அடுத்த டயானா வேண்டாம்! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 23 Second

வேல்ஸ் இளவரசர் சார்லஸ்-மறைந்த இளவரசி டயானா இருவருக்கும் இரண்டாவது மகனாக பிறந்தவர் இளவரசர் ஹாரி. தாய் டயானா போலவே ஹாரியும் கிளர்ச்சி நாயகனாகத்தான் வளர்ந்தார். அவருடைய திருமணத்தையும் வல்லுநர்கள் ஒரு வரலாற்றுப் புரட்சியாகவே பார்த்தனர். காரணம், அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவர் ஒரு அமெரிக்க நடிகை. மேலும் அவர் பாதி கறுப்பர்.

இந்த மூன்று காரணங்கள் போதும் மேகனை ஊடகமும் மக்களும் விமர்சிக்க. ஆனால், அரச குடும்பத்தினர் மேகன் மார்க்கிலை சந்தோஷமாகவே வரவேற்றனர். ராணி எலிசபெத் ஆசி வழங்கி திருமணமும் செய்து வைத்தார். பிரிட்டன் மக்களுக்கு அவர்கள் கனவிலும் நினைக்காத இளவரசி கிடைத்தார். பல விமர்சனங்கள் அவர் மேல் வைக்கப்பட்டது. மேகன் மார்க்கில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால், கடுமையான அரச குடும்பத்தினருக்கான விதிகளையும், அவர்களை எப்போதும் பின் தொடரும் மீடியாவையும் சமாளிக்க முதலில் தடுமாறித்தான் போனார்.

அரச குடும்பத்தினருக்கென சில நெறிமுறைகள் இருக்கும். பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது காரில் இருந்து இறங்கும் முன், ஓட்டுனர்தான் கார் கதவை திறந்து மூட வேண்டும். ஆனால் மேகன் கார் கதவை தானே மூடிய போது மீடியாவும் மக்களும் பித்துபிடித்தது போன்று அதை விமர்சனம் செய்து ப்ரேக்கிங் நியூஸாக்கினர். அடுத்து, அரச குடும்பத்தினர் ரசிகர்களுடன் கைகுலுக்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு நிகழ்ச்சியில் மேகன் சிறுமியைக் கட்டி அணைத்து வாழ்த்துவார். இதுவும் அரச விதிமீறலாக விமர்சிக்கப்பட்டது. அதேபோல, ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடுவதும் விதியை மீறுவதாகும். இருப்பினும் 10 வயது சிறுமி மேகனிடம் ஆட்டோகிராப் கேட்டதால், அச்சிறுமியின் பெயரை மட்டும் எழுதிக் கொடுத்திருக்கிறார் மேகன். இதெல்லாம் சின்னச் சின்ன விதிமீறல்கள் என்றாலும். இவை பெரிதாக விமர்சிக்கப்பட்டன.

மேகன் அரச குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுத்துவதாக கிசுகிசுக்கள் வெளியாகின. தொடர்ந்து மீடியா மேகன் மார்க்கிலை டார்கெட் செய்து அவரை தாக்கத் தொடங்கினர். இதை இளவரசர் ஹாரி கடுமையாக கண்டித்தார். ஒரு நேர்காணலின் போது, ஊடகங்கள் தன் மனைவியை தொடர்ந்து தாக்கி வருவதால், தன் தாய்க்கு ஏற்பட்ட நிலைமை மேகனுக்கும் ஏற்படுமோ என்ற அச்சத்திலேயே இருப்பதாக தெரிவித்தார். டயானா ஊடகத்தை கண்டு என்றும் ஓடியதில்லை. ஒளிவு மறைவு இல்லாமல் தன் கருத்தைத் தெரிவிக்கக் கூடியவர். ஆனால் அதுவே அவருக்கு எதிராய் அமைந்தது. சார்லஸ்-டயானா விவாகரத்திற்குப் பின்னரும், மீடியா டயானாவை விடவில்லை.

எப்போதும் அவரை குறிவைத்து மோசமான கிசுகிசுக்கள் வெளியிட்டன ஒரு முறை செய்தியாளர்கள் அவரை காரில் பின் தொடர்ந்த போது, ஏற்பட்ட விபத்தில் டயானா உயிரிழந்தார். அரச குடும்பத்தினரின் நடை உடை என அவர்களின் ஒவ்வொரு அசைவும் மீடியா ஆவணம் செய்து அதை விவாதமாக்கும். அவர்களுக்கு மேகன் மார்க்கில் சுலபமான இலக்கானார். அவர் வேறு இனம் மற்றும் நாட்டைச் சேர்ந்தவர் என்பதே அவரை வெறுக்க முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.இதற்கிடையில் தம்பதியினர் ஹாரி-மேகன் இருவரும் தங்கள் அரச பொறுப்புகளிலிருந்து விலகி, சுயமாக வேலை செய்து சம்பாதிக்க விரும்புவதாக தெரிவித்தனர். அரண்மனை, நாடு, பதவி என அனைத்தும் துறந்து கனடாவில் வசிக்கப்போவதாக அறிவித்து தம்பதியினர் அங்கு சென்று விட்டனர்.

இவர்களது இந்த அறிவிப்பை அரச குடும்பமும் ஏற்றது. டிவிட்டரில் மேகன் மார்க்கிலுக்கு ஆதரவாக மக்கள் அவரை வாழ்த்திப் பதிவுகளை ட்ரெண்ட் செய்தாலும், ஒரு கூட்டம் மேகன் மார்க்கில்தான் இந்த பிரிவிற்குக் காரணம் என்றும் தங்கள் இளவரசரை மக்களிடமிருந்தும் குடும்பத்திடமிருந்தும் பிரித்துச் செல்வதாகப் பயங்கர குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதை தொடர்ந்து, லண்டனில் உள்ள தனது தொண்டு நிறுவனமான சென்டேபேலுக்காக ஒரு தனியார் விருந்தில் கலந்துகொண்ட ஹாரி, அங்கு இளவரசராக இல்லாமல் சாதாரண பிரிட்டன் குடிமகனாக பேசினார். அதில் இந்த முடிவை பல மாதங்களாக யோசித்து எடுத்த தீர்மானம் என்றும். பிரிட்டன் ராஜ்ஜியத்திற்கும், ராணி எலிசபெத்திற்கும் என்றும் ஆதரவாய் தன் கடமையை எப்போதும் நிறைவேற்றுவார் என்றும் தெரிவித்தார்.

அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள், வெளியில் வேறு வேலைகள் செய்யக்கூடாது என்பது விதி. ஆனால் ஹாரியும் மேகனும், தங்களுக்கென ஒரு வாழ்வாதாரத்தை அமைத்து, தங்கள் தொண்டு நிறுவனத்தில் கவனம் செய்யப்போவதாகத் தெரிவித்திருக்கின்றனர். இருந்தும் பெரும்பாலான மக்கள், ஹாரியின் இந்த முடிவிற்கு காரணம், மேகனுக்கு நிகழ்ந்த பாகுபாடும் அச்சுறுத்தல்களும்தான் என்று நம்புகின்றனர். ஹாரியின் கண்ணோட்டத்தில், தன் தாய் டயானாவின் நிலைமை மேகனுக்கு ஏற்படக்கூடாது என்று அவரை பாதுகாக்க எடுத்த முடிவாகவே பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்ப ஒற்றுமையை காக்க நினைக்கும் சித்தி!! (மகளிர் பக்கம்)
Next post டேட்டிங் ஏன் எப்படி? (அவ்வப்போது கிளாமர்)