ஆச்சரியத் தொடர்: ட்வின்ஸ்!! (மருத்துவம்)

Read Time:15 Minute, 53 Second

`Sleep solves everything’ என ஒரு வாசகம் உண்டு. இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த புது அம்மாக்களுக்கு அப்படியே பொருந்தக்கூடியது இது. உணவோ, கேளிக்கையோ, வழக்கமாக உற்சாகமளிக்கிற வேறு எந்த விஷயங்களுமோ அவர்களுக்கு அப்போது தேவைப்படாது. தூக்கம் கேட்டுக் கெஞ்சும் உடல். தூங்காத இரவுகள் இவர்களுக்கு பிரசவத்துக்கு முன்பே ஆரம்பமாகும்!

ஆறாவது மாதத் தொடக்கத்திலேயே நிறை மாதக் கர்ப்பம் போலப் பெரிதாகும் வயிறு. உள்ளே இருக்கும் இரட்டையர்களின் துள்ளாட்டமும் அதிகரிக்கிற காலம் அது. இருவரும் சேர்ந்தோ, தனித்தோ உள்ளே சுற்றி விளையாடுவார்கள். இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இருவரும் வளர வளர, இந்தத் துள்ளலும் துடிப்பும் அதிகமாகும். குழந்தைகளின் அசைவுதான் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதைத் தாய்க்கு சொல்லும் அறிகுறி என்றாலும், திடீரென நள்ளிரவிலும் விழித்துக் கொண்டு விளையாட்டை ஆரம்பிப்பார்கள்.

குழந்தைகளின் துள்ளலை ரசித்தபடி தூக்கம் தொலைப்பாள் தாய். கர்ப்பிணிப் பெண் மல்லாக்க படுக்கக் கூடாது என்பது அறிவுரை. பிள்ளைகளின் வளர்ச்சி அதிகரிக்கையில் அவளால் ஒருக்களித்துக்கூடப் படுக்க முடியாது. வயிற்றுப் பாரம் சொல்ல முடியாத துன்பங்களைத் தரும். தூக்கம் வராது. பாரம் இறங்கியதும் சரியாகுமா? ஆகாது. மாறாக தூக்கமின்மை தொடர் கதையாகும்.மாறி மாறி அழுகிறவர்களை தூக்கி வைத்து சமாதானப்படுத்துவதும் பசியாற்றித் தூங்க வைப்பதும், அவர்கள் வயிற்றுக்குள் இருந்த நாட்களே மேல் என நினைக்க வைக்கும்.

உனக்கு பகல்ல குழந்தைங்க பிறந்தா தப்பிச்சே… ராத்திரியில தூங்கிடுவாங்க. சாயந்திரத்துக்கு மேல பிறந்தா, குறைஞ்சது ஒரு வருஷத்துக்கு தூக்கத்தை மறந்துடு…’ என்கிற பயமுறுத்தல் பீதியைக் கிளப்பியிருந்தது. அதன்படியே எனக்கும் மாலையில்

பிரசவம்…

ஆஸ்பத்திரி வாசம், அருமகிலேயே இருந்த அம்மா என முதல் ஒரு வாரம் தூக்கத்தில் பிரச்னைகள் இல்லை. வீட்டுக்கு வந்த அன்றே சிவராத்திரியானது. ஒருவன் அழுவான்… இன்னொருவன் தூங்குவான். அழுபவனுக்கு பாலூட்டி, தோளில் போட்டுத் தட்டி தூங்க வைத்ததும், இன்னொருவன் விழித்துக் கொள்வான்.

சில நேரங்களில் இருவரும் சேர்ந்தும் கச்சேரி வைப்பார்கள். நீ பாதி நான் பாதி கண்ணே…’ எனப் பாடாத குறையாக நானும் என் கணவரும் இருவரையும் பார்த்துக் கொள்வோம். அழுது, களைத்து இரண்டு குழந்தைகளும் தூங்க ஆரம்பிக்கும் போது விடிந்திருக்கும். அரக்கப் பரக்க அவர்களுக்கான அன்றைய தேவைகளை எல்லாம் தயாராக வைத்துவிட்டு, அலுவலகத்துக்கு ஓடி வந்து, கொட்டாவியுடன் வேலை பார்த்த நாட்களை வாழ்க்கையில் மறக்க முடியுமா? அரை மணிநேரம் ரெண்டு பேரையும் ஒண்ணா தூங்க வை கடவுளே…’ என வேண்டியதையும், உறவினர்கள் யாராவது வந்தால் ஐந்து நிமிடங்கள் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, கோழித் தூக்கத்தில் சுகம் கண்டதைத்தான் மறக்க முடியுமா? ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று கிடைக்கும் என்பது உலக நியதி. தூக்கம் தொலைத்த எனக்கு இழந்ததற்கு அதிகமாகவே கிடைத்தது மகிழ்ச்சியும் பெருமையும்! இரட்டையர்களின் அம்மா என்கிற அனுபவத்தையும் அந்தஸ்தையும் சுமக்க எதையும் இழக்கலாம்!

ஒரு குழந்தை பெத்தவங்களுக்கே உதவிக்கு ஆள் இல்லாம சமாளிக்கிறது கஷ்டம். இரட்டைக் குழந்தைங்களைப்பெத்தவங்களுக்கு வீடு கொள்ளாம ஆட்கள் இருந்தாலும் சரியா இருக்கும். ஆனா, அது எல்லாருக்கும் சாத்தியமில்லைங்கிறதால, யதார்த்தத்தைப் புரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்தபடி சில விஷயங்களை பிளான் பண்ணிக்கிறதுதான் புத்திசாலித்தனம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. இரட்டையர்களைப் பெற்றெடுத்த அம்மாக்களுக்கு குழந்தைகளைத் தூங்க வைக்கிற டிப்ஸ் சொல்கிறார் அவர்.

முடிந்த வரை இரண்டு குழந்தைகளையும் ஒரே நேரத்தில் தூங்க வைக்கப் பழக்குங்கள். முதல் சில நாட்களுக்கு உதவிக்கு ஒருவரை வைத்துக் கொண்டு இதை முயற்சி செய்யலாம்.

தூங்கும் நேரத்தை குழந்தைகளுக்கு உணர்த்த சில விஷயங்களை ரொட்டீன் ஆக்க வேண்டும். உதாரணத்துக்கு தூங்கும் இடத்தை அமைதியாகவும், வெளிச்சம் இல்லாமலும் வைத்துக் கொள்வது, மடியிலோ, தோளிலோ போட்டுத் தட்டுவது, குழந்தைகளுக்குப் புரிகிற கதைகள் சொல்வது, தாலாட்டு பாடுவது போன்றவற்றை பின்பற்றலாம். இதெல்லாம் தூக்கத்துக்கான சிக்னல்கள் என குழந்தைகள் சீக்கிரமே புரிந்து கொள்வார்கள்.

Swaddling என்றொரு பழைய காலத்து டெக்னிக். குழந்தைகளை இதமான துணியில் சுற்றி வைப்பது அவர்களுக்கொரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். அந்த நினைப்பே தூக்கத்துக்குத் தயார்படுத்தும்.

குழந்தைகளை கட்டாயப்படுத்தித் தூங்க வைப்பதைத் தவிர்த்து, அவர்களாக தூக்கத்தில் ஆழவும் பழக்க வேண்டும். அப்போதுதான் ஆழ்ந்த நித்திரை சாத்தியம்.

இருவரையும் ஒரே தொட்டிலில் தூங்க வைப்பதா, தனித்தனியாகவா என்கிற கேள்வி அனேக அம்மாக்களுக்கு வரும். தாயின் கருவறையில் பக்கத்தில் இருந்ததால் இருவரையும் ஒன்றாகத் தூங்க வைப்பது அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால், அது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பதையும் பார்க்க வேண்டும். ஒன்றாக ஒரே தொட்டிலில் தூங்க வைக்கும் போது எதிர்பாராத மூச்சுத்திணறலோ, விபத்துகளோ ஏற்படலாம். எனவே, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி பக்கத்து பக்கத்தில் தனித்தனி தொட்டில்களில் தூங்க வைப்பதே சிறந்தது. இன்றைக்கு இரட்டையர்களுக்கான பாதுகாப்பான ஸ்பெஷல் தொட்டில்கள் வந்திருக்கின்றன. செலவு செய்யத் தயார் என்றால் அவற்றையும் உபயோகிக்கலாம்.

ஒரு குழந்தை அழுகிறது… இன்னொன்று அமைதியாக இருக்கிறது என்றால், அமைதியாக இருக்கும் குழந்தையை முதலில் தூங்க வையுங்கள். அதன் பிறகு அழுகிற குழந்தையைக் கவனிக்கலாம். இல்லாவிட்டால் அமைதியான குழந்தையின் தூக்கமும் கெட்டுப் போகும்.

இரண்டு குழந்தைகளின் தூக்க நேரம் என்பது அவர்களது வயதைப் பொறுத்தது அல்ல. அவர்களது உடல் எடையைப் பொறுத்தது. ஐடென்டிகல் ட்வின்ஸ் பெரும்பாலும் ஒரே மாதிரி தூங்குவதாகவும், Fraternal twins எனப்படுகிற ஒத்த இரட்டையரின் தூக்க நேரம் வேறுபடுவதாக வும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதிலும் இருவரின் எடையிலும் குணாதிசயங்களிலும் வித்தியாசங்கள் இருந்தால் தூக்க நேரமும் வேறுபடுமாம்.

முடிந்தவரையில் குழந்தைகளை இரவு நேரத்தில் விழித்திருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இரவில் பாலூட்டும் போதுகூட அறையை வெளிச்சமின்றி வைத்துக் கொள்ளுங்கள். இரவு நேரம் என்பது தூக்கத்துக்கானது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.குழந்தைகள் விழித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவர்களைத் தூக்கியே வைத்திருப்பதைத் தவிர்க்கவும்.

உலகமே மறந்துடும்!

எண்ணம் போல வாழ்க்கை’ என்பார்கள். தூத்துக்குடியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் வசந்தராணி விஷயத்தில் அது உண்மையாகி இருக்கிறது. இரட்டைக் குழந்தைகள் வேண்டும்… அதுவும் இருவரும் ஒன்று போல வேண்டும் என்கிற அவரது ஆசையும் வேண்டுதலும் அப்படியே பலித்திருக்கிறது. கல்யாணத்துக்கு முன்னாடியே ட்வின்ஸ் பத்தி நிறைய யோசிச்சிருக்கேன். கடவுள்கிட்ட வேண்டியிருக்கேன். அதை என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொன்னப்ப கிண்டல் பண்ணியிருக்காங்க. நான் ஆசைப்பட்டது போலவே ட்வின்ஸ் பிறந்தப்ப, அத்தனை பேரும் பாராட்டினதை மறக்கவே முடியாது…’’ பூரிக்கிறவருக்கு கவிலா ஜோபெஸ், நவிலா ஜோபெஸ் என இரண்டு குட்டி தேவதைகள்.

கர்ப்பம் உறுதியானதும் முதல் ஸ்கேன்… டாக்டர் ஸ்கேன் பண்ணிக்கிட்டே நர்ஸ்கிட்ட குறிப்புகள் சொல்லிட்டிருந்தாங்க. திடீர்னு பேச்சை நிறுத்திட்டாங்க. ஒரே அமைதி… கொஞ்ச நேரத்துல சிரிச்சுக்கிட்டே, உனக்கு ட்வின்ஸ்மா’னு சொன்னப்ப சந்தோஷத்துல நான் கத்தினது இப்பவும் ஞாபகமிருக்கு. நான் நினைச்சது அப்படியே நடந்தது ஒரு அற்புதம்னா, எங்கம்மாவோட கணிப்பு பலிச்சது இன்னொரு அற்புதம். ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடியே, என்னோட நடவடிக்கைகளைப் பார்த்துட்டு, உனக்கு ட்வின்ஸாதான் இருக்கும்’னு சொன்னாங்க.

அவங்க ஒரு தீர்க்கதரிசி. ஸ்கேன்ல அதை டாக்டர் உறுதிப்படுத்தினதும், நான் கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும், கண்ணுக்குத் தெரியற இன்னொரு கடவுளான என் அம்மாவுக்கும்தான் நன்றி சொன்னேன்…’’ நெகிழ்கிறவருக்கு, கர்ப்பம் சுமந்த நாட்களும் மறக்க முடியாதவையாக இருக்கின்றன. கடைசி ரெண்டு மாசங்களும் ரொம்ப சிரமப்பட்டேன். குழந்தைங்களோட அசைவு அதிகமாகிறப்ப, எனக்குள்ள படபடப்பும் அதிகமாகும். சில ேநரம் ரெண்டு குழந்தைங்களும் ஒரே பக்கமா நகரும் போது, வயிறு ஒரு பக்கம் ரொம்பப் பெரிசாகிடும்.

டெலிவரிக்கு தேதி குறிச்சிட்டாங்க. அதிகாலையில 6:15க்கு ஆபரேஷன்… நான் விடிய விடிய தூங்கவே இல்லை. ஆபரேஷன் தியேட்டருக்குள்ள கூட்டிட்டுப் போய் மயக்க மருந்து கொடுத்த பிறகுகூட கண்ணை மூடலை. பெண் குழந்தைங்கனு சொன்னதும் அந்த சந்தோஷத்துல கண்ணை மூடினேன்.முதல் அஞ்சு மாசம் பெரிசா கஷ்டம் தெரியலை. வயிறு நிறைஞ்சா தூங்கிடுவாங்க. ஆனா, மாசம் கூடக் கூட, அவங்க தூங்கற நேரம் குறைஞ்சிட்டே வரும். அப்புறம் சமாளிக்கிறதுதான் கஷ்டம்.

அதுலயும் என்னைப் போல வேலைக்குப் போறவங்களுக்கு பிள்ளை வளர்ப்புங்கிறது பெரிய சவால். அந்த வகையில நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. என்னைப் பெறாத பெற்றோரா இருந்து என் மாமனாரும் மாமியாரும் என் குழந்தைங்களைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்கதான் என் குழந்தைங்களுக்கு முதல் பெற்றோர் மாதிரி… இதோ என் குழந்தைங்க 6 வயசுல அடியெடுத்து வச்சிட்டாங்க. காலம் எப்படி ஓடினதுன்னே தெரியலை.

குழந்தை வளர்ப்பு… அதுலயும் ட்வின்ஸை வளர்க்கிறது கஷ்டம்னு சொல்லிக்கிட்டாலும், பழைய போட்டோக்களை எடுத்துப் பார்க்கிறபோது, அந்த நாட்கள் மறுபடி திரும்பாதானு ஏக்கமாதான் இருக்கு…’’ நீங்கா நினைவு களுடன் பேசுகிறார் இரட்டையரின் அம்மா. அழறது, சிரிக்கிறது, சேட்டை பண்றது, படிக்கிறதுனு எல்லாத்தையும் ரெண்டு பேரும் ஒரே நேரத்துலதான் செய்வாங்க. அதை ரசிச்சுக்கிட்டே இருந்தா, உலகமே மறந்துடும்…’’ – அழகு செல்லங்களின் அரவணைப்பில் தன்னை மறக்கிறார்.

வசந்தராணியின் டிப்ஸ்

ரெண்டு குழந்தைங்களையும் பிரிச்சு பார்க்கறதோ, பிரிச்சு வளர்க்கறதோ கூடாது. நமக்கிருக்கிற உடல், மனப் பிரச்னைகளை குழந்தைங்கக்கிட்ட காட்டக்கூடாது. அந்த மனநிலையோட அவங்களை அணுகக் கூடாது. குழந்தைங்களோட இருக்கும் போது, குழந்தையா மாறிடுங்க. அப்பதான் அவங்க எல்லா விஷயங்களையும் அம்மாகிட்ட பகிர்ந்துப்பாங்க…’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீர் குலைக்கும் மனநிலை கோளாறு (Disruptive Mood Dysregulation Disorder)!! (மருத்துவம்)
Next post குழந்தைகளின் பால் பல் பராமரிப்பு!! (மருத்துவம்)