By 18 June 2021 0 Comments

வாழ்வென்பது பெருங்கனவு – கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! (மகளிர் பக்கம்)

தேவதைகள் கூட்டம்’ என்ற பெயரில் கடந்த ஓராண்டாக உள்ளூரில் பல பள்ளிக் குழந்தைகளை ஒருங்கிணைத்து மாதம் ஒரு முறை கதை சொல்லும் கூட்டம் நடத்தி வந்தார். தற்போதைய கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டும் விடுமுறை காலம் என்பதாலும் பள்ளிக் குழந்தைகளின் அலைபேசி எண்களை இணைத்து, “தேவதைகள் கூட்டம்” என்ற வாட்ஸப் குழுவினை உருவாக்கி குழந்தைகளின் மன உளைச்சலைப் போக்குவதோடு சிறந்த முறையில் கற்றல் கற்பித்தலை செய்துவரும் ஆசிரியை தென்றல் தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

‘‘சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். ‘கல்வியின் மிக்கதாம் செல்வமொன்றில்லையே” என்ற புரட்சிக்கவி பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு உயிர் கொடுத்தவர்கள் என் தாத்தாவும், அப்பாவும். திண்ணைப்
பள்ளியாகத் தொடங்கப்பட்டு, அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியாக வளர்ந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், அடுத்த ஈராண்டுகள் காரைக்குடி மீனாட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன்.
படிப்புதான் சொத்து என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டாலும், விளையாட்டிலும், சேட்டைகள் செய்வதிலுமே ஆர்வம் அதிகமாக இருந்தது. மரம் ஏறுதல், கிட்டிப்புல் அடித்தல், கோலிக்குண்டு விளையாடுதல், பம்பரம் விடுதல் என ஜாலியாக இருந்தேன். மூன்றாம் வகுப்பில் தான் ஆங்கிலம் அறி
முகப்படுத்தப்பட்டது.

தமிழ்வழிக் கல்வியிலேயே பயின்ற எனக்கு அப்படி ஒரு பெருங் கனவு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. குன்றக்குடி தருமை கயிலை குருமணி உயர்நிலைப் பள்ளியில் உளவியல் ஆசிரியர், ‘‘ஆசிரியர் பயிற்சியில் சேரவில்லையெனில் நீ என்னவாகி இருப்பாய்?’’ என்று கேட்டார். சற்றும் தயங்காமல் நான், ‘‘ஃபாரின் அம்பாசிடர் ஆகியிருப்பேன்’’ என்று சொன்னதும் வெடிச்சிரிப்பும் கிண்டல்களும் எழுந்தன. ஆனால் நான் கவலைப்படவில்லை. தமிழ், ஆங்கிலம் என இரு மொழியறிவையும் வளர்த்துக் கொண்டேன். நிறைய வாசித்தேன். கற்றலின் கேட்டலே நன்று என்பதையுணர்ந்து, செவிச் செல்வமும் பெற்றேன். இன்று நான் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லையெனினும், இனிய நந்தவனம் மாத இதழ் மூலம் எனது எழுத்துகளும், தொலைக்காட்சிச் செய்திகள் மற்றும் இணைய வழி நேர்காணல்கள் மூலம் எனது குரலும் பல நாடுகளில் வலம் வருகிறது. எனது கனவின் அளவு பெரியது. இன்று அது ஒரு மாற்றத்
துடன் மெய்ப்பட்டிருக்கிறது’’ என்றார்.

1991 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராகப் பணியேற்ற சில மாதங்கள் ஆனதும் புரிந்தது, உயிர் என்னும் பரிசு நமக்குக் கொடுக்கப்பட்டதன் பொருள், அற்புதமான பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கே என. ‘‘குழந்தைகளின் உலகம் தனித்துவமானது என்று தெரிந்ததும் என் கனவின் எண்ணங் களும் வண்ணங்களும் மாறத் தொடங்கியது. இப்பொழுது எனது கனவு என்ன தெரியுமா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.’’“நான் மாணவியாக இருந்தபொழுது எனக்குக் கிடைத்த பல அனுபவங்கள் என் மனதில் ஆறாத ரணங்களாக உள்ளன. அப்போது ஏற்பட்ட பயமும் தயக்கமும் இன்றளவும் முழுவதுமாக என்னை விட்டு நீங்கவில்லை. முறித்துப் போடப்பட்ட எனது கால்களையும், பிடுங்கி வீசப்பட்ட எனது இறகுகளையும் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். அமிலச் சொற்கள் அவ்வப்போது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

சிந்திய கண்ணீர்த் துளிகள் இன்னும் காயவில்லை. எனவே தான் முடிவெடுத்தேன், எனக்குக் கிடைத்த அவமானங்கள், திட்டுகள், அடிகள், கொடுஞ்சொற்கள், நக்கல் நையாண்டிகள் ஆகிய எதுவும் என் வகுப்புக் குழந்தைகளுக்குக் கிடைக்கக் கூடாது என்று. அவர்களுக்கு 100 விழுக்காடு தாயாக இருக்க முடியாது என்பதால் இனிய தோழியாகிறேன். மகிழ்ச்சியாகக் கற்றல் – கற்பித்தல் அரங்கேறுகிறது. வகுப்பறையிலும் மைதானத்திலும் ஆடல், பாடல், விளையாட்டு என இணைத்து, குழந்தைகளின் மனநிலைக்கேற்ப இறங்கி வந்து கற்பிப்பதால், குழந்தைகள் முழுமையான ஆளுமை வளர்ச்சி பெறுகிறார்கள். என் சொந்த செலவில் வகுப்பறை நூலகம் அமைத்து, அனைத்து வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள், அவர்களின் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் குடியிருப்போர் மற்றும் சக ஆசிரியர்களுக்கும் நூல்கள் வழங்கி, வாசிக்கும் பழக்கத்தை வளர்த்து வருகிறேன்.

அதன் அடுத்த கட்டமாக, “தேவதைகள் கூட்டம்” என்ற பெயரில் கடந்த ஓராண்டாக எங்கள் பகுதியில் சில பள்ளிக் குழந்தைகளை ஒருங்கிணைத்து, எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை கதை சொல்லும் கூட்டம் நடத்தி வருகிறேன். கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டுப் பள்ளி விடுமுறையும் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவும் அறிவிக்கப்பட்டதும், குழந்தைகளை எப்படிச் சந்திப்பது? என்று கவலை கொண்டேன். அப்படியே சற்று சிந்தித்ததும் ஒரு யோசனை உதித்தது. உடனே குழந்தைகளின் அலைபேசி எண்களை இணைத்து, “தேவதைகள் கூட்டம்” என்ற வாட்ஸப் குழுவினை உருவாக்கினேன். தினமும் காலையில் ஒரு செயல்பாடு தருவேன். இரவு 9 மணிக்குள் விடைகள் வந்து சேர வேண்டும். குழந்தைகள் குதூகலமாகப் பங்கேற்றனர். அது மட்டுமல்லாது பெற்றோரும் மகிழ்ச்சியோடு அவர்கள் பங்கேற்க உதவினர்.

அப்பாடா! தொலைக்காட்சி, அலைபேசி மற்றும் கணினியைக் குழந்தைகள் தொடர்ந்து நீண்ட நேரம் பயன்படுத்துவதை விடுத்துத் தினமும் சிறிது நேரம் அறிவு பூர்வமான, வேடிக்கையான மற்றும் பொழுதுபோக்கான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் தங்களை இணைத்துக்கொண்டதில் மகிழ்ச்சி எனக்கு. படம் வரைதல், கணக்குப் போடுதல், கோலம் / ரங்கோலி போடுதல், விடுகதைகளுக்கு விடை காணுதல், கூட்டுச் சொற்களைப் பொருத்துதல், அகர முதலி வரிசைப்படி சொற்களை அமைத்தல், சொற்றொடரில் அமைத்து எழுதுதல், புதிய சொற்கள் அறிதல் (ஆங்கிலம்), தமிழிலிருந்து ஆங்கிலத்தில் சிறிய சொற்றொடரை மொழி பெயர்த்தல், கவிதை எழுதுதல், கழிவுப் பொருள்களைப் பயன்படுத்திப் புதிய பொருள்கள் செய்தல், குரல் வழிச் செய்தியில் பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி எனப் பல்வேறு செயல்களைச் செய்து தங்கள் பொழுதினைப் போக்காமல், புதுமையாக ஆக்கி வருகின்றனர்.

இன்று வரை 32 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் 69 பேர் பல்வேறு ஊர்களிலிருந்தும் கலந்து கொள்கிறார்கள். LKG முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை செயல்பாடுகளைச் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு முடிந்து நாடு சகஜ நிலைக்குத் திரும்பியதும் விழாக்கள் நடத்த அரசு அனுமதி அளித்த பிறகு ஒரு நாளில் கூட்டம் நடத்தி, கலந்து கொண்ட அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் பரிசுகள் வழங்குவதாக அறிவித்திருக்கிறேன். செயல்களைத் திட்டமிடுதல், எழுதுதல், குழுவில் பதிவிட்டு, தொடர்ந்து ஊக்குவித்தல், மதிப்பிடுதல், பதிவேட்டில் குறித்துக் கொள்ளுதல், ஐயங்கள் கேட்கும் குழந்தைகளுக்கு அவற்றைத் தீர்த்து வைத்தல் என நாளும் 3 மணி நேரம் எனக்குச் செலவாகிறது. இருப்பினும் குழந்தைகளுக்கு நல்வழி காட்டுகிறோம் என்ற மனநிறைவு ஏற்படுகிறது. எனவே தொடர்ந்து வாட்ஸப் செயலி குழுக்கள் வழியாக மகிழ்ச்சியாகக் கற்பித்து வருகிறேன். இங்குக் கற்றல் நடைபெறுகிறது.

மாணவர்களின் கற்றல் வெளிப்பாடு நாளுக்கு நாள் மேம்படுகிறது. ஆனால் பாடப்புத்தகங்கள் எதனையும் பின்பற்றுவதில்லை. திறன் மையக் கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, அடிப்படையான மொழித் திறன்கள் மேன்மையடைய விளையாட்டு வழியிலும், செயல்பாடுகள் வாயிலாகவும் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். தாங்கள் நேரில் சந்தித்திராத புதிய ஆசிரியர் ஒருவருடன் பயணிக்கிறோம் என்பதே பல குழந்தைகளுக்கும் புதிய அனுபவமாக இருக்கிறது. எனவே பயமும் தயக்கமும் இன்றிப் பேசுகின்றனர். குறுஞ்செய்திகள் மற்றும் ஒலிச்செய்திகள் மூலம் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். வழிமுறைகளையும் ஐயங்களையும் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர். ஆசிரியர் மாணவர் களுக்கிடையில் நட்பும் நல்லுறவும் நாளும் வளர்கின்றன. பேசுதல், எழுதுதல், வரைதல், பாடுதல், செயல் திட்டங்களில் பங்கேற்றல் ஆகிய திறன்கள் வளர்க்கப்படுகின்றன.

சிந்தித்தல், கற்பனைத் திறன், வினா எழுப்புதல், அழகுணர்திறன், ஆக்கத்திறன், உளவியல் மனப்பான்மைகள், நேர்மறை மனவெழுச்சிகள், கற்றலில் நாட்டம் ஆகியவை மேலும் வளர்கின்றன. ஓய்வு என்றால் பகலில் தூங்குதல், தொலைக்காட்சி பார்த்தல் என்ற எண்ணம் குழந்தைப் பருவத்திலேயே ஏற்பட்டுவிடக் கூடாது. அறிஞர் அண்ணா கூறியதுபோல், ஓய்வெனப்படுவது, ஒரு வேலை செய்வதிலிருந்து வேறோர் செயலுக்குத் தன்னை மாற்றிக்கொள்வது என்பதை உணர்த்த விரும்புகிறேன். ஆதலால்தான் எனக்களிக்கப்பட்ட பள்ளி விடுமுறையிலும் நான் ஓய்வெடுக்காமல் மாணவர்களுக்காக உழைக்கிறேன்.
என் கனவுப் பயணத்திற்கு முற்றுப்புள்ளியே கிடையாது. திருமணத்திற்குப் பிறகு தான் என்னைப் பற்றியும் என் சுய முன்னேற்றம் பற்றியும் இம்முறை சின்னஞ் சிறு கனவுகளைக் கைக்கொண்டேன். இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றேன். என் மகளுடன் இணைந்து என் 35 வயதில் பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம், தேவாரப்பாடல்கள் பாடுதல், கணினிப் பயிற்சி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன்.

தமிழ் விக்கிபீடியாவில் சில கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், தொகுப்புகள் எனப் பங்களிப்புச் செய்திருக்கிறேன். தற்பொழுது அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பினை மேற்கொண்டிருக்கிறேன். குடும்பத்திலும் என் கடமைகளைச் செவ்வனேயாற்றி, அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திட அனைத்து உறவினர்களுக்கும் பிடித்தவளாக வலம் வருகிறேன். அடுத்ததாக, சமூகப் பார்வை என்னைத் தொற்றிக் கொண்டது. ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கையில், பல வார, மாத இதழ்கள் பலவற்றில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வெளி வந்திருக்கின்றன. ‘‘உயிர் பருகும் மழை’’ என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறேன். பல விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தாலும் நான் இன்னும் என் கனவு
களைத் துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

ஜெர்மானியக் கவிஞர் ஜோஹான் வான் கதே, ‘‘உன்னால் எதைச் செய்ய முடிந்தாலும் அல்லது செய்ய முடியும் என்று நீ கனவு கண்டாலும் அதைத் தொடங்கு. துணிவில் நுண்ணறிவும், சக்தியும் மந்திரமும் இருக்கிறது’’ என்று கூறியதற்கிணங்க புதிய கனவுகள் காண்கிறேன்; அவற்றைச் செயல் படுத்தத் தொடங்குகிறேன். இனிமையான வாழ்க்கைப் பயணமும் தொடர்கிறது’’ என்றார் ஆசிரியை தென்றல்.Post a Comment

Protected by WP Anti Spam