இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம்!! (மருத்துவம்)
மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்க, இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.
குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள், ‘ரெட் மீட்’ என்று சொல்லக் கூடிய ஆடு – மாடு போன்றவற்றின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளது.
தோல் நீக்கிய கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவை ஆரோக்கியமானவை. ஆனாலும், அதிக அளவில் எண்ணெய்விட்டுப் பொரித்துச் சாப்பிடுவது தவறு. முட்டையின் வெள்ளைப் பகுதியில் அதிகப் புரதச் சத்து உள்ளது. ஆனால், அதன் மஞ்சள் கரு அதிகக் கொழுப்பு மிக்கது. எனவே, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது உயர்ரத்த அழுத்தத்தைத் தூண்டி விடும்.
அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். இதனால், அதிகப்படியாக உடல் எடையும் கூடும்.
‘ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட்’ மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். ஆளி விதை (Flax seed) எண்ணெய், வால்நெட் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் இந்த ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட் உள்ளது. சால்மன் போன்ற சில மீன் வகைகளிலும் இந்த ஒமேகா – 3-ஃபேட்டி ஆசிட் நிறைந்து உள்ளது.
சேச்சுரேட்டட் கொழுப்பு (Saturated fat) மற்றும் டிரான்ஸ் கொழுப்பு (Trans fat) ஆகியவை (ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பதன் மூலம்) கொரனரி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அதனால், இவற்றையும் தவிர்க்க வேண்டும்.
இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் ஆகியவற்றில் சேச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி பொருட்கள், அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதிக அளவில் மது அருந்துவது உடல்பருமனுக்கு வழிவகுக்கிறது. மேலும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. எனவே, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
Average Rating