By 17 June 2021 0 Comments

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

பிறந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்பது வாழ்க்கையல்ல… வாழ்வதில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நம்மை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும், அதற்காகவேணும் கனவு காண்போம். அலட்சியம் செய்யாத கனவுகள் கண்டிப்பாக ஒரு நாள் லட்சியத்தை அடைந்தே தீரும். அப்படித்தான் என் கனவுகளும் நிஜமாகியது என்கிறார் தமிழாசிரியரும் கவிஞருமான பெருமாள் ஆச்சி. உடன் பிறந்த கற்பனைத் திறனை ஒருபோதும் பூட்டி வைக்காதீர்கள். எந்த ஒரு பிரச்னையையும் எப்படி சரி செய்வது, இடையூறுகளை எப்படிச் சமாளிப்பது என்பதைத் தீர்க்கமாக ஆராய்ந்து செயல்படக் கற்றுக்கொண்டால் வெற்றியை நாம் அடைந்தே தீருவோம் என்று கூறும் அவர் தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்…

‘‘இந்திய வரைபடத்தின் எங்கோ ஒரு சிறு புள்ளியாக மலைக்குடிப்பட்டி என்னும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் நான்கில் மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு கனவுகள் என்ற சொல் கண்ணுறங்கும் பொழுதுகளில் மட்டுமே காணக்கிடைப்பது. பள்ளியில் படிக்கும் காலங்களில் நீ என்னவாக ஆக விரும்புகிறாய்? என்று கேள்விக்குச் சற்றே தயங்கி நின்றிருக்கிறேன். காரணம் ஆசைப்பட்டதை அடைய இயலாது என்ற நிதர்சனம். பெண் குழந்தைகளுக்கான கல்வியறிவில் பெருமளவு முன்னேற்றம் காணாத கிராமச் சூழலில் படிப்பதே பெருங்கனவாக இருந்தது. முளைக்க வேண்டிய விதை எங்கிருந்தாலும் முட்டி மோதி துளிர்விடத்தானே செய்யும். என் கனவுகள் குறித்தான நினைவுகளில் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற உந்துதல் மட்டுமே என்னை இயக்கிக் கொண்டே இருந்தது.

பொழுதுபோக்குகள் என்பதே வேலையாகிப் போனதால் விவசாய வேலைகளும் செய்யப் பழகிக்கொண்டேன். +2 முடித்த உடன் தையல் வகுப்புக்குச் செல்வது, பள்ளிப் பிள்ளைகளுக்கு டியூசன் எடுப்பது என்று பரபரப்பாகவே இருந்த நாட்களில் கனவுகள் சற்றே ஒதுங்கிக்கொண்டன. அப்பா அஞ்சலக உயர் அதிகாரியாகப் பணியாற்றினாலும் நான்கு பெண் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையினை அப்பா அமைத்துக் கொடுத்தார். நானும் திருமணமாகி சென்னையில் குடிப்பெயர்ந்தேன். கணவர் மார்க்கெட்டிங் துறையில் வேலை என்பதால், அவர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். அதே சமயம் சென்னையின் அவசர வாழ்க்கையும் ஆரம்பத்தில் என்னைக் கலவரப்படுத்தியது. இதற்கிடையில் நானும் இளங்கலை இலக்கிய இயல்(B.Litt) பட்டப்படிப்பு மற்றும் தமிழில் முதுகலைப்பட்டப்படிப்பு (M.A Tamil) பட்டமும் பெற்றேன். இரண்டு மகன்கள்.

பிள்ளைகளைக் கவனிப்பதன் பொருட்டு குடும்பத்தலைவியாக அவர் களோடு நேரத்தைச் செலவிடும் சராசரிப் பெண்ணாக என் காலம் கழிந்தது. மகன்கள் ஓரளவு வளர்ந்த பிறகு எனக்கான தேடலைத் தொடங்கினேன். தமிழ் முதுகலைப்படிப்போடு, தமிழ்ப்புலவர் சான்றிதழ் படிப்பையும் நிறைவு செய்த பின்பு, சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தேன். எட்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறேன். பிற மொழிகள் பேசும் குழந்தைகளும் தமிழ்மொழியை மிக ஆர்வமாகவும், பிழையின்றிக் கற்றுக்கொள்ளவும் சிறப்பான முயற்சிகளைக் கையாண்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளேன். பழமொழிகள், கதைகள், வாய்மொழிப் பாடல்கள், புதிர்கள் பலவற்றை மாணவர்களுக்குக் கூறி அதன் மூலம் மொழித் திறமையை வளர்த்து, மொழி ஆர்வத்தைத் தூண்டி வருகிறேன்.

கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக மட்டுமில்லாமல் கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் இலக்கிய உலகில் புதுக்கவிதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டு கவிதைகள் எழுதத் தொடங்கினேன். கவிஞராக நான் உருமாறுவதற்கு பெருமளவு உந்துதல் தமிழ்மொழி மீது ஏற்பட்ட ஈர்ப்பே காரணம். முகநூல் கவிஞராக அடையாளம் காணப்பட்ட என்னைப் பலர் பாராட்டியும், ஊக்கப்படுத்தியும் இலக்கிய மேடைகளில் பல தலைப்புகளில் உரையாற்றும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றேன். குன்றிலிடப்பட்ட விளக்காக ஔிரத்தொடங்கிய எனது எழுத்துகள் பல மாத, வார இதழ்களில் என்னை மேலும் பலரிடம் அடையாளப்படுத்தியது. வாழ்வின் அடுத்த மைல் கல்லாக என் முதல் கவிதைத் தொகுப்பு ‘‘நிறங்களின் கண்ணாமூச்சி’’ மிகச்சிறந்த ஆளுமைகளின் வாழ்த்துகளோடு கவிப்பேரருவி ஐயா ஈரோடு தமிழன்பன் வாழ்த்துரையோடு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறப்பாக வெளியிடப்பட்டது.

என் கவிதை நூலில் உள்ள ஒரு கவிதையை புதுக்கவிதைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என பத்தாம் வகுப்புப் படிக்கும் என் சின்ன மகனின் தமிழாசிரியர் சுட்டிக்காட்டி வகுப்பில் படித்தது என் எழுத்திற்கான பெருமிதம். கவிதைகள் மட்டுமல்லாது சிறுகதைகள், கட்டுரைகள் எழுதும் முயற்சிகளிலும் அடியெடுத்து வைத்திருக்கும் எனக்கு சிறந்த பேச்சாளராக வேண்டும் என்பதே பெருங்கனவு. கனவுகளுக்கான காலம் என்பது வயதையோ சுற்றத்தையோ சார்ந்தது அல்ல. ஒருவரின் தனித்திறமையும், ஆர்வமும், முயற்சியுமே கனவுகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதற்கு நானே சிறந்த உதாரணம். கிராமத்தில் பிறந்து, வளர்ந்து பல மனிதர்களின் வாழ்வியலைப் பார்த்தும், பலதரப்பட்ட மக்களின் குணாதிசயங்கள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகளோடு நான் பழகிய அனுபவங்களும் என்னையும், என் எழுத்தையும் மெருகேற்றுகின்றது என்பதே உண்மை.

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் நடத்திய தமிழ்த்தாய்_72 , தமிழாய்வுப் பெருவிழாவில் வெளியிடப்பட்ட “தரணி ஆளும் தமிழ்” நூலில் சிறந்த புதுக்கவிதைக்காக ‘‘கவிமுரசு’’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டேன். முனைவர் தமிழ்மணவாளன் அவர்களின் ‘‘பகிர்வு நவீன் கலை இலக்கியப் பரிமாற்றம்’’ கடந்த மார்ச் மாதம் உலக உழைக்கும் பெண்கள் வணக்கம் நிகழ்வில் சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கிச் சிறப்பித்தது. என் வாழ்வில் நான் கண்டு, கேட்டு, உணர்ந்து பெற்ற பட்டறி வோடு, கற்பனைச் சிறகுகளில் விரியும் என் எண்ணங்களையும் எழுத்து வடிவத்தில் படைக்கிறேன். பிற மொழி தவிர்த்து, தமிழ்ச் சொற்களைப் பிழைகளின்றி என் படைப்புகளில் பயன்படுத்த வேண்டுமென்பது என்னுள் நான் கொண்டிருக்கும் உறுதி.

இன்பம், துன்பம் எதுவாகினும் என் எழுத்துகளால் என்னைச் சமநிலைப்படுத்திக் கொள்ளும் நான் பண்டைய பெண்பாற்புலவர்களைப் போன்று, இன்றைய இலக்கிய உலகில் எனக்கென தனி இடம் பெற வேண்டுமென்பது என் பேராசையெனலாம். கனவுகளை வானளவு விரித்திருக்கும் நான் கற்பனைகளின் உயரங்களில் மேலே மேலே மிதக்கிறேன். வானமும் வசப்படும்’’ என்ற தன்னம்பிக்கை வார்த்தைகளுடன் முடித்தார் கவிஞர் பெருமாள் ஆச்சி.Post a Comment

Protected by WP Anti Spam