங்க. நான் சிரித்துக்கொண்டே பாடுவேன். அதையும் குறை சொல்லுவாங்க. இப்ப அந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு” என்று கூறும் அபிராமிக்கு, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பாட வேண்டும் என்பது தன் வாழ்நாள் லட்சியமாம்.Post a Comment

Protected by WP Anti Spam