நினைத்தாலே போதும்…!! (மருத்துவம்)
அடடா… காதலர் தினம் முடிந்தும் அதைப்பற்றிய செய்தியா என்று அங்கலாய்க்க வேண்டாம்… இது உங்கள் இதய நலம் சம்பந்தப்பட்ட செய்தி.
காதலுக்கும் ரத்த அழுத்தத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி சுவாரஸ்யமான ஆராய்ச்சி ஒன்றை அமெரிக்காவின் அரிஸோனா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்துள்ளனர். பிடிக்காதவர்களையோ, பிடிக்காததையோ பற்றி நினைக்கும்போது மனதுக்குள் கொந்தளிப்பான எண்ணங்கள் உண்டாவதுண்டு. அதையே பேச்சுவழக்கில் ‘எனக்கு BP-யை அதிகமாக்காதீங்க…’ என்றும் சொல்கிறோம்.
இதேபோல அன்புக்குரியவர்கள் பற்றி நினைக்கும்போது ரத்த அழுத்தம் சீராகிறது என்பதை பல்வேறு மருத்துவ உபகரணங்களின் வழியே ஆதாரப்பூர்வமாகவே கண்டறிந்துள்ளனர்.இந்த ஆராய்ச்சிக்காக 102 பேரை அரிஸோனா பல்கலைக்கழகம் தேர்வு செய்தது. பங்கேற்பாளர்கள் அனைவருமே காதல் உறவுகளில் இருக்க வேண்டியது கட்டாயம் என்பதால் அத்தகையவர்களே தேர்வாகினர்.
ஆராய்ச்சியின் முதற்கட்டமாக ஒவ்வொருவருக்கும் மிகவும் கடினமான வேலை கொடுக்கப்பட்டது. அந்த வேலையைச் செய்யும்போதே, அவர்களது ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு வேறுபாடு (Heart beat variation) போன்ற சோதனைகளை மேற்கொண்டனர்.
பரிசோதனையின்போது காதலரின் அருகாமை, காதலரைப்பற்றிய கற்பனை மற்றும் அன்றைய தினத்தின் நிகழ்வுகள் என்ற மூன்றுவிதமான சூழல்களை மனதில் ஓடவிட்டு இந்த சோதனைகள் மேற்கொண்டார்கள்.ஆய்வின்போது காதல் துணையின் அருகாமை, காதலர் பற்றிய கற்பனை செய்தபோது ரத்த அழுத்தம் சீராக இருந்தது.
இதே ஆய்வின் அடுத்த கட்டமாக காதலர் பற்றி நினைக்காமல் அன்றைய நாளின் பிரச்னைகள், வேறு நிகழ்வுகள், சிந்தனைகள் எதுவும் இல்லாமல் இருக்க முயன்றவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்திருந்தது.
மன அழுத்தமான சந்தர்ப்பங்களில், தங்கள் துணையோடு இருப்பது அல்லது துணையை நினைத்துக் கொள்வதன்மூலம் உடலியல்ரீதியான முக்கிய விளைவை நிர்வகிக்க முடிகிறது என்பது ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிய வந்தது. Psychophysiology இதழில் இந்த ஆய்வுக்கட்டுரை வெளியாகியிருக்கிறது.
Average Rating