By 15 June 2021 0 Comments

முழு நடிகையாக ஏற்றுக்கொள்ள கூச்சமாக இருந்தது!! (மகளிர் பக்கம்)

வாழ்வின் திருப்புமுனைகள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அது சாதகமாக நிகழும் தருணம் அதை எவ்வாறு அனைத்துக் கொள்கிறோம், பாதகமாக நிகழ்கையில் அதிலிருந்து எவ்வாறு மீள்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் வாழ்க்கை நமக்குப் பாடம் கற்றுக் கொடுக்கிறது. அதில் சிலர் தேர்ச்சி அடைவதும், தோல்வி அடைவதும் ஒவ்வொருவரின் அனுபவம். அந்த வகையில் வெற்றி பெற்றிருக்கிறார் நடிகை ஜானகி சுரேஷ். “திருமணம் முடிந்து அபுதாபியில் குடியேறிய வரை, என் வாழ்வில் எந்த ஒரு யோசனையும், லட்சியமும் இல்லாமல் இருந்தேன். அழகான குடும்பம் மற்றும் குழந்தைகளைச் சுற்றி வாழ்க்கை நகர்ந்தது. ஒரு கட்டத்தில் ஒரே மாதிரியான நாட்கள் சலிப்பைத் தட்ட ஆரம்பித்தது. சிறு வயதில் கற்றிருந்த நடனம், இசை… ஆசுவாசப்படுத்தினாலும், ஏதோ ஒரு நெருடல் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. அந்த நெருடலை என் கணவரிடம் கடத்துவதற்கு பதினான்கு ஆண்டுகள் ஆனது. சில உரையாடல்கள், புரிதல்களுக்குப் பிறகு நானும் குழந்தைகள் மட்டும் சென்னைக்கு வந்தோம். வேலை நிமித்தமாக அவர் அங்கேயே தங்கிவிட்டார்.

என்ன தான் நான் என்னுடைய லட்சியத்தை நோக்கி பயணம் செய்ய வந்தாலும், அவரை விட்டு வரும் போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.ஒரு வேகத்தில் நான் சென்னைக்கு வந்தாலும் என்ன செய்வதுன்னு தெரியல. என் நண்பர்கள் பலர் கலை சார்ந்த வேலையிலும், ஊடகத்துறையிலும் இருந்தனர். அவர்களுடன் பேசிய போது தான் எனக்கான தேடல் ஆரம்பமானது. அப்படித்தான் ஒரு நாள், பெங்களூரிலிருந்து நண்பர் பேசிய போது, அவர் இரண்டு நாடகங்களை பார்த்ததாகவும், அந்த குழுவினர் சென்னைக்கு வந்தால் என்னைக் கண்டிப்பாக பார்க்க சொன்னார். காரணம் நாங்க இருவரும் சினிமா குறித்த நிறைய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறோம். அதனால் சினிமா பற்றி என் தேடல் என்ன என்பது அவருக்கு புரிந்திருந்தது. என் அதிர்ஷ்டம் என்னவோ, அந்த நாடகம், ‘ இந்து தியேட்டர் பெஸ்டிவெல்’லில் போட்டாங்க. அதைப் பார்த்த பின் ஏன் என்னைப் பார்க்கச் சொன்னார் என்று புரிந்தது. அது போன்ற ஒரு அனுபவம் என் வாழ்க்கையில் கிடைத்ததில்லை. இந்த சூழல் தான் நடிப்பின் மீதான ஓர் ஆர்வத்தை உருவாக்கியது” என்று கூறும் ஜானகி, நடிப்பு துறையில் எவ்வாறு தனது பயணத்தை துவங்கினார் என்பதை கூறினார்.

“அந்த பிளே பல ஆச்சரியங்களையும், உத்வேகத்தையும் கொடுத்தாலும் அதன் பின் கூட நான் ஏதும் பண்ணவில்லை என்பதுதான் உண்மை. அட இதற்காகத் தான் சென்னை வந்தோமா என்ற கேள்வியும் உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால் ஃபேஸ்புக்கில் தியேட்டர் குரூப்களை தேடினேன். அப்படித் தேடும் போது இரண்டு நாட்கள் மட்டும் நடிப்பு பயிற்சி என்று ஒரு விளம்பரம். அந்த இரண்டு நாள் ஒர்க் ஷாப் போவேன்னு தெரியும். ஆனால், அதன் பின் சந்தேகமாக இருந்தேன். அந்த குழப்பத்திலிருந்து என்னை விடுவித்தார் என் அம்மா. அவங்க பசங்கள பார்த்துகிட்டதுனால, ஒரு மாதம் ரிகர்சல் போய், முதல் முறையாக மேடையும் ஏறிவிட்டேன். கொஞ்சம் பெரு மூச்சு விட்டேன்… அந்த பிளே எனக்கான முகவரி கொடுத்தது. அதன் பின் பல நாடகக் குழுக்களில் இணைந்தேன். என்னுடைய வயது, உடல்வாகுக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்கள் அமைந்தன. நண்பர்கள் அதிகமாகினர். என்னிடமிருந்து அவங்க என்ன கற்றுக் கொண்டார்கள் என்பது தெரியாது, ஆனால், அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன்.

அப்படித்தான் ஒரு நண்பர் மூலமாக LVP இன்ஸ்டியூட் பசங்க பண்ண குறும்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு உருவானது. அதைப் பார்த்து அதே இன்ஸ்டியூட்டில் இன்னும் சில பசங்களுடைய குறும்படங்களில் நடித்தேன். இப்படி திரையிலும் என் முகம் பதிய ஆரம்பித்த நேரத்தில், இயக்குநர் பாலா சார் படத்தின் மூலமாக பெரிய திரையிலும் அறிமுகமானேன். நடிப்பில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தாலும், என்னை ஒரு முழு நடிகையாக ஏற்றுக்கொள்ள கூச்சமாக இருந்தது. ஒன்னும் தெரியல என்கிற குறை துரத்தியது. அப்படி இருக்கும் போதுதான் கூத்துப்பட்டறை மாணவர்களின் நாடகம் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அதைப் பார்த்த பின், அங்கு போய் கற்றுக் கொள்ள வேண்டுமென்று சேர்ந்தேன்” என்று கூறும் ஜானகி, ‘குயின்’ வெப் சீரியஸில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்தார்.
‘‘நான் உண்டு என் பயிற்சியுண்டு என்று இருந்த போது, கவுதம் மேனன் சார் கூத்துப்பட்டறைக்கு ஆடிசனுக்காக வருவதாக சொன்னாங்க. நானும் சும்மா போய் பார்க்கலாம்னு ஆடிஷனில் கலந்து கொண்டேன்.

ஒரு வாரம் கழித்து அந்த குழுவினரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என்னால நம்பவே முடியல. அந்த தொடரில் நடித்தது நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. இங்கு திரைத் துறையில் இருக்கும் ஒரு சவால், ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானால் அதே போலத்தான் மீண்டும் மீண்டும் அமைகிறது. அதிலிருந்து வித்தியாசப்படுத்தி நடிக்க வேண்டும்”என்றார் நடிகை ஜானகி.Post a Comment

Protected by WP Anti Spam