இதய வால்வு கோளாறுகள்!! (மருத்துவம்)

Read Time:19 Minute, 30 Second

மனித இதயத்தில் மைட்ரல் வால்வு, டிரைகஸ்பிட் வால்வு, மகாதமனி வால்வு, நுரையீரல் தமனி வால்வு என மொத்தம் நான்கு வால்வுகள் உள்ளன. அவற்றில் ஏற்படுகின்ற நோய்களை இதய வால்வு கோளாறுகள்’ என்று பொதுவாக அழைப்பது மருத்துவ வழக்கம். இதய வால்வுகள் என்பவை இதய அறைகளிலிருந்து ரத்தம் ஒரே திசையில் செல்வதற்கு உதவும் பிஸ்டன்கள். இவை பாதிக்கப்படும்போது ரத்தம் எதிர் திசையில் பயணிக்கும். இது உடலில் ரத்தசுழற்சியைப் பாதிக்கும்… ரத்த ஓட்டம் தடைபடும்.

இதய வால்வுகள் பாதிக்கப்படுவதற்கும், பழுதுபடுவதற்கும் முக்கியக் காரணம் ‘கீல்வாதக் காய்ச்சல்’ (Rheumatic fever). இது பெரும்பாலும் குழந்தைகளையே குறிவைத்துத் தாக்குவதால், இதய வால்வு கோளாறுகளும் குழந்தைகளுக்கே அதிகம். மேலும், பிறவிக் குறைபாடுகள், பாக்டீரியாக்களின் பாதிப்பு ஆகிய காரணங்களாலும் இந்தப் பிரச்னைகள் வருவதுண்டு.

கீல்வாதக் காய்ச்சலும் இதயவால்வுக் கோளாறுகளும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா கிருமிகளால் கீல்வாதக் காய்ச்சல் ஏற்படும் போது, இந்தக் காய்ச்சலுக்குரிய எதிர் அணுக்கள் இதய வால்வுகளை பாதிக்கின்றன. இதனால், அந்த வால்வுகளின் மடிப்புகள் சுருங்கி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்கின்றன அல்லது துவண்டு விடுகின்றன. இதன் விளைவால் வால்வுகள் தடித்துவிடுவதால் அவை சுருங்கி விரிய சிரமப்பட்டு ரத்தம் தேங்க வழி செய்கின்றன அல்லது அவற்றுக்குரிய துளைகளை முழுவதுமாக மூடஇயலாமல் ரத்தப் பின்னொழுக்கு ஏற்பட வழியை அமைக்கின்றன.

இதுதான் இதய வால்வு கோளாறுகளுக்குரிய அடிப்படை நோய்க் குறியீடு. இதன் பின்விளைவால் இதயத்திலும் ரத்த சுழற்சியிலும் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு வால்வு கோளாறிலும் இந்த மாறுதல்கள் சிறிதளவு வேறுபடும். அவற்றைவிரிவாகப் பார்ப்போம்.

1. மைட்ரல் வால்வு சுருங்குதல் (Mitral stenosis)

மைட்ரல் வால்வு என்பது இதயத்தின் இடது மேலறைக்கும் இடது கீழறைக்கும் இடையில் உள்ளது. எல்லா வால்வுகளை போலவே இதன் வேலையும் இதயத்தில் ரத்தத்தை முன்னோக்கிப் பாயச் செய்வதுதான். சாதாரணமாக இதன் பரப்பளவு 3.5 முதல் 4.5 சதுர செ.மீ. வரை இருக்கும். இது பாதிக்கப்படும்போது இது 1 சதுர செ.மீ. அளவிற்குக்கூட சுருங்கிவிடுவதுண்டு. பொதுவாக, இதன் பரப்பளவு 2 சதுர செ.மீ. அளவு வரை இருக்கும்போது இந்த பாதிப்புக்குரிய அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரிவதில்லை. உடற்பயிற்சி, கடுமையான வேலை போன்ற காரணங்களால் நோயின் அறிகுறிகள் சிறிதளவு வெளியில் தெரியும். ஆனால், வால்வின் பரப்பளவு 1 சதுர செ.மீ. வரை சுருங்கிவிடுமானால் நோய் தீவிரமடைந்து பல ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.

அந்த பாதிப்புகள் இவை: இதயத்தின் இடது மேலறையிலிருந்து ரத்தம் இடது கீழறைக்குச் செல்வதில் தடை ஏற்பட்டு இடது மேலறையில் ரத்தம் தேங்கும். நாளடைவில் இந்த அறையில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நுரையீரல் சிரை ரத்தக்குழாய்களில் அழுத்தம் அதிகமாகி, நுரையீரல் கெட ஆரம்பிக்கும். இதயத்துடிப்பு சீர்கெடும். இந்த அறையின் பல பகுதிகளில் ரத்தம் உறையும். இந்த ரத்த உறைவுக்கட்டி இதயத்திலிருந்து கிளம்பி, மூளையை அடைந்து, அங்குள்ள ரத்தக்குழாயை அடைத்து, பக்கவாத நோயை (Stroke) ஏற்படுத்தும். சில நேரங்களில் இது காலில் உள்ள ரத்தக்குழாயை அடைத்து, கால் அழுகல் நோயை (Gangrene)உண்டாக்கும்.

அறிகுறிகள் என்னென்ன?

மைட்ரல் வால்வு சுருங்கச் சுருங்க நோயாளிக்கு சுவாசிப்பதில் சிரமம் தோன்றும். ஆரம்பத்தில் ஏதேனும்கடுமையான பணிகளைச் செய்யும்போது மட்டும் சுவாசிப்பது சிரமமாக இருக்கும். நாளடைவில், உடற்பயிற்சி செய்யும்போதும் மாடிப்படி ஏறும்போதும் ஓய்வில் உள்ள போதும் இந்த சிரமம் ஏற்படும். இந்த நோயுள்ள பெண்கள் கர்ப்பமடையும்போது, இந்த சிரமம் அதிகரிக்கும். இருமல் வரும். முக்கியமாக, இரவு நேரத்தில் படுத்துறங்கும்போது இருமல் அதிகரிக்கும். சில நேரங்களில் இருமலில் ரத்தம் கலந்து வரலாம். இந்த நோயில் நுரையீரலும் கெடுவதால், அங்கு நீர் கட்டும். கணுக்கால், பாதங்கள், வயிறு ஆகிய பகுதிகளில் வீக்கம் ஏற்படும்.நெஞ்சுவலி, நெஞ்சு படபடப்பு, சோர்வு மற்றும் தலைச்சுற்றல் வரலாம். இதய ஒலிகளில் மாற்றம் தெரியும்.

என்னென்ன பரிசோதனைகள்?

வழக்கமான ரத்தப் பரிசோதனைகள்,மார்பு எக்ஸ்ரே, இசிஜி, எக்கோ ஆகியவற்றின் உதவியுடன் இந்த நோயை உறுதி செய்யலாம். இதயச் செருகு குழாய் (Cardiac catheterization) பரிசோதனை மூலமும் நோயின் கடுமை, வால்வில் சுண்ணாம்புச் சத்து படிந்து, தடித்திருக்கின்ற தன்மை, இதய அறைகளின் அளவுகள்மற்றும் செயல்திறன் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடியும்.

சிகிச்சை முறைகள்

மருத்துவ சிகிச்சை இதயத்துடிப்பைச் சீராக்கும் மாத்திரைகள், ரத்த உறைவைத் தடுக்கும் மாத்திரைகள், நுரையீரல் நீர்த்தேக்கத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் ஆகியவற்றோடு மூன்று வாரங்களுக்கு ஒருமுறை பென்சதீன் பெனிசிலின் ஊசி போட்டுக் கொள்வதையும் நடைமுறைப்படுத்தினால், இந்த நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவை சிகிச்சை

மைட்ரல் வால்வு சிறிதளவு சுருங்கியுள்ள போது மார்பின் இடதுபக்கத்தைப் பிளந்து, அதேநேரத்தில் இதயத்தைப் பிளக்காமல், ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம், சுருங்கிய வால்வை சரிசெய்து விடலாம் (Closed mitral valvotomy). வால்வு சற்று அதிகமாகச் சுருங்கியிருந்தால், இதயத் திறப்பு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம் (Mitral valve repair). வால்வில் சுண்ணாம்புச் சத்து படிந்து, மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால், அந்த வால்வை நீக்கிவிட்டு, செயற்கை வால்வை பொருத்த (Mitral valve replacement) வேண்டும்.

2. மைட்ரல் வால்வு எதிரொழுக்கு நோய் (Mitral regurgitation)

மைட்ரல் வால்வு தொங்கல் (Mitral valve prolapse), பிறவியிலேயே இந்தத் தடுக்கிதழ் விரிந்து துவண்டிருத்தல், கீல்வாதக் காய்ச்சலின் பின்விளைவு, வைரஸ் நோய், மார்ஃபான் நோயியம் (Marfan’s syndrome) ஆகியவற்றின் பாதிப்பால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயின்போது இதயத்தின் இடது மேல்-கீழ் அறை இடைத் துளையை மைட்ரல் வால்வு சரிவர மூடுவதில்லை. ஆகவே, இதயத்தின் இடது மேலறையிலிருந்து இடது கீழறைக்குப் பாய்ந்த ரத்தம், இதயத்தின் இடது கீழறை சுருங்கும்போது, மீண்டும் இடது மேலறைக்குக் கசியும். இதனால் அங்கு ரத்தம் தேங்கி, அழுத்தம் அதிகரிக்கும். இடது மேலறை விரியும். அதேநேரத்தில் இடது கீழறையிலிருந்து மகாதமனிக்குள் ரத்தம் செல்லும் அளவு குறைந்துவிடும். இதனால் பொது ரத்த சுழற்சிக்குத் தேவையான ரத்தத்தைப் பெறுவதற்காக இடது கீழறை தன்னுடைய அளவில் விரிந்து பெரிதாகும். இதனால் உயிருக்கு ஆபத்தான விளைவுகள் ஏற்படும்.

அறிகுறிகள் என்னென்ன?

மைட்ரல் வால்வு சுருக்க நோயில் சொல்லப்பட்ட எல்லா அறிகுறிகளும் இதிலும் காணப்படும். இந்த நோயாளியை மருத்துவர் பரிசோதிக்கும்போது இதய ஒலிகளில் முணுமுணுப்புகள் கேட்கும். இந்த ஒலிகள் இடது அக்குள் வரைபரவுவதைக் கேட்டு உணரலாம்.

நோயைக் கணிப்பது எப்படி?

மார்பு எக்ஸ்ரே இதயத்தின் இடது மேலறை மற்றும் இடது கீழறை விரிந்திருப்பதைக் காண்பிக்கும். இசிஜியில் உதறல் இதயத் துடிப்பு, இடது இதய அறைகளின் வீக்கம் ஆகியவற்றைக் காண்பிக்கும். எக்கோ பரிசோதனையில் வால்வின் அமைப்பு, நோயின் கடுமை, இதய அறைகளின் அளவு மற்றும் செயல்பாடு ஆகியவற்றைக் காணலாம். இவற்றோடு ரத்தப் பரிசோதனைகளையும் செய்து, நோயை உறுதி செய்து, பின்னர் நோயின் தன்மையை உணர்ந்து சிகிச்சையைத் துவக்குவார்கள் மருத்துவர்கள்.

3. மகாதமனி வால்வு சுருங்குதல் (Aortic stenosis)

இதயத்தின் இடது கீழறையிலிருந்து மகாதமனிக் குழாய் கிளம்பும் இடத்தில் மகாதமனி வால்வு உள்ளது. இடது கீழறை சுருங்கும்போது, சுத்த ரத்தம் தமனிக்குள் பயணிக்க இது மேல்நோக்கித் திறந்து வழிவிடுகிறது. இதில் மொத்தம் மூன்று மடிப்புகள் இருக்கும். இவற்றில் ஏற்படும் பாதிப்புகள் மகாதமனி வால்வை சுருங்கச் செய்யும். கீழ்க்காணும் காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

கீல்வாதக் காய்ச்சலால் வால்வு பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே மகாதமனி வால்வு சுருங்கி இருக்கலாம். இந்த வால்வில் சுண்ணாம்புச் சத்து அதிகமாகப் படிந்து, இளம் வயதில் நோயைக் கடுமையாக்கலாம். சில குழந்தைகளுக்கு மகாதமனி வால்வுக்கு கீழ், இடது கீழறையில் ஒரு மெல்லிய சவ்வு வளர்ந்து, வளையம் போல அமைந்து இந்த வால்வு மூடித்திறப்பதைப் பாதிக்கலாம். உயர் ரத்த அழுத்தம், முதுமை காரணமாகவும் மகாதமனி வால்வின் சுவர் சிதைந்து போவதுண்டு. அப்போது இது சுருங்கி விடலாம்.

அறிகுறிகள் எவை?

நெஞ்சுவலி, நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம், மாடிப்படி ஏறுதல், வீட்டு வேலைகள் செய்வது போன்ற சாதாரண வேலைகளைக்கூட செய்ய இயலாத நிலைமை, கணுக்கால் வீக்கம் ஆகியவை இந்த நோய்க்குரிய முக்கிய அறிகுறிகள்.

4. மகாதமனி வால்வு எதிரொழுக்கு நோய் (Aortic regurgitation)

பிறவியிலேயே மகாதமனி வால்வில் மூன்று இதழ்களுக்கு பதிலாக இரண்டு இதழ்கள் மட்டும் இருந்தால், கீல்வாதக் காய்ச்சலால் வால்வு பாதிக்கப்பட்டிருந்தால், வால்வின் மூன்று இதழ்களில் ஏதேனும் ஒன்று அமைப்பில் மாறுபட்டு, சரியாக மூடாமல் இருந்தால், ரத்தம் மகாதமனியிலிருந்து இதயத்தின் இடது கீழறைக்குப் பின்னோக்கிக் கசியலாம். வைரஸ் அல்லது பிற நுண்ணுயிரிகளால் இதய உள்ளுறை பாதிக்கப்பட்டிருந்தால், கிரந்தி நோயின் மூன்றாம் நிலைப் பாதிப்பு இருந்தால், மார்ஃபான் நோயியம் இருந்தால் மகாதமனியின் முதற்பகுதி விரிவடைந்திருக்கும். அப்போது மகாதமனி வால்வு துவண்டு விடுவதால் மகாதமனிக்குள் நுழைந்த ரத்தம் மீண்டும் இதயத்தின் இடது கீழறைக்குப் பின்னோக்கிக் கசியும்.

அறிகுறிகள் என்னென்ன?

மகாதமனி சுருக்கத்திற்குக் கூறப்பட்ட அறிகுறிகள் இதற்கும் பொருந்தும். குறிப்பாக, நோயாளி இடது புறம் படுக்கும்போது தன்னுடைய இதயத் துடிப்பு அதிகரிப்பதை நன்கு உணர முடியும். நெஞ்சு படபடப்பு, சுவாசிப்பதில் சிரமம், இரவில் உறக்கத்தில் விழிப்பு ஏற்படுவது, கணுக்கால் வீக்கம் ஆகியவை இந்த நோய்க்குறிய முக்கிய அறிகுறிகள்.

5. டிரைகஸ்பிட் வால்வு சுருங்குதல் (Tricuspid stenosis)

இதயத்தின் வலது மேலறைக்கும் வலது கீழறைக்கும் இடையில் உள்ளது டிரைகஸ்பிட் வால்வு. கீல்வாதக் காய்ச்சலால் இது பாதிக்கப்படும்போது சுருங்கிவிடும். அப்போது இந்த நோய் ஏற்படும். வழக்கத்தில் இந்த நோய் தனியாக ஏற்படுவதில்லை. மைட்ரல் வால்வு நோய்கள், மகாதமனி வால்வு நோய்கள் ஆகியவற்றுடன் இணைந்து இது காணப்படும். டிரைகஸ்பிட் வால்வு சுருக்கத்தால் இதயத்தின் வலது மேலறையிலிருந்து வலது கீழறைக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்படும். இதன் விளைவாக, வலது மேலறையில் ரத்தம் தேங்கி ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் வலதுபக்க இதயம் செயலிழக்கும்.

அறிகுறிகள் என்னென்ன?

இந்த நோயாளியின் வயிறு, கை, கால் ஆகிய பகுதிகளில் நீர் கோத்து, வீங்கிவிடும். கல்லீரல் தொடர்பான நோய்க்குறிகள் தெரியும். குறிப்பாக, மிகுந்த சோர்வு, உடல் தளர்ச்சி உண்டாகும். இவற்றோடு மற்ற வால்வு கோளாறுகளின் அறிகுறிகளும் இணைந்து காணப்படும்.

6. டிரைகஸ்பிட் வால்வு எதிரொழுக்கு நோய் (Tricuspid regurgitation)

கீல்வாதக் காய்ச்சலினாலும், வலது கீழறை விரிவதாலும் இந்த வால்வு துவண்டு, இந்த நோயை ஏற்படுத்துகிறது. இந்த நோயின்போது இதயத்தின் வலது மேல்-கீழ் அறை இடைத் துளையை இது சரிவர மூடுவதில்லை. ஆகவே,இதயத்தின் வலது மேலறையிலிருந்து வலது கீழறைக்குப் பாய்ந்த ரத்தம் மீண்டும் பின்னோக்கிக் கசியும். இதனால் வலது மேலறையில் சிறிது சிறிதாக ரத்தம் தேங்க ஆரம்பிக்கும். அங்கு அழுத்தம் அதிகரிக்கும். வலது மேலறை விரியும்.

அறிகுறிகள் எவை?

டிரைகஸ்பிட் வால்வு சுருக்கத்தில் காணப்படுகின்ற அனைத்து அறிகுறிகளும் இதிலும் காணப்படும்.

7. நுரையீரல் தமனி வால்வு சுருங்குதல் (Pulmonary stenosis)

இந்த நோய் பெரும்பாலும் பிறவிக் குறைபாடு காரணமாகவே ஏற்படுகிறது. இது தனியொரு நோயாகவும் ஏற்படலாம் அல்லது ஃபேலட்டின் நான்கு குறைபாடுகள் (Fallot’s tetralogy) எனும் நோயுடன் இணைந்தும் உண்டாகலாம்.

அறிகுறிகள் எவை?

வயிறு வீக்கம், கணுக்கால் வீக்கம், கல்லீரல் நோய் தொடர்பான அறிகுறிகள் தெரியும். கழுத்துச் சிரையில் சிரை ரத்த அழுத்தமிகு அலை தெரியும்.

8. நுரையீரல் தமனி வால்வு

பின்னொழுக்கு நோய் (Pulmonary regurgitation) இந்த நோய் மிக மிக அரிதாக ஏற்படக்கூடிய நோய். நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, நுரையீரல் தமனி விரிவடையும்போது இந்த நோய் ஏற்படும். சில நேரங்களில் மைட்ரல் வால்வு சுருக்க நோயின்போது இந்த நோயும் சேர்ந்து வரும்.மருத்துவப் பரிசோதனையின் போது இந்த நோயையும் மகாதமனி வால்வு பின்னொழுக்கு நோயையும் பிரித்துணர்வது கடினம். எக்கோ பரிசோதனை மூலம் இந்த நோயை உறுதி செய்யலாம்.

பரிசோதனைகள், சிகிச்சைகள்

மைட்ரல் வால்வு சுருக்கத்துக்குக் கூறப்பட்ட பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் மற்ற வால்வு நோய்களுக்கும் பொருந்தும். இந்த நோய்கள் மருத்துவ சிகிச்சைக்குக் கட்டுப்படாதபோது செயற்கை வால்வை பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதயத்தை பராமரிக்க ஆரோக்கியமான வழிமுறைகள் !! (மருத்துவம்)
Next post PTR விளக்கம் | Petrol Diesel விலை எப்போ குறையும்? (வீடியோ)