அதிர்ச்சி மற்றும் மன உளைச்சல் சம்பவ மனநலக் கோளாறுகள் (Trauma – Stressor-Related Disorders)!! (மருத்துவம்)

Read Time:16 Minute, 55 Second

எல்லோருமே வாழ்க்கையில் ஏதேனும் அதிர்ச்சி / மன உளைச்சல் (Trauma / Stress) தரும் சம்பவங்களைச் சந்தித்திருக்கக் கூடும். உதாரணமாக… இயற்கைச் சீற்றம், கார் / ரயில் / விமான விபத்து, போர், பயங்கரவாதத் தாக்குதல், பிரியமானவர்களின் திடீர் மறைவு, வன்முறை, கடத்தல், பாலியல் / உடல்ரீதியான வன்முறை, குழந்தைப் பருவத்தில் புறக்கணிக்கப்படுதல்… இத்தகைய சம்பவங்களைத் தொடர்ந்து பயம், கவலை, தனிமையை நாடுவது, பதற்றம் கொள்வது இயல்பே. ஆனால், இவ்வித உணர்ச்சி / செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் சிலருக்கு, இயல்புக்கும் மீறி, தொடர்ந்து நீடித்து அதிலிருந்து விடுபட முடியாமல் மனநலக் கோளாறாக மாறவும் வாய்ப்புள்ளது.

பொதுவாக அதிர்ச்சி தரும் சம்பவத்தின் போது, ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சுரப்பதினாலும், நரம்பு மண்டலத்திலும் சில மாற்றங்கள்
ஏற்படுவதாலும், ஸ்ட்ரெஸ்ஸை சமாளிக்க உதவும். அவை அளவுக்கு அதிகமாக, ஒருவரால் சமாளிக்க முடியாமல் போகும் வேளையில், ஒருசில மனநலக் கோளாறுகளை ஏற்படுத்தி விடக் கூடும். இப்படி, அதிர்ச்சி தரும் சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து இக்கோளாறு கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. அதிர்ச்சிகரமான மன அழுத்த நோய் (Post Traumatic Stress Disorder-PTSD)
2. தீவிர மன அழுத்த நோய் (Acute Stress Disorder)
3. அனுசரிப்புக் கோளாறு (Adjustment Disorder)
4. ரியாக்டிவ் பற்றுதல் கோளாறு (Reactive Attachment Disorder)
5. சமூகத் தடை / பயமற்ற பற்றுதல் கோளாறு (Disinhibited social engagement Disorder).

குழந்தைகளைப் பாதிக்கும் அதிர்ச்சிகரமான மன அழுத்த நோய் (PTSD) மற்றும் தீவிர மன அழுத்த நோய் குறித்துப் பார்ப்போம்.

பொதுவாக அதிர்ச்சியூட்டும் சம்பவங்களின் போதும், அதன் பின்னரும், உடல் / மனது ஒருவித அதிர்ச்சியிலேயே இருக்கும். நாளாக நாளாக அதிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு பொதுவாக திரும்பி விடுவது வழக்கம். அப்படியின்றி, நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகும் போது, அது மனநலக் கோளாறாக இருக்கலாம்.

அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்த பின், அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து 3 நாட்களிலிருந்து ஒரு மாதம் வரை தொடர்ந்து காணப்பட்டால், அது தீவிர மன அழுத்த நோயாக (Acute Stress Disorder) இருக்கலாம். அறிகுறிகள் தொடர்ந்து நீடித்து ஒரு மாதத்துக்கும் மேல் காணப்பட்டால், அது அதிர்ச்சிகரமான மன அழுத்த நோயாக இருக்கலாம் (PTSD). பொதுவாக, சம்பவங்கள் நடந்து சில நாட்களோ, சில மாதங்கள் கழித்துக் கூட அறிகுறிகள் தொடங்கும் வாய்ப்புண்டு.

இவ்விரு கோளாறுகளுக்குமே அறிகுறிகள் ஒன்றுதான். தீவிரமான மன அழுத்த நோய் (Acute Stress Disorder) பாதித்துள்ள நபர்களுக்கு அதிர்ச்சிகரமான மன அழுத்த நோய் (PTSD) தாக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

ஆபத்துக் காரணிகள்

யார் இவ்வகை கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

1. குழந்தைப் பருவத்தில் ஏற்கெனவே சந்தித்திருக்கும் அதிர்ச்சி தரும் சம்பவம்
2. மன அழுத்தம் / மன உளைச்சல் கோளாறுகள் பாதிப்புள்ள குடும்பத்தினர்
3. சிறு வயதில், உடல்ரீதியான / பாலியல் வன்கொடுமை அனுபவம்
4. போதைப் பழக்கத்துக்கு ஏற்கெனவே அடிமையாகி இருத்தல்
5. வேறு மனநலப் பாதிப்பு இருத்தல்
6. தினசரி வாழ்வில் அதிக அளவு மன உளைச்சல்
7. அதிர்ச்சி சம்பவத்துக்குப் பின் போதிய ஆதரவு கிடைக்காதது
8. போதிய சமாளிக்கும் திறன் இல்லாதது.

அதிர்ச்சிகர மன அழுத்த நோய் (PTSD)

இந்த மனநோய் பெரியவர்களுக்கும் ஏற்படக் கூடும். 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிர்ச்சியூட்டும் அச்சுறுத்தும் சம்பவங்களால் நேரிடையாகப் பாதிக்கப்பட்டாலோ, பெற்றோர் பாதிக்கப்பட்டதை நேரிடையாகப் பார்த்தாலோ, கேள்விப்பட்டாலோ, இந்நோய் பாதிக்கும் வாய்ப்புண்டு.

சம்பவத்தின் தன்மை…

எத்தகைய சம்பவங்கள் PTSDஐ அதிகம் ஏற்படுத்தக்கூடும்?

ஒருவரின் உயிருக்கும் / பாதுகாப்புக்கும் சவாலாக உள்ள சம்பவம் (எ.டு: விபத்து).
அச்சுறுத்தும் சம்பவம் கடுமையாகவும் நீடித்தும் இருப்பது (எ.டு: கடத்தல்).
சக மனிதனால் இழைக்கப்படும் கொடுமைகள் (எ.டு: பாலியல் வன்கொடுமை).
எதிர்பாரா சம்பவம் மற்றும் ஒருவரின் கட்டுப்பாட்டில் இல்லாமல், தப்பிக்க
இயலாமல் இருக்கக்கூடிய சம்பவம் (எ.டு: வீட்டில் திருடர்களின் திடீர் தாக்குதல்).

முக்கிய அறிகுறிகள்…

A. அதிர்ச்சியூட்டும் நிகழ்வு அறிகுறிகள்

1. திரும்பத் திரும்ப தொந்தரவு / பயத்தை ஏற்படுத்தும் சம்பவ நினைவுகள் (Flashback)
2. பயமுறுத்தும் கெட்ட கனவுகள்
3. சம்பவம் / நிகழ்வு திரும்ப தனக்கு ஏற்படுவது போல உணர்தல் – அதை விளையாட்டு / படம் மூலமாக திரும்பத் திரும்ப வெளிப்படுத்துதல்
4. சம்பவத்தை ஞாபகப்படுத்தும் விஷயங்களை கேட்டாலோ / பார்த்தாலோ உடல்ரீதியான மாற்றங்கள் ஏற்படுதல் (எ.டு: இதயத்துடிப்பு அதிகமாகுதல், மூச்சு வாங்குவது, வேர்த்துக் கொட்டுவது…)
5. சம்பவம் நினைவூட்டப்பட்டால், மிகுந்த வேதனைக்கு உள்ளாகுவது.

B.தவிர்த்தல் மற்றும் உணர்ச்சி அறிகுறிகள்

1. சம்பவம் சம்பந்தப்பட்ட இடம், பொருட்கள் மற்றும் செயல்பாடுகளைத் தவிர்த்தல்
2. சம்பவம் சம்பந்தப்பட்ட மனிதர்கள், பேச்சு, சூழ்நிலையைத் தவிர்த்தல்
3. எதிர்மறை உணர்ச்சி நிலை (பயம், குற்றஉணர்வு, கவலை, வெட்கம், குழப்பம்)
4. முக்கிய செயல்பாடுகளில் குறையும் ஆர்வம் (எ.டு: விளையாட்டில் நாட்டமின்மை)
5. தனிமை உணர்வு / தனிமை நாடுவது மற்றும் உணர்ச்சிகள் மரத்துப்போன தன்மை.

C.விழிப்புநிலை மற்றும் உணர்ச்சி

தூண்டுதல் குறித்த அறிகுறிகள்

1. எளிதில் எரிச்சல், அதிக கோபம்
2. அதீத விழிப்பு நிலை / எச்சரிக்கை
3. அதீத பதற்றம்
4. கவனம் செலுத்துவதில் பிரச்னை
5. தூங்குவதில் பிரச்னைகள்.

இவற்றில், ஒவ்வொரு தலைப்பிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் ஒரு மாதத்துக்கு மேலும் காணப்பட்டால், அது PTSDயாக இருக்கலாம். உடனே மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது அவசியம். சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில், வேறுபல உடல்நல / மனப் பிரச்னைகளுக்கும் இது வித்திடும். குடும்பத்தையும் உறவுகளையும் பாதிக்கும்.PTSDயில் இன்னொரு பிரிவும் உண்டு. அது Dissociative PTSD எனப்படுகிறது. இதில், மேலே பார்த்த அறிகுறிகளுடன், மேலும் சில அறிகுறிகளும் சேர்ந்து காணப்படும்.

தன்னிலை இழத்தல் / உலகம் பொய் என நம்பும் PTSD வகை அறிகுறிகள் (Dissociative Type PTSD)…
அதிர்ச்சி தரும் சம்பவம் நினைவுக்கு வரும் வேளையில் இவர்கள், தன்னிலை மறந்து தன்னிலிருந்து விலகி இருப்பது போல உணர்வார்கள். அல்லது தன்னைச் சுற்றியுள்ள உலகம் பொய் (Depersonalisation / Derealisation) என்று நம்புவார்கள். கனவிலிருப்பது போலவே உணர்வார்கள். தன்னைச் சுற்றி நடப்பது நிஜமில்லை எனவும் நம்புவார்கள். மன உளைச்சல் தரும் பிரச்னைகளிலிருந்து இவர்கள் இவ்விதமாக தன்னை அறியாமலேயே தப்பித்தாலும், இது ஒரு விரும்பத்தகாத அனுபவமே.

சிகிச்சை…

PTSD என கண்டறியும் முன், இதன் அறிகுறிகள் மருந்து அல்லது வேறு உடல் நோயினால் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவத்தை, ஆரோக்கியமான முறையில் கையாள உதவி செய்யப்படும். அது சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் அவர்களைத் தவிர்க்க விடாமல், உணர்ச்சி மற்றும் உணர்வுகளை கையாளவும் / வெளிப்படுத்தவும் வழிமுறைகள் கற்றுத் தரப்படும்.

மொத்தத்தில் வாழ்க்கையில், சம்பவத்தின் நினைவுகள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட சிகிச்சை உதவி புரியும். திரும்பவும் உறவுகளுடன் பழையபடி மகிழ்ச்சியாக இருக்கவும் உதவும். இதற்கு, அறிவாற்றல் – நடத்தை சிகிச்சை (Cognitive Behavior Therapy), குடும்ப சிகிச்சை (Family Therapy), இ.எம்.டி.ஆர். (EMDR) சிகிச்சை ஆகிய முறைகள் பெரிதும் உதவுகின்றன. சம்பவம் தந்த அதிர்ச்சியால், உறைந்து போன மூளையின் செயலாற்றலை மீட்டு, ஆரோக்கியமாக செயல்பட வைக்கவும் இவை உதவும்.

பெற்றோர் கவனத்துக்கு…

PTSDயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குணமடைய சிறிது காலமாகும், படிப்படியாகத்தான் முன்னேற்றம் தெரியும். சில நேரங்களில் பழைய ஞாபகங்கள் நிலைத்து விடவும் கூடும். ஆனால், அதை சமாளிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்வதன் மூலம், நிறைவாக வாழ முடியும். பெற்றோர் பொறுமை காத்து, அவர்களின் அறிகுறிகளைப் புரிந்து கொள்வதும் அவசியம். எவையெல்லாம் அவர்களுக்கு கொடூர நினைவுகளை ஏற்படுத்துகிறது எனத் தெரிந்து கொண்டு, அவ்வேளையில் அவர்களை ஆறுதலடையச் செய்வது அவசியம்.

குணமடையும் தருவாயில், நடந்த சம்பவத்தை அவர்கள் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடம், ‘பழசை மறந்து விடு’ எனக் கூறாமல், அவர்கள் கூறுவதைப் பரிவுடன் காது கொடுத்து கேட்க வேண்டும். PTSD உள்ள காரணத்தினால், உங்கள் பிள்ளைகள் கோபப்பட்டாலோ, உங்களிடமிருந்து விலகிச் சென்றாலோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் வேண்டுமென்றே அப்படிச் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுதல் நல்லது.

அதே வேளையில், அவர்களாகவே தங்கள் துயர அனுபவங்களைக் கூற சங்கடப்படுவார்கள். அவர்களை, அது குறித்து பேசச் சொல்லி நச்சரித்தால், நிலைமை இன்னும் மோசமாகி விடக்கூடும். எப்போது நினைத்தாலும் உங்களிடம் மனம் விட்டு பேசலாம் என்ற நம்பிக்கையை அளிப்பது மட்டுமே போதுமானது.

சில டிப்ஸ்…

1. பொதுவாக தனிமையை நாடும் இவர்களுக்கு, உறவுகள் அளிக்கும் ஆதரவு மிகவும் அவசியம். இதே போல பாதித்தவர்களின் நட்பு வட்டாரம் (Support Groups), PTSDயை சமாளிக்க உதவியாக இருக்கும்.
2. யோகா / தியானம் உதவும்.
3. ஏதேனும் விளையாட்டில் சேர்வது (எ.டு: டென்னிஸ், கிரிக்கெட்).
4. நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவது
5. குளிர் பிரதேசத்துக்குச் சென்று அமைதியான சூழ்நிலையில் இருப்பது. வரும் இதழில், குழந்தை மற்றும் டீனேஜரை பாதிக்கும் அனுசரிப்புக் கோளாறுகள் (Adjustment Disorders)

கீதாவின் கலக்கம் ஏன்?

கீதாவுக்கு வயது 6. உற்சாகமான குழந்தை. ஒரு நாள் அவள் அப்பா எதிர்பாரா விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அப்போது, கீதாவும் அம்மாவும் உடனிருந்தனர். குடும்பத்துடன் திரைப்படத்துக்குச் சென்று, இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது இக்கோர விபத்து நடந்தது. அம்மாவும் கீதாவும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். கீதாவுக்கு விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. அப்பா ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் பிணமாக கிடந்த நிலை, அவளுக்கு திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.

அதன் பின் பேசுவதையே தவிர்க்க ஆரம்பித்தாள். இரவில் பலமுறை கெட்ட கனவு கண்டு பயந்து விழித்து எழுவாள். ரத்தம், சாலை விபத்து போன்ற விஷயங்களையே மையமாக வைத்து, படங்கள் வரைய ஆரம்பித்தாள். ஒரு நாள் அவளின் சித்தி மகளுக்கு கையில் பிளேடு கிழித்து ரத்தம் வந்தது. அதைப் பார்த்த கீதாவின் உடல் முழுவதும் அதிர்ச்சியில் நடுங்க ஆரம்பித்தது, பெரிதும் பதற்றமடைந்தாள். அவளை சமாதானப்படுத்தவே ரொம்ப நேரம் பிடித்தது.

எதிலும் ஆர்வமில்லாமல் தனிமையை நாட ஆரம்பித்தாள். எப்போதும், ஏதோ ஒரு பயத்திலேயே ஆழ்ந்திருந்தாள். இருசக்கர வாகனத்தில் ஏறுவதையும் முற்றிலும் தவிர்த்தாள். படிப்பிலும் அவளுக்கு கவனம் குறைந்தது. முன்பு கற்றுக் கொண்ட விஷயத்தை மறக்க ஆரம்பித்து இருந்தாள். கீதாவின் தாயும் வருத்தத்தில் இருந்ததால், இதையெல்லாம் கவனிக்கவில்லை.

இன்னொரு நாள், அவள் பாட்டி, சம்பவத்தைப் பற்றி பேசுவதை உள்ளேயிருந்து கேட்ட கீதா, அலற ஆரம்பித்தாள். விபத்து நடந்து இரு மாதம் கழித்துத்தான் உளவியல் ஆலோசகரிடம் அழைத்து வந்தனர். கீதாவுக்கு PTSD இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சையும், அவள் தாய்க்கு அறிவுறுத்தலும் (Psychoeducation) அளிக்கப்பட்டது. இப்போது கீதா, மெல்ல அப்பிரச்னையிலிருந்து விடுபடத் தொடங்கி உள்ளாள். பற்றிப் பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையின் அழுகைக்கு அர்த்தங்கள் ஆயிரம்! (மருத்துவம்)
Next post வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல! (அவ்வப்போது கிளாமர்)