சின்ன வயசில் என்னை இம்ப்ரஸ் செய்த சத்துணவு சாப்பாடு!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 46 Second

‘‘சாப்பாடுன்னா என்னைப் பொறுத்தவரை சக்தின்னு தான் நான் சொல்வேன். சாப்பிட்டாதான் நம் உடலுக்கு தெம்பு கிடைக்கும். அப்பதான் நம்மால் ஆரோக்கியமா இருக்க முடியும்’’ என்று தன் உணவு பழக்கவழக்கங்கள் பற்றி விவரித்தார் நடிகர் சாம்ஸ். ‘‘எங்க வீட்டில் அம்மா, அப்பா இரண்டு பேருமே நல்லா சமைப்பாங்க. சில சமயம் அப்பாவே காலையில் எழுந்து எல்லாமே சமைத்து வைத்திட்டு ஆபீசுக்கு போயிடுவார். அப்பா கொஞ்சம் பரபரப்பா சமைப்பார். அம்மா நிதானமா தான் சமைப்பாங்க. அவங்க செய்யற வத்தக்குழம்பு அவ்வளவு ருசியா இருக்கும். தேன் மாதிரி கையில் ஊத்தி நக்கி சாப்பிடலாம். எங்கப்பா பரபரன்னு பத்து ஐட்டம் செய்தாலும், அவர் வைக்கிற வெங்காய சாம்பாருக்கு ஈடு இணையே கிடையாது. பட்டைய கிளப்பிடுவார்’’ என்றவருக்கு பள்ளியில் கொடுக்கும் சத்துணவு சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்குமாம்.

‘‘என்னதான் வீட்டில் வந்து சுவையா சாப்பாடு கட்டிக் கொடுத்தாலும் எனக்கு வெளியே மத்தவங்க சாப்பிடும் சாப்பாடு மேல் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. பள்ளி படிக்கும் காலத்தில் என்னோட பாட்டி வீட்டில் தான் தங்கி படிச்சேன். பாட்டி கலவை சாதம் எல்லாம் அருமையா செய்வாங்க. பொதுவாகவே பள்ளிக்கு புளியோதரை, தக்காளி சாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம்ன்னு நெய் சேர்த்து மணக்க மணக்க கிளறி தருவாங்க. செய்வது எளிது அதே சமயம் சாப்பாடு மதியம் வரை தாங்கும். எங்க பள்ளியில் மதிய சத்துணவு திட்டம் இருந்தது. மத்த பசங்க எல்லாரும் அந்த சத்துணவு சாப்பாடு தான் சாப்பிடுவாங்க. கொதிக்க கொதிக்க இருக்கும் அந்த சாப்பாட்டை பார்க்கும் போதே எனக்கு நாக்கில் எச்சில் ஊறும். அதனால் நான் என் பள்ளியில் படிக்கும் மத்த பசங்ககிட்ட இருந்து அந்த சாதத்தை வாங்கிக் கொண்டு என்னோட சாதத்தை கொடுத்திடுவேன்.

அவங்க எங்க வீட்டு சாப்பாட்டை சுவைத்து சாப்பிடுவாங்க. எனக்கு என்னவோ அந்த சத்துணவு சாப்பாட்டை அவ்வளவு பிரியமா சாப்பிடுவேன். ஆனா இதை வீட்டில் சொல்ல மாட்டேன். சொன்னா திட்டுவாங்க. எப்பவுமே சூடான சாப்பாடு தான் ருசியா இருக்கும். அதனாலேயே அந்த சத்துணவு சாப்பாடு சின்ன வயசுல என்னை ரொம்ப இம்பிரஸ் பண்ண விஷயம்’’ என்றவருக்கு பண்டிகை மற்றும் விழா காலங்களில் செய்யப்படும் உணவுக்காக மிகவும் ஆவலோடு காத்திருப்பாராம். ‘‘நாங்க நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்க. தீபாவளி, பொங்கல் மற்றும் திருவாதிரை போன்ற பண்டிகை நாட்களில் தான் வீட்டில் விசேஷ சாப்பாடு செய்வாங்க. திருவாதிரை அன்று களி மற்றும் அதற்கான கூட்டுன்னு செய்வாங்க. அது அவ்வளவு சுவையா இருக்கும். அதே போல் தீபாவளி அன்று முறுக்கு, சீடைன்னு பலகாரம் எல்லாம் செய்து டப்பாக்களில் போட்டு வைப்பாங்க.

இது போன்ற பலகாரங்கள் எல்லாம் வருஷத்துக்கு ஒரு முறை தான் செய்வாங்க. மத்தபடி வீட்டில் எப்போதும் செய்யக்கூடிய சாம்பார். ரசம், கூட்டு, பொறியல் தான் இருக்கும். சில சமயம் இதையே சாப்பிட்டு கொஞ்சம் போர் அடிக்கும். அதனால வியாழக்கிழமை எங்க ஊரில் உள்ள ராகவேந்திர மடத்தில் அன்னதானம் செய்வாங்க. அந்த சாப்பாட்டை சாப்பிடவே போவேன். அப்புறம் கோயில் மடப்பள்ளியில் பிரசாதமாக தரும் புளியோதரை. தொன்னையில் வச்சு தருவாங்க. அதே புளியோதரை வீட்டிலும் செய்வாங்க. ஆனா மடப்பள்ளியின் புளியோதரை மட்டும் தனிச்சுவையா இருக்கும். அதுக்காகவே நான் கோயிலுக்கு போவேன். அதன் பிறகு கம்பெனியில் வேலைக்கு போன போது, அங்க கேன்டீன் சாப்பாட்டை என்னுடன் வேலைப் பார்ப்பவர்களிடம் கேட்டு வாங்கி சாப்பிடுவேன்.

எங்க வீட்டில் சாப்பாடு கட்டிக் கொடுத்தாலும், எனக்கு என்னவோ அந்த கேன்டீன் சாப்பாடுன்னா விரும்பி சாப்பிடுவேன். அன்னதானம், கல்யாண சாப்பாடு, கோயில் பிரசாதம்ன்னு தேடி தேடிப் போய் சாப்பிட்டு இருக்கேன்’’ என்றவர் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் உணவினை சாப்பிடாமல் வந்ததில்லையாம். ‘‘கிரேசி மோகன் அவர்களின் நாடக குழுவில் சேர்ந்த பிறகு, நிகழ்ச்சிக்காக நான் பல வெளிநாட்டுக்கு சென்று இருக்கேன். அங்க போகும் போது எல்லாம், பெரும்பாலும் அங்குள்ளவர்களின் வீட்டில் இருந்து தான் சாப்பாடு வரும். சில சமயம் அங்குள்ள பெரிய ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவோம். அதில் பெரும்பாலும் பஃபே சாப்பாடு தான் இருக்கும்.

பல வகையான உணவுகள் அங்க இருக்கும். அதை எல்லாம் நான் கொஞ்சம் கொஞ்சம் சுவைத்து பார்ப்பேன். சிலர் அவங்களுக்கு பிடிச்ச சாப்பாட்டை மட்டுமே மலைபோல் குவிச்சு சாப்பிடுவாங்க. ஆனா நான் அப்படி இல்லை எல்லா உணவையும் சாப்பிடணும்ன்னு எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வச்சு சாப்பிடுவேன். அதே போல் ஸ்வீட் வாங்கினா கூட எல்லா ரக ஸ்வீட்டையும் சேர்த்து தான் வாங்குவேன். என்னைப் பொறுத்த வரை பசிக்கு சாப்பிட்டாலும் சுவையா சாப்பிடணும். அதே போல் ஒரு முறை அமெரிக்கா போன போது அங்கு ஓட்டலில் ஒரு பெரிய தட்டை வைத்துக் கொண்டு ஒரு குடும்பமே சாப்பிட்டு இருந்தாங்க. என்னன்னு பார்த்தா பீட்சா. இங்க நம்ம ஊரில் நம்ம ஒரு கையளவில் தான் இருக்கும். ஆனா அங்க ஒரு பெரிய தட்டு சைசில் இருந்தது.

அவ்வளவு பெரிய பீட்சாவை அங்க தான் பார்த்தேன். என்னதான் பல நாடுகள் சென்று அங்குள்ள உணவினை சுவைத்தாலும், நம்மூர் சாப்பாட்டில் இருக்கும் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. நம்ம சாப்பாட்டில் தான் இனிப்பு, காரம், புளிப்பு, துவர்ப்புன்னு அறுசுவையும் இருக்கு. இன்னும் சொல்லப் போனா எனக்கு என்ன சாப்பிட்டாலும், கடைசியாக பினிஷிங் டச்சா தயிர்சாதம் வேணும். அதுல கிடைக்கிற திருப்தி வேற எதிலுமே கிடைக்காது. தயிர் சாதத்துக்கு இருக்கிற காம்பினேஷன் வேற எந்த சாப்பாட்டுக்கும் கிடையாது. மோர் மிளகாய், வத்தக்குழம்பு, ஊறுகாய், மாவடுன்னு எது வேண்டும் என்றாலும் தயிர்சாதத்துடன் சாப்பிடலாம். என்னைப் பொறுத்தவரை எந்த வகை சாப்பாடாக இருந்தாலும், அதை இப்படித்தான் செய்யணும்ன்னு சில பார்முலா இருக்கு.

அதன் படி செய்தா தான் நூறு சதவிகித சுவையை கொண்டு வர முடியும்’’ என்றவர் தனக்கு பிடித்த உணவுகளை பட்டியலிட்டார். ‘‘நான் ஒரு தயிர் சாதம் பிரியை. எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன். இனிப்பு வகையை பொறுத்தவரை, ஆவின் பால்கோவா ரொம்ப பிடிக்கும். அது ஒரு தனிச்சுவையில் இருக்கும். அதை லைட்டா மைக்ரோஅவனில் சூடு செய்தா, நல்லா இலகி வரும். அந்த சூட்டோட சாப்பிட்டா அவ்வளவு சுவையா இருக்கும். அப்புறம் மதுரைக்கு போனா ஜிகர்தண்டா சாப்பிடாமல் வரமாட்டேன். முந்திரியை நெய்யில் வறுத்து அதில் லைட்டா பெப்பர் மற்றும் உப்பு சேர்க்கணும். இது எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவேன். நான் பெரும்பாலும் தேடிப் போய் சாப்பிட மாட்டேன், ஆனா போற இடத்தில நல்ல உணவா பார்த்து சாப்பிடுவேன்.

ஆனா எங்க வீட்டில் ஏதாவது ஒரு புது வகையான உணவினை சுவைத்து பார்க்க ஆசைப்படுவாங்க. நான் கல்யாணத்துக்கு முன்பு சரவண பவனில் தான் சாப்பிடுவேன். இப்ப பசங்க பெரிசாயிட்டாங்க. அதனால அவங்க வித்தியாசமான உணவு சாப்பிட விரும்புவாங்க. அவங்களுக்காகவே அண்ணாநகரில் உள்ள லிட்டில் இத்தாலி என்ற இத்தாலியன் உணவகத்தில் எல்லாரும் குடும்பமா போய் சாப்பிடுவோம். தி.நகரில் பக்வான்னு வட இந்திய உணவகம் இருக்கு. அங்கு பன்னீர் டிக்கா அவ்வளவு மிருதுவா இருக்கும். ஜல்பான், ஜெயின் உணவகம். இவங்க சாப்பாட்டில் வெங்காயம், பூண்டு சேர்க்க மாட்டாங்க. அப்படி இருந்தும் எல்லா சாப்பாடும் அவ்வளவு சுவையா இருக்கும்.

மயிலாப்பூரில் உள்ள தளிகை உணவகம். இங்க ஐயங்கார் ஃபுல் மீல்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். நான் தி.நகரில் மேன்சனில் இருந்த போது, அங்க ஆந்திரா மெஸ் ஒன்று இருக்கும். அங்க மதிய உணவு சாப்பிட திட்டமிட்டால், காலையில் இருந்து எதுவுமே சாப்பிடாமல் இருப்போம். அன்லிமிடெட் மீல்ஸ் தான், வஞ்சனை இல்லாமல் பரிமாறுவாங்க. சாதத்துக்கு நடுவே பாத்தி கட்டி சாம்பார் ஊற்றி ஒரு கட்டு கட்டுவோம். அந்த சாப்பாட்டை சாப்பிட்டவுடன் அப்படி ஒரு சுகமா தூக்கம் வரும். ஒரு சில சமயம் நாங்க வீட்டில் தலை வாழை இலையில் சாப்பிடுவோம். சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம் எல்லாவற்றையும் இலையில் வைத்து குடும்பத்தோட உட்கார்ந்து சாப்பிடும் போது அது மனசுக்கு அவ்வளவு நிறைவா இருக்கும்.

என் மனைவி ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க செய்ற தேங்காய் துவையல், அப்பளம், உருளைக்கிழங்கு வறுவல் அவ்வளவு நல்லா இருக்கும். எந்த ஒரு உணவாக இருந்தாலும் பொறுமையா, நன்றாக மென்று சாப்பிடணும். அப்படி சாப்பிடும் போது ஐந்து இட்லி சாப்பிடுற இடத்தில் மூன்று தான் சாப்பிடுவோம். இதனால் குடல் சம்மந்தமான பிரச்னை ஏதும் வராது. பசிக்கும் போது சாப்பிட்டால் போதும். அதுக்காக மூன்றுவேளை சாப்பிடணும்ன்னு அவசியம் இல்லை’’ என்றவர் சின்ன வயசில் தான் விரும்பி சாப்பிட்ட உணவினை பகிர்ந்து கொண்டார். ‘‘சின்ன வயசுல நான் திருச்சியில் தான் வளர்ந்தேன். அங்க மைக்கேல் ஐஸ்கிரீம்ன்னு ஒரு கடை இருக்கு. அங்க ஐஸ்கிரீம் ரொம்ப நல்லா இருக்கும். இப்ப வர ஐஸ்கிரீம் மெழுகு போல வழுவழுன்னு இருக்கு. அங்க மணல் மணலா ஒரு வித்தியாசமான சுவையில் இருக்கும்.

பாலை நன்கு சுண்ட காய்ச்சி செய்வாங்க. ஒரு முறை அப்பா எனக்கு அங்க ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தார். நான் இன்னொன்று கேட்ட போது, வேண்டாம்ன்னு சொல்லிட்டார். அதற்காகவே அந்த கடையில் வேலைக்கு சேர்ந்தேன். இப்பக்கூட அந்த கடை இருக்கும். எப்ப ஊருக்கு போனாலும் என் பசங்களுக்கு அங்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவேன். நான் வேலைப் பார்த்த கடையிலேயே ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது. அதன் பிறகு ஒரு சாக்லெட் கடையில வேலை செய்தேன். பிறகு நெப்போலியன் பேக்கரியில் வேலை பார்த்தேன். இதுல ஐஸ்கிரீம், கேக், பஃப் எல்லாமே இருக்கும். தினமும் இரவு கடையோட ஓனர் வந்து மறுநாள் வரை தாங்காதுன்னு பாதி உணவுப் பொருட்களை எங்களை எடுத்துக்க சொல்லிடுவார். அப்படி அந்த பேக்கரியில் இருந்த எல்லா உணவுகளையும் நான் சாப்பிட்டு இருக்கேன்.

நடிக்க வந்த பிறகு ஷூட்டிங் சாப்பாடு தான் பெரும்பாலும் சாப்பிட்டு இருக்கேன். சில சமயம் வெளியூர் போனால், அங்கு என்ன ஸ்பெஷல் சாப்பாடுன்னு கேட்டு சாப்பிடுவேன். குற்றாலம் போனபோது அங்கு நட்சத்திர வடிவில் ஒரு பழம் இருக்கும். புளிப்பு, இனிப்பு எல்லா சுவையும் கலந்து இருக்கும். விருதுநகரில் பொரிச்ச பரோட்டா ஃபேமசுன்னு கேள்விப் பட்டு தேடி போய் சாப்பிட்டேன்’’ என்றவர் தன் பக்கெட் லிஸ்டில் இருக்கும் உணவகம் பற்றி பட்டியலிட்டார். இந்த மாதம் 27ம் தேதி எனக்கு திருமண நாள். ஐ.டி.சி கிராண்ட் சோழா ஒட்டலில் பஃபே உணவு நல்லா இருக்கும்ன்னு கேள்விப்பட்டேன். அங்க அழைத்துக் கொண்டு போகணும். அடுத்து பெங்களூரில் ராஜபோக தாளி ஃபேமசாம். அங்க போகும் போது கண்டிப்பா சாப்பிடணும்ன்னு திட்டமிட்டிருக்கேன்’’ என்றார் நடிகர் சாம்ஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழைய சோறு போதும்! நோய்கள் புறமுதுகிட்டு ஓடும்!! (மருத்துவம்)
Next post உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே! (மகளிர் பக்கம்)