By 16 June 2021 0 Comments

கல்வியில் உச்சம்காண மலையுச்சி ஏறும் மாணவர்கள் !! (கட்டுரை)

கொரோணா வைரஸ் பரவல் காரணமாக, பாடசாலைகள் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் கேள்விக்குறியானதுடன் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. ஆனால், இதற்கு மாற்றீடாக, ஆசிரியர்களால் இணைவழி ஊடாக, கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம், மாணவர்களுக்கு கற்பித்தல் வளவாளர்களைக் கொண்டு, ‘நேத்ரா’, ‘நெனச’ ஆகிய தொலைக்காட்சிகளின் ஊடாகப் பாடங்களைக் கற்பித்தும் கல்வி அமைச்சின் ‘இ-தச்சலாவ’ இணைய முகவரியின் ஊடாக, மாதிரி வினாத்தாள்களைப் பகிர்ந்தும் கல்வி நடவடிக்கைகளை ஓரளவுக்கேனும் முன்னெடுத்து வருகின்றது.

இருப்பினும், மாணவர் நலன் கருதிய சில ஆசிரியர்களின் தன்னார்வச் செயற்பாடுகளாலும் மாகாண, வலயக்கல்விக் காரியாலயங்களின் பணிப்புரைக்கமையவும் அதிபர்களின் வேண்டுதலின் பேரிலும் வகுப்பறை ஆசிரியர்கள், தமது மாணவர்களுக்கு ‘வட்ஸ்அப்’, ‘ஸூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக, கற்பித்தல் செற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர். முன்பள்ளி தொடக்கம் உயர்தரம், பல்கலைக்கழக கல்வி வரை, அனைத்துக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளும் இணையவழி ஊடாக நடைபெற்று வருகின்றன.

இணையவழி கல்வி காரணமாக, மாணவரும் பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகி உள்ளனர். அதேவேளை, இணையவழி வகுப்புகளுக்கு, 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சமூகம் தருவதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதற்குக் காரணம், பெரும்பாலான மாணவர்களின் வீடுகளில் கணினி, இணையம், திறன்பேசி போன்ற வசதிகள் இல்லாமை ஆகும். அப்படி இருப்பினும், சில பிரதேசங்களில், அலைபேசிக்கான வலையமைப்பு வசதி இல்லாமை, பெரும் குறைபாடாக உள்ளது.

அதுவும், மலையகத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மாணவர்கள், கணினி, திறன்பேசி ஆகியவற்றுக்கு வலையமைப்பு வசதிகள் இன்மையால், இணையவழிமூலம் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடரமுடியாத நிலையில் உள்ளனர்.

குறிப்பாக, கேகாலை மாவட்டம், தெஹியோவிட்ட பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முருத்தெட்டுவ, யோகம, பட்டாங்கல, மல்தெனிய, வெல்தெனிய, தொம்பேதொர ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு, இணைய வசதியை பெற்றுக்கொள்ளக்கூடிய வலையமைப்பு வசதிகள் இல்லாமையால், இப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

இணைய வலையமைப்பைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி வீட்டில் இல்லாவிட்டாலும், கற்றலில் உள்ள ஆர்வம் காரணமாக, மாணவர்கள் வலையமைப்புக் கிடைக்கக்கூடிய மலை உச்சிகளை நோக்கிச் செல்கின்றனர். மாணவர்களின் இந்த முயற்சி, ஏனைய மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

தமது பாடசாலைகளில் வகுப்பு ஆசிரியர்களால் நடத்தப்படும் இணைய வகுப்புகளுக்கு சமூகமளிப்பதற்காக அம்மாணவர்கள், வலையமைப்பை பெற்றுக்கொள்ளும் முகமாக, தமது இருப்பிடத்தில் இருந்து, உயர்ந்த இறப்பர் மலைப் பிரதேசங்களுக்குச் சென்று, இணைய வழியில் கல்வியை தொடர்கின்றனர்.

இவ்வாறு செல்லும்போது, காட்டுவழியின் ஊடாகவே பயணிக்கவேண்டும். தற்பொழுது, தொடர்ந்து மழை பெய்துவருவதால், மலை உச்சியில் கூடாரம் அமைத்து, கல்வி கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, மாணவர்களும் பெற்றோர்களும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

பட்டாங்கல தோட்டத்தை சேர்ந்த ஏ. புனிதா என்ற தாய்கூறும்போது, “எமது பிரதேசத்தில், கைப்பேசிக்கு சரியாக நெட்வேர்க் இல்லாமையால், எமது பிள்ளைகள் அங்குமிங்கும் போய்தான் படிக்கின்றார்கள். பிள்ளைகளை நகரப்புறங்களில் தங்கவைத்துப் படிப்பிப்பதற்கும் எம்மிடம் பணம் இல்லை. இப்போது சரியாக, தோட்டத்தில் வேலையும் இல்லை; ரொம்பக் கஷ்டத்துக்கு மத்தியில் தான், பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றோம். அதுவும், இப்பொழுது கொரோணாவால் பாடசாலை மூடப்பட்டுள்ளது. என்ன செய்வதென்று தெரியவில்லை” எனப் புலம்பலாய், அத்தாயின் உள்ளக்குமுறல் வெளிப்பட்டிருந்தது.

யோகம தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் டி. தனூசன் என்ற மாணவன் தெரிவிக்கையில், “பாடசாலையில் ஆசிரியர்கள் அனுப்புகின்ற வினாத்தாள்களைப் பெறவும், வீட்டுக்கு வந்து வினாத்தாளுக்கான விடைகளை எழுதி மீள அனுப்பவும் உயர்ந்த இறப்பர் மலைகளில், பலமுறை ஏறி இறங்குகின்றோம். சில நாள்களில் காலையில் சென்று, மாலையில் வீடு திரும்புகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வேளையில் மழைவந்து விட்டால், சிரமத்தை எதிர்கொள்கின்றோம்” என்றார்.

மேலும், யோகம தோட்டத்திலிருந்து கல்வியல் கல்லூரிக்கு தெரிவாகி, இரண்டாம் வருட ஆசிரிய மாணவராகப் பயிலும் ஆர். ருக்‌ஷனா கருத்துப் பகரும்போது, “எமது பிரதேசத்தில் அலைபேசி வலையமைப்பு இல்லாமையால், எமது கல்வியியல் கல்லூரியில் இணையவழியாகக் கற்பிக்கும் பாடங்களை, என்னால் முறையாகக் கற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. காலை முதல் மாலைவரை இணையவழி வகுப்பு இருப்பதால், பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறேன். ரொம்பத்தூரம் சென்றே, வலையமைப்பைப் பெறவேண்டி உள்ளது. தொடர்ந்து இவ்வாறு, இந்த மலைகளுக்கு வந்து கற்க முடியாது. மழைக்காலங்களில் அட்டைகளிடம் கடிபடும் சம்பவங்களும், கற்பாறைகளில் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு” என்றார்.

குறித்த தோட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை, கருத்துத் தெரிவிக்கையில், “நாங்கள் பிள்ளைகளுக்கு ‘வட்ஸ்அப்’ ஊடாக, அலகு பரீட்சை வினாக்களை அனுப்புகிறோம். அதற்கு ஓரிரு மாணவர்கள் மாத்திரமே, மீளச் செய்து அனுப்புகிறார்கள். மாணவர்களுடான தொடர்பை முறையாகப் பேணமுடியாதுள்ளது. இதனால் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றோம்” என்று கூறினார்.

யோகம பாடசாலையின் அதிபர் வி. ரவிச்சந்திரன் இந்நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது, “எமது பாடசாலையில் 245 மாணவர்கள் உள்ளார்கள். பாடசாலையின் ஏந்து பிரதேசங்களில், வலையமைப்பு இல்லாமையால், மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் ‘வட்அப்’ ஊடாகப் பயிற்சி வினாக்களை அனுப்புகிறார்கள். இருந்தபோதிலும் உரியவாறு, மாணவர்களிடத்தில் இருந்து துலங்கல்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை. இதே நிலைமையே, அயல் பாடசாலைகளான பம்பேகம, நாகல்ம, அத்தனாகல மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதற்குத் தீர்வாக, குறித்த தொலைப்பேசி நிறுவனங்கள் கூடாக, மேற்குறித்த பிரதேசங்களுக்கு வலையமைப்பை பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில், வலையமைப்புக் கோபுரங்களை அமைக்க, அரசாங்கம் ஆவன செய்வதேயாகும். இதற்கான செற்பாடுகளை, கல்வி அமைச்சால் முன்னெடுக்க முடியும் என்று பாதிக்கப்பட்ட கல்விச்சமூகம் எதிர்பார்க்கிறது.Post a Comment

Protected by WP Anti Spam