மல்லிகா ஷெராவத்தும் நான்தான்… அசினும் நான்தான் ! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 56 Second

‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் ஒரு பாம் ப்ளாஸ்ட் சீன். ஸ்டென்ட் பாய் 10 பேரை கூட்டிட்டுப் போனாங்க. அப்ப நான் ரொம்பவே ஸ்லிம்மா க்யூட்டா இருந்தேன். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் என்னை அதில் த்ரிஷாவுக்கு டூப்பா போட்டார். தொடர்ந்து எனக்கு ஹீரோயின் டூப் கேரக்டராக வரத் தொடங்கியது எனப் பேசத் தொடங்கிய ஹீரோயின் டூப் நசீர், நடிகை த்ரிஷாவில் தொடங்கி ஐஸ்வர்யா ராய், ரீமா சென், கோபிகா, சிம்ரன், ஜோதிகா, பிரியா மணி, லைலா, முமைத்கான், நயன்தாரா என பட்டியல் தொடர்கிறது.

‘‘டூப்னா சண்டைக் காட்சிகள் மட்டுமல்ல, ஹீரோயின் ஹேங்கிங் சீன், ஃபயர் சீன், பாம் ப்ளாஸ்ட் சீன் என எல்லாத்துக்கும் டூப்புக்கு வேலை இருக்கும். டமால்னு அடிச்சு ஹீரோயின் கீழ விழுகுற சீன் என்றாலும் அந்த இடத்தில் டூப் போடுவாங்க’’ என்றவர் லேட்டஸ்ட் ஹீரோயின்ஸுக்கும் டூப் என்றாலும் இவரைதான் அழைக்கிறார்களாம்.

‘அரண்’ படத்தில் மட்டும் ஒரு சோலோ பைட் சீனை சக்தி வர்மா மாஸ்டர் எனக்குக் கொடுத்தார். 2002ல் சினிமாவுக்குள் வந்தேன். 18 வருடம் ஆச்சு. எவ்வளவுதான் சினிமாவில் கத்துக்கிட்டாலும் இப்பவும் ஸ்டார்ட் கேமரா என்றால் சின்ன பயம் இருக்கும். இந்த தொழில்தான் எனக்கு தெய்வம், முதல் மனைவி எல்லாம். ஸ்டென்ட் யூனியன்தான் எங்கள் தாய் வீடு.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள வந்துட்டா கில்லி நான். டூப் போட்டாச்சுன்னா யாரிடமும் பேச மாட்டேன். ஹீரோயின் எப்படி நடக்குறாங்க.. எப்படி கீழே விழுகுறாங்க என எல்லாத்தையும் கவனித்து, பக்காவா இமிட்டேட் செய்வேன். கீழே விழுந்தாலும் அவுங்க மாதிரியே விழுவேன். அப்பதான் ஷாட் மேட்சாகும். படம் பார்க்கும்போது வித்தியாசமே தெரியாம அவுங்க செய்த மாதிரியே கன்டினியூட்டி இருக்கும்.

ஹீரோயின்கள் எடுக்கும் ஃபேசியல், வேக்ஸின், த்ரெட்டிங் எல்லாம் நானும் எடுப்பேன். கால் தெரிகிற மாதிரி டிரெஸ் அணிகிற காட்சி இருந்தால் கை, கால்களை வாக்ஸின் செய்து சைனிங்கா வச்சுக்குவேன். தலைக்கு விக்தான் என்றாலும் ஃபிக்ஸ் பண்ண வசதியா முடி வளர்த்திருக்கேன் என க்ளிப் அணிந்த தன் கூந்தலை காட்டும்போது, அவரின் காது மடல்களிலும் க்யூட்டான குட்டி குட்டி கம்மல்கள் தெரிகிறது.

ஹீரோயின் என்ன டிரெஸ் படத்தில் போடுறாங்களோ அதே விலை உடையினை நாங்களும் போடுவோம். என்னோட காஸ்டியூமும் எப்பவும் பார்க்க பக்காவா இருக்கும். மாஸ்டரிடம் கூடுதலா நேரம் கேட்டு மேக்கப் போட்டுக்குவேன். சிலர் பெண் என நினைத்து என்னை சீண்டிய சம்பவங்களும் உண்டு என சிரித்தவர், நயன் மேம்க்கு என்னை ரொம்பவே பிடிக்கும். அவுங்களோட தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படத்திலுமே நிறையவே டூப் போட்டுஇருக்கேன். வாங்க நஸிம்மான்னுதான் நயன் மேம் என்னை கூப்புடுவாங்க என முகமெல்லாம் புன்னகைக்கிறார்.

‘தசாவதாரம்’ படத்தில் மல்லிகா ஷெராவத், அசின் இருவருக்கும் நான்தான் டூப். படத்தில் ட்ரெயின் சீனில் ட்ரெயின் கேட்ச் பண்ணும்போது… கமல் சார் முதுகில் தொங்கிக்கொண்டே ‘பெருமாளே.. பெருமாளேன்னு’ கத்தியவாரே போவேன். அப்போது நடுங்கிக்கிட்டே கமல் சார் முதுகில் தொங்கினேன்.. அதற்கு கமல் சார் அசின் சும்மா நிக்கிது.. பிஸின் ஏன் நடுங்குதுன்னு சிரித்தவாரே கேட்டார். கே.எஸ்.ரவிக்குமார் சார் என்னை என்னடா பொண்ணு மாதிரியே பக்காவா இருக்கன்னு எப்பவும் கிண்டலடிப்பார்.

ஹீரோயின் டூப்ன்னாலே கமல் சார், நயன் மேம், த்ரிஷா மேம் என எல்லோருமே என்னைத்தான் ரெக்கமென்ட் பண்ணுவாங்க. நான் அவ்வளவு பெர்ஃபெக்டா ஹீரோயினுக்கு மேட்சாவேன். ‘மலைக்கோட்டை’ படத்தில் கனல் கண்ணன் சார் மாஸ்டர். ஹீரோ விஷால் சார். அதில் நடிகை ப்ரியா மணிக்கு நான் டூப். என்னைப் பார்த்து விஷால் சார் பெண் என நினைத்து ஏமாந்து, ஸ்டென்ட் கார்டு லேடீஸ்க்கும் கொடுக்குறாங்களான்னு மாஸ்டரிடம் கேட்க, மாஸ்டர் என்னை பாம்பே கேர்ள் எனச் சொல்ல, இவ்வளவு க்யூட்டான பெண் ஸ்டென்ட்ல இருக்காங்களேன்னு நினைத்து விஷால் சார் என்னையே குறுகுறுன்னு பார்க்கிறார். ப்ரியா மணிக்கும் எனக்கும் சிரிப்பாக இருந்தது என்கிறார் நினைவில் மூழ்கி.

அப்பா சினிமாவில் ஸ்டென்ட் மேன். சின்ன வயதில் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கெல்லாம் கூட்டிட்டுப் போனதில்லை. ஒரு நாள் நான் ஷூட்டிங் பார்க்க வருவேன்னு அவருக்கிட்ட ரொம்பவே அடம் பிடிச்சேன். அப்ப ஏழாவது படிக்கிறேன். ஒடிசா மொழிப் படத்தில் ஒரு கார் சேஷிங் காட்சி. அதுவரை அப்பா சினிமாவில் என்ன செய்யுறாருன்னே எனக்குத் தெரியாது.

அவருக்கு ஹெல்மெட் பெல்ட் மாட்டி காருக்குள் உட்கார வச்சாங்க. காருக்குள் எதுக்கு ஹெல்மெட் போடுறாங்கன்னு நான் யோசிக்க.. மாஸ்டர் ரெடியா ரெடியான்னு அப்பாவிடம் கேட்டாரு. எதிர்ல இருந்த ரேம்ப் மேல டாப் கியர்ல காரோட ஏறி அப்பா கீழே விழுந்தார். அப்பதான் எனக்கு அப்பா செய்யும் வேலை தெரியத் தொடங்கியது. எனக்கும் அந்த ஃபீல்டில் ஆசை வர படிப்பில் ஆர்வம் குறைந்தது. என் பிடிவாதத்தைப் பார்த்து சண்டைப் பயிற்சிகளுக்கு அப்பா அனுப்பினார். என் 18 வயதில் கொஞ்சம் கொஞ்சமாக பீல்டுக்குள் தலை காட்டத் தொடங்கினேன்.

ஸ்டென்ட் மாஸ்டர் விக்ரம் தர்மாவின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. இப்போது அவர் உயிருடன் இல்லை. ‘அடவி ராமுடு’ என ஒரு தெலுங்கு படம். வைசாக்ல இராசமுந்திரி பிரிட்ஜில், கோதாவரி ஆற்றுக்கு மேலே 140 அடி உயரத்தில் சேஷிங் சீன் எடுக்கிறார்கள். ஒரு பக்கம் போலீஸ் துரத்த எதிர் பக்கம் ரவுடீஸ் அட்டாக் பண்ணும்போது ஹீரோ பிரபாஸ், ஹீரோயின் ஆர்த்தி அகர்வால் இருவரும் பிரிட்ஜில் இருந்து யமஹா பைக்கோடு கீழே குதிக்கணும். படத்தில் நான் ஆர்த்தி அகர்வால் டூப். நான் புதுப் பையன் என்பதால், குறிப்பிட்ட சீனுக்கு டூப் போட கிட்டதட்ட சீனியர்கள் 30 பேர் வரை கேட்டு மறுத்துட்டாங்க. படத்தில் அது மெயினான ஷாட். மாஸ்டர் டென்ஷன் ஆனார். இருந்தாலும் இரண்டு நாள் கழித்து என்னை அழைத்து ஜம்ப் பண்றியான்னு கேட்டார். வாய்ப்ப நழுவ விடக் கூடாதென ஒத்துக் கொண்டேன்.

கோதாவரி ஆற்றில் குதிப்பது பயங்கர ரிஸ்க். முதலைகள் இருக்கும்னு சிலர் சொல்ல, பிழைப்பது கடினம் என்று வேறு காதில் விழுந்தது. இந்த விசயம் என் அப்பாவுக்கு தெரியவர அவர் என்னைக் கத்தத் தொடங்கினார். அந்த வயதில் எனக்கு பயம் தெரியலை. ஜெயிக்கனுங்கிற வெறி மட்டும்தான் இருந்தது. நான் மீண்டு வருவேனா வரமாட்டேனா யாருக்கும் தெரியாது. முதலில் கொஞ்சம் உதறலாக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பில் துணிந்து நடித்தேன்.

குறிப்பிட்ட அந்த ஷாட்டுக்கு 8 கேமரா வைத்தார்கள். பிரபாஸ்க்கு மணிகண்டன் என்பவர் டூப். இருவரும் யமஹா பைக்கில பிரிட்ஜ்ல டபுள்ஸ் வந்து குதிக்கிறோம். எங்க பைக் மேலிருந்து கீழ ரொம்ப நேரம் போயிக்கிட்டே இருக்கு. அவ்வளவு உயரம். கொஞ்ச நேரத்தில் இரண்டு டயரோடு பைக் தண்ணீரில் மிதக்க வலது கை விரல் உள்ளே போனதோடு கையிலும் நல்ல அடி. என் மேல சுத்தமா உடையே இல்லை. தண்ணீரில் அடிச்சுட்டு போயிருச்சு. மணிகண்டனைக் காணோம். அவர் என் ரூம்மேட் வேறு. அழுதுகொண்டே அவரைத் தேடினேன். 10 நிமிடம் கழித்து நினைவின்றி மேலே மிதந்து வர, அவரது முகத்தில் ஓங்கி ஒரு அடி விட்டேன். மூக்கில் ரத்தம் வர மூச்சு விடத் தொடங்கினார்.

சீன் முடிந்து போட்ல ஏறி மேல வந்த போது ஸ்பாட்ல இருந்த எல்லாரும் எங்களைப் பார்த்து அழுதாங்க. ஷாட் ஓ.கே ஆனதில் மாஸ்டர் என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து என் பேரை காப்பாத்திட்டன்னு பாராட்டினார். ஸ்டென்ட் யூனியனிலும் என்னை பெருமையாகப் பேசத் தொடங்கினார். மிலிட்டெரி மாதிரி பல சாகசங்களை நாங்கள் செய்தாலும் எங்களுக்கு அங்கீகாரம் என்பதே இல்லை என்றார். பெண் கொடுக்கக்கூட யோசிக்கிறாங்க எனச் சிரிக்கிறார்.

சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் பையன் திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் நண்பர். அவரிடம் கொஞ்ச நாள் அசிஸ்டென்டா இருந்தேன். அப்போது சங்கர் சாரின் ‘ஐ’ படம் சூட்டிங். நடிகர் விக்ரம், எமி ஜாக்சன் பாடலில் சின்ன சேஷிங் சீன். கொடைக்கானல் மலை வளைவில் ஷூட்டிங் போகுது. சுப்பராயன் மாஸ்டர் தம்பி தினேஷ் மற்றும் கிஷோர்னு இருவர் டூப் போடுறாங்க.

ஹேர்பின் பெண்ட் வளைவில் ஐகான் காரில் வந்து திரும்பும்போது வண்டி ஸ்கிட்டாகி பெண்டில் கவுந்து பயங்கரமாக உருண்டு அதள பாதாளத்தில் விழ, எல்லோரும் பள்ளத்தில் குதித்து காரோடு இருவரையும் தேடுறோம். கார் நசுங்கி வளைஞ்சு கிடக்க உள்ளிருந்த இருவரும் பிழைச்சுட்டாங்க. என் கண் முன்னால் நடந்த பயங்கரமான சம்பவம் அது என்றவர், பட நிறுவனத்தோடு அக்ரிமென்ட் மட்டும்தான் எங்களுக்கு. சம்மதித்துதான் நடிக்கிறோம். ஸ்பாட்டில் அடிபட்டால் தயாரிப்பாளர்களின் முதலுதவி கிடைக்கும். பெரிய ஆர்டிஸ்ட் என்றால் மனிதாபிமானத்தில் உதவுவார்கள். யூனியன் சப்போர்ட் ஓரளவு கிடைக்கும். மற்றபடி பணி பாதுகாப்பு, இன்சூரன்ஸ் எதுவும் எங்களுக்கு இல்லை.

காலையில் போனால் இரவு வீடு வந்து சேருவோமான்னு எங்களுக்கே தெரியாது. அந்த அளவுக்கு ரிஸ்க்கான வேலைதான். மேல இருந்து குதின்னா குதிக்கணும். கண்ணாடி க்ளாஸ்க்குள் பைக்கோட உள்ள போன்னா புகுறணும். சேதாரம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் செய்கூலி பிறகுதான். சில நேரங்களில் க்ளாஸ் பீஸ்கள் உடலை கிழிப்பதோடு மூக்கிலும் ஏறும். ரிஸ்க்கான சீன்களில் நடிக்கும்போது கண்டிப்பா அடிபடும்னு தெரியும். ஆனால் கடன் கொடுக்க வேண்டியது நினைவுக்கு வர குதிச்சுருவோம்… இதுதான் எங்க நிலை என்றவரின் கைகளில் ஆங்காங்கே தழும்புகள் தெரிய பாடியிலும் ஏகப்பட்ட டேமேஜ் இருக்கு என்கிறார். ஆனாலும் திரும்பவும் இந்தத் தொழிலுக்குத்தான் வருவோம்.

ஷூட்டிங் கிளம்பும் முன் சேஃப்டி பேக்கைதான் தெய்வமா வணங்குவோம். சேஃப்டிக்கு பேடுகளை அணிந்தாலும் உடம்பில் கட்டாயம் அடிபடும். வீட்டுக்குப் போனால் எங்கெல்லாம் உடலில் அடிபட்டிருக்கு என்றுதான் என் மனைவி முதலில் பார்ப்பாங்க. என் வேலை இதுதான்னு மறைக்காமல் என் குழந்தைகளுக்கு புரிய வைத்திருக்கிறேன். நான் ஹீரோயின் டூப் போடுவதால் ஸ்கின் எனக்கு ரொம்ப முக்கியம். ஃபயர் சீன்களில் டூப் போடுவதைத் தவிர்ப்பதோடு, எப்போது வெளியில் வந்தாலும் முகத்தை கவர் செய்து என் அழகை ரொம்பவே பராமரிப்பேன் என்றவர் அடுத்த ஷூட்டிங்கிற்கு தயாராகும் பரபரப்புடன் விடை பெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைப்புள்ள உருவான விதம் – வடிவேலு!! (வீடியோ)
Next post சொப்பு பாத்திரங்களில் ரியல் சமையல்!! (மகளிர் பக்கம்)