ஸ்ரீ லங்காவும் சிங்கப்பூர் கனவும் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 43 Second

இலங்கை அரசியலில், “ஸ்ரீ லங்காவை சிங்கப்பூர் போல மாற்றுவோம்” என்ற வார்த்தைகளைக் கேட்காத வருடங்கள், இல்லவே இல்லை என்று கூறலாம்.
பொருளாதார அபிவிருத்தி முதல், பேச்சுரிமையை அடக்குவது வரை, இலங்கை அரசியல்வாதிகளுக்குப் பெரும் ஆதர்ஷமாக, சிங்கப்பூர் இருந்து கொண்டிருக்கிறது.
உண்மையில், சிங்கப்பூர் ஓர் ஆச்சரியான தேசம்தான். எந்த இயற்கை வளங்களும் பெரிதாகக் கிடைக்காத, ஒரு குட்டி நகரம் அது.

1965இல் மலேசியா பாராளுமன்றத்தில் ஓர் எதிர்ப்பு வாக்குக்கூட இல்லாமல், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் நீக்கப்பட்டபோது, அந்தக் குட்டி நகரம், தனித்ததொரு சுதந்திர நகர அரசாகியது.

மலாயர்கள், சீனர்கள், தமிழர்கள் எனப் பல்வேறு இனங்களையும் கொண்டமைந்த சிங்கப்பூர் எனும் குட்டி நகர அரசில், 1969இல் மலாயர்களுக்கும் சீனர்களுக்கும் இடையிலான ஓர் இனக்கலவரம் இடம்பெற்றது. அந்தக் குட்டி நகரத்தில், எந்த இனம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது, அந்த இனக்கலவரத்தின் மூலநோக்கமாக இருந்தது.

மலேசியாவிலிருந்து நீக்கப்பட்டதால், தாம் ‘பூமிபுத்திரர்’கள் என்ற நிலையை இழந்துவிடுவோம் என்ற அச்சம், சிங்கப்பூரில் வாழ்ந்த மலாயர்களிடம் இருந்தது. ஆனால், லீ க்வான் யூ என்ற தலைவனின் முக்கியத்துவம், இந்த இடத்தில்தான் உணரப்படுகிறது.

1965இல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விலக்கப்பட்டுத் தனிநாடான போது, அதன் முதல் பிரதமராகப் பதவியேற்ற லீ க்வான் யூ, சிங்கப்பூர் மக்களுக்குச் சொன்ன செய்தி, இங்கு குறிப்பிடத்தக்கது.

“சிங்கப்பூர் என்பது, ஒரு மலாய் தேசமல்ல; சீன தேசமல்ல; இந்திய தேசமல்ல; எல்லோருக்கும் சிங்கப்பூரில் இடமுண்டு” என்று சொல்லியிருந்தார்.

பல்லினங்கள் செறிந்துவாழும் குட்டி நகரத்தில், இன முரண்பாடுகள் இலகுவில் ஏற்பட்டுவிடக்கூடும் என்பதை, லீ க்வான் யூ அறிந்திருந்ததுடன், சிறுபான்மையினர் எதுவித அச்ச உணர்வையும் பாதுகாப்பு இன்மையையும் உணர்ந்துவிடக்கூடாது என்பதில் அவர் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.

அது வெறும் பேச்சு மட்டுமல்ல; செயலிலும் நிரூபித்துக் காட்டியிருந்தார்.
லீ க்வான் யூ, ஒரு சீனர்; அவர் சிங்கப்பூரின் பிரதமர். சிங்கப்பூரின் ஜனாதிபதியான யூசொஃப் இஷாக், மலாயர். வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த சின்னத்தம்பி இராஜரட்ணம், இலங்கையில் பிறந்த தமிழர்.

தனித்து, ‘சீனர்’களை மட்டும் கொண்ட அமைச்சரவை என்றெல்லாம், இன ரீதியாகச் சிங்கப்பூரின் அரசியலை, லீ க்வான் யூ வடிவமைக்கவில்லை.

1957இன் புள்ளிவிவரத் தரவுகளின் படி, சிங்கப்பூரின் 75 சதவீதத்துக்கும் அதிகமான குடிமக்கள் சீன இனத்தவராவர். லீ க்வான் யூ நினைத்திருந்தால், இனவாத அரசியலை மிக இலகுவாகச் செய்திருக்கலாம். ஆனால் அவரதும், அவரது கட்சியினதும் நோக்கம், அதுவாக இருக்கவில்லை.

உண்மையில், அன்று சீன இனத்தவர் அங்கு அதிகம் வாழ்ந்ததாலேயே, சிங்கப்பூர் மூன்றாவது சீனாவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அடையாளம், அந்த நகர மக்களின் வாழ்வின் அமைதியைச் சீரழித்துவிடும் என்று, சிங்கப்பூரின் சிற்பிகள் மிகத்தௌிவாக உணர்ந்து இருந்தார்கள். ஆகவே இனம், மதம், மொழி ஆகியவற்றைக் கடந்த, ‘சிங்கப்பூர்’ என்ற ஒன்றுபட்ட அடையாளத்தைக் கட்டியெழுப்பவே அவர்கள் முனைந்தார்கள்.

அன்று, லீ க்வான் யூ முதல், இன்று சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் அவரது மகன் லீ ஷியன் லோங் வரை, இனம், மதம், மொழி ஆகியவற்றைக் கடந்த, ‘சிங்கப்பூர்’ என்ற ஒன்றுபட்ட அடையாளத்தில் அவர்கள் மிகத் தௌிவாகவே இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர், இனம், பல்கலாசாரம் பற்றி உரையாற்றிய லீ ஷீயன் லோங், சிங்கப்பூரின் இன, மத, மொழி கடந்த அரசியல் வரலாற்றை, மீளச் சுட்டிக்காட்டியதுடன், “சிங்கப்பூரியர்கள், தாம் அறியாத வரலாற்றின் பகுதிகள் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். சிறுபான்மையினர், தாம் சிங்கப்பூருக்கு உரியவர்கள் என்று உணரச்செய்வதை உறுதிசெய்ய வேண்டும்” என்றும் அழுத்தம்திருத்தமாகத் தெரிவித்திருந்தார். நிற்க!

சிங்கப்பூரின் கவர்ச்சிக்கு அடிப்படைக் காரணம், இயற்கை வளங்கள் எதுவுமற்ற அந்தக் குட்டி நகர அரசு, சில தசாப்தங்களுக்குள் அடைந்த பிரம்மாண்ட பொருளாதார வளர்ச்சிதான்.

இன்று உலகில், உச்ச அளவில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒன்றாகவும், மிகத் தாராள திறந்த பொருளாதாரக் கொள்கையைக் ​ கொண்ட நாடாகவும், ஊழல் மிகக் குறைந்த நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்திலுள்ள நாடாகவும், வணிகம் செய்வதற்கு ஏற்ற மிகச் சிறந்த நாடாகவும், வரிகள் குறைந்த நாடாகவும், தனிநபர் உள்நாட்டு உற்பத்தி வீதத்தில், உலகளவில் இரண்டாவது இடத்திலுள்ள நாடாகவும் பரிணமிக்கிறது.

1970 ஆம் ஆண்டில், தனிநபர் தலா உள்நாட்டு உற்பத்தி, வெறும் 925 அமெரிக்க டொலர்களாக இருந்த சிங்கப்பூரில், 2019 ஆம் ஆண்டில் உலக வங்கியின் தரவுகளின் படியான தனிநபர் தலா உள்நாட்டு உற்பத்தி 65,233 அமெரிக்க டொலர்கள்.

1970ஆம் ஆண்டில், இலங்கையின் தனிநபர் தலா உள்நாட்டு உற்பத்தி வெறும் 183 அமெரிக்க டொலர்களாகவும், 2019 ஆம் ஆண்டில் வெறும் 3,853 அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டது.

கிட்டத்தட்ட 50 வருடங்களில், இலங்கையின் தனிநபர் தலா உள்நாட்டு உற்பத்தி, 21 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதேகாலப் பகுதியில், சிங்கப்பூரின் தனிநபர் தலா உள்நாட்டு உற்பத்தி, ஏறத்தாழ 70 மடங்கால் அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் இலங்கையிலுள்ள, உலகிலேயே மிகச் சிறந்ததும் ரம்மியமும் மிக்க இயற்கை வளங்கள், சிங்கப்பூரில் கிடையாது.

“இலங்கையைச் சிங்கப்பூராக மாற்றுவேன்” என்று சூளுரைக்கும் அரசியல்வாதிகள், ஒன்றில், சிங்கப்பூரின் பொருளாதார எழுச்சியைப் போன்றதோர் எழுச்சியைத் தம்மால் இங்கு செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்; அல்லது, சிங்கப்பூரைப் போல, மனித உரிமைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ‘ஒழுக்கம்’ என்ற பெயரில், அதை இங்கே செய்ய அவாக்கொள்கிறார்கள்.

சிங்கப்பூரின் விளைவுகளை நேசிக்கும் இவர்கள், அந்த விளைவுகளைத் தந்த விதைகளைப் பற்றி, அக்கறை கொள்வதில்லை. அந்த விதைகள்தான், அந்த விளைவுகளைத் தந்தன என்பதையும் கருத்தில் கொள்வதில்லை.

சிங்கப்பூரின் வெற்றிக் கதையின் அடிப்படை, சிங்கப்பூர் அரசியலில் இருந்து இனம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகள் நீக்கி வைக்கப்பட்டமை ஆகும்.

இனத்தை, மதத்தை, மொழியை வைத்து, சிங்கப்பூரில் அரசியல் செய்யமுடியாது. யார் பூர்வீகக்குடிகள், யார் பூமிபுத்திரர்கள், யார் பெரும்பான்மை, அரச மதம் எது, பெரும்பான்மையினர் மொழி மட்டும்தான் உத்தியோகபூர்வ மொழி போன்ற குறுகிய அரசியல் சிந்தனையில் தோன்றிய பாதையை, சிங்கப்பூரின் சிற்பிகள் தேர்ந்தெடுக்கவில்லை.

சிறுபான்மையினரை இரண்டாம் தரப் பிரஜைகளாக அவர்கள் நடத்தவில்லை. 2010ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, வெறும் 3.2% ஆன மக்கள் மட்டுமே பேசும் மொழியான தமிழ், சிங்கப்பூரின் நான்கு உத்தியோகபூர்வ மொழிகளுள் ஒன்று. ஆங்கிலத்தை அவர்கள் வெறுக்கவில்லை. அதை வைத்து, அரசியல் செய்யவும் இல்லை. உலகை வெல்வதற்கான ஆயுதமாக, அதைப் பயன்படுத்தினார்கள். அந்த மக்களின் ஆங்கில அறிவு, சிங்கப்பூர் வணிகத்தின் மையநிலையமாக உதவியது என்றால் அது மிகையல்ல.

சோசலிஸம் பேசிக்கொண்டு, சிங்கப்பூரை ஆதர்ஷமாகக் கொள்ளும் முரண் நகைகள் எல்லாம், எங்கள் நாட்டில்தான் நடக்கும்.

உலகின் மிகத் திறந்த பொருளாதாரத்தை கொண்ட நாடாகச் சிங்கப்பூர் அடையாளப்படுத்தப்படுகிறது. சோசலிஸம் என்ற குறுகிய பொருளாதாரக் கொள்கையால், தாம் வளரமுடியாது என்ற பிரக்ஞை, சிங்கப்பூரின் தலைவர்களிடம் இருந்தது, சிங்கப்பூர் மக்கள் செய்த பெரும் புண்ணியத்தின் பலன் எனலாம்.

ஆனால், அதேவேளை அனைத்து மக்களுக்குமான அடிப்டைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில், சிங்கப்பூரின் தலைவர்கள் அக்கறை காட்டினார்கள். சிங்கப்பூரின் வீடமைப்பு என்பது, உலகமே வியந்து பார்க்க வேண்டிய ஒன்று.

ஆனால், சிங்கப்பூரிலும் குறைகள் உண்டு. உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் காணப்படும் அடிப்படை மனித உரிமைகளும் சுதந்திரங்களும் சிங்கப்பூரில் கிடையாது. ஒரு கட்சியே ஆண்டு வரும் சிங்கப்பூரில் பேச்சுரிமை, அரசியல் உரிமை என்பன, அடக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், சிங்கப்பூர் கண்ட வளர்ச்சியும் அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட மேம்பாடும், வசதிகள் வாய்ப்புகளில் ஏற்பட்ட உயர்ச்சியும் அவர்கள் இழந்ததோடு பார்க்கையில் நல்லதொரு பேரமாகத்தான் தெரிகிறது.

உரிமையும் இல்லாமல், பொருளாதார மேம்பாடும் இல்லாமல், வாழ்க்கைத் தரத்தில் பின்னடைந்து, கடனில் மூழ்கி வாழும் நிலையை விட, சிங்கப்பூரின் நிலை மேம்பட்டது ஆகும்.

இனவாத அரசியலைச் செய்து கொண்டு, சிறுபான்மையினரை அடக்கிக்கொண்டு, இன்று பூமிபுத்திரர்கள், ஆதிக்குடி, ஒரு மொழி, சோசலிஸம் போன்ற வேண்டாக் கதைகள் பேசிக்கொண்டு, இலஞ்சமும் ஊழலும் சாதாரணமாகிப்போனதொரு நாட்டை, “சிங்கப்பூர் ஆக்குவேன்” என்று மேடையில் பேசுவதெல்லாம், வெறும் வேடிக்கைப் பேச்சுகளாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.

ஒருவேளை, இவ்வாறு பேசுபவர்கள் எல்லோரும் சிங்கப்பூரின் அடக்குமுறைக் கலாசாரத்தை மட்டும் இங்கு கொண்டுவருவதைத்தான் விரும்புகின்றார்களோ? இதைத்தான் அவர்கள், “இலங்கையை சிங்கப்பூர் ஆக்குதல்” என்கிறார்களோ என்னவோ!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10th படிக்கும்போதே வீட்டவிட்டு ஓடிவந்து.!! (வீடியோ)
Next post படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி? (அவ்வப்போது கிளாமர்)