அக்கா கடை – சாதம் வச்சா போதும்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 8 Second

என்ன குழம்பு வைக்கிறது… காய், பொரியல் செய்றதுன்னு தினமும் ஒவ்வொரு நாளும் எல்லா வீட்டின் சமையல் கட்டிலும் நடக்கும் போராட்டம் தான். ஒரு சிலர் லிஸ்ட் போட்டு சமைப்பார்கள். ஆனால் அதுவே தனியாக வீட்டில் வயசானவர்கள் இருந்தால், அவர்கள் தங்களுக்கு மட்டுமே சமைக்க வேண்டும் என்று யோசிப்பார்கள்.

மேலும் வெறும் சாதம் மட்டும் வைத்துக் கொண்டால், குழம்பு கூட்டு பொரியல் யாராவது கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். வேலைக்கு போகும் பெண்கள் இரவு வீடு வந்து சமைக்க வேண்டும். அவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வருகிறார் சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்த ரூபா. இவர் நாங்க குழம்பு பொரியல் தறோம், நீங்க சாதம் மட்டுமே வைத்தால் போதும் என்கிறார்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாம் சென்னை மயிலாப்பூர் தான். அப்பா சொந்தமா தொழில் செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு நான் தாம்பரம் மாடம்பாக்கத்தில் செட்டிலாயிட்டேன். என் கணவர் ஐ.டி துறையில் வேலைப் பார்த்து வருகிறார். என்னுடைய அப்பா தான் பார்த்து வந்த தொழிலை விட்டுவிட்டு கடந்த 40 வருஷமா கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

எனக்கும் உணவு தொழில் மேல் விருப்பம் ஏற்பட அப்பா நடத்தி வந்த கேட்டரிங் தொழில் தான் காரணம். முதலில் அம்மா,அப்பா இரண்டு பேர் மட்டுமே தான் செய்து வந்தாங்க. கல்யாண ஆர்டர்கள் வர ஆரம்பிச்சதும், அதற்கான ஆட்கள் போட்டு செய்ய ஆரம்பிச்சாங்க. அப்பா கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துப்பார். அம்மா தான் சமையல் வேலை எல்லாம்’’ என்றவர் கேட்டரிங் ெதாழில் துவங்கியதற்கான சுவாரஸ்யமான சம்பவத்தை குறிப்பிட்டார்.

‘‘அம்மாவைப் பொறுத்தவரை கேட்டரிங் எல்லாம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. ஒரு முறை எங்க பக்கத்து வீட்டு குழந்தைக்கு பிறந்த நாள் விழா. அவங்க சொல்லி இருந்த சமையல்காரர் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் வரவில்லை. விழாவுக்கு எல்லாம் வந்தாச்சு. சாப்பாட்டுக்கு என்ன செய்றதுன்னு தெரியாம அந்த அங்கிள் ரொம்ப தவிச்சு போயிட்டாங்க.

அப்ப அம்மா தான் அந்த விழாவிற்கு சமைச்சு கொடுத்தாங்க. விழாவுக்கு வந்தவங்க எல்லாரும் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்ல அந்த அங்கிள் அப்பாவிடம்… நீங்க ஏன் ஒரு கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பிக்க கூடாதுன்னு கேட்டார். அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் அப்பாவை யோசிக்க வைச்சது. மேலும் அந்த அங்கிள் அதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த சமயத்தில் விதான்னு ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தது. அவர் அதில் நிர்வாகியாக வேலைப் பார்த்து வந்தார்.

அவரின் கடையில் முதலில் அப்பா, அம்மா ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தாங்க. ‘மாருதி ஸ்னாக்ஸ்’ என்ற பெயரில் சப்ளை செய்ய ஆரம்பிச்சாங்க. அதன் பிறகு படிப்படியா கல்யாணம் மற்றும் சின்னச் சின்ன விசேஷங்களுக்கு எல்லாம் ‘வெங்கடேஸ்வரா மேரேஜ் அண்ட் கேட்டரிங் சர்வீஸ்’ என்ற பெயரில் கேட்டரிங்கும் செய்ய ஆரம்பிச்சாங்க. இப்ப வரைக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு கேட்டரிங் செய்து இருக்கார் அப்பா’’ என்றவர் ஐ.டி வேலையை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவின் வழியினை பின்பற்ற ஆரம்பித்துள்ளார்.

‘‘எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அப்பா போல் சமையல் துறையில் தொழில் செய்ய வேண்டும் என்று விருப்பம். ஆனா எங்க வீட்டில் என்ஜினியரிங் தான் படிக்கணும்ன்னு சொல்லிட்டாங்க. கல்யாண நிகழ்ச்சிக்கு மட்டும் தான் ஆட்கள் வச்சு சமைப்போம். மத்தபடி 100… 200 பேருக்குன்னா அம்மாவே சமைச்சிடுவாங்க. அதுவும் எங்க வீடு ரொம்ப சின்னது. அதில் தான் எல்லா சமையல் வேலையும் நடக்கும். அதனால் நானும் அதில் வரவேண்டாம்ன்னு நினைச்சு பொறியியல் படிக்க வச்சாங்க. சில சமயம் மூணு கல்யாண ஆர்டர் வரும்.

அந்த சமயத்தில் கல்லூரிக்கு லீவ் போட்டு நான், அம்மா, அப்பா என மூணு பேரும் ஒவ்வொரு இடத்தை பார்த்துப்போம். இதற்கிடையில் நானும் படிப்பை முடிச்சேன். ஐ.டி துறையில் வேலைக்கும் சேர்ந்தேன். பத்து வருட காலம் ஐ.டியில் வேலை. கல்யாணமும் ஆனது. குழந்தைகளும் பிறந்தாங்க. அந்த சமயத்தில் தான் அம்மாவின் உடல் நிலை சரியில்லாமல் போனது. டாக்டர்கள் கேன்சர்னு சொல்லிட்டாங்க. என்ன செய்றதுன்னு எங்களுக்கு புரியல. அம்மா இருப்பதால், நான் தைரியமாக வேலைக்கு சென்று வந்தேன்.

அவங்க தான் பசங்கள மட்டுமில்லாமல் வீட்டையும் பார்த்துப்பாங்க. இப்ப அவங்களுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், சமையல் வேலை, வீட்டு வேலை, பசங்கன்னு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. கொஞ்சம் திணறித்தான் போனேன். ஒரு கட்டத்தில் முடியாம வேலையை ராஜினாமா செய்திட்டேன்.

அந்த சமயத்தில் தான் நான் அப்பாவிடம் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. சாதம் மட்டும் வச்சிட்டு, குழம்பு, கூட்டு, பொரியல் மட்டும் தனியா வெளியே கிடைச்சா நல்லா இருக்கும்லன்னு பேசினேன். அப்பா என்ன நினைச்சாரோ தெரியல, இதை நாம வெளியே போய் வாங்குறதுக்கு நாமே ஏன் செய்யக்கூடாதுன்னு கேட்டார். எனக்கும் அதுவும் நல்ல ஐடியாவா பட்டுச்சு. என் கணவரும் ஆமோதிக்க ‘சாதம் வச்சா போதும்’ ஆரம்பிச்சோம்’’ என்றார். வெறும் குழம்பு பொரியல் மட்டுமே ஆரம்பத்தில் கொடுத்துவந்தவர் இப்போது காலை மற்றும் இரவு நேர டிபன் ஐட்டங்களும் போட ஆரம்பித்துள்ளார்.

‘‘என்னைப் போல் வேலைக்கு போகும் பல பெண்கள் கஷ்டப்படுவாங்க. அது மட்டும் இல்லை வயசான தம்பதியருக்கு ரொம்பவே வசதியா இருந்தது. காரணம் இங்க பெரும்பாலும் வயதான தம்பதிகள் தான் அதிகம். அவங்க பசங்க வேலை காரணமா வெளிநாட்டிலோ அல்லது வெளியூரில் இருப்பாங்க. இவங்க இரண்டு பேருக்கு மட்டும் சமைச்சு சாப்பிடுவது கொஞ்சம் சிரமம் என்பதால், அவங்களில் நிறைய பேர் எங்களின் ரெகுலர் கஸ்டமரா மாறினாங்க.

அதன் பிறகு வேலைக்கு போகும் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு என வாடிக்கையாளர் வட்டம் விரிவடைந்தது. இப்ப எங்களின் ரெகுலர் கஸ்டமருக்காகவே ஒரு வாட்சப் குரூப் ஆரம்பிச்சு இருக்கேன். அதன் மூலம் என்ன மெனுன்னு குறிப்பிட்டுவிடுவேன். அவர்கள் விரும்புவதை ஆர்டர் செய்வாங்க.

தினமும் சாம்பார், வத்தக்குழம்பு, ஒரு கூட்டு, பொரியல், ரசம் இருக்கும். சில நாட்கள் வத்தக்குழம்புக்கு பதில் மோர் குழம்பு இருக்கும். இப்போது காலை டிபன் மற்றும் மாலை நேர டிபனும் ஆரம்பிச்சு இருக்கோம். மாலை மட்டுமே பிரியாணி, பரோட்டா, தோசை, இட்லின்னு 30க்கும் மேற்பட்ட உணவுகளை தறோம். காலை டிபன் மற்றும் குழம்பு வகைகளை நானும் அப்பாவும் பார்த்துக் கொள்கிறோம். மாலை பிரியாணி மற்றும் தோசைக்கு மாஸ்டர் வச்சிருக்கோம். இப்போது, என்னுடைய மச்சினரும் உடன் இருக்கார்.

அப்பா கடைக்கு போறது, கேஷ் எல்லாம் பார்த்துப்பார். நான் சமையல் வேலை பார்த்துக்கிறேன். என் மச்சினர் டெலிவரி மற்றும் வெளி வேலையை பார்த்துக்கிறார். பெரும்பாலும் வயசானவங்க என்பதால், அவங்களுக்கு நான் டெலிவரி ெசய்றோம். மத்தவங்க கடைக்கு வந்து வாங்கிடுவாங்க. எங்களிடம் ஒரு பேக்கெட் குழம்பு வாங்கினா இரண்டு பேர் தாராளமா சாப்பிடலாம். காலை ஏழரை மணிக்கு கடையை திறப்போம். பகல் 10.30 வரை தான் இருக்கும். அதன் பிறகு மாலை ஐந்து மணிக்கு திறந்தா இரவு ஒன்பதரை மணி வரை இருக்கும். மாசத்தில் இரண்டு செவ்வாய்க்கிழமை விடுமுறை. அன்று தான் என் குடும்பத்துடன் நேரம் செலவு செய்வது மற்றும் கிச்சனை சுத்தம் செய்றது எல்லாம் செய்வோம்.

இப்ப மாடம்பாக்கம்

மட்டும் தான் செய்றோம். மற்ற ஏரியாவிலும் கேட்கிறாங்க. அங்கேயும் டெலிவரி செய்யும் எண்ணம் இருக்கும். பிரான்சைசி செய்யும் யோசனை இருக்கு. அதே சமயம் நாங்க உணவு சப்ளை கொடுத்தாலும் அவங்க தரமா செய்வாங்களான்னு தெரியல. மறுபக்கம் வேறு இடங்கள்ல கிளை ஆரம்பித்து அங்கு ஆட்கள் மட்டும் நியமித்து எங்க கிச்சனில் இருந்து உணவு சப்ளை செய்யும் எண்ணமும் இருக்கு. இன்னும் எதுவும் முடிவு செய்யல’’ என்றார் ரூபா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஸ்லிம் மக்கள் செய்யும் தவறு !! (கட்டுரை)
Next post ‘டெஸர்ட் டேபிள்’… இது குழந்தைகளுக்கான டேபிள்! (மகளிர் பக்கம்)