By 12 June 2021 0 Comments

மதிய உணவை மனசுக்கு பிடிச்சு சாப்பிடலாமே!! (மகளிர் பக்கம்)

நான் அடிப்படையில் அசைவ பிரியன். எங்க வீட்டில் அப்படி ஒரு சமையல் அம்மா செய்வாங்க. ராமநாதபுரம், பெருணாலி கிராமம் தான் என்னோட சொந்த ஊரு. கடலோரப் பகுதி என்பதால், மீன் உணவுகளுக்கு பஞ்சமே இருக்காது. படகு வந்ததும், எங்க வீட்டுக்காகவே எல்லா வகை மீன்களையும் கூடை கூடையாக தனியா எடுத்து வச்சிடு வாங்க. அப்பா அந்த மாவட்டத்தின் போர்ட் மெம்பரா இருந்தார். பிரசிடெண்ட் என்பதால், முதலில் எங்க வீட்டுக்கு என தனி கூடை எடுத்து வச்சிடுவாங்க என்று தன் உணவு பயணம் பற்றி பேசத் துவங்கினார் நடிகர் வேலராமமூர்த்தி.

‘‘எங்க காலத்தில் எல்லாம் வீசை கணக்கு தான். ஒரு வீசைன்னா ஒன்னே கால் கிலோ கறி இருக்கும். மீன் மட்டும் இல்லை ஆட்டுக்கறி, கோழின்னு அம்மா வகை வகையா செய்வாங்க. கோழி அப்ப எல்லாம் பாய்லர் கோழி கிடையாது. வீட்டுல தான் வளர்ப்பாங்க. நல்ல கெடா கோழியை தான் அடிச்சு குழம்பு வைப்பாங்க. மசாலா எல்லாம் அம்மியில் தான் அரைப்பாங்க. குழம்பு கொதிக்கும் போது வீடே மணக்கும். அதேபோல ஆட்டுக்கறியும் நம்ம கண் முன்னால தான் தோலுறிச்சு தருவாங்க. பழைய கறி எல்லாம் விற்க மாட்டாங்க. கறியை கூட வாழை இலையில் தான் மடிச்சு தருவாங்க. வீட்டுக்கு வருவதற்குள் அதில் இருக்கும் நான்கைந்து கறித்துண்டுகளை பருந்து பதம் பார்த்திடும்’’ என்றவர் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் சாப்பிடுவதற்காகவே வீட்டுக்கு ஓடி வருவாராம்.

‘‘பள்ளிக்கூடம் முடிஞ்சதும், டியூஷன் இருக்கும். முடியவே இரவு ஆயிடும். வயிறு நிறைய பசியோட வீட்டுக்கு ஓடி வருவேன். வந்ததும் கை கால் எல்லாம் கழுவிட்டு புத்தக பையை ஒரு பக்கம் கிடத்தி விட்டு நேரா அலமாரிக்கு தான் போவேன். அங்க தான் அம்மா சாப்பாட்டை சட்டியில் வச்சு இருப்பாங்க. அந்த கதவை திறக்கும் போதே அதில் இருந்து ஒரு மணம் வரும் பாருங்க நினைக்கும் போதே இப்பக்கூட என்னுடைய நாவில் எச்சில் ஊறும். சட்டியில் சாப்பாடு, மற்றொரு சட்டியில் மீன் குழம்பு, மீன் பொரிச்சு வச்சு இருப்பாங்க. அதை சாப்பிடும் போது அவ்வளவு சுவையா இருக்கும். அந்த மீன் குழம்பில் என்ன மீன் போட்டு இருக்காங்களோ அந்த மீனுடைய வாடை வரும். இப்ப புளிக்குழம்பில் தான் மீனை போட்டு மீன் குழம்புன்னு சொல்றாங்க. அதில் புளி வாடை தான் வருதே தவிர மீனுடைய மணம் வருவதில்லை.

அதே போல சாம்பார் வச்சாக்கூட பருப்பு வாசனை தூக்கும். தேங்காய் சட்னியில் அம்மா வெறும் பச்சைமிளகாய் மட்டும் இல்லை கொஞ்சம் இஞ்சியும் வச்சு அரைப்பாங்க. அது அவ்வளவு ருசியா இருக்கும். செக்கு எண்ணையில் தான் சமைப்பாங்க. இப்படி சின்ன வயசில் எங்க வீட்டில் நல்லா சாப்பாடு சாப்பிட்டு தான் வளர்ந்தேன். அப்பா சாப்பாட்டு பிரியர். அவருக்கு சாப்பாடு ருசியா இருக்கணும். அம்மா, அப்பாவுக்கு சாப்பாடு போடும் போது யாரையும் அனுமதிக்க மாட்டாங்க. எங்களை கூட விடமாட்டாங்க. அவரின் கடைசி நாட்க ளான 85 வயது வரை வாழை இலையில் தான் சாப்பிட்டார்னா பாருங்க’’ என்றவர் அதன் பிறகு மிலிட்டரியில் சேர்ந்துள்ளார். ‘‘எனக்கு 16 வயசு இருக்கும். மிலிட்டரியில் போய் சேர்ந்தேன். அங்கு ராணுவ சாப்பாடு சொல்லவே வேண்டாம். ரொம்ப ஆரோக்கியமான சாப்பாடு இருக்கும்.

இவ்வளவு தான் சாப்பிடணும்னு அளவு எல்லாம் கிடையாது. ஒரு பெரிய டிரம்மில் சப்பாத்தி சுட்டு வச்சிடுவாங்க. நாம எவ்வளவு வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். அரிசி சோறு எல்லாம் கிடையாது. மூணு வேளையும் சப்பாத்தி தான். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின் போது தான் அரிசி சோறு, இட்லி, தோசை எல்லாம் இருக்கும். மத்தபடி சப்பாத்தி மற்றும் சிக்கன், மட்டன், முட்டைன்னு தான் இருக்கும். நாங்க எடுக்கும் பயிற்சிக்கு அப்படி பசிக்கும். மேலும் சின்ன வயசு என்பதால், சளைக்காமல் 35 சப்பாத்தி சாப்பிடுவேன். மிலிட்டரியில் ஆறு வருஷம் இருந்தேன். அதன் பிறகு எங்க ஊர் தபால் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமாச்சு. என் மனைவி சொந்தம் தான். கிராமத்தில் வளர்ந்தவங்க என்பதால், என்னுடைய அம்மாவுக்கு அடுத்து இணையா அவங்க சமைப்பாங்க. குறிப்பா அசைவ உணவுன்னா ஜமாய்த்திடுவாங்க. எங்க வீட்டில் சாப்பாட்டை மருந்துன்னு தான் சொல்லணும்.

சும்மா நானும் சமைக்கிறேன்னு சாம்பார் கத்தரிக்காய் பொறியல்னு வைக்கமாட்டாங்க. தினமும் ஏதாவது ஒரு அசைவ உணவு இருக்கும். ஒரு நாள் கொண்டைக்கடலை குழம்பு இருக்கும். நாட்டுக்கோழி தான் பாய்லர் சிக்கன் சாப்பிட மாட்டேன். ஆட்டுக்கறி தான் விரும்பி சாப்பிடுவேன். அதுவும் அது கொழுப்போட இருக்கணும். தலைக்கறி, ஈரல், ரத்தம்னு எல்லாமே ரொம்ப நல்லா என் மனைவி சமைப்பாங்க. அதனால் தான் என்னவோ எனக்கு நட்சத்திர ஓட்டலுக்கு போய் சாப்பிட்டாலும் வீட்டில் சாப்பிட்ட திருப்தி இருக்காது. ஒரு சிலர் வீட்டு சாப்பாட்டைக்கூட பேருக்கு சாப்பிடுவாங்க. நான் அப்படி இல்லை எல்லா உணவையும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவேன். அதே போல் ஹைபிரிட் உணவுகளை சாப்பிட மாட்டேன். காய்கறி பழங்கள் எதுவாக இருந்தாலும் நாட்டுக் காய் தான். என்னை விட என் மனைவி அதில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்.

நான் கிராமத்தில் வளர்ந்ததால், வீட்டில் வெண்கல பானையில் தான் சமையல். கிணத்து தண்ணீரை தான் குடிச்சு வளர்ந்தோம். கம்மாயில் தான் போய் குளிப்போம். கம்பு காட்டில் சுற்றுவோம். அந்த கம்பு ஒன்றரை அடி நீளத்தில் இருக்கும். கசக்கி சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். அதே போல் அரை அணா கொடுத்தா பொட்டி நிறைய அரைக்கீரை தருவாங்க. கீரை காட்டில் நேரடியா போய் வாங்கி வருவோம். அம்மா அதை வதக்கி அரைச்சு செய்வாங்க. நல்லெண்ணை சேர்த்து சோற்றில் பிசைந்து சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். சாப்பாடும் ஐ.ஆர்.8 போன்ற அரிசியில் தான் சாதம் பொங்குவாங்க. அந்த சாதம் கொஞ்சம் பெரிசா தான் இருக்கும். ஆனா அதை பிசைந்து சாப்பிடும் போது அவ்வளவு ருசியா இருக்கும். இது ஒரு பக்கம்னா காட்டில் மிதுக்குபழம், மஞ்சணத்தி பழம் மற்றும் தட்டாங்காய், பருத்திக்காய், புளியங்காய்னு பறிச்சு சாப்பிட்டு இருக்கோம். அந்த பழம் பத்தி எல்லாம் இப்ப இருக்கிற தலைமுறைக்கு தெரியாது. ஏன் அந்த காலத்தில் தீபாவளி, பொங்கல் அப்போ தான் இட்லி தோசையே செய்வாங்க.

கிராமத்தில் பொதுவா ஒரு பெரிய உரல் இருக்கும். அதில் தான் வந்து மாவு இடிப்பாங்க. கம்பு தோசையை பெரிய தாமரை இலை அளவில் சுடுவாங்க. அதற்கு பாசிபருப்பு சட்னி அவ்வளவு ருசியா இருக்கும்’’ என்றவர் தன் வெளிநாட்டு உணவுப் பழக்கத்தை பற்றி விவரித்தார். ‘‘2013ல் சினிமா துறைக்கு வந்தேன். இங்க ஷூட்டிங் சாப்பாடு நல்லா இருக்கும். நான் அளவோட தான் சாப்பிடுவேன். ஒரு முறை ஐதராபாத் சென்றிருந்தேன். அங்கு பிரஸ்டீஜ் நட்சத்திர ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டேன். ரொம்ப சுவையா இருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் அருகே ஒரு சின்ன சந்தில் ெசட்டிநாடு கோனார் மெஸ் இருக்கும். வீட்டு சாப்பாடு போல் ரொம்ப சுவையா இருக்கும். கெளுத்தி மீன் சாப்பாடு, மட்டன், சிக்கன், நண்டு எல்லாமே பிரமாதமா இருக்கும். குற்றாலம் போனா அங்க கூரைக்கடையில் இருந்து கேரியல் சாப்பாடு வாங்கி சாப்பிடுவோம்.

வெளிநாடு பொறுத்தவரை சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இலங்கைன்னு போய் இருக்கேன். சிங்கப்பூரில் ரேஸ் கோர்ஸ் அருகே ஒரு உணவகம் இருக்கும். பெயர் சரியா நினைவில்லை. அங்க பெரிய மீண் மண்டையை பொறிச்சு தருவாங்க. ஃபிஷ் ஹெட் என்ற அந்த உணவினை நான்கு பேர் திருப்தியா சாப்பிடலாம். இலங்கை உணவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். பலாக்காய் கூட்டு, புட்டு, ஆப்பம்னு எல்லாமே கிடைக்கும். இப்ப சேலம் அருகே மெயின் சாலையில் ஒரு ஓட்டல் இருப்பதாக என் நண்பர் கூறியிருக்கார். அழைத்து போவதாகவும் சொல்லி இருக்கார். ரூ.500க்கு அளவற்ற சாப்பாடு தராங்களாம். அங்க போய் சாப்பிடணும்னு இருக்கேன். காலை இரவு நேரம் டிபன் தான், மதிய உணவை மனசுக்கு பிடிச்ச மாதிரி சாப்பிடலாமே’’ என்றார் நடகர் வேலராமமூர்த்தி.

பாரம்பரிய மட்டன் குழம்பு

தேவையானவை

அரைக்க

சின்ன வெங்காயம் – 1 கப்
தக்காளி – 1
தேங்காய் – 4 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது –
2 மேசைக்கரண்டி
தனியா – 1 மேசைக்கரண்டி
மிளகு – 1 மேசைக்கரண்டி
சோம்பு – 1 மேசைக்கரண்டி
பட்டை – ½ துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
கசகசா – 1 டீஸ்பூன்
எண்ணை – தேவையான அளவு
மட்டன் குழம்புக்கு

தேவையானவை

மட்டன் – அரை கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – அலங்கரிக்க

செய்முறை

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் சிறிதளவு எண்ணை சேர்த்து வறுத்து ஆறியதும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதில் மட்டன் துண்டுகள், மஞ்சள் தூள் சேர்த்து ஆறு, ஏழு விசில் விடவும். பிறகு அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து நன்கு கொதித்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து இறக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சுவையான மட்டன் குழம்பு தயார். இதற்கு அதிக அளவு தேங்காய் சேர்க்கக் கூடாது.Post a Comment

Protected by WP Anti Spam