By 16 May 2021 0 Comments

கடைசி மூச்சு உள்ளவரை தமிழை வளர்ப்பேன்! (மகளிர் பக்கம்)

தனது 84 வயதிலும் நம்பிக்கை விதைக்கிறார் ஜானகியம்மாள். சென்னை மந்தைவெளியில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ‘லியோ வாடகை நூலகத்தை’ தனி மனுஷியாக திறம்பட நடத்தி வருகிறார் ஜானகியம்மாள்.

இவர் கணவர் கே.பி.நீலமணி, பத்திரிகையாளர், சிறுகதை, நாவல் எழுத்தாளர், குழந்தை இலக்கிய படைப்பாளர். இவர் எழுதிய 12 நூல்களின் படைப்புகள் அனைத்தும் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியுள்ளது. இவரின் ‘‘புல்லின் இதழ்கள்” சங்கீதத்தைப் பற்றி பின்னப்பட்ட புகழ் பெற்ற நாவல், மாத இதழ் ஒன்றில் தொடர் கதையாக வெளிவந்தது. ‘தஞ்சை மண்ணின் இசை மணத்தை பற்றி தந்துள்ள அன்பர் கே.பி.நீலமணியை பெரிதும் பாராட்டுகிறேன்’ என இந்த நூலின் சிறப்புரையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பாராட்டி கூறியுள்ளார். சிறுவர்களுக்கான இலக்கிய நூல்களை எழுதியது மட்டுமில்லாமல் பல பதக்கங்களையும் வென்று, தமிழ் வளர்ச்சி இயக்கப் பரிசையும் பெற்றுள்ளார்.

இவரது மனைவி ஜானகியம்மாளும் கணவரை போல எழுத்தாளர். “என் சொந்த ஊர் கேரளாவிலுள்ள பாலக்காடு. விவசாய குடும்பம். என்னுடன் சேர்த்து நாங்க மூணு சகோதரிகள். அக்கா இரண்டு பேரும் திருமணமாகி பாலக்காட்டில் வசித்து வருகிறார்கள். எனக்கு திருமணமானது பழனியில். பிறகு சென்னையில் செட்டிலானோம். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அவர்களும் திருமணமாகி குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். பிறந்தது வளர்ந்தது எல்லாம் பாலக்காட்டில் என்பதால், எனக்கு திருமணமாகும் வரை தமிழ் எழுத படிக்க தெரியாது.

என் கணவர் தான் எனக்கு தமிழ் எழுத படிக்க கற்றுக் கொடுத்தார். அவர் எழுத்தாளர் என்பதால், அவரின் கதைகளை படித்த எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் ‘கடலைத் தேடாத நதி’ என்ற தலைப்பில் ஒரு நாவலையும் எழுதி இருக்கேன். என் கணவர் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்து இருந்தாலும் என்னை எழுத்தாளராக மறு வடிவமைத்தவர் எனது குருநாதர் எம்.வி.வெங்கடராம். அவர் எனக்கு சிறுகதை, நாவல்களை எப்படி எழுத வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்து, ஊக்கம் கொடுத்தார். நான் எழுத்தாளராக வளர காரணமானவர் அவர்தான். அவரை எனது ஆசான் என்று சொல்லிக் கொள்ள நான் எப்போதும் பெருமைப்படுகிறேன்’’ என்றார் ஜானகியம்மாள்.

கொரோனா காலத்திலும் உறுப்பினர்களுக்காக தனது கணவர் துவக்கிய வாடகை நூல் நிலையத்தைத் தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் திறந்து வைத்து பராமரிக்கிறார். ‘‘என் கணவர் பிரபல தமிழ் தினசரியில் இருபத்தியாறு ஆண்டுகள் உதவியாசிரியராகப் பணியாற்றினார். அவரின் ஓய்வுக்குப் பிறகு 1984ம் ஆண்டு இந்த வாடகை நூலகத்தை ஆரம்பிச்சார். அவர் காலமானதும் அவர் விட்டுப்போன இந்தப் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். அவர் எழுதிய, ‘அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்’, ‘தந்தை பெரியார்’, ‘சமத்துவபுரம் தந்த கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’யின் கதை ஆகிய மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எங்கள் லியோ பதிப்பகம் சார்பாக புத்தகமாக வெளியிட்டோம்.

இன்று வரை என்னை காப்பாற்றி வருபவை இந்த நூலகமும், இதிலுள்ள புத்தகங்களும்தான். தனிமை வாட்டி எடுக்கும் போதெல்லாம் என் வாழ்க்கையை தலைநிமிர்த்தி சிறப்பாக செயல்பட வச்சது இந்த புத்தகங்களே’’ என நெகிழ்கிறார் ஜானகியம்மாள். நூலகம் முழுவதையும் தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களைக் கொண்டு அலங்கரித்துள்ளார் ஜானகியம்மாள். ‘‘இன்னைக்கு டிஜிட்டல் யுகம் வந்திடுச்சுன்னு சொல்றாங்க. ஆனாலும், வாசிக்கிற பழக்கம் இன்னமும் மக்கள்கிட்ட இருந்திட்டுதான் இருக்கு. படிக்கிறவங்க தொடர்ந்து நூல்களை வாங்கிட்டு போறாங்க.

எங்க நூலகத்தில் கிட்டத் தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்க உறுப்பினருக்கு ஒரு நபருக்கு சந்தா 100 ரூபாய், நூலகத்திலே படிப்பதற்கு 5 முதல் 10 ரூபாய் வரை. புத்தக வாசிப்பு மட்டுமே ஒருவரை நல்வழிப் படுத்தும், நற்பண்புகளை வளர்க்கும், வாழ்க்கையை உயர்த்தும். என் கடைசி மூச்சு உள்ளவரை இந்த நூலகம் மூலம் தமிழை தொடர்ந்து வளர்ப்பேன்’’ என்றார் ஜானகியம்மாள்.Post a Comment

Protected by WP Anti Spam