இதயத்தில் ஸ்கேனில் ஓட்டையா? (மருத்துவம்)

Read Time:10 Minute, 18 Second

5 மாத கர்ப்பிணி ஒருவர் சேலத்தில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த அம்மையத்தின் சோனாலஜிஸ்ட் (ஸ்கேன் செய்யும் நிபுணர்) குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்டதும் கனத்த அதிர்ச்சிக்கு உள்ளானார் அந்தப் பெண். 5 மாதம் சுமந்த அந்தக் கனவே கலைந்தது போலாகி விட்டது.

‘இதயத்தில் ஓட்டை இருக்கும் குழந்தை பிறந்தாலுமே கூட, வாழ்நாள் முழுவதும் பிரச்னைதானே… அதனால், கருக்கலைப்பு செய்து விடலாம்’ என்கிற யோசனைக்கெல்லாம் சென்றனர் அப்பெண்ணின் குடும்பத்தினர். ‘எதற்கும் இன்னொரு இடத்தில் ஸ்கேன் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாமே’ என்றும் தோன்றுகிறது அவர்களுக்கு. வேறொரு ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் எடுத்தனர். அங்கு, ‘குழந்தைக்கு ஒரு பிரச்னையும் இல்லை… நார்மலாக இருக்கிறது’ என்று ரிப்போர்ட் வந்தது. அதைக் கேட்ட பிறகுதான் அந்தப் பெண்ணால் இயல்புநிலைக்கே திரும்ப முடிந்திருக்கிறது.

முதல் ஸ்கேன் முடிவிலிருந்து இரண்டாவது ஸ்கேன் முடிவு வரையிலான இடைப்பட்ட காலத்தில் அந்தக் கர்ப்பிணி எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்? ஒரு வேளை இரண்டாவதாக ஸ்கேன் செய்யாமல் கருக்கலைப்பு செய்திருந்தால் யாருக்கு நஷ்டம்? இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. ஏன் இது போன்ற தவறுகள் நடைபெறுகின்றன? மருத்துவர்களின் அலட்சியம் காரணமா? தொழில்நுட்ப ரீதியில் இப்படியான கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா? சோனாலஜிஸ்ட் ஜனனி மனோகரனிடம் கேட்டோம்…

‘‘Ultrasound, Computerised Tomography (CT SCAN), Magnetic Resonance Imaging (MRI SCAN) என 3 வகை ஸ்கேனிங் உண்டு. கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்படுகிறது. குழந்தை ஏதேனும் குறைபாட்டுடன் பிறந்தால், அதற்குக் காரணம் அதிக முறை ஸ்கேன் எடுத்ததுதான் என்று பலரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனின் தொழில்நுட்பம் என்னவென்றால், மின் ஆற்றலை ஒலியாக மாற்றி உள்ளே அனுப்பி, அதன் எதிரொலிப்பை மீண்டும் மின் ஆற்றலாக மாற்றும்போது காட்சி யாகத் தெரியும்.

இதில் கதிர்வீச்சு கிடையாது என்பதால் கர்ப்பிணிகள் எத்தனை முறை வேண்டுமானாலும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கலாம்… எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்த ஸ்கேன் மூலம் குழந்தையின் வடிவ அமைப்பை மட்டும்தான் பார்க்க முடியும். காது கேட்குமா? கண் தெரியுமா? இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள முடியாது.சாதாரணமாக கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலத்தில் 4-5 முறை ஸ்கேன் செய்ய வேண்டும். 6 முதல் 8 வாரங்களுக்குள் முதல் ஸ்கேன் செய்யப் படுகிறது.

அது குழந்தை கருவாகியிருக்கிறதா என்பதை உறுதி செய்யவும், கரு கர்ப்பப்பைக்கு உள்ளே இருக்கிறதா இல்லை வெளியே இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவும், இதயத்துடிப்பை பார்ப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது. 11 முதல் 14 வாரங்களுக்குள் இரண்டாவது ஸ்கேன். இதன் மூலம் குழந்தைக்கு மரபு ரீதியிலான குறைபாடுகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக ‘டவுன் சிண்ட்ரோம்’ எனும் மனநலப் பிரச்னை இருந்தால், கழுத்தில் சதை வளர்ச்சி பெரியதாக இருக்கும். அச்சூழலில் பனிக்குட நீரை எடுத்து, அதில் உள்ள குரோமோசோம்களை சோதிப்பதன் மூலம் பிரச்னையை உறுதி செய்யலாம்.

டவுன் சிண்ட்ரோம் பிரச்னைக்கு தீர்வில்லை என்பதை பெற்றோரிடம் விளக்கிச் சொல்லி, அவர்கள் விருப்பப்பட்டால் கருக்கலைப்பு செய்ய முடியும். 18 முதல் 20 வாரங்களுக்குள் மூன்றாவது ஸ்கேன் செய்யப்படுகிறது. அப்போது கரு முழுமையாக உருப்பெற்று விடும் என்பதால், குழந்தையின் வடிவ அமைப்பு நன்றாக இருக்கிறதா என்று பார்க்க முடியும். 30 முதல் 36 வாரங்களுக்குள் நான்காவது ஸ்கேன் செய்யப்படுகிறது. குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா? பனிக்குட நீர் எப்படி இருக்கிறது? குழந்தை சரியான நிலையில் இருக்கிறதா? தண்ணீர் அளவு மற்றும் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது? இவற்றைப் பார்க்க முடியும்.

தேவைப்படும் நிலையில் ஐந்தாவது ஸ்கேன் செய்யப்படும். அப்போது டாப்ளர் கருவியைக் கொண்டு ரத்த ஓட்டத்தை அறியலாம். எந்த மருத்துவரும் வேண்டுமென்றே அலட்சியத்தோடு ரிப்போர்ட் வழங்க மாட்டார்கள். இப்படியாக தவறான முடிவுகள் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மருத்துவரின் அனுபவம் எப்படிப்பட்டது, அவர் பயன்படுத்தும் இயந்திரம் எவ்வளவு நவீனமானது என்பதைப் பொறுத்துதான் முடிவு இருக்கும். கர்ப்பிணிகள் பருமனாக இருக்கும் நிலையில் ஒலி உள்ளே சென்று எதிரொலிப்பதில் பிரச்னை ஏற்படலாம்.

இதன் காரணமாக தவறான முடிவு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கரு உருவாகி வளர்கிற பருவத்தில் ஓட்டை இருப்பது சாதாரணமான ஒன்றுதான். அது வளர வளர சரியாகி விடும். மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் முதல் ஸ்கேனின்போது ஓட்டை இருந்திருந்தாலுமே கூட, அது சாதாரணமானதாகத்தான் இருந்திருக்கும். இரண்டாவது முறையாக ஸ்கேன் செய்த காலத்துக்குள்ளான வளர்ச்சியில் ஓட்டை தானாக அடைபட்டிருக்கும். இதுபோன்ற எதிர்மறையான முடிவுகள் வரும்போது இரண்டாவது ஆலோசனைக்குச் செல்வது நல்லது.

ஏனென்றால், எல்லாத் துறைகளைப் போலவும் மருத்துவத் துறையிலும் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும், அவை வேண்டுமென்றே நிகழ்த்தப்படுவதில்லை. முன்னைக்காட்டிலும் இப்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. அதனால் இப்போது இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகத்தான் நடக்கின்றன’’ என்கிறார் ஜனனி. இதுபோன்ற தவறான முடிவுகள் வழங்குவதால் பொருளாதார ரீதியில் நஷ்டமடைவதோடு உளவியல் ரீதியிலும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதற்கு எதிராக சட்ட ரீதியில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்? வழக்கறிஞர் விஜயனிடம் கேட்டோம்…

‘‘அலட்சியம் என்பதே குற்றம்தான். சம்பந்தப்பட்ட மருத்துவர் அலட்சியத்தின் காரணமாக தவறான முடிவை வழங்கினார் என்றால் பின்வரும் பிரிவுகளில் வழக்கு தொடர முடியும். சேவை குறைபாடு என்கிற அடிப்படையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். மோசடி ஆவணத்தை வழங்கியதாக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுத் தர முடியும். இந்திய மருத்துவக் கழகத்தில் புகார் அளித்து ஸ்கேன் மையத்தின் உரிமத்தைப் பறிக்க முடியும். தவறான முடிவின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் நஷ்டஈடு பெற முடியும்.

மருத்துவ கவனக்குறைவுகளைக் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. இவற்றைப் பிரச்னையாக்கும் போதுதான் மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்’’ என்கிறார் விஜயன்.மற்ற எல்லாத் துறைகளைக் காட்டிலும் மருத்துவத் துறையினர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனென்றால், இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லை தாண்டும் பயங்கரவாதம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post தினமும் 3 வாழைப்பழம் சாப்பிட்டால் மாரடைப்பை தவிர்க்கலாம்!! (மருத்துவம்)