By 14 May 2021 0 Comments

அக்கா கடை – இந்தக் கடை தான் எங்களின் வாழ்வாதாரமே! (மகளிர் பக்கம்)

சென்னை மயிலாப்பூர் கபாலிக் கோயில் மாடவீதியைச் சுற்றி பூக்கடை, பூஜை பொருட்கள் சார்ந்த கடைகள் மற்றும் உணவகங்கள் இருந்தாலும், மல்லிகா அக்காவின் அடை கடை மிகவும் ஃபேமஸ். கடந்த ஆறு வருடமாக இங்கு கடை வைத்து நடத்தி வரும் இவரின் ஸ்பெஷாலிட்டியே அவர் கடையில் சுடச்சுட கிடைக்கும் ஐந்து வகை அடைகள், வாழைப்பூ வடை மற்றும் போளி. மாலை நான்கு மணிக்கு இவர் தன் கடையை திறந்ததும், காத்திருந்து சூடாக அடை சாப்பிடவே வருகிறார்கள். சிலர் பார்சல் வாங்கியும் செல்கிறார்கள்.

‘‘சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்தாலும், நாங்க மயிலாப்பூரில் செட்டிலாகி நாற்பது வருஷமாச்சு. என்னுடைய அப்பாவும் இங்கு தான் வடக்கு மாட வீதியில் டீ மற்றும் டிபன் கடை வச்சிருக்கார். எனக்கு ஒரு தங்கை. நானும் அவளும் சின்னக் குழந்தையா இருக்கும் போது, அப்பா ஆரம்பத்தில் ஒரு டீக்கடையில் தான் வேலைப் பார்த்தார். அதன் பிறகு நாமே சொந்தமா செய்யலாம்ன்னு சைக்கிளில் டீக்கேன் வைத்து பல நிறுவனங்களுக்கு விற்பனை செய்தார்.

இதற்கிடையில் நாங்க திருவள்ளூரில் இருந்து மயிலாப்பூருக்கு வந்துட்டோம். அப்பாவால் சைக்கிளில் அலைய முடியல. ஒரு கடையா போடலாம்ன்னு மயிலாப்பூர் கபாலி கோயிலின் வடக்கு மாட வீதியில் சின்னதா ஒரு டீக்கடை ஆரம்பிச்சார். அவர் கடையை ஆரம்பிச்சு 40 வருஷமாச்சு. இன்னும் அதே இடத்தில் டீக்கடை இருக்கு. மேலும் டிபன் மற்றும் பேப்பரும் விற்பனை செய்து வரார். அப்பா சைக்கிளில் டீ விற்கும் போதும் சரி தனியா கடை துவங்கும் போதும் அம்மாதான் அப்பாவுக்கு உதவியா இருந்தாங்க. நானும், தங்கையும் கொஞ்சம் வளர்ந்த பிறகு, நாங்களும் அவங்களுக்கு உதவியா கடைக்கு தேவையானதை செய்ய ஆரம்பித்தோம். இதற்கிடையில் நான் ஐந்து வருடம் வீட்டு வேலைக்காக தில்லிக்கு போனேன்.

அங்கேயே வீட்டில் தங்கி இருந்து வேலைப் பார்த்தேன். ஐந்து வருஷம் கழிச்சு சென்னைக்கு வந்த பிறகு தான் நானும் என் தங்கையும் கடையில் முழுமையா ஈடுபட ஆரம்பிச்சோம். கடையில் டிபனுக்கு தேவையான தோசை மாவு, வடைக்கான மாவு, சட்னி எல்லாம் நான் வீட்டில் செய்து கொடுத்திடுவேன். தங்கையும், அம்மாவும் அப்பாவுக்கு துணையா கடையை பார்த்துக்கிட்டாங்க. நானும் நேரம் கிடைக்கும் போது கடையை பார்த்துப்பேன். அப்பாவுடன் இருந்து கடையை பார்த்து வளர்ந்ததால, எனக்கு சமைக்க மட்டுமில்லாமல், ஒரு கடையை எப்படி நடத்தணும்ன்னு புரிந்து கொண்டேன்’’ என்றவர் திருமணமாகி 20 வருடம் கழித்து மீண்டும் இந்த தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

‘‘எனக்கு சீக்கிரமே கல்யாணம் செய்திட்டாங்க. என் கணவரின் வீடு பெங்களூரூ என்பதால், நான் அங்கு செட்டிலானேன். அவர் ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார். இரண்டு குழந்தைகள் ஆன பிறகு அவரின் வருமானம் மட்டும் போதவில்லை. அதனால் நானும் என் கணவர் வேலைப் பார்த்த அதே எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு தான் தையல் கற்றுக் கொண்டேன்.

எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் தொடர்ந்து பல மணி நேரம் தையல் மெஷினில் அமர்ந்து வேலைப் பார்க்கணும். சில வருடங்களுக்கு பிறகு அதனால் எனக்கு உடல் உபாதைகள் ஏற்பட ஆரம்பிச்சது. என்னால் அந்த வேலையை தொடர முடியவில்லை. அதனால் அந்த வேலையை விட்டு விட்டு புடவை, பிளவுஸ் மற்றும் உள்பாவாடை போன்ற உடைகளை மொத்த விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்தேன். நான் எக்ஸ்போர்ட் துறையில் வேலைப் பார்த்ததால், துணியின் ரகம் மற்றும் தரம் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

அந்த அனுபவம் நான் புடவை விற்பனை தொழில் செய்ய ரொம்பவே உதவியா இருந்தது. தரமான உடைக்காகவே வாடிக்கையாளர்கள் என்னை நாடி வந்தாங்க. ஆனால் அதிலும் என்னால் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை. காரணம் பெங்களூர் சீதோஷ்ணநிலை எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த குளிர் எனக்கு வீசிங் பிரச்னைக்கு கொண்டு போனது. வீட்டிலோ சென்னைக்கே வந்துவிடும் படி கூற, நான், என் கணவர் மற்றும் குழந்தைகள் எல்லாரும் சென்னைக்கே வந்துட்டோம்’’ என்ற மல்லிகா 20 வருட இடைவேளைக்குப் பிறகு உணவு தொழிலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

‘‘வீட்டில் நாம தினமும் சமைக்கிறோம். சமையல் மறந்து போய்விடுகிறதா என்ன? அப்படித்தான் இதுவும். எனக்கு திருமணமாகும் வரை அப்பாவின் கடையில் எல்லா வேலையும் செய்திருக்கேன். அது ரத்தத்தில் ஊறிய விஷயம். எப்போதும் மறக்காது. இங்கு சென்னை வந்த பிறகு என் கணவருக்கு வேலை இல்லை. வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது, என் கணவர் தான் டிபன் கடை போடலாம்ன்னு ஐடியா கொடுத்தார்.

அப்படித்தான் இந்த கடை உருவானது.ஆரம்பத்தில் ஒரு சின்ன வண்டியில் காலை மட்டுமே டிபன் போட்டு வந்தேன். அதன் பிறகு தான் மாலையிலும் போடலாம்ன்னு என் கணவர் யோசனை சொன்னார். அந்த நேரமும் அதே இட்லி, தோசை, ஆப்பம் இல்லாமல் புதுசா செய்யலாம்ன்னு தான் அடை போட ஆரம்பிச்சோம். பொதுவாக பருப்பு அடை மட்டும் தான் எல்லா கடைகளிலும் கிடைக்கும். நான் தூதுவளை, முடக்கத்தான், வல்லாரை, ராகி மற்றும் வாழைப்பூ என ஐந்து வகை அடைகளுடன் வாழைப்பூ வடையும் போட ஆரம்பிச்சேன்.

என் தங்கை போளி அருமையாக செய்வா. அவளிடம் இருந்து பருப்பு மற்றும் தேங்காய் போளி மட்டும் வாங்கி வந்து விற்பனை செய்கிறேன். நான் இல்லாத போது என் கணவர் தான் கடையை பார்த்துப்பார். ஆரம்பத்தில் அவருக்கு புதுசா இருந்தது. அதன் பிறகு போகப் போக அவர் நல்லாவே பழகிட்டார்.

நான் கடையில் இல்லாத போது அவர் தான் இட்லி தோசை எல்லாம் சுட்டு த்தருவார். மேலும் ஆரோக்கியமாக அதே சமயம் வெரைட்டி அடைகளை எப்படி செய்யலாம்ன்னு அவர் தான் எனக்கு ஐடியாவே கொடுத்தார். காரணம் ஒவ்வொரு அடையும் மூலிகை என்பதால், உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது. வல்லாரை நினைவாற்றலுக்கு நல்லது, தூதுவளை சளிக்கு, முடக்கத்தான் மூட்டு வலிக்கு, கேழ்வரகு சுகருக்கு என எல்லாமே ஆரோக்கியம் சார்ந்தது’’ என்றவர் கடந்த இரண்டு வருடமாகத்தான் மாலை நேரங்களில் அடைகளை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.

‘‘நான் கடை ஆரம்பிச்ச போது மாலையும் இட்லி, தோசை தான் போட்டு வந்தேன். வெரைட்டி கொடுக்கலாம்ன்னு தான் அடை போட ஆரம்பிச்சேன். தினமும் காலை நாலு மணிக்கு நானும் என் மகனும் பாரீசுக்கு போய் எல்லா வகை கீரை மற்றும் வாழைப்பூவை வாங்கி வந்திடுவோம். அதன் பிறகு வீட்டுக்கு வந்து காலை டிபனுக்காக எல்லாம் தயார் செய்திடுவேன்.

ஏழு மணிக்கு கடையை திறந்தால் மதியம் 12 மணியாயிடும். அதன் பிறகு மாலை அடைக்கான வேலை நடக்கும். வாழைப்பூவை உரித்து ஆய்ந்து வைத்து வடை மற்றும் அடைக்கான மாவு எல்லாம் தயார் செய்திடுவேன். ஒவ்வொரு அடைக்கும் தனியா மாவு ரெடி செய்யணும். மாலை நான்கு மணிக்கு வந்தா இரவு 11 மணியாயிடும். கொரோனா காலத்தில் வியாபாரம் சரியா இல்லை என்பதால், என் கணவர் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டார். அவர் தான் எனக்கு எல்லாமுமா இருந்தார். நான் மட்டுமே தனியா செய்ய முடியாது என்பதால், இப்ப ஒரு பையன வேலைக்கு வச்சிருக்கேன்’’ என்றவர் கொரோனா காலத்திலும் பெரிய போராட்டங்களுக்கு நடவே தான் வாழ்க்கையை நகர்த்தியுள்ளார்.

‘‘இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா ஓரளவுக்கு நிலைமை மாறி வருது. ஒரு வருஷம் ரொம்பவே கஷ்டப்பட்டோம். எங்களின் வாழ்வாதாரமே இந்தக் கடைதான். காலையில் மட்டும் தான் கடைய போட முடிஞ்சது. அதுவும் ரெகுலரா வர வாடிக்கையாளர்கள் வரல. வந்தவங்களும் கோயில் வாசலில் இருப்பவர்களுக்கு பொட்டலம் வாங்கி கொடுக்க தான் வந்தாங்க. அதனால வியாபாரமும் கொஞ்சம் நொடிஞ்சு தான் போச்சு. எவ்வளவு தான் கடன் வாங்குறது. வாங்கிய காசை கொடுக்காமலும் இருக்க முடியாது.

அதனால் என் கணவர் வேறு வேலைக்கு போக ஆரம்பித்தார். கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. இரவு ஏழு மணி வரைக்கும் கடை போடலாம்ன்னு சொன்ன பிறகு தான் மாலை நேரத்திலும் கடை போட ஆரம்பிச்சேன். மகன் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறான். மகளுக்கு கடந்த ஆண்டு தான் கல்யாணம் முடிச்சேன். கல்யாணம் மற்றும் ஏற்கனவே வாங்கிய கடன் எல்லாம் இருக்கு.

அதை அடைக்கணும். ஒரு நேரத்தில் கடையை மூடிடலாம்ன்னு கூட தோணும். அடுத்த சமயம் வேணாம்ன்னு இருக்கும். கபாலியின் அருளால்தான் கொஞ்சம் கொஞ்சமா நிமிர்ந்து வர்றோம். கடன் எல்லாம் அடைக்கணும். என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கணும். அதன் பிறகு பார்க்கலாம்’’ என்றார் சூடான கல்லில் அடை தட்டியபடியே மல்லிகா.Post a Comment

Protected by WP Anti Spam